எழுத்து, இலக்கியம், குறும்படம் அல்லது ஆவணப்பட என்கிற எனது இந்த குறுகிய கால, கட்டெறும்ப்பு அளவிலான பயணத்தின் மிகச் சரியான தொடக்கம், 'ஆளூர் ஷாநவாஸ்'.
(இணைந்து எடுத்துக் கொண்ட முதல் ஒளிப்படம் -12-07-2014)
நான் எனது பத்தாம் வகுப்பில் இருந்து பொது விடயங்களில், போராட்டங்களில் கலந்து கொண்டு வருபவன். ஆரம்பத்தில் "சேகுவேரா-வினால்" கவரப்பட்ட நான் 'இந்திய மாணவர் சங்கத்தில்' (SFI) இணைந்து கொண்டேன். பிறகு அப்படியே இந்திய வாலிபர் சனநாயக இயக்கத்தில் (DYFI) இணைந்து செயல்பட்டு, திண்டுக்கம் மாவட்ட அளவிலான பொறுப்புகளில் களமாடினேன். நான் பதினொன்றாம் வகுப்பு முடித்து பனிரண்டாம் வகுப்பு செல்ல இருக்கும் இடைவெளியான கோடை விடுமுறை நாட்களில் நிகழ்ந்த என் ஊட்டி பயணம், வாழ்வில் ஒரு பெரும் இழப்பைக் கொடுத்து, என்னை பல மாதங்கள் முடக்கி படுக்க வைத்துவிட்டது அதன் பிறகான நாட்களில் நான் இந்த வாழ்க்கையெல்லாம் விட்டு ஒரு மாறுதலுக்குச் சென்றுவிட்டேன். பன்னிரண்டாம் வகுப்பு அறிவியல், கணிதம் எடுத்து பயின்ற நான், ஒருவருடங்கள் கழித்து வரலாறு, வணிகம், பொருளியல் பாடங்களை எழுதி பள்ளிப் படிப்பை முடித்தேன். இந்தக் கட்டங்களில் நானே சுயமாக 'கணினி உலவு மையம் வைத்ததும், ஒரு உள்ளூர் தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளராக பணிபுரிந்ததும் மறக்கவியலா என்னின் துணிச்சல்கள் என்றே சொல்லலாம். பள்ளிப்படிப்பை முடித்த நான் அடுத்து என்ன செய்வது என்று திணறவில்லை. எனது இலக்கு கிரிக்கெட்டில் முன்னேறுவது என்கிறதாகத்தான் இருந்தது. பழைய இழப்பான நினைவுகளில் இருந்து முன்னேறிய எனக்கு இந்த விளையாட்டுதான் துணையாக, நினைவாக இருந்ததினால், நான் இதை இன்னும் கூர்தீட்டி, 19-வயதிற்க்குட்பட்ட பிரிவில், மதுரை மண்டல அணியில் 'விக்கேட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவு' சில விளையாட்டுக்களில் அணித் துணை தலைவராகவும் கூட இருந்துவந்துள்ளேன். என்னுடைய இந்த ஆர்வங்களினால் திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் அணிச் செயலாளர் அவர்கள், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் சேர்ந்து, பி.பி.இ.எஸ் (B.P.E.S) எனும் விளையாட்டுத்துறை சார்ந்த படிப்பை படிக்க வழிகாட்டி, சீட்டும் வாங்கிக் கொடுத்தார். ஆனால் போதிய பணம் இல்லாததாலும், குடும்ப ஒத்துழைப்பும் இல்லாததாலும் என்னால் அதில் செல்ல இயலவில்லை. இருந்தும் கல்வியைத் தொடர வேண்டுமே என்கிற முனைப்பும், நினைப்பும் என்னில் அகலவே இல்லை. இந்தத் தருணத்தில் எனது எதிர்காலத் துணையாரின் கலந்துரையாடலிற்குப் பிறகு, குடும்ப அனுமதித்த திருச்சி, ஜமால் முகமது கல்லூரியில், பி.ஏ ஆங்கில இலக்கிய படிக்க ஆரம்பித்தேன். இங்கு வந்த பின்னர் ஒரு இரு மாதங்கள் நான் திருச்சி மாவட்ட அணியில் விளையாடினேன். ஆனால் தொடர்ந்து என்னால் விளையாட இயலவில்லை. நான் இந்தத் தருணங்களில்தான் நான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (POPULAR FRONT OF INDIA) எனும் அமைப்பில் இணைந்து செயல்பட ஆரம்பித்தேன். மூன்று ஆண்டுகள் இவ்வமைப்பில் பயணித்த நான், அதன் மாணவ அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவில் (CAMPUS FRONT OF INDIA) திண்டுக்கல் மாவட்டத்தில் மிகத் தீவிரமாக ஒருவருடம் களமாடியுள்ளேன்.
(அமைப்பில் செயல்பட்ட காலங்களில் சில புகைப்படங்கள்):
பின்னர் சில முரண்பாடுகளினூடே தொடர்ந்த பயணங்கள், நான் இதிலிருந்து முற்றாக நீங்கிக் கொண்டேன். மாணவ அமைப்பில் முரணோடு விலகல் இல்லாமல் இருந்த கடத்தில்தான் எனக்கு எஸ்.டி.பி.ஐ (S.D.P.I) கட்சியின் ஒட்டன்சத்திய ஒன்றிய செயலாளர் பொறுப்பு அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நான் இந்தச் சமயங்களில் அதிகம் முரண்பட்டு வெளியேறவே அதிகம் விரும்பியிருந்தேன். இறுதியில் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பில் இருந்து முற்றாக கடிதம் கொடுத்துவிட்டு விலகிய தருணத்தில்தான், என இலக்கின் அறிமுகமாய், கிடைத்தார் ஆளூர் ஷாநவாஸ்.
முகநூலில் அதிகம் கவனித்துக் கொண்டு, அவரால் ஈர்க்கப்பட்ட நான், அவரின் பெயரை கூகுள் உலவியில் அடித்து உலவினேன். அதில் அவரின் வலைப்பூ தளம் எனக்கு அறிமுகமானது. அதில் சென்று, "கடந்து வந்த நாட்களில், நடந்து வந்த பாதைகள்" எனும் அவரின் அணுபவக் கட்டுரையை (http://aloorshanavas.blogspot.in/2010/12/blog-post_31.html) வாசித்த நான் இன்னும் அதிகமாகவே ஈர்ப்பில் சென்றுவிட்டேன் (. இதன் பிறகுகளில்தான் அவரின் கட்டுரைகளை சமநிலைச் சமுதாயம் இதழிலும், கீற்று இணைய தளத்திலும் படிக்க ஆரம்பித்து தொடர்ந்தேன். ஆவணப்படம் என்ற சொல்லாடல்களெல்லாம் எனக்கு இவரிடமிருந்து அறிமுகமானவைகள்தான்.
இதன் பின்னர் மிகச் சரியாக, 10-10-2012 அன்று முகநூல் வாயிலாக அவரைத் தொடர்பு கொண்ட நான், 12-12-2012 அன்று அவரிடம் முதன் முதலில் அலைபேசியில் பேசி மகிழ்ந்தேன். இவரின் எழுத்துக்கள்தான் எனக்கான எழுத்துப் பயணத்தின் ஊக்கங்கல். பள்ளிக் காலங்களில், தினத்தந்தி செய்தி ஏட்டின் மாணவர் ஸ்பெசல் பகுதிக்கு ஏதேனும் துணுக்குகள், கவிதைகள், செய்திகள் என எழுதிப் போடுவேன் அவைகள் சில வெளியாகியும் உள்ளன. அப்பொழுது என்னை ஊக்கபடுத்திக் கொடுத்த 'பாலு' எனும் பள்ளி அசிரியர், இப்போது இந்து முன்னனில் சென்று எனக்கு முற்றும் எதிராக, உள்ளூர் ஜமாத், குடும்பம் என தொல்லைகளை திரை மறைவில் செய்பவராக மாறிப் போய்விட்டார். நான் துணிந்து கணினி உலவி மையம் வைக்க என்ன பாராட்டி, எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி ரூ.5000 கொடுத்து, அந்த மையத்தினை விலைபேசி முடித்துக் கொடுத்ததில் இவரே பெரிதும் உதவி செய்துள்ளார், என்பது காலத்தால் மறக்க இயலாத நன்றிக் கடன். இவர்தான் எனது முதல் செய்தி ஒன்று தினந்ததியில் வந்தபோது எடுத்துக் காட்டியவர். பின்னர் நான் உள்ளூர் பிரச்சனைகளை எழுதிப் போடுவது, கவிதைகளைக் கிறுக்குவது என்று இருந்து கொண்டிருந்தேன். இதெல்லாம் சில காலங்களிலேயே மறைந்து போய்விட்டன. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக, ஈழ மக்களுக்காக நான் கடுமையாக ஒரு கட்டுரையை எழுதி, தனித் தமிழ்நாடு என்ற வடிவில் அதனை அமைத்து தினந்தந்திக்கு அனுப்பினேன். (அப்போது என்ன தெரியும், ஏதோ எனது ஆசிரியர் ஒருவரினால் ஏதோ என கொஞசம் அறிந்த விடயங்களை வைத்து துள்ளினேன், அவ்வளவுதான் ஆனால் பெரிய பார்வையெல்லாம் அதில் இருக்கவில்லை.) இத்தோடு எழுதுவது என்பது மாறிப்போகிவிட்டது.
மீண்டும் எட்டு ஆண்டுகள் கடந்த நிலையில், நான் 21-12-2014 அன்று 'ஊடகப் போர் வாள்' எனும் கட்டுரையை எழுதினேன். ஆனால் இது எவ்வித கவனத்தையும் பெறவே இல்லை. ஆளூர் அவர்களின் அரசியல் எழுத்துக்களால் பின்தொடரப்பட்ட நான், இதே டிசம்பரில்தான் வலைப்பூ ஒன்றை உருவாக்கி, அதில் இக்கட்டுரையை பதிவிட்டுக் கொண்டேன். இதற்கு முன்பு நான் அறிந்திருந்ததெல்லாம் யாகூ மெசேஞ்சர், முகநூல், ட்விட்டர், ஆர்குட் இப்படியானவைகள்தான்.
ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் மேல் ஈர்ப்பு வருவதற்கு மிக முக்கியமான இன்னொன்று அவரின், 'விதையாய் விழுந்தவர் -பழனிபாபா' என்கிற ஒரு கட்டுரையும், பழனிபாபாவின் நினைவு நாள் ஒன்றில் அவர் பேசிய பேச்சும் என்றே சொல்வேன். சேகுவேராவிற்குப் பிறகு நான் அதிகம் ஈர்க்கப்பட்டது புரட்சியாளர்.பழனிபாபா அவர்களால்தான். கல்லூரியின் முதலாமாண்டில்தான் எனக்கு பழனிபாபா என்கிற சொல் அறிமுகமானது. நானும் ஏதோ இந்து சாமியார் என்றுதான் நினைத்தேன். பின்னர் இசுலாம் குறித்து பேசிய பொதக்குடி உரையைக் கேட்ட நான், சிலரின் தகவல்களால் அவர் இந்துவாக இருந்து மாறியவர் என்று அறிந்து வைத்துக் கொண்டேன். இன்னும் சில மாதங்கள் கழிந்தப் பிறகுதான் அவர் ஒரு இசுலாமியர் என்றும், பழனி என்பது ஊரின் பெயரைக் குறிப்பது என்றும் அறிந்தேன். இன்னும் ஒன்று நானும் இதே ஊர் என்பதனால், இன்னும் அதிகம் பூரிப்படைந்து போனேன். அதிலிருந்து பாபா அவர்களின் உரைகளை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து அதிகம் கேட்பேன், பிறகு கேசட்டுகளை வாங்கிக் கேட்க ஆரம்பத்தேன். இதன் நீட்சியாக ஆளூர் அவர்கள் எழுதிய அந்தக் கட்டுரை எனக்கு இன்னும் ஈர்ப்பை அதிகமாக்கியது. இந்தத் தேடலின் நீட்சிதான் தோழர்.உமர்கயான் அவர்களோடு இணைந்து என்னை புரட்சியாளர்.பழனிபாபா-வின் காலடித் தடங்களை தேடி பயணிக்க வைத்துள்ளது.
சில கட்டுரைகள் வாயிலாக ஆளூரை அறிந்த நான் அவரைத் தொடர்பு கொள்வதற்கு முன்பாக, எனக்கு அறிமுகமான சிலரிடம் அவரைக் குறித்து கேட்டேன். வந்த பதில்கள், 'ஆமாம் இருக்காப்புல, வாய்க்கொழுப்பு அதிகமானவர்", என்றும், அந்தப் பையன் தலைக்கணம்ப்பா, சும்மா இந்த மார்க்சுக்கு பின்பாட்டு பாடிக்கிட்டுத் திரிவாப்புல (இதனைச் சொல்லியவர்கள் இசுலாமியர்கள்தான்) என்கிற விதங்களில்தான் கேள்வியுற்றேன். இதனைத் தொடர்ந்து ஓரிரு வாரங்களுக்குள்ளாகவே அவரோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டேன். இந்த முட்டாள் தனமாக என்னிடத்தில் அவரைப் பற்றி சிலர் எனக்குத் தெரிவித்ததை, நான் அவரிடமே ஒருமுறை அலைபேசியில் கூறியுள்ளேன். இது நான் திருச்சிக்கு ஒரு வேலையாகச் சென்றிருந்த ஒரு நாளில், இரவு நேரத்தில் சுமார் ஒன்றரை மணி நேரமாக பேசிய தருணத்தில் பகிர்ந்து கொண்டது. அவரும், அவரின் காயிதே மில்லத் ஆவணப்பட முயற்சிகளுக்கு, இசுலாமியச் சமூகத்தில் உள்ள தலைவர் ஒருவர் செய்த இடையூறல்களையும் சொல்லிக் காட்டி பகிர்ந்தார். இதன்பிறகு நான் திருச்சி சென்றது தோழர் உமர்கயான் அவர்களோடுதான். தஞ்சையில் மே-17ன் ஆவணப்பட நிகழ்விற்க்காக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்க்குச் சென்றபோது, திருச்சியில் இறங்கி சில மணித்துளிகள் செலவிட்டேன்.
(போராளித் தோழர்.உமர்கயான் அவர்களுடனான முதல் புகைப்படம்)
திருச்சியில் ஆளூர் அவர்களிடம் அலைபேசியில் பேசிய அந்நாட்களுக்கு முன்னரான சில மாதங்களில்தான் நான் 'நிழல்' குறும்பட பயிற்சி பட்டறையில் குறும்பட, ஆவணப்பட விடயங்களுக்கான பயிற்சிகளைப் பெற்றேன். இங்கு செல்வதற்கு முன்னர் கூட, நிழல் நிறுவனம் குறித்தும், செல்லலாம எனவும் நான் வினவியது ஆளூர் ஷாநவாஸ் அவர்களிடம்தான். பிறகு பயிற்சி பட்டறைக்கு சென்று தங்கியிருந்த நாட்களிதான் தெரிந்து கொண்டேன், நிழல்.ப.திருநவுக்கரசு ஐயா அவர்களும், ஆளூர் அவர்களும் தோழர்களென. திருநாவுக்கரசு அவர்களை நான் யூடியூப்பில் சில காணொளிகளில் கண்டு மிகவும் வயது முதிர்ந்தவர் என்றே எண்ணியிருந்தேன் பிறகு நேரில் பார்க்கையில்தான் தெரிந்து கொண்டேன் உண்மை அப்படியில்லையென. மேலும் இவரோடு ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என நான் திட்டம் வைத்துக் கொண்டுதான் பட்டறைக்குப் போனேன். ஆனால் பயிற்சி நாட்களில் உணர்ந்து கொண்டேன் அது தேவையில்லையென. ஏனெனில் அவரின் நெருக்கமான, சகஜமான பழக்கங்களால் எனக்கு அது தோன்றாமலே போய்விட்டது.
(நிழல்.ப.திருநாவுக்கரசு அவர்கள்டன், திருப்பூரில்)
இதே பயிற்சியின் இறுதி நாளில்தான் ஐயா.பதியம் பாரதி வாசன் அவர்களைச் சந்தித்தேன். அதற்கு முன்பிருந்து அவர் முகநூலின் நட்பு வட்டத்தில் இருந்த மட்டில்தான் எனக்குத் தெரியும். இந்த பயிற்சி நாட்கள் குறித்த எனது விரிவான அனுபவங்களை, நிழல் இதழுக்கு எழுதியிருந்தேன். அது பிரசுரம் ஆகியும் இருந்தது. எனது இந்த வலைப்பூவிலும் அதனை பதிவிட்டுள்ளேன்.
(பயிற்சி நாட்களில், கோவை செட்டிபாளையம், சி.டி ஃபவுன்டேசனில்)
பழனிபாபாவின் வீரிய பேச்சுக்களால் ஈர்க்கப்பட்ட நான், 2013, சனவரி 28 அன்று ஆயக்குடியில் நடந்த அவரின் நினைவுநாள் அரசியல் எழுச்சிக் கூட்டத்திற்குச் சென்றேன். அங்குதான் ஆதித் தமிழர் பேரவையின் தோழர்.நீலவேந்தன் அவர்களை நேரில் முதலில் பார்த்தேன். அதன்பிறகு திருப்பூரில் ஒரு நிகழ்வில் பார்த்ததுதான் இறுதி. அடுத்த சில மாதங்களிலேயே அவர் கொலை செய்யப்பட்டுவிட்டார். இதே கூட்டத்தில் மதிப்புத் தோழர்.பாமரன் அவர்களும், திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி அவர்களும் பேசினார்கள். இதற்கு அடுத்த நாள், விஸ்ரூபம் திரைப்படம் குறித்த புதிய தலைமுறையின் நேர்பட பேசு விவாத அரங்கில் பங்கெடுத்த சீனு ராமசாமி, முதல்நாள் ஆயக்குடியில் பேசிய பேச்சுக்களுக்கு முற்றும் மாற்றாக பேசினார். இதனைக் கண்டுவிடுத்தான் அவரைக் குறித்த ஒருவிமர்சனக் கட்டுரை நான் கீற்றில் எழுதினேன்.(http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/22854-2013-02-04-06-59-47)
இந்த வகையில் என்னுடைய முதல் அரசியல் புரிதல்களுடன் கூடிய கட்டுரையை கீற்று நந்தன் வெளியிட்டு வழி கொடுத்தார். இதன்பிறகு அப்படியே கட்டுரைகள் எழுதத் தொடங்கிவிட்டேன்.
(பதியம்.பாரதிவாசன் அவர்களுடனான முதல் புகைப்படம்)
வெறுமனே அரசியல் கட்டுரைகள் என்கிற மட்டில் சென்று கொண்டிருந்த எஎனக்கு, இலக்கியங்களை நோக்கி நகர்த்தியது, ஐயா.பாரதிவாசன் அவர்களால்தான்.
தருமபுரில் சாதிய வன்கொடுமைக்கு இரையான தோழர்.இளவரசனின் மரணம் குறித்த ஒரு கவிதை வாசிப்பு நிகழ்வுதான் எனக்கான இலக்கிய மற்றும் திருப்பூர் தொடக்கம்.
(கவிதை வாசிப்பின் போது)
(தோழர்.நீலவேந்தன் அவர்களுடனான முதலும், இறுதியுமான படம்)
இதன் பின்னாளான நாட்களில்தான் தொடர்ந்து திருப்பூர் சென்று வர ஆரம்பித்தேன். பதியத்தின் கூட்டங்களில் கலந்து கொண்டு அப்படியே தொடர்ந்தேன். இதனடுத்து சிறுகதைகள் எழுத ஆரம்பித்து, தொடர்ந்து சிறுகதைகள்.காம் இணையதளத்தில் எழுதிக் கொண்டுள்ளேன். என் வாழ்வில் வந்துவிழுந்த பேரிடர் இழப்பினை மையப்படுத்தி எழுதிய என சிறுகதைத் தளம்; (http://www.sirukathaigal.com/குடும்பம்/ஓர்-எழுத்தாளனின் மறுபிறவி)
சில மாதங்களில் தாராபுரம் நகரில், சோனி சைபர் சாட், புகைப்பட கருவியை வாங்கிக் கொண்டு, அடுத்த நாள் சென்னை நோக்கிச் சென்றேன். இரண்டு நாட்கள் தங்கியிருந்த நான், அந்தக் கருவி அவ்வளவு அவசரமாக வாங்கப்பட்டதற்க்கான, நபரைச் சந்திக்க 30-10-2013 அன்று அவரது இல்லத்திற்குச் சென்று, மூன்று மணி நேரங்கள் உரையாடிவிட்டு வந்தேனே தவிர அந்தக் கருவி வாங்கப்பட்டதற்க்கான பயன்பாட்டை நான் செலுத்தவில்லை. அதற்க்கான வாய்ப்பு அன்று அமையவே இல்லை. இதனடுத்து, உள்ளூர் பள்ளிவாசல் ஜமாத் பிரச்சனை, அதனடுத்து எனது இளநிலை படிப்பை மூன்றாவதாக தொடர்ந்த கல்லூரியிலும் பிரச்சனை என, சலிப்புகளோடும், இந்து முன்னனி நபரின் எதிர்ப்புகளோடும், மனக்குமுறல்களோடும் கடந்தது சில மாதம். இப்பிரச்சனைக்காக பலரிடம் சென்று மனு கொடுத்து அதற்க்கென போராடிக் கொண்டிருந்தேன். இன்றும் அது தீர்ந்தபாடில்லை. இதற்க்குள் தொலைநிலைக் கல்வியில் இரண்டு இளநிலையை முடித்துவிட்டேன்.
பிறகு மீண்டும் சனவரி-8-2014 அன்று அவரின் இரண்டாவது புத்தக நிகழ்விற்குச் சென்றேன், அப்பொழுதும் அது சாத்தியப்படவே இல்லை. ஆனால் அன்றைய தினத்தில்தான், தமிழக மக்கள் சனநாயகக் கட்சியின் மாநிலத் தலைவர், கே.எம்.சரீப் அவர்களையும், முஸ்லீம் லீக்கின் மாநில பொறுப்பாளர்.வழக்கறிஞர்.ஜீவகிரிதரன் அவர்களையும், தேசிய லீக்கின் மாநிலத் தலைவர், தடா.ஜெ.அப்துல் ரஹீம் அவர்களையும், சமூக ஆர்வலரும், ஆவணப்பட இயக்குநருமான, செங்கிஸ்கான் அவர்களையும் சந்தித்துப் பேசினேன். இதுதான புரட்சியளர்.பழனிபாபா அவர்களின் 'வாழ்வும் போராட்டமும்' எனும் வரலாற்று நூலுக்கான முதல் சந்திப்புகளும் கூட.
இதன் பிறகு இந்தப் புத்தகத்திற்க்காக பல்வேறு சந்திப்புகள், பல்வேறு ஆளுமைகளுடனான தொடர்புகளென, எனக்கான வட்டம் விரிவடைந்து கொண்டது.
இதன் பிறகான காலங்களில், ஆளூர் அவர்களுடனான மெல்லிய இடைவெளிப் போக்கு அதிகரித்தது. அவருடனான பேச்சுக்கள் முற்றும் குறந்து போயின. காரணம் நான் அவரை தவறாக எடை போட்டதின் மடமைகள் அவை. அவரின் எழுத்துக்களை அரசியலுக்கான இலாபியாக, அவரின் சுயத்திற்க்கான இலாபியாக எண்ணிக் கொண்டேன். சனவரி-28-2014 பழனிபாபா நினைவு நாள் கூட்டம் முடித்துவிட்டு, ஒரு கட்சியின் மாநிலப் பொறுப்பில் உள்ள ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கையில் அவரும் என் மனதில் அரும்பிய கருத்தினை வளர்த்துவிடும்படி, எழுத்துக்களை தனக்காக, கட்சிக்காகப் பயன்ப்டுத்திக் கொள்கிறாரென கூறினார். அதிலிருந்து சில மாதங்கள் தொடர்புகள் அற்றெ இருந்துவிட்டேன்.
ஆனால், சமீபத்தில் சென்னை சென்ட்ரலில் குண்டு வெடித்ததை ஒட்டி, முன்னர் கைது செய்யப்பட்ட ஜாஹிர் உசேன்தான் காரணம் என்பதைப் போல, கலைஞர் கருணாநிதி வெளியிட்ட அப்பட்டமான சிறுபான்மை விரோதப் போக்கை கண்டித்து, மிகச் சரியாக ஆளூர் அவர்கள் தனது முகநூலில் கருத்து வெளியிட்டார். அது மிகவும் சர்ச்சைக்கும், திமுக நபர்கள் பலரையும் அவரை நோக்கி எதிர்ப்பாகத் திருப்பியது.
இந்த சம்பவத்திற்கு பிறகுதான் அவருக்கு நான் அழைத்துப் பேசினேன். அருமையான பதிலடி என்று அவருடன் பகிர்ந்தேன்.
அப்பொழுது நான் கேட்டேன், இதனால் உங்களின் எதிர்கால அரசியல் பாதிக்காதா என்றேன். அதற்கு அவர் சொல்லியது:
அப்பொழுது நான் கேட்டேன், இதனால் உங்களின் எதிர்கால அரசியல் பாதிக்காதா என்றேன். அதற்கு அவர் சொல்லியது:
"என்னைக் கொண்டுவந்தது சமுயதாயக் களங்கள்தான். பதவி என்பது என்னுடைய தகுதிக்கு கிடைத்ததே தவிர, அது எனக்கான கடிவாளமில்லை. சமூகத்தை நோக்கி இப்படி வருகிறபோது, அதனை நாம் சரியாக எதிர்கொள்ள வேண்டுமே தவிர, பதவி எதிர்காலம்னு சுருங்கக் கூடாது"
என்ற வண்ணம் தெரிவித்தார்.
சமீபத்திலேதான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக பதவி பெற்றவர். விடுதலைச் சிறுத்தையானது திமுக-வின் கூட்டனிக் கட்சி, இப்படி இருக்க இவர் எப்படி கலைஞரை எதிர்த்து பேசினார் என்கிற சிந்தனையும்,
இவருக்கு அதிகம், ஆரம்பத்திலே காட்சி ஊடக முகம் கொடுத்தது புதிய தலைமுறை அது பாஜக பக்கம் சாய்ந்தது, இதேபோல் கேப்டனும் சாய்ந்து கொண்டது. ஆதாலால் அவர்கள் இவரை அழைப்பது இயலாலதது. என்றேனும் வேண்டுமானால் நடக்கலாம். இந்த நிலையில் இவர் ராஜ் நியூஸ், இமயம் டிவி போன்ற சேனல்களில் வந்தாலும், கலைஞர் செய்திகள்தான் தற்போது இவரை அழைத்துக் கொண்டிருக்கும் பெரிய ஊடகம், இந்த நிலையில் கலைஞரை விமர்சனம் செய்துள்ளாரே, இனி கலைஞர் செய்திகள் எப்படி கூப்படிப் போகிறார்களென்கிற சிந்தனையும் எனக்கு அழுத்தமாகவே இருந்தது. அவரை நினைத்திருப்பாரோ என்னவோ, நான் இப்படித்தான் நினைத்தேன்' \கொஞ்சம் அமைதியாக இருந்திருக்கலாம், ஒரு பொதுச் சமூக கட்சியில் மாநில பொறுப்பில் சென்றுள்ள இவர் ஏன் இப்படி செய்ய வேண்டும், இவரின் இடம் இன்று மிக முக்கியத் தேவை, கொஞசம் கவனமாகக் கையாண்டிருக்கலாம் அல்லவா?| என்றுதான்.
ஆனால் இதுபற்றியெல்லான் அலட்டிக் கொண்டவராக அவர் தெரியவில்லை, 'பதவி கடிவாளமில்லை' எனச் சொல்லிய ஒற்றைச் சொல்லில் அவரின் மீதான அத்துனை தப்பபிப்ராயங்களும் உடைந்து போய்விட்டன.
சரி விடயத்திற்கு வருகிறேன்....
இருமுறை வாய்ப்பு இருந்தும், அந்தக் கருவி வாங்கியதற்க்கான முதல் எண்ணம் நிறைவேறவே இல்லை. இது சரியாக நிறைவேறியது 12-07-2014 சனிக் கிழமை அன்றுதான். அன்று அவரைச் சந்திக்க அவரது எக்மோரில் உள்ள விட்டிற்கு உற்ற தொஒழர்.ஷாஜஹான் அவர்களோடு சென்றேன். அப்பொழுது எடுக்கப்பட ஒளிப்படம்தான், ஆளுர் அண்ணனோடு எடுத்துக் கொண்ட முதல் படம். இதைத்தான், தொடக்கத்தில் பதிவிட்டேன்.
(தோழர்.உமர்கயான் மற்றும் ஆளூர் ஷாநவாஸ் அவர்களுடன்)
(தோழர்.ஷாஜஹான் மற்றும் ஆளூர் ஷாநவாஸ் அவர்களுடன்)
பிறகு மீண்டும், 13-07-2014 அன்று மீண்டும் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினோம், அப்போது தோழர்.ஷாஜஹான் மற்றும், போராளித் தோழர்.உமர்கயான் அவர்களும் உடனிருந்தனர். இந்த சந்திப்புதான் மகிழ்ச்சித் தருணமென நான் தலைப்பாய்க் குறித்திருப்பதற்க்கான நிகழ்வாகும். எந்த ஆளுமையிடம், எப்படி இருக்க வேண்டுமென நினைத்தேனோ அது அநேகம் நிறைவேறிய நாள் அது. பழனிபாபா அவர்கள் குறித்த நிறைய ஆவணங்களை சேகரித்து வைத்திருந்த ஆளூர் அண்ணன், அதனை அப்படியே எங்களுக்குத் தந்து உதவினார். இது அவரின் பத்தாண்டுகால சேகரிப்புகள் என்றும் குறிப்பிட்டார். நாங்கள் இதுவரை எட்டு மாதங்கள், பழனிபாபாவின் காலடித்தடத்தைத் தேடி நெடிய பயணங்களையும், அதிக சந்திப்புகளையும் நிகழ்த்தியிருக்கிறோம், யாரும் இவ்வளவு எளிதில், அதுவும் இவ்வளவு ஆவணங்களை கொடுத்ததே இல்லை. அவர்களிடம் இருந்தாலும் கூட அலைக்கழிப்புச் செய்தனரே தவிர உடனே தந்திடவில்லை. பலர் இருந்தும் தரவில்லை. சிலர் தராவிட்டாலும், தொடர்ந்து வேலை நடக்கவிடாமல், மறைமுக, கீழறப்பு இடையூறல்களை இடைவிடாது செய்தும் வருகின்றனர். எனினும், தோழர்.உமர்கயானின் உறுதுணையால் பழனிபாபாவின் வரலாறு நிச்சயம் பரிபூரணம் அடையும், விரைவில்.
இந்தச் சந்திப்பில், ஆளூர் அவர்களுடன் சாலையில் ஒருசேர பேசிக் கொண்டே நடந்ததும், எக்மோர், மதிமுக தலை அலுவலகத்திலிருந்து, கே.கே.நகர் அசோக் பில்லர் வரை அவருடன் ஆட்டோவில் அருகில் அமர்ந்து (இடம் பற்றாமல், தோழர்.உமர்கயானின் காலில் அமர்ந்து கொண்டு பயணித்தேன்)
உரையாடிக் கொண்டே சென்றோம். எங்களுக்கு பேருந்து நேரம் நெருங்கிவிட்டதால், எழுச்சித் தமிழர் திருமாவளவன் அவர்களைச் சந்திக்கின்ற வாய்ப்பு அன்று அமையவே இல்லை.
எனக்கான, பல பார்வைகளில் உதித்த ஒரு ஆளுமையினுடனான நெருக்கமான அந்த நாட்களை என்றும் நினைவில் கொள்ளத் தக்கது.
எனக்கான, பல பார்வைகளில் உதித்த ஒரு ஆளுமையினுடனான நெருக்கமான அந்த நாட்களை என்றும் நினைவில் கொள்ளத் தக்கது.
இந்த இடங்களில், என்னை இலக்கியத் தடங்களில் திருப்பிட்ட பாரதி வாசன் அவர்களை குறிப்பிட்டுள்ள நான், தோழர் உமர்கயான் அவர்களை சிறிய அளவில் குறிப்பிட்டு நகர்ந்துள்ளேன். உமர்கயான் தோழரின், தொடர்புகள், பழக்க உறவுகள், தோழமையாய் மாறிப் போன சமபவங்கள், வீழ்ந்தபோது என்னைத் தூக்கிவிட்ட உடன்பிறப்புச் செயல்கள், புரட்சியாளர்.பழனிபாபாவின் நூலிற்க்கான அயராது தனது பலவேலைகளையும் விட்டுவிட்டு என்னோடு அயற்சி அடையாது பயணிக்கும் அவரின் தியாகங்கள், எனக்கான ஒரு அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தவைகள் என பலவற்றையும் விரிவாக, இன்னொரு தருணங்களில் நிச்சயம் பேச வேண்டிய, அவசியம் எழுத வேண்டிய ஒன்று. அதற்கு முன்னோட்டமாய் ஒன்றைக் குறிப்பிட்டுக் கொள்கிறேன், அவர் ஒரு போராளித்.தோழர்.
தோழமையுடன்
பழனி ஷஹான்














.jpg)
.jpg)

