Saturday, 24 June 2017

கீழடி – புதைக்கப்படும் தமிழ் இனத்தின் வரலாறு


ல்தோன்றி  மண்தோன்றாக்  காலத்தே  வாளொடு -  முன்தோன்றிய மூத்த  குடி” என்கிற ‘புறப்பொருள் வெண்பாமாலையின் வரிகளை, தமிழின் தொன்மையைக் குறித்துப் பேசுவதற்கு எடுத்தாளுகிற வழக்கமுண்டு. இது கி.பி. 9ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட வரிகளாகும். இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியமும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்ட திருக்குறளும், கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் மத்தியில் எழுதப்பட்ட சிலப்பதிகாரமும் தமிழின் முதுமையைக் காட்டக் கூடியவைகளாக உள்ளன. இலக்கியங்களின் வழியாக போற்றப்பட்ட தமிழின் முதுமைக்கு, இப்போது அறிவியல் ஆதாரங்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன. சிந்துசமவெளிப் பகுதிக்கு மட்டுமே சொல்லப்பட்ட நாகரிக வரலாறு, தமிழ் மண்ணிற்கும் உண்டென்கிற சுவடுகளைக் கொண்டுள்ளது கீழடி.




சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மாநகரிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில், வைகை நதியின் தென்கரையில் அமைந்துள்ளது கீழடி கிராமம். சிவகங்கை மாவட்டத்தினுள் அடங்கும் இக்கிராமம், மதுரையிலிருந்து சிவகங்கை செல்லும் சாலையில் ‘சிலைமான்எனும் ஊரிலிருந்து உள்நோக்கிச் செல்கிறது. பெரும் நாகரிகச் சமூகம் வாழ்ந்த கீழடிக்குச் சென்றுவர முறையான எந்தப் போக்குவரத்து வசதிகளுமே இல்லை. நானும் தோழர் மனோஜூம் கீழடிக்குச் சென்றபோது, அகழாய்வு செய்யப்பட்ட இடங்கள் மூடப்பட்டிருந்தன. அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருட்களின் புகைப்படங்களைத் தாங்கியபடி சில பலகைகள் மட்டுமே அங்கு எஞ்சியிருந்தது.


அந்தப் புகைப்படங்களில் சிவப்பு மற்றும் கருப்பிலான பானைகள் தெரிந்தன. தந்தத்தாலான தாயக்கட்டைகள் அதில் இருந்தன. கி.மு. 6ஆம் நூற்றாண்டின் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பொருட்களைக் கண்டேன். மிகப்பெரிய பாதுகாப்புக் கிடங்காகப் பயன்படுத்தப்பட்ட சிவப்புநிற மட்பாண்டத்தைப் பார்த்தேன். இரும்பிலான பொருட்கள், செம்புப் பொருட்கள், அம்பு முனைகள், கண்ணாடி வளையல்கள், எடைக் கற்கள் எனப் பலவற்றைக் கொண்டிருந்தது அந்தப் புகைப்படத் தொகுப்பு. இவை எல்லாவற்றிற்கும் மேலாக செங்கற்களில் அமைக்கப்பட்ட வீடுகளையும், முறையான கால்வாய் வசதிகளைக் கொண்ட தெருக்களையும், உறைகளன் வைத்து அமைக்கப்பட்ட கிணறுகளையும் கீழடி கொண்டிருந்தது வியப்பை அளித்தது. அந்தப் புகைப்படப் பலகையத் தாண்டி உள்ளே சென்றபோது, அங்கு செந்நிற உறைகளன்கள் மற்றும் பானைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. உடைந்த பொருட்களின் சில்லுகளை ஒரு திறந்த அறையில் எவ்வித அக்கறையுமின்றி குப்பைகளைப் போல குவித்து வைத்திருந்தனர். அதன் மத்தியில் சில பொருட்கள் வெள்ளைநிற சாக்குகளால் சுருட்டியும், கட்டியும் வைக்கப்பட்டிருந்தன. தமிழர்களின் பாரம்பரியத்திற்கு அளிக்கப்பட்டுள்ள மரியாதையைக் கண்டு மனம் வெதும்பியது.


2013 – 2014ஆம் ஆண்டில் வைகை ஆறு தொடங்கும் தேனி மாவட்டத்திலிருந்து, அது கடலில் சென்று கலக்கும் இராமநாதபுரம் மாவட்டம் வரையில் மத்திய தொல்லியல் துறை வைகை நதிப்படுகையில் உருவான நாகரிகத்தை அறிய ஆய்வை மேற்கொண்டது. அதில் 293 கிராமங்கள் தொல்லியல் எச்சங்கள் உள்ள பகுதிகளாகக் கண்டறியப்பட்டு, அவை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில் கீழடி அதிக தொல்லியல் எச்சங்களைக் கொண்டிருப்பதைக் கண்டுகொண்ட மைசூரிலுள்ள இந்திய தொல்பொருள் அகழாய்வுப் பிரிவு, மார்ச் 2015இல் அங்கு தங்களது அகழாய்வுப் பணியைத் தொடங்கியது. 110 ஏக்கர் பரப்பளவுகொண்ட கீழடியில் 50 சென்ட் நிலத்தில் மட்டுமே இதுவரை ஆய்வு நடைபெற்றுள்ளது. இந்தக் குறுகிய நிலப்பகுதியின் ஆய்வே, தமிழர்களின் வரலாற்றை 5000 ஆண்டுகளின் தொன்மைக்கு அழைத்துச் சென்றுவிட்டது.
8500 ஆண்டுகளுக்கு முற்பட்ட நாகரிக நகரமான மொகஞ்சதாரோவின் எல்லையைக் கீழடி தாண்டும் என்கிற கணிப்பு ஆய்வாளர்களின் மத்தியில் இருக்கிறது.

மொகஞ்சதாரோவில் தமிழ் கல்வெட்டுகள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. மேலும் அங்கு பேசப்படும் ‘பிரிசுமொழி தமிழ் உச்சரிப்பைக் கொண்டுள்ளது. எனவே கீழடியின் ஆய்வு நீடித்தால் அது மொகஞ்சதாரோவை விரைந்து அடைந்துவிடும் சூழல் இருக்கிறது. ஆனால் மத்திய பா.ஜ.க. அரசோ கீழடியின் ஆய்வுப் பணிகளை எந்தக் காரணங்களையும் தெரிவிக்காமல் முடக்கி வைத்துள்ளது. 2015 மற்றும் 2016 என இரண்டு ஆண்டுகளாய் நடைபெற்று வந்த கீழடியின் அகழாய்வுகளை மேற்கொண்டு நடத்துவதற்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி மறுத்துள்ளது. 2017ஆம் ஆண்டிற்கான அகழாய்வுப் பணி குறித்த எந்த அறிவிப்புகளையும் மத்திய அரசு இதுவரை அறிவிக்கவில்லை.



“இதேகாலகட்டத்தில் தொடங்கப்பட்ட குஜராத் மாநிலத்தின் வாட் நகரிலும், இராஜஸ்தான் நகரின் பிஜூர் பகுதியிலும் இந்த ஆண்டும் ஆய்வுப் பணிகள் தடையேதும் இல்லாமல் தொடர்ந்துகொண்டுதான் உள்ளன. ஆனால் அங்கெல்லாம் கீழடியைப் போன்ற பெரும் வரலாற்றுச் சான்றுகள் கிடைத்துவிடவில்லை. இதில் வாட் நகர் பிரதமர் மோடியின் சொந்த ஊர் என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயம்’’ என சு.வெங்கடேசன் பதிவு செய்துள்ளார். வெறும் 50 சென்ட் பரப்பிலேயே அரிய வரலாற்றைப் புதைத்து வைத்திருந்த கீழடியின் மீதமுள்ள 99 சதவீத நிலப்பரப்புகளை மத்திய அரசு ஆய்வுக்குட்படுத்தாமல் புறக்கணிப்பதன் பின்னால் ஆழமான அரசியல் தலைதூக்கி நிற்பது தெளிவாகத் தெரிகிறது.

பத்திற்கும் மேற்பட்ட செங்கல் கற்களால் கட்டப்பட்ட வீடுகள், கூரை ஓடுகள், மிளிர்கல் அணிகலன்கள், எழுத்தாணி, 71 தமிழ் பிராமி எழுத்துகள், சுடுமண் முத்திரைக் கட்டைகள், சுடுமண் பொம்மைகள், சூது பவளம், அகேட் மணிகள்  என கீழடியில் மொத்தம் 5300 தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. சங்க காலத்தில் நகர நாகரிகம் இருந்ததற்கான தவிர்க்கமுடியாத சான்றுகளை கீழடி வெளிப்படுத்திவிட்டது. இதுபோல அங்கு ஒரு மிகப்பெரிய சாயத் தொழிற்சாலை இருந்ததற்கான சான்றுகளும் கிடைத்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். தமிழர்களின் தொன்மை வாய்ந்த வரலாற்றை மூடிமறைக்கப் பார்க்கும் மத்திய மோடி அரசு, கீழடியில் கிடைத்த பொருட்களையெல்லாம் மைசூருக்கு இலாவகமாகக் கடத்திவிட்டது. தமிழகத்தில் களஅருங்காட்சியகம் இல்லை என்கிற காரணத்தை முன்வைத்து இதைச் செய்திருக்கிறது மத்திய அரசு. களஅருங்காட்சியகம் இல்லை என்றால், அதனை அமைக்கலாமே என்கிற கேள்வி எழுந்தபோது, மாநில அரசு அதற்கு உரிய நிலம் ஒதுக்கவில்லை எனக் காரணம் காட்டியது. ஆனால் தமிழக அரசு இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்கியப் பிறகும், களஅருங்காட்சியகம் அமைப்பதற்கு மத்திய அரசு எவ்வித ஆர்வமும் காட்டவில்லை.
கீழடியில் கிடைத்துள்ள பொருட்களை, அதன் காலத்தை அறிவதற்கு கார்பன்-14 பகுப்பாய்விற்கு அனுப்பிய மத்திய அரசு, அதிலும் தனது வஞ்சகத்தைக் காட்டியுள்ளது. கார்பன் பகுப்பாய்விற்கு குறைந்தபட்சம் பத்து பொருட்களை அனுப்ப வேண்டும். ஆனால் கீழடியில் கிடைத்துள்ள 5300 பொருட்களில் வெறும் இரண்டு பொருட்களை மட்டுமே அனுப்பி வைத்துள்ளது மத்திய அரசு. இங்கு கிடைத்துள்ள பொருட்கள் இந்தியாவில் எங்கும் கிடைத்திடாத பொருட்களாகும். அதைத் தமிழகத்தில் வைத்துப் பாதுகாக்காமல் மைசூருக்கு எடுத்துச் சென்ற மத்திய அரசு, அதன் காலத்தைக் கண்டறியும் ஆய்விலும் கயமைத்தனத்தைச் செய்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அப்பட்டமான தமிழர்விரோதப் போக்கையே வெளிக்காட்டுகின்றன.

சமீபத்தில் கீழடிக்குச் சென்றிருந்த மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமன் மற்றும் மகேஷ் சர்மா ஆகியோரை அக்கிராமத்திற்குள் நுழையவிடாமல் தடுத்தனர் கீழடி மக்கள். கீழடி அகழாய்வுப் பணிகளைக் கண்காணித்து வந்த கண்காணிப்பாளர் அமர்நாத் கிருஷ்ணன் அங்கிருந்து ஒரிஷாவிற்கு மாற்றப்பட்டதே அதற்குக் காரணம். கீழடியில் களஅருங்காட்சியகம் அமைக்க வேண்டி மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை என்கிற குற்றச்சாட்டைத் துணிந்து சொன்னவர் அமர்நாத். அதன்பிறகுதான் மாநில அரசு இரண்டு ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது. கீழடியின் ஆய்வுப் பணிகளை உடனுக்குடன் வெளியில் தெரியப்படுத்திய அமர்நாத், இந்தப் பகுதியில் மேலும் ஆய்வுப் பணிகள் தொடர வேண்டும் என்கிற கோரிக்கையை அரசிற்கு விண்ணப்பித்திருந்தார். இந்தத் தருணத்தில்தான் அமர்நாத் அங்கிருந்து இடம் மாற்றப்பட்டார். இதுதான் கீழடி மக்கள் கொதித்தெழுவதற்கு காரணமாகும். நான் கீழடிக்குச் சென்றிருந்தபோது, அம்மக்களிடம் இருந்த கோபத்தை உரையாடலின் மூலமாக அறிந்தேன். அமர்நாத்தின் மீதிருந்த நம்பிக்கை, புதிய அதிகாரியான இராமன் மீது அவர்களுக்கு இல்லை. ‘இங்கேயே சுற்றிக்கொண்டிருப்பார் பழைய ஆபீஸர்என அகழாய்வு இடத்தில் பணியில் இருப்பவர்கள் கூறுவதை நேரடியாகக் கேட்டேன். அதில் ஒருவித ஏக்கமும் கலந்திருந்ததை உணர்ந்தேன்.



நம்பிக்கையின் அடிப்படையிலான இராமாயணத்திற்கு அயோத்தியில் அருங்காட்சியகம் அமைக்க 151 கோடி ஒதுக்கீடு செய்துள்ள மத்திய அரசு, வரலாற்றின் அரிய சுவடுகள்கொண்ட கீழடியை கிடப்பில் போடுகிறது. கீழடியில் இதுவரை நடத்தப்பட்ட ஆய்வில் எந்தவிதமான மத அடையாளங்களுமே கிடைக்கவில்லை. மதங்கள் எதுவுமற்ற சமூகமாக தமிழ் முன்னோர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதையே கீழடி நமக்கு உணர்த்துகிறது. இப்படியான கீழடியில் ஆய்வைத் தொடர வேண்டுமெனில் அங்கொரு ‘இராமன்சிலையை யாரேனும் புதைத்து வைக்க வேண்டும். அமர்நாத்தைத் தூக்கிவிட்டு ‘இராமனைஅங்கு பணியமர்த்தியதில், எந்த அரசியலும் இல்லை எனப் பாமரத்தனமாக நம்புவதற்கு முடியவில்லை. ஆரிய சுவடுகள் எதுவும் சிக்காதது மத்திய அரசின் கொள்கைக்குச் சிக்கலை உண்டாக்கிவிட்டது. இதனால்தான் ஆய்வுகள் முடக்கப்பட்டுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.


மத்திய பா.ஜ.க. அரசின் தமிழர் விரோதப்போக்கு என்பது, நெடிய வரலாற்றுப் பின்புலம் கொண்டது. ஆரிய – தமிழின பகைமை என்பது இன்றளவும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. கீழடியில் அகழாய்வு தொடரும் பட்சத்தில், அது சந்தேகமற்று மொகஞ்சதாரோவின் காலத்தை எட்டிவிடும். தற்போதுவரை செய்யப்பட்டுள்ள கீழடியின் அகழாய்வில், ரோமனுடன் வர்த்தகம் செய்ததற்கான ஆதாரங்களாக ‘ரெளலட், அரிட்டைன் வகை மண்பாண்டங்கள்கிடைத்துள்ளன. தமிழர்கள் ரோமன்வரை 5000 ஆண்டுகளுக்கு முன்பே வர்த்தகம் செய்துள்ளனர் எனில், தமிழ் மொழி எங்குவரை இருந்திருக்கிறது என்பது புலப்படுகிறது. மொகஞ்சதாரோவில் பேசப்படும் பிரிசு மொழி தமிழைப் பிரதிபலிக்கிறது என்ற குறிப்பும், கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
“கல்தோன்றி மண்தோன்றா காலத்தேஎனும் புறப்பொருள் வெண்பாமாலை சொல்லும் வரியை மெய்ப்பிக்கும் பல சான்றுகள் நமக்கு கிடைத்துள்ளன. அதில் கீழடி பிரதானத்தைப் பெற்றுள்ளது. கீழடி தவிர இன்னும் சில சான்றுகள் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால் அவை குறித்த பரப்புரைகளை மிகவும் தந்திரமாக தமிழர்களுக்கு எட்டாமல் செய்துவிட்டனர்.

கி.பி. 9ஆம் நூற்றாண்டில் புறப்பொருள் வெண்பா மாலை எதைக் கூறியதோ, அதை இன்று ‘ஊட்சி’ எனும் இறந்த மனிதனின் குரலும், அமெரிக்க மொழியியல் ஆய்வாளரும் பேராசிரியருமான ‘அலெக் கோலியர்’ என்பவரும் உறுதி செய்துள்ளனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு செப்டம்பர் மாதத்தின் 19ஆம் தேதியில், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், ஆல்ப்ஸ் மலையின் ‘டைசென்ஜான்’ சிகரத்தை மதிய வேளையில் அடைகின்றனர். ஐரோப்பிய கண்டத்தின் ஆஸ்திரியா மற்றும் இத்தாலி வரை பரந்து விரிந்த பனிமலையான ஆல்ப்ஸ் மலையில், ஜெர்மன் சுற்றுலா பயணிகள் ஒரு இறந்த மனிதனின் சடலத்தைக் கண்டு பிடித்துள்ளனர்.

அந்த இறந்த மனிதனைக் குறித்த தகவல்களை ஜெர்மன்வாசிகள், வெளியுலகத்திற்குக் கூறுகின்றனர். இதன் தொடர்ச்சியாய், ஆல்ப்ஸ் மலையில் கிடைத்த அந்த மனிதனை ஆய்வாளர்கள் கை பற்றுகின்றனர். அப்போதிலிருந்து அவர்கள் தங்களின் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். கடல் மட்டத்திலிருந்து 11 ஆயிரம் அடி உயரத்தில் ‘டைசென்ஜான்’ சிகரம் இருந்ததினால், அந்த மனிதனின் சடலம் 90 சதவீதம் முழுமையாக பழுதுகளற்று இருந்துள்ளது. இது ஆய்வாளர்களுக்கு பெரிதும் உதவியாக அமைந்துவிட்டது. ஆய்வாளர்கள் முதலில் செய்தது, அந்த மனிதனுக்கு ‘ஊட்சி’ எனப் பெயர் சூட்டியதாகும். இதனையடுத்து ஊட்சியை முதுகுக்குப் பின்னால் யாரோ அம்பெய்திக் கொலை செய்துள்ளார்கள் என்கிற தகவலை ஆய்வாளர்கள், தங்களின் ஆய்வின் வழியே வெளிக்கொண்டு வந்தனர்.

ஊட்சி இறக்கும்போது தனது தோளில் வில் அம்புகளை சுமந்திருந்ததாகவும், உடலில் 56 இடங்களில் பச்சை குத்தி இருந்துள்ளதாகவும், ஊட்சி இறக்கும்போது அவருக்கு வயது 45 எனவும், அவர் இறப்பதற்கு மூன்று மாதங்களிலிருந்து மனவேதனையுடன் இருந்திருக்கிறார் என்பதாகவும் ஆய்வாளர்கள் ஊட்சியைக் குறித்துப் பல தகவல்களைக் கூறியிருக்கிறார்கள். மேலும், ஊட்சி கடைசியாகச் சாப்பிட்ட உணவு குறித்துக்கூட ஆய்வாளர்களர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தத் தொடர் ஆய்வுகளின் வழியாக, ‘ஊட்சி எனும் பனி மனிதன்’ 5300 ஆண்டுகளுக்கு முற்பட்டவன் என்கிற முக்கியமான கண்டுபிடிப்பையும் ஆய்வாளர்கள் உலகத்தின் முன் சமர்ப்பித்துள்ளனர். இவை எல்லாவற்றையும் கடந்து, ஊட்சியின் மொழி பற்றி ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்தான் இப்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது. 5300 ஆண்டுகளுக்கு முற்பட்ட ‘ஊட்சி’ மனிதனின் குரல் தடத்தை அறிய முயற்சி மேற்கொண்ட அறிஞர்கள், நவீன தொழில்நுட்பங்களின் உதவியால் ‘ஊட்சியைப்’ பேசவைத்துள்ளனர். அப்போது ஊட்சி ஒலித்த சொற்கள் உலகத்தை ஆச்சரியத்தில் வீழ்த்தியிருக்கிறது.

”ஆ, இ, ஈ, உ, ஊ” என்கிற இந்தச் சொற்களைத்தான் ஊட்சி, பேசியிருக்கிறான். ஊட்சியின் குரல், தமிழ் மொழியை வெளிப்படுத்தியிருப்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்து, செய்திகளை வெளியிட்டுள்ளனர். இன்று உலக மொழியியல் வரலாற்றில் ஊட்சியின் குரல் உரத்து ஒலிக்கப்பட்டுக் கொண்டுள்ளது. ஊட்சி தமிழைப் பேசும் அந்த ஒலிநாடாவை (Audio) யூடியூப் (Youtube) இணையதளத்தில் ‘OTZI THE ICE MAN’S VOICE’ என்று தட்டச்சு செய்து தேடினால் நம்மால் காண இயலும்.


உலகில் உள்ள 6000க்கும் அதிகமான மொழிகளில், 8 மொழிகள் மட்டுமே செம்மொழிகள். கிரேக்கம், சமஸ்கிருதம், இலத்தீன், பாரசீகம், அரபு, எபிரேயம் மற்றும் சீன மொழிகளாகிய இந்த ஏழு தமிழ் அல்லாத செம்மொழிகளும், தமிழ் இன்று அடைந்திருக்கும் கால எல்லையை அடையாதவைகளாகும். அதாவது தமிழ் பேசும் ‘ஊட்சி’ மனிதன் 5300 ஆண்டுகளுக்கு முற்பட்டவன் என்கிறபோது, தமிழ் மொழியின் வரலாறும் 5300 ஆண்டுகளுக்கு முன்பாகச் செல்கிறது. உண்மையில் உலக மொழிகள் எதுவுமே அடைந்திடாத எல்லை இது.

ஊட்சி மனிதனின் குரல் தடத்தைப் போலவே, அமெரிக்க மொழியியல் ஆய்வாளரான ‘அலெக் கோலியரின்’ தமிழ் குறித்த கருத்தும், பெரிய அளவில் உலகத்தைப் பரபரப்பாக்கியுள்ளது. அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்த பேராசிரியர் அலெக், “உலகத்தில் முதன் முதலாகத் தோன்றிய மொழியும், உலகம் தோன்றியதிலிருந்து வாழ்ந்த மக்கள் முதலில் பேசிய மொழியும் தமிழ்தான்” எனக்கூறியுள்ளார். அலெக் கோலியரின் இந்தக்கூற்றின் காட்சிப் பதிவு வெளியாகி, அது பிரதான ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. “At one time, We all spoke the same language on the Planet. The last time we all spoke the same language. The language was the Tamil language of India” என்பதாக பேராசிரியரும் மொழியியல் ஆய்வாளருமான அலெக் கோலியர் கூறியுள்ள கருத்துகளும், யூடியூப் (Youtube) இணையதளத்தில் காணக்கிடைக்கிறது.


இதேபோல் “WorldBlaze” என்கிற இணையதளம்கூட அண்மையில், உலகின் பழமையான மொழிகளின் பட்டியல் ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய மொழி என, தமிழை முதலிடத்தில் அந்த இணையதளம் தரவரிசை செய்திருந்தது என்பதும் இங்கு சேர்த்துப் பார்க்கப்பட வேண்டிய ஒன்று.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு ஆரியத்துவா கண்ணோட்டத்தில் கீழடியை இருட்டடிப்பு செய்ய முயற்சித்தாலும், தமிழின் தொன்மத்தை எளிதில் அழித்துவிட இயலாது என்பதற்கு மேற்சொன்ன அடுக்கடுக்கான சம்பவங்களே சாட்சி. ஆனாலும் இதை அரசியல் அரங்கில் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.

“தமிழகத்தில் கிடைத்துள்ள மிக முக்கியமான கண்டுபிடிப்புகள் இவை. இந்த கண்டுபிடிப்புகளின் மூலம் தமிழக வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். கீழடியில் மேலும் ஆய்வு தொடர வேண்டும்என 2016 டிசம்பரில் கூறியுள்ளார் வரலாற்று அறிஞர் ரோமிலாதாப்பர். அவருக்கு இருக்கும் உணர்வுகூட தமிழக அரசியல்வாதிகளிடத்தில் இல்லை என்பது பெரும் வருத்தத்தையே அளிக்கிறது.
கீழடி விசயத்தில் எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின், மத்திய கலாச்சாரத்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார். இடதுசாரி அமைப்புகள் ஆரம்பத்திலிருந்து குரல் கொடுத்துள்ளனர். இதுதவிரவும் சில கட்சிகள் இதுகுறித்துப் பேசியுள்ளன. ஆனால் வலுவான அளுத்தம் கொடுப்பதுதான் இப்போதைய தேவை. இதில் தமிழ், தமிழ் என முழுங்குபவர்கள் குரல் ஒலியற்றுக் கிடக்கின்றன. அவர்களின் மெளனத்தை அறிவுபேதமை என்று எடுத்துக்கொள்வதா அல்லது அவர்களின் தமிழ் உணர்வை நாடகம் என்று குறிப்பிடுவதா என்பது புரியவில்லை. இன்னொருபுறம் ஆளும் அ.தி.மு.க. அரசு காட்டும் மெத்தனத்தைக் கண்டித்து எந்தப் பயனுமே இல்லை. அந்தளவிற்கு விமரிசனத்திற்குக்கூட தகுதியற்று கிடக்கிறது அக்கட்சியின் இலட்சணம்.
கீழடியில் ஆய்வுகள் தொடரப்பட வேண்டும். கீழடியிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொக்கிஷங்களை தமிழகத்திற்கு திரும்பக்கொண்டு வந்து, அதன் ஆய்வுகள் இங்கு நடத்தப்பட வேண்டும். இல்லையேல் 2005இல் நடந்துமுடிந்த ஆதிச்சநல்லூரின் அகழாய்வு முடிவுகள் இதுவரை வெளியிடப்படாதைப் போலவே, இதையும் மத்திய அரசு கபளீகரம் செய்துவிடும். தமிழகத்தில் கீழடிக்கான களஅருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும். கீழடியிலிருந்து பணிமாற்றம் செய்யப்பட்ட அமர்நாத்தை திரும்ப பணியமர்த்த வேண்டும்.

வைகை நதிப்படுகையில் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 293 தொல்லியல் எச்சமுள்ள பகுதிகள் பலவும் இப்போது அதன் தன்மையை இழந்துகொண்டுள்ளன. கீழடியிலேயே சில இடங்கள் ஆய்வுகள் மேற்கொள்ள இயலாதவாறு மாறிவருகின்றன. தற்போது தோண்டி முடித்த பகுதி தென்னந்தோப்பு என்பதால், அங்கு மின்சாரக் கம்பிகள் செல்லும் இடத்தில் மரங்கள் எதுவும் இல்லாமல் இருந்தது. மேடான அந்த வெற்றிடத்தினால்தான், நமக்கு இவ்வளவு அரிய வரலாறு கிடைத்தது. இந்த ஆய்வைத் தொடர்வதில் காலதாமதம் ஏற்படுத்தினால், பல இடங்கள் பாழ்பட்டுப் போகும் அபாயம் இருக்கிறது. எனவே தமிழக அரசியல்வாதிகள் கீழடி பிரச்சினையில் மத்திய அரசிற்கு அளுத்தம் கொடுக்க வேண்டியது உடனடித் தேவையாகும். அரசியலில் மாற்றுக் கருத்துள்ளவர்கள்கூட, கைகோர்க்க வேண்டிய இடமாக கீழடி இருக்கட்டும். அதுதான் உங்களை எதிர்காலத்தில் தமிழர்களாக அடையாளம் காட்டும்.

கீழடி கல்லறை அல்ல. அது தோண்டப்பட வேண்டிய ஒரு இனத்தின் வரலாறு.

-பழனி ஷஹான்

நன்றி : உயிர்மை மாத இதழ். (ஜுன் 2017 உயிர்மை இதழில் வெளியான கட்டுரை)

இந்தியாவில் உருவாகுவார்களா, அப்துல் கலாம்கள்

    27.07.2015
ன்றுதான், ஒரு மாபெரும் துயரத்தை சந்தித்தது, இந்திய தேசம்.
மீட்கவே முடியாத அந்தத் துயரத்தினால், இந்தியாவின் ஆன்மா அழுதது. இமயமே சரிந்தது என, இந்திய மக்களின் இதயங்கள் துடித்தன. அந்தத் துயரம் நடந்திருக்கக் கூடாது. இந்தியாவின் வலிமையை உலக அரங்கில் ஒலிக்கச் செய்து, அமெரிக்காவையே அதிர்வுக்குள்ளாக்கிய இந்தியாவின் ஏவுகனை நாயகனும், முன்னாள் குடியரசுத் தலைவருமான, டாக்டர்.ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மறைவுதான், அத்துயரச் சம்பவமாகும்.

அப்துல் கலாம் அவர்களின் மறைவுக்கு நாம் வருந்தும் அதேவேளை, இனி அப்துல் கலாம்கள் உருவாகுவதற்கு இந்தியாவில் சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பதனையும் சேர்த்து கவனிக்க வேண்டும். அப்துல் கலாம் இட்டுச் சென்றுள்ள, வெற்றிடத்தை நிரப்பவோ, அவரின் தொலைநோக்குத் திட்டங்களுக்கு செயலூக்கம் கொடுக்கவோ, என்ன வழிமுறைகளை வைத்து இருக்கின்றோம் என்பதுதான், நம்மிடையே தற்போதுள்ள மிக முக்கியமான கேள்வியாகும்.


செயற்கைக்கோள் என்பது, பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாத பயன்பாட்டைக் கொண்டுள்ளது. இராணுவக் கண்காணிப்பு, வானியல் ஆய்வு, உளவு பார்த்தல் என, செயற்கைக்கோள்கள் ஒரு நாட்டின் பாதுகாப்புத் தளத்தில், மிக முக்கியப் பங்குவகிக்கின்றன. இதேபோல, மக்களின் வாழ்வாதாரச் சிக்கலை சரிசெய்யும் பொருட்டு, நீர் ஆதாரமுள்ள பகுதியையும், விளைபொருட்களின் உற்பத்தித் திறன் மிகுதியாக உள்ள இடங்களையும் மிகத்துல்லியமாக அறிந்து, அதற்கேற்ப அந்த இடங்களில் வளங்களைப் பெருக்கவும், செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஒரு நாட்டின் வலிமையை, பொருளாதாரம் எந்தளவிற்கு நிர்மாணிக்குமோ, அதே அளவு வலிமையை, ‘நாட்டின் சக்தி’ என்கிற அடிப்படையில் நிர்மாணிக்க வல்லதுதான், ‘செயற்கைக்கோள்கள் மற்றும் ஏவுகணைகளின்’ பாய்ச்சல்களாகும். நம் இந்திய நாட்டில், மனித சக்தி மலிந்து கிடக்கின்றது. அதே அளவிற்கு இங்கு பொருளாதார சக்தியும் விரிந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனாலும், நாம் வளரும் நாடுகளின் பட்டியலில்தான் இன்றுவரை இருந்து கொண்டுள்ளோம். ஆனால், மனித வளத்தில் குறைவாக உள்ள அமெரிக்கா, உலக வல்லரசாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டுள்ளது. இங்குதான் தொழில்நுட்பங்களின் சக்தியை நாம் உற்று கவனிக்க வேண்டியுள்ளது.
1957-ம் ஆண்டு அக்டோபரில், ஸ்புட்னிக்-1 என்ற செயற்கைக்கோளை, உலகிலேயே முதன்முதலாக விண்ணில் செலுத்தி, சோவியத் யூனியன் தனது சக்தியை நிரூபித்தது. அதே ஆண்டு நவம்பரில் மீண்டும், ஸ்புட்னிக்-2 என்கிற செயற்கைக்கோளை, லைகா எனும் நாயை உள்வைத்து அனுப்பியது சோவியத். சோவியத்தின் வளர்ச்சியை, உடனடியாக முறியடிக்கும் விதமாக, 1958-ம் ஆண்டு, ’எக்ஸ்ப்ளோரர்-1’ என்ற தனது முதல் செயற்கைக்கோளை, விண்ணில் ஏவியது அமெரிக்கா. அன்றுதொட்டு இன்றளவும், இவ்விரு நாடுகள்தான் இதில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டுள்ளன.




மனித வளத்தில் உலகின் இரண்டாம் இடத்தில் இருந்து கொண்டுள்ள இந்தியா, இன்றுவரை 77 செயற்கைக்கோள்களை மட்டுமே விண்ணில் செலுத்தியுள்ளது. 1975-ம் ஆண்டு ‘ஆர்யபட்டா’ (Aryabhata) எனும் தனது முதல் செயற்கைக்கோளை விண்ணிற்கு அனுப்பிய இந்தியா, உலக அளவில் செயற்கைக்கோள் அனுப்பு தளத்தில், 14-வது நாடாக விளங்கியது.

இன்று விண்ணில் 1000-க்கும் மேலான செயற்கைக்கோள்கள் உலவிக் கொண்டுள்ளன. இவைகள் அனைத்தும், 50 நாடுகளுக்கு உட்பட்டதாகும். இதில் இந்தியாவின் பங்கீடு கவலையளிக்கும் விதத்திலேயே இருந்து கொண்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம், பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துப் பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், இவ்வாறு கூறுகிறார்; “இன்றைய நிலையில், இந்தியாவின் ’27 செயற்கைக்கோள்கள்’ விண்ணில் செயலாற்றிக் கொண்டுள்ளன”. என்று. ஜிதேந்திர சிங் வெளியிட்ட தகவலுக்குப் பின்னர், கடந்த ஆகஸ்டு மாதத்தில், ”ஜி-ஷாட்-6 (GSAT-6)” என்கிற செயற்கைக்கோளை இந்தியா விண்ணுக்கு அனுப்பியுள்ளது. ஆக, இன்றைய நிலையில், விண்ணில் செயலாற்றிக் கொண்டுள்ள இந்திய செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 28-தான் ஆகும். இது மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில், மிகவும் பின் தங்கிய நிலைதான்.

இந்தியாவின் இந்த நிலைக்கு, எது தடையாக இருக்கிறது என்று பார்த்தால், அது இந்தியாவின் மெத்தனம் என்றுதான் கூற வேண்டும். இந்தியாவில், ’இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO)’ மட்டும்தான், விண்ணில் செயற்கைக்கோள்களை அனுப்பும் அதிகாரம் கொண்டவையாக இருக்கின்றது. ஆனால் ரஷ்யாவிலும், அமெரிக்காவிலும் நிலை வேறாக இருக்கிறது.

அங்கு விண்ணியல் ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. விண்ணுக்கு செயற்கைக்கோள்களை அனுப்பும் உரிமம், தனியாரிடமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கென அரசு சார நிறுவனங்கள், அங்கு பல இயங்குகின்றன. ஆனால், நம் இந்தியாவில் இதற்கெல்லாம் எந்த இடமுமில்லை. செயற்கைக்கோள் என்று இல்லை, அதற்கான மாதிரியைக்கூட விண்ணில் செலுத்துவதற்கு, இந்தியாவில் ஏராளமான கட்டுப்பாடுகள் இருக்கின்றன.




உள்ளூர் தீயணைப்பு நிலையத்திலிருந்து, இஸ்ரோ வரை அனுமதி பெற வேண்டிய, நெடிய அலைச்சல் நிலை இங்கு உள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில், செயற்கைக்கோள்களின் அதிநுட்ப சென்சார்களுக்கு இந்தியாவில் இடம் மறுக்கப்படுகின்றது. இதற்கு ‘தீவிரவாத அச்சுறுத்தல்’ ஒரு காரணமாக இருந்தாலும், அந்த ஒன்றை மட்டும் வைத்தே நாட்டின் வளர்ச்சியை நாம் தடுத்துக் கொண்டிருப்பது வேதனையான ஒன்றாகும். இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் தீவிரவாத அச்சுறுத்தல்கள் இன்று இருந்து கொண்டுதானுள்ளது. ஆனாலும், ரஷ்யாவினாலும், அமெரிக்காவினாலும் வல்லரசாக திகள முடிகின்றதே ஏன்?

இங்குதான் இந்தியாவின், அரசியல் என்கிற இன்னொரு தடை முகம் வெளிப்படுகின்றது. நாட்டின் வளர்ச்சியைவிட, இந்திய அரசியல்வாதிகளுக்கு அவர்களின் தனிப்பட்ட ஆதிக்கம் ஒன்றே பிரதானமாக மாறி உள்ளது. ஆகையால் அவர்களைப் பொறுத்தமட்டில், நாட்டின் வளர்ச்சி என்பது இரண்டாம் கட்டம் மட்டுமே. இதனால் இந்தியா, உலக அரங்கில் பின்னுக்குத் தள்ளப்பட்டுக் கொண்டுள்ள நிலை நீடித்துக் கொண்டேயுள்ளது. இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்களைக் காணுகின்றபோது, இந்தியாவில் இனி ’அப்துல் கலாம்கள்’ உருவாகுவது அவ்வளவு எளிதல்ல என்கிற வருத்தம் மேலோங்குகிறது.
இந்தச் சூழலில்தான் கடந்த மாதம் சென்னையில், நாட்டிலேயே முதல் முறையாக விண்ணுக்கு அருகில் காற்றின் தரத்தை அறியும் கருவியை செலுத்தியிருக்கிறார், பன்னிரண்டாம் வகுப்பே படித்துக் கொண்டிருக்கும் மாணவனான, ஷாரூக் ராஜ். ஏராளமான நடைமுறைச் சிக்கல்கள் நிலவும் இத்தளத்தில், இது எப்படி சாத்தியமானது என்பதனை அறிய, நாம் அந்த மாணவனை, கரூர் அருகேயுள்ள பள்ளபட்டியில் சந்தித்து உரையாடினோம்.

அந்தச் சந்திப்பின்போதுதான், அந்த மாணவன் செய்திருக்கும் ஏராளமான கண்டுபிடிப்புகளையும், வாங்கியிருக்கும் ஏராளமான பாராட்டுக்களையும், சான்றிதழ்களையும் காண முடிந்தது. இந்தியா முதன்முதலில் நிலவுக்கு அனுப்பிய ஆய்வுக்கலமான, சந்திராயன் – 1 திட்டத்தின், திட்ட இயக்குநரும், இளைய கலாம் என்ற சிறப்பைப் பெற்றவருமான, முனைவர்.மயில்சாமி அண்ணாதுரை அவர்களிடம், தனது செயற்கைக்கோள் வடிவமைப்பு மற்றும் அதன் செயல்திறன்களுக்காக, பாராட்டுச் சான்றிதழை வாங்கியிருப்பதினை பெருமையோடு சுட்டிக் காட்டிய அந்த இளம் விஞ்ஞானி, தன்னைக் குறித்தும், தனது கண்டுபிடிப்புகள் குறித்தும், நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

“தேவைகள்தான் கண்டுபிடிப்புகளுக்கான, முதல் படி” என்பார்கள். ஏழாம் வகுப்பு படிக்கும்போது எனது தேவைக்காக, நான் ஒரு இன்வெர்ட்டரை தயாரித்தேன், அன்றிலிருந்தே நான் எனது வாழ்க்கையை விஞ்ஞானியாக தொடர ஆரம்பித்துவிட்டேன். எனது அறிவியல் ஆர்வத்திற்கு, எனது தந்தைதான் காரணம். அவர், இஸ்ரோவின் ரிசர்ச் (Research), டிபார்ட்மெண்டில் பணியாற்றியவர். நான் ஒரு விஞ்ஞானியா ஆகி, சேட்டிலைட்டை அனுப்ப வேண்டும் என்பது, எனது தந்தையின் விருப்பம். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே, எனது தந்தை இறந்துவிட்டார். அதன்பிறகு எனது தாய் மாமன்களின் வளர்ப்பில்தான், நான் இன்றுவரை படித்துக் கொண்டுள்ளேன். எனது தந்தை இறக்கும் வரையில், அவரது ஆய்வுக் கூடத்தில், ஆய்வுப் பணிகளை செய்து கொண்டேதான் இருந்தார். அவர் நாட்டின் முன்னேற்றம் குறித்து அதிகம் கூறியிருக்கிறார். ஆகவே, நானும் அவர் வழியில் ஒரு விஞ்ஞானியாக ஆக வேண்டும் என்பதனை, எனது குறிக்கோளாக ஏற்றுக் கொண்டேன். அதுதான், எனது தந்தையின் விருப்பமும் கூட.” என்று கூறி முடித்த, முஹம்மது ரிஃபாத் ஷாரூக் ராஜ் எனும் அம்மாணவனிடம், நாம் மேலும், சில கேள்விகளைக் கேட்டோம்.



ஒரு மாணவனாக, நீங்கள் சாதிப்பதற்கு எது உறுதுணையாக இருந்தது?
அதற்கு முதலில், ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா (Space Kidz India), அமைப்பின் இயக்குநர் ஸ்ரீமதி கேசன் அவர்களைக் குறிப்பிட விரும்புகிறேன். நான் சேட்டிலைட்டை (Satellite) வடிவமைப்பது குறித்து எட்டாம் வகுப்பிலிருந்தே வாசிக்கத் தொடங்கிவிட்டேன். இதற்கு எனக்கு நாசாவின் (NASA) வெப்சைட் மிகவும் உதவியது. அன்றிலிருந்து சேட்டிலைட்டை உருவாக்கும் முயறிசியில் ஈடுபடத் தொடங்கினேன். அப்போது எனக்கு ஸ்ரீமதி கேசன் அவர்கள்தான், கை கொடுத்தார்கள். எனது ஆய்வுப் பணிகளை ஊக்கப்படுத்தி, எனக்காக பலரிடம் சென்று ஸ்பான்சர் (Sponcer) கேட்டார்கள். ஆனால் யாருமே உதவ முன்வரவில்லை. ஒரு ஸ்கூல் ஸ்டூடண்ட்டை நம்பி, நஷ்டமடைய முடியாது எனக் கூறித் திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால், ஸ்ரீமதி கேசன் அவர்களே, அமைப்பின் சார்பாக பணத்தை ஏற்பாடு செய்து, என்னுடைய சேட்டிலைட்டின் மாடலை, விண்ணில் ஏவுவதற்கு  உதவினார்கள்.

மேலும், எனது நான்கு தாய் மாமன்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு மிக, முக்கியமானதாகும். அதேபோல, எனது பள்ளியின் முதல்வரும் என்னுடைய பணிகளை ஊக்கப்படுத்தி, உதவிக் கொண்டுள்ளார்.



தற்போது விண்ணில் செலுத்திய கருவி குறித்தும், அதன் அனுபவங்கள் குறித்தும் கூறுங்கள்?
நாங்கள் இரண்டரை வருடங்களாக, சேட்டிலைட்டை வடிவமைத்துக் கொண்டுள்ளோம். கடந்த மாதம் (ஆகஸ்டு-2015) 23 அன்று, அதனுடைய மாடலை லான்ச் (Launch) செய்தோம். இப்போது நாங்கள் விண்ணில் செலுத்தியது, சேட்டிலைட்டாக இல்லை. அதனை, ஸ்பேஸ் கேப்சூல் என்கிற வடித்திற்கு மாற்றித்தான், விண்ணில் பறக்க விட்டோம்.

ஹீலியம் வாயுவால் பறக்கக் கூடிய பலூனை மேலே அனுப்பினோம். எங்களின் முதன்மை நோக்கம் ஓசோன் படலத்தில் எவ்வளவு அடர்த்தி (யூவி ரேடியேஷன்) இருக்கிறது என்பதனை அறிவதும், ஒசோனில் என்னென்ன மாதிரியான கேஸ் (வாயுக்கள்) படிந்துள்ளன, அதில் எது அதிகமாக உள்ளது என்பன போன்ற தகவல்களையும் சேகரிப்பதே ஆகும். இந்த வாலட்டைல் ஆர்கானிக் கேஸ்தான், க்ளோபல் வார்மிங்கிற்கு (Global Warming) அடிப்படைக் காரணங்களாகும்.

ஹீலியம் பலூனிற்குள், 10 விதமான சென்சார்கள், ஆர்,ஜி.பி.ஸ்பெக்ட்ரோ மீட்டர், (RGB Spectro Meter) ஜி.பி.எஸ் (GPS – புவியிடங்காட்டி) போன்ற கருவிகளை வைத்து அனுப்பினோம். தரையில் இருந்து 1000 மில்லி பார் மேலான அழுத்தத்துடன் செல்லும் ஹீலியம் பலூன், மேலே செல்லச் செல்ல அழுத்தம் குறைந்து 4 மில்லி பார் அளவிற்கு மாறிவிடும். இதனால் வாயு விரிவடைந்து, பலூன் ஒரு கட்டத்தில் வெடித்துவிடும். இதன்பின்னர், உள்ளே உள்ள பாராசூட் விரிந்து, தரையை நோக்கி கருவிகளைப் பாதுகாப்பாக கொண்டுவந்துவிடும். சென்னை ஹிந்துஸ்தான் யுனிவர்சிட்டியில் இருந்து செலுத்தப்பட்ட எங்களின் கருவி, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள குத்துனூரில் தரையிறங்கியது. இதனுள் நாங்கள் வைத்திருந்த பென்டிரைவ் (Pen Drive), மேலே கிடைத்த தகவல்களை சேமித்துவிடும். அந்தத் தகவல்களின் வாயிலாக நாங்கள், மேற்கொண்டு ஆய்வுகளைச் செய்து கொண்டுள்ளோம்.




எதிர்காலத் திட்டம் என்ன?
எனக்கு, சேட்டிலைட்டை லான்ச் (Launch) செய்ய வேண்டும் என்பதுதான், மிகப்பெரிய குறிக்கோளாகும். எதிர்காலத்தில், இஸ்ரோவில் சேர்ந்து பணியாற்ற வேண்டும். இந்தியாவை, விண்ணியல் ஆய்வுத் துறையில் வளர்க்கப் பாடுபட வேண்டும். இதுதான் எனது இலட்சியங்களாகும்.

உங்களுடைய செயற்கைக்கோளை, விண்ணில் ஏவுவது குறித்துக் கூறுங்கள்?

சேட்டிலைட்டை அனுப்புவது, இப்போதைக்கு இயலாத ஒன்றாக உள்ளது. ஏனெனில், அதனை இந்தியாவில் லான்ச் (Launch) செய்ய அனுமதியில்லை. அதனால், அதனை ரஷ்யா அல்லது யுனைடைட் ஸ்டேட்ஸ் (US) போன்ற நாடுகளில்தான் லான்ச் செய்ய முடியும். அங்கு லான்ச் செய்ய வேண்டுமெனில், இலட்சக் கணக்கில் பணம் தேவையாக உள்ளது. அதனால்தான், முதற்கட்டமாக விண்ணுக்கு அருகில் கருவியைச் செலுத்துவதென தீர்மானித்து, அதனைச் செய்துள்ளோம்.

நீங்கள் செயற்கைக்கோளை ஏவுவதில் என்ன தடையிருக்கிறது?
முதலில் பொருளாதாரம்தான் பெரும் தடையாக உள்ளது. நாங்கள் (ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா) சேட்டிலைட்டை முழுமையாக டிசைன் செய்துவிட்டோம். ஆனால் அதனை லான்ச் செய்ய இந்தியாவில் முடியாது என்பதால், ரஷ்யாவிலுள்ள ஸ்பேஸ் ஆர்கனிசேஷன் (Space Organization) ஒன்றுடன், எங்களது நிர்வாக இயக்குநர் ஸ்ரீமதி கேசன் அவர்கள் பேசிக் கொண்டுள்ளார்கள். கவர்மெண்ட்ல இருந்து முறையான ஆதரவை எதிர்பார்க்கிறோம். அது கிடைத்துவிட்டால், விரைவில் வெற்றியடைஞ்சிருவோம். எங்களுடைய சேட்டிலைட்டை வெற்றிகரமாக நாங்கள் விண்ணில் ஏவிவிட்டால்,  அது இந்திய நாட்டிற்குதான் புகழைப் பெற்றுத்தரும்.

என்று நமது கேள்விகளுக்கு, அறிவுப்பூர்வமாக பதிலளித்தார், மாணவனான ஷாரூக் ராஜ்.
ஷாரூக் இந்த செயற்கைக்கோள் வடிவமைப்புக்காக, மயில்சாமி அண்ணாதுரை அவர்களிடம் பாராட்டு பெற்றதினை மேலே குறிப்பிட்டேன். அதுபோக, இந்த மாணவன் தனது கண்டுபிடிப்புகளுக்காக, நாசாவின் (NASA) பாராட்டுக்களையும், சான்றிதழ்களையும் கூட வாங்கியிருக்கிறார். இஸ்ரோவில் இதற்காக, பயிற்சி முகாம் ஒன்றை மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றிருந்திருக்கிறார். இந்த செயற்கைக்கோள் வடிவமைப்பைத் தவிர்த்து, ஷாரூக்கின் ‘சாலை விபத்தைத் தடுக்கும் ரோபோட்” கண்டுபிடிப்பும் பரவலாக கவனத்தைப் பெற்ற ஒன்றாக இருக்கின்றது.

செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்துவதே, தனது வாழ்நாள் இலக்கு எனக் கூறும் இம்மாணவனின் சாதனை வேட்கை பாராட்டுக்குரியது. ஆனால், நம் நாட்டின் நடைமுறை அதனை மிகவும் கடினமாக்கி வைத்துள்ளது. அந்த நடைமுறைச் சிக்கல்களைத்தான், நான் மேலே விரிவாகக் கூறினேன். மேலும், இம்மாணவனே ஒரிடத்தில் குறிப்பிடும்போது, ‘இந்தியாவில் லான்ச் செய்ய இயலாது’ என்கிறார். அதனால், ரஷ்யாவில் முயன்று கொண்டுள்ளோம் என்றும் கூறுகிறார்.

இப்போது நம்முன்னே இருக்கும் கேள்வி, இது எப்படிச் சாத்தியமாகும் என்பதுவே. ஏனெனில், ஒரு செயற்கைக்கோள் என்பது, ஒரு நாட்டின் சக்தியைத் தீர்மானிக்கக் கூடியது. அப்படியிருக்கும்போது, அதனை எப்படி ரஷ்யா அங்கீகரிக்கும்?
இங்கு நிலவும் உள்நாட்டு அரசியலே, நம் நாட்டின் வல்லுனர்களை முடக்குகிறது என்றால், உலக அளவில் நிலவும் புவிசார் அரசியல் மட்டும் எப்படி அதனை அங்கீகரிக்கும்? அந்த மாணவன் உறுதியாகக் கூறும் வார்த்தைக்குப் பின்னால், சாதனை வேட்கை பளிச்சிடுகிறது. ஆனால் இங்குள்ள நடைமுறை, அதனை மழுங்கடித்துவிடும் நிலையில்தான் உள்ளது.

இந்த நிலை நம் நாட்டில் மாற வேண்டும். இந்தியா, அய்யா அப்துல் கலாமை இழந்து தவிக்கும் இந்தத் தருணத்தில், அவருக்கான உரிய அஞ்சலியாக, ”அப்துல் கலாம்களை” அடையாளம் கண்டு ஊக்கப்படுத்த முன்வர வேண்டும். அவர்களின் வெற்றிக்கு, எல்லா விதமான வழிவகைகளையும் செய்துதர அரசு முனைய வேண்டும். அப்துல் கலாம் அவர்கள், ‘இந்தியாவை வல்லரசாக்க’ வேண்டும் எனும் முனைப்போடு செயலாற்றினார். அவரின் கனவை நிறைவேற்றுமா, இந்திய தேசம்?

-    பழனி ஷஹான்

    (ஜனவரி 2016இல் சமநிலைச் சமுதாயத்தில் வந்த கட்டுரை இது. நன்றி சமநிலைச் சமுதாயம் இதழ்)