நேர்காணல் : பழனி ஷஹான்
ஆட்சி, அதிகாரத்தில்
வலுப்பெற்றிருந்த காங்கிரஸ் பேரியக்கத்தை, தன் வீரம் செறிந்த மொழிப் போராட்டத்தின்
மூலமாக தமிழகத்திலிருந்து துடைத்து எறிந்தது, திராவிட முன்னேற்றக் கழகம். சமூக நீதிக்
கொள்கைகளாலும், பகுத்தறிவுக் கருத்துக்களாலும், பார்ப்பனிய எதிர்ப்பு அரசியலினாலும்
இளைஞர்களையும், மாணவர்களையும் தங்கள் பக்கம் ஈர்த்த திராவிட இயக்கம், 1967-ல் தமிழகத்தின்
ஆட்சியைப் பிடித்தது. “மிகப்பெரும் பண்ணையாளர்களை வீழ்த்தி, எளியவர்கள் கண்ட வெற்றி”
என்று அன்றைக்கு திராவிட இயக்கத்தினரின் வெற்றியைக் குறித்து விமர்சனங்கள் எழுந்தன.
அது தொட்டு, ஏறத்தாள 48 ஆண்டுகளாக இன்றளவும் தமிழகத்தை திராவிடக் கட்சிகளே மாறி, மாறி
ஆண்டு வருகின்றன. தனது கொள்கைகளால் ஆட்சியைப் பிடித்த திராவிட இயக்கங்கள், ஆட்சி, அதிகாரத்தைச்
சுவைத்தப் பின்னர் நீர்த்து போய்விட்டன.
அதிகாரத்தில் கரைந்து
போன திராவிட இயக்கங்களின் மீதான மதிப்பும், நம்பிக்கையும் மக்கள் மத்தியில், குறிப்பாக
இளைஞர்கள் மத்தியில் அறவே மடிந்து போய்விட்ட இந்தக் கால கட்டத்தில், நாங்கள்தான் மாற்று
என வீறு கொண்டெழுந்திருக்கிறது தமிழ் தேசிய அரசியல். பெரும்பான்மையான இளைஞர்கள் மத்தியில்,
தமிழ் தேசிய அரசியல் மேலோங்கி காணப்படும் காலமாக, இன்றைய காலம் இருந்து கொண்டுள்ளது.
இதே சமயம், பார்ப்பன எதிர்ப்பையே முதன்மைக் கருத்தியலாகக் கொண்டிருந்த திராவிட இயக்கத்தின்
நலிவுகளால், பார்ப்பனியத்தின் பின்புலத்தில் இயங்கிவரும் பாரதிய ஜனதா கட்சியினரும்
தாங்கள்தான் தமிழகத்தில் மாற்று என்று பேசிக் கொண்டுள்ளனர்.
மொழிப் போராட்டத்தின்
வாயிலாக காங்கிரஸை வீழ்த்திய திராவிட இயக்கங்களைப் போல, ஈழ போராட்டத்தின் எழுச்சியால்
தமிழ் தேசிய இயக்கங்கள், திராவிட இயக்கங்களை மக்கள் மத்தியிலிருந்து தனிமைப்படுத்திவிட்டன
என்கிற ஒரு பார்வை இன்று எழுந்துள்ளது. இந்தச் சூழலில், திராவிடக் கட்சிகளை வீழ்த்தி,
எதிர்காலத்தில் தமிழகத்தில் தமிழ் தேசிய அரசியல் வெல்ல உள்ளதா, திராவிட இயகத்தின் சரிவைப்
பயன்படுத்தி பெரியாரிய மண்ணில் வகுப்புவாதிகள் வளர்ந்துவிடுவார்களா என்கிற கேள்விகளை
முன்வைத்து, தமிழகத்தில் கால் நூற்றாண்டுகளாக சுழன்றுவரும் நன்கு அறியப்பட்ட அரசியலாளரும்,
திராவிட இயக்க ஆய்வாளாரும், ஈழ ஆதரவாளரும், பெரியாரியவாதியுமான பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
அவர்களை, நாம் சமநிலைச் சமுதாயம் இதழுக்காகச் சந்தித்து நேர்காணல் செய்தோம். இவரோடு
நாம் நடத்திய நீண்ட, அறிவார்ந்த விவாதத்தின் தொகுப்பை அப்படியே கீழே தருகிறோம்.
கேள்வி - பதில்கள்
1)
சென்னையில் அண்மையில் நடைபெற்ற சங்கம் 4 நிகழ்வில் நீங்கள் கலந்துகொண்ட விவாத நிகழ்வு ரொம்பவும் பரப்பாக பேசப்படுகிறது. திராவிடமா, தமிழ் தேசியமா என்கிற விவாதம், இன்றைய காலச் சூழலில் தேவையான ஒன்றுதானா?
கண்டிப்பாக
தேவையில்லாத ஒன்று என்பதுதான் என்னுடைய கருத்து. நான் அங்கு பேசுகிற போதே சொல்லியிருக்கிறேன்,
திராவிடத்திற்கும் தமிழ் தேசியத்திற்கும் இடையில் எந்த மோதலும் இல்லை. திராவிடம் என்பது
ஆர்யத்தின் எதிர்ச் சொல். தமிழும், திராவிடமும் இணைச் சொற்கள். ஆனாலும் தொடர்ந்து தமிழ்
தேசிய நண்பர்கள், திரவிடத்தை விமர்சித்திக் கொண்டே இருக்கும் அந்தப் போக்கு, ஒரு மோதலை
உருவாக்கியிருக்கிறது. அந்த மோதல், ஒரு தலைக் காதல் என்பது போல, ஒரு தலை மோதல். நாங்கள்
தமிழ் தேசிய இயக்கத்தோடு, எந்த மோதலையும் முன் வைக்கவில்லை. இன்னும் சரியாகச் சொன்னால்,
திராவிட இயக்கங்கள் முன்னெடுக்காத, எந்த ஒரு புதிய போராட்டத்தையும், இன்றைய தமிழ் தேசியர்கள்
முன்னெடுத்துவிடவில்லை. இன்றைய தமிழ் தேசிய அமைப்பினர் முன்னெடுத்திருக்கிற எந்தப்
போராட்டத்தையும், திராவிட இயக்கத்தினர் எதிர்க்கவும் இல்லை. எனவே இந்த மோதல் என்பது
திட்டமிட்டு, தேவையற்று எழுப்பப்படுகிற ஒரு விவாதம் என்று நான் கருதுகிறேன். காலச்
சூழலில் அந்நிகழ்வில் கலந்து கொண்டு, என் கருத்தைப் பதிவு செய்தாக வேண்டிய கட்டாயம்
நேர்ந்ததால், அதில் கலந்து கொண்டேன்.
2)
திராவிடமென்பது உண்மையெனில், அதன் வீச்சு ஏன் பிற திராவிட மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடக பகுதிகளில் சாத்தியப்படவில்லை?
திராவிடம் என்பதை,
திரும்பத் திரும்ப கேரள, கர்நாடக, ஆந்திர மாநிலங்களோடு இணைத்துப் பார்க்கிற காரணத்தால்
வருகிற கேள்வி இது. ஒவ்வொரு சொல்லுக்கும், பல்வேறு பொருள்கள் வரலாற்றில் இருக்கின்றன.
சைவம் என்கிற சொல், சில இடங்களில் மதத்தைக் குறிக்கும். சைவச் செட்டியார் என்று சொன்னால்,
அது சாதியைக் குறிக்கும். நான் புலால் உண்பதில்லை, சைவன் என்றால் அது உணவுப் பழக்கத்தைக்
குறிக்கும்.
அது போலவே திராவிடம்
என்கிற சொல் நிலத்தைக் குறிக்கும், ஒரு மொழிக் குடும்பத்தையும் குறிக்கும். ஆனாலும், நடைமுறையில் திராவிடம் என்கிற சொல் எதைக்
குறித்திருக்கிறது என்று சொன்னால், அது பார்ப்பனிய எதிர்ப்பு என்பதைத்தான் குறித்திருக்கிறது.
அந்த பார்ப்பனிய எதிர்ப்பு இயக்கம், தமிழகத்திலேதான் தோன்றிற்று.
கேரளாவிலும், ஆந்திராவிலும்
இல்லவே இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். நாரயண குரு போன்றவர்கள், மலையாளத்திலே நடத்திய
இயக்கம், ஒருவிதமான பார்ப்பனிய எதிர்ப்பு இயக்கம்தான். ஆனால், தமிழகத்திலே அது வேரூன்றிய
அளவிற்கு, நீங்கள் குறிப்பிடுகிற வேறு மூன்று மாநிலங்களிலும் இல்லை. எனவே, தமிழகத்திலேதான்
திராவிடன் என்கிற சொல்லும், திராவிட இயக்க வரலாறும் இருக்கிறது. அதனால் நாம் திராவிடன்
என்று சொல்லுகிறோம், அவர்கள் சொல்லிக் கொள்வதில்லை. இது ஒரு காரணம். இதற்கு இன்னொரு
காரணமும் இருக்கிறது.
கால்டுவெல்லுக்கு
முன்னும் திராவிடம் எனும் சொல் இருந்திருந்தாலும் கூட, அவருக்குப் பிறகுதான் அது பெருவழக்காயிற்று.
கால்டுவெல் என்ன சொல்லுகிறார் என்றால், திராவிட மொழிக் குடும்பத்தில், தமிழே மூத்த
மொழியும், முதன்மையான மொழியும் என்று சொல்லுகிறார். இதை கன்னட, கேரள, ஆந்திர சகோதரர்கள்
ஏற்கவில்லை. தமிழுக்குப் பின் தோன்றியது அவர்களின் மொழி என்பதை, அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.
திராவிடன் என்று தன்னைச் சொல்லிக் கொண்டால், தமிழுக்குப் பிந்திய மொழிக்குச் சொந்தக்காரன்
என்கிற பொருள் வருமென்று அவர்கள் நினைக்கிற காரணத்தால், அது தங்களுக்கு குறைவு என்று
கருதி அவர்கள் தங்களை திராவிடன் என்று சொல்ல மறுக்கிறார்கள். நாம் தமிழே மூத்த மொழி,
முந்திய மொழி என்று நம்புவதால், நாம் திராவிடன் என்று கூறுகிறோம். திராவிடன் என்கிற
சொல் அவர்களுக்கு இழிவாக இருக்கலாம், தமிழனுக்கு பெருமையளிப்பதாக உள்ளது.
3)
பெரியாரை எதிர்ப்பதென்பது,
இன்று தமிழ் தேசிய அரசியலாக சிலரால் முன்வைக்கப்படுகிறது. உண்மையில் பெரியாரை எதிர்ப்பதென்பது தமிழ் தேசியமாகுமா? இதன் பின்னனியில் உள்ள அரசியல் என்ன?
பெரியாரை எதிர்ப்பதென்பது,
தமிழ் தேசிய அரசியலுக்கு எதிரானது. இன்றைக்கு தமிழ் தேசிய அரசியல் பேசுகிற எல்லோரும்
தளத்திற்கும், களத்திற்கும் வருகிறபோது, பெரியாரை முன் வைத்து, பெரியார் பெயர் சொல்லியே
வந்தார்கள். பெரியார்தான் தமிழ் தேசத் தந்தை என்று சொன்னவர்கள், இன்று நாங்கள் கருத்தை
மாற்றிக் கொள்கிறோம் என்றார்கள். பெரியாரின் பெயரைச் சொல்லி, திராவிடத்தின் பெயரைச்
சொல்லி, தமிழ் உணர்வாளர்களையெல்லாம் தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சிகளைச் செய்துவிட்டு,
ஓரளவிற்கு அதிலே வெற்றி பெற்றதிற்குப் பிறகு பெரியாரையும், திராவிடத்தையும் எதிர்ப்பது
என்கிற நிலைப்பாட்டை அவர்கள் எடுத்திருக்கிறார்கள். பெரியாரை எதிர்த்தால், திராவிட
இயக்கத்தை எதிர்த்தால், தமிழ் தேசியத்தை இந்த மண்ணில் வளர்த்தெடுக்கவே முடியாது என்பது
உறுதி.
4)
தமிழ் தேசியத்தை பெரியார் ஆதரித்து இருக்கின்றாரா?
தமிழ் தேசியம்
என்கிற சொல் மிகப் பின்னால், நாம் நடைமுறைக்கு கொண்டு வந்த சொல். ஆனால், தமிழ்நாடு
தமிழருக்கே என்கிற முழக்கத்தை முன்னெடுத்த முதன்மையானவர்களுள் பெரியார் ஒருவர். எனவே,
பெரியார் முன்னெடுக்காத எந்த முழக்கத்தையும், இவர்கள் இன்றைக்கு புதிதாக கையில் எடுத்துவிடவில்லை.
பெரியார் சொன்னதை நாற்பதாண்டுகளுக்குப் பின்னால் பேசுகிறவர்கள், பெரியாரைவிட தாங்கள்
முற்போக்காளர்கள் என்று கூறுகிறார்கள்.
5)
தமிழ் தேசியத்தை நீங்களும், நீங்கள் ஆதரவு நிலையில் இருக்கும் திமுக-வும் ஏற்றுக்கொள்கிறீர்களா? நீங்கள் கூட பெரியாரின் தமிழ் தேசிய அரசியல் என்றொரு புத்தகமே
எழுதியிருக்கிறீர்களே?
நான் எழுதியிருக்கும்
புத்தகத்தின் மிகச் சரியான தலைப்பு, பெரியாரின் தமிழ் தேசியம் இல்லை, பெரியாரின் இடதுசாரி
தமிழ் தேசியம் என்பதுதான். இரண்டிற்கும் ஒரு பெரிய வேறுபாடு இருக்கிறது. என்னவென்றால்,
வெறும் மொழி சார்ந்த விடுதலைப் போராட்டமாக, பெரியார் அதனை முன்னெடுக்கவில்லை. மொழி
உணர்வோடு, சமூக நீதி போராட்டமும் அதில் இணைந்திருக்க வேண்டுமென்று, அவர் உறுதியாகக்
கருதினார். எனவே, இன்றைய தமிழ் தேசியம் பேசுகிற நண்பர்கள், சமூக நீதிக்கு, பெண் விடுதலைக்கு,
சிறுபான்மையினர் உரிமைக்கு கொடுக்கிற இடத்தைக் காட்டிலும், பன்மடங்கு கூடுதலான இடத்தை
தந்தை பெரியார் வழங்கியிருக்கிறார். எனவேதான் நான் அதனை, இடதுசாரி தமிழ் தேசியம் என்று
குறிப்பிட்டேன்.
என்னைப் பொறுத்த
அளவில், முழுக்க, முழுக்க தமிழ் தேசியக் கோட்பாட்டுத் தளத்திலே பணியாற்றி, அதிலேயே
25 ஆண்டு காலம் நான் செலவிட்டவன்தான். ஆனால், ஒரு காலப் போக்கில், இனி தமிழ்நாடு, தனித்
தமிழ்நாடு போன்ற கோரிக்கைகளை வென்றெடுக்க போதுமான வலிமை நான் சார்ந்திருக்கிற இயக்கதிலே
இல்லாமல் போய்விட்டது. இரண்டாவது, கூட்டாச்சியை நோக்கி நகர்வதே நடைமுறைக்கு பொருத்தமானதாக
இருக்கும் என்று கருதுகிற காரணத்தால், இன்றைக்கு நாங்கள் தமிழ் தேச விடுதலையை கோரவில்லை.
தமிழ் தேச விடுதலையை கோருகிற அளவுக்கான திட்டங்களோ, படை அமைப்புகளோ எங்களிடத்திலே இல்லை.
எனவே நான் சார்ந்திருக்கிற, ‘திராவிட இயக்கத் தமிழர் பேரவை’ கருத்துப் பரப்பும் இயக்கமாகவே,
தன் பணியைச் செய்து கொண்டிருக்கிறது. அதேசமயம், தமிழ் தேச விடுதலையை முன்வைக்கிறவர்களின்
கோரிக்கையை நாங்கள் எதிர்க்கவும் இல்லை.
திராவிட நாடு
கொள்கையை கைவிட்டதிலிருந்து தொடங்கி இன்றைக்கு வரைக்கும், திமுக-வின் நிலைப்பாடானது,
மாநில சுயாட்சியாகவே இருந்து கொண்டுள்ளது.
6)
திராவிடம் என்பது, பெரியாரால் திட்டமிட்டுக் கொண்டுவரப்பட்டது என்கிறார்களே, பெரியாரைத் தவிர்த்து வேறு யாரும், திராவிடம் என்கிற சொல்லாடலைக் கூறியதில்லையா?
முற்றிலும்
இந்தக் கூற்று உண்மைக்கு மாறானது. முதன் முதலில் திராவிடம் என்கிற சொல், தமிழ் இலக்கியங்களில்,
தாயுமானவர் பாடல்களில் இடம் பெற்றிருக்கிறது. 4-ம் நூற்றாண்டில், பஜ்ரநந்தி சமணர் தொடங்கிய
பள்ளி, ‘திராவிட சங்கம்’ என அழைக்கப்பட்டது. ஆனால், இவைகளையெல்லாம் தாண்டி கால்டுவெல்
அதனை பெருவழக்காக்கினார். அதனை முதன் முதலாக இயக்கதிற்குரிய சொல்லாக அமைத்தவர், அயோத்திதாச
பண்டிதர்தான். அவர்தான், திராவிடம் எனும் சொல்லை 1892-ல் தன் இயக்கத்தின் பெயராக வைத்தார்.
பிறகு, ரெட்டைமலை சீனிவாசன் அவர்கள், ‘திராவிட மகாஜன சபை’ என்று தன் இயக்கத்திற்கு
பெயரை வைத்தார். எனவே திராவிடம் என்கிற சொல்லை, அரசியல் சார்ந்து முதலில் கொண்டு வந்தவர்கள்
இவர்கள்தான். அயோத்திதாசர் பின்னால் மாறிவிட்டார், என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும்
இல்லை. அவர் நடத்திய இதழுக்கு, ஒரு பைசா தமிழன் என்றும், பிறகு தமிழன் என்றும் பெயர்
வைத்திருந்தாலும், அவர் மறைந்த 1914-ம் ஆண்டுவரை திரும்பத் திரும்ப திராவிடன் என்கிற
சொல்லைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்.
மக்கள் தொகை
கணக்கெடுப்பு நடத்திய அதிகாரிக்கு, 03-12-1910-ல் அவர் எழுதிய கடிதத்தில் கூட, “எங்களை
சாதி ஒழித்த திராவிடர்கள் என்று குறித்துக் கொள்ளுங்கள்” என்றுதான் குறிப்பிடுகிறார்.
இது, ’அயோத்திதாசர் சிந்தனைகள்’ எனும் தொகுப்பின், முதல் தொகுதியின் 310-வது பக்கத்திலே
இருக்கிறது. எனவே, திராவிடம் என்கிற சொல்லை முதலில் முன்னெடுத்தவர்கள், அடிப்படையில்
ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள்தான்.
இதற்குப் பின்னால்தான்
திராவிடச் சங்கம் வந்தது. அதற்குப் பின்னால், தென்னிந்திய நலவுரிமைச் சங்கம், நீதிக்
கட்சி வந்தது. தென்னிந்திய நலவுரிமைச் சங்கம், திராவிடர் என்ற சொல்லை பயன்படுத்தவில்லை.
பார்ப்பனர் அல்லாதார் அறிக்கை, என்றுதான் அவர்கள் சொன்னார்கள். இருந்தாலும் அதனுடைய
சாராம்சத்தில், பார்ப்பனர் அல்லாதார் என்பது, திராவிடர் என்கிற பொருளைத்தான் குறித்தது.
இத்தனைக்கும் பிறகுதான் தந்தை பெரியார் அவர்கள், அதுவும் தொடங்குகிறபோது சுயமரியாதை
இயக்கம் என்று தொடங்கி, பின்னர்தான் திராவிடர் கழகம் என்பதனை உருவாக்கினார். 1944 ஆகஸ்டில்,
சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில்தான், திராவிடர் கழகம் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
எனவே, இத்தனை வரலாற்றையும் மறைத்துவிட்டு, ஏதோ பெரியார் திட்டமிட்டு தமிழன் என்கிற
பெயரை அழித்து, திராவிடன் என்று பெயர் சூட்டினார் என்று சொல்வது, உண்மைக்கு மாறானது
மட்டுமல்ல, நயவஞ்சகமும் நிறைந்தது என்பதனை, நான் அழுத்திச் சொல்ல விரும்புகிறேன்.
7) பொங்கல் பண்டிகையின் போது, ‘திராவிடர்
திருநாள் வாழ்த்துக்கள்’ என்று கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டதினை எதிர்த்து, சிலர்
பெரியார் திடலின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தப் போக்கை நீங்கள், எப்படிப்
பார்க்கிறீர்கள்?
திராவிடர் திருநாள்
என்று சொன்னதில், எந்தப் பிழையும் இல்லை. ஏனென்றால், திரும்பத் திரும்ப நான் சொல்லுகிற
செய்தி, திராவிடம் என்கிற சொல், பார்ப்பன எதிர்ப்பை உள்ளடக்கிய தமிழர்களைத்தான் குறிக்கும்.
எனவே, சாதி எதிர்ப்பை உள்ளடக்கிய, பெண் விடுதலையை உள்ளடக்கிய ஓர் இயக்கம், தன்னை திராவிட
இயக்கம் என்று சொல்லிக் கொள்வது எல்லா வகையிலும் பொருத்தமானது.
பெரியார் திடலில்
நடைபெற்ற திருவிழாவை வந்து பார்த்திருந்தால், முழுக்க, முழுக்க தமிழர் பண்பாட்டை எதிரொலித்த
விழாவாகத்தான் அது இருந்தது என்பது புரியும். ஒரு இடத்திற்கு முல்லை நிலமென்று பெயர்
சூட்டி, ஏறத்தாள முல்லை நிலத்திற்குரிய கருப் பொருள்கள் எல்லாம் அமைத்திருந்தார்கள்.
அங்கு நடத்தப்பட்ட உளி அடிக்கும் விளையாட்டில் கூட, கட்டித் தொங்கவிடப்பட்ட சட்டியில்
‘சாதி’ என்று எழுதி வைத்துத்துத்தான் உளியால் அடித்து உடைத்தார்கள். உடைக்கப்பட வேண்டியது
சட்டியல்ல, சாதி என்று உணர்த்தியிருந்தார்கள். எனவே சாதி எதிர்ப்புத் தமிழர்களின் கூட்டம்
என்பதினாலே தங்களை திராவிடர்கள் என்றும், அவர்கள் நடத்துகிற விழா என்பதுனாலே, அதனை
திரவிடர் விழா என்றும் அழைத்தார்கள்.
இதற்கு எதிர்ப்பாக,
விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில், மிக மிகச் சொற்பமானவர்கள் அங்கு வந்து முழக்கமிட்டார்கள்.
இவையெல்லாம், திட்டமிட்ட திராவிட எதிர்ப்பும், பார்ப்பனிய ஆதரவும் என்பது என் கருத்து.
8)
தமிழ் தேசியத்தின் பெயரால், ‘வீரத் தமிழர் முன்னனி’என்று சீமான் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். சீமானின் புதிய அமைப்பு முன்வைக்கும் வாதங்களைக் குறித்து, உங்களின் கருத்து என்ன?
நான் இதுகுறித்து,
மிக விரிவாகவே ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறேன். அதாவது, முருகனை எங்கள் முப்பாட்டன்
என்று அவர் கூறுகிறார். இது ஒரு முன்னோர் வழிபாட்டினுடைய தொடர்ச்சி. முன்னோர் வழிபாடு
என்பது தமிழுக்குப் புதியது இல்லை. அது, நடுகல் வழிபாடு என்கிற பெயரிலே தொடங்கிற்று.
ஆனாலும் கூட, ஒரு கடவுள் என்று சொல்லுவதும், ஒரு குறிப்பிட்ட உருவத்தை ஏற்படுத்துவதும்,
இல்லை இல்லை அவர் கடவுளில்லை என்று சொன்னால், பிறகு அந்தக் காவடி எடுப்பதும், இவையெல்லாம்
தமிழர் பண்பாடு என்பது, மறுபடியும் முன்னேறி வருகிற முற்போக்குச் சமூகத்தை, பின்னுக்குத்
தள்ளுகிற செயல்களென்றுதான் நான் பார்க்கிறேன்.
நாங்கள் பார்ப்பனியத்தை
எதிர்க்கிறோம் என்று அவர்கள் திரும்பத், திரும்பச் சொல்லுகிறார்கள். ஆனால், இவர்கள்
குறிப்பிடுகிற அவர்களின் முப்பாட்டன் முருகனின் கோயிலில், இன்றைக்கு பழைய புலிப் பாணிச்
சித்தர்கள் பூஜை செய்யவில்லை, உள்ளே பார்ப்பனர்கள்தான் பூஜை செய்து கொண்டிருக்கிறார்கள்.
பார்ப்பனர்களை எதிர்க்கிறோம் என்று இவர்கள் சொன்னால், அதையும் சேர்த்து எதிர்த்து இருக்க
வேண்டும். பார்ப்பான் பூஜை செய்யுகிறபோது, இவர்கள் வாசலிலே நின்று வழிபட்டுவிட்டு,
மறுபடியும் நாங்கள் தமிழ் பண்பாட்டை வென்றெடுக்கிறோம் என்று சொல்வதில், எந்தப் பொருளுமில்லை.
அதுமட்டுமல்லாமல்,
குறிஞ்சி நிலைத்தச் சார்ந்த முருகன், இவர்களின் முப்பாட்டன் என்றால், ”மாயோன் மேயக் காடுறை உலகமும், சேயோன் மேய மைவரை உலகமும், வேந்தன்
மேயத் தீம்புனல் உலகமும், வருணன் மேயப் பெருமணல் உலகமும்” என்று தொல்காப்பியம் சொல்கிறது.
அப்படியானால் கண்ணனையும், வருணனையும், இந்திரனையும் ஏன் முப்பாட்டன் என்று தூக்கிக்
கொண்டாடவில்லை, என்கிற கேள்விகளெல்லாம் எழுகின்றன. எனவே, இது முன்னுக்குப் பின் முரணான
நிலைப்பாடு என்று கருதுகிறேன்.
9)
’ஆஸாத் காஷ்மீர்’
என்கிற, காஷ்மீர் மக்களின் கோரிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?
காஷ்மீரத்தின்
ஒரு பகுதி விடுதலை பெற்றபோது, அதனை விடுதலை பெற்ற காஷ்மீர் (ஆஸாத் காஷ்மீர்) என்று
அவர்கள் அழைத்தார்கள். “POK – Pakistan Occupaid Kashmir” (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு
காஷ்மீர்) என்று இவர்கள் அழைத்தார்கள். இன்றைக்கும் காஷ்மீர் இந்தியாவிற்குச் சொந்தமா,
பாகிஸ்தானுக்குச் சொந்தமா என்கிற கேள்வி எழுந்து கொண்டேயிருக்கிறது.
காஷ்மீருக்கு
நீண்ட வரலாறு இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், 1947ல் இந்தியா விடுதலை பெறுகிறபோது,
காஷ்மீர் இந்தியாவோடு இல்லை. ஏறத்தாள எல்லா சமஸ்தானங்களும் இந்தியாவுக்குள் வந்துவிட்ட
பிறகும், காஷ்மீர், ஹைதராபாத், ஜீனாகத் ஆகிய மூன்று சமஸ்தானங்கள் தனியாகவேதான் இருந்தன.
அதிலே ஹைதராபாத் இராணுவ பலத்தினாலே உள்ளே சேர்க்கப்பட்டது. காஷ்மீர், ஜீனாகத் பொருத்தவரையில்,
காஷ்மீருக்கு ஒரு நீதியும், ஜீனாகத்துக்கு ஒரு நீதியும் சொல்லப்பட்டது.
ஜீனாகத்தில்
சுல்தான் மன்னராக இருந்தார். ஆனால் மக்கள் தொகையில் இந்துக்கள் அதிகமாக இருந்தனர்.
காஷ்மீரில் நேரெதிராக மன்னர் ஹரிசிங் இருந்தார், மக்கள் எண்ணிக்கையில் இசுலாமியர்கள்
அதிகமாக இருந்தனர். ஜீனாகத்தைப் பொருத்தவரை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்று
சொன்ன இந்திய அரசு, காஷ்மீரிலோ மன்னர்தான் தீர்மானிக்க வேண்டும் என்று சொன்னது. எனவே
ஜீனாகத் இந்தியாவோடு சேர்ந்தது. காஷ்மீர் 1947 அக்டோபர் 20-ல், இந்தியாவிற்கு ஒரு இணை
மாநிலமாகத்தான் சேர்ப்பிக்கப்பட்டது. இதன்பிறகு நிறைய வரலாற்றுச் சம்பவங்கள் இருக்கின்றன.
எனவே, இன்றைக்கு
ஒரே ஒரு செய்தியை நான் சொல்ல விரும்புகிறேன், காஷ்மீர் இந்தியாவுக்குச் சொந்தமா? பாகிஸ்தானுக்குச்
சொந்தமா? என்று கேட்டால், என்னைப் பொருத்தளவில், காஷ்மீர் காஷ்மீரிகளுக்குத்தான் சொந்தம்.
இந்தியாவோடு இணைந்து இருக்க வேண்டுமா, தனித்து இருக்க வேண்டுமா என்பதனை அந்த மக்கள்தான்
முடிவு செய்ய வேண்டும்.
10) தனித் தமிழ்
ஈழ விடுதலையைப் போலவும், காஷ்மீர் தனி நாடு கோரிக்கையைப் போலவும், ஏன் தனித் தமிழ்நாடு
கோரிக்கையை முன் வைக்கக் கூடாது? ஆதரிக்கக் கூடாது? என்கிற ஒரு வாதம் எழுகிறது. இதுகுறித்து
தங்களின் கருத்து என்ன?
கால மாற்றங்களில், சிலவற்றை நாம் உள்வாங்கியே தீர வேண்டும். ஈழத்தினுடைய சிக்கலைப்
போலவும், காஷ்மீரத்தினுடைய சிக்கலைப் போலவும், அப்படியே தமிழ்நாட்டினுடையச் சிக்கலை
நாம் பார்க்க முடியாது. உண்மை, யதார்த்தம், நடைமுறை இவைகளை கணக்கிலே கொள்ள வேண்டும்.
எனவே நிலப்பரப்பின் அடிப்படையிலும், வரலாற்றின் அடிப்படையிலும் காஷ்மீரமும், ஈழமும்
வேறு, தமிழகத்தின் சூழ்நிலை என்பது வேறு.
இரண்டாவதாக, எட்டாத ஒன்றை கோரிக்கையாக வைத்து, இருக்கிற இளைஞர்கள் சிலரையும் பலிகொடுப்பது,
பயனில்லை என்று நான் கருதுகிறேன். விடுதலைப் போராட்டமென்பது, அத்தனை எளிதன்று. தனிநாடு
விடுதலைப் போராட்டத்தில் அதற்கான அடித்தள வேலைகள் எதுவும் செய்யாமல், மேடைகளில் மட்டுமே
பேசி, ஒரு நாட்டிற்கான விடுதலையைப் பெற்றுவிட முடியாது. எனவே, நாம் கூட்டாச்சியில்
தன்னுரிமைக்கான போராட்டத்தில் ஈடுபடுவது சரியானது. இது சட்டவாதம், கோழைத்தனம் என்று
விமர்சனம் செய்பவர்கள் செய்யலாம்.
அப்படி விமர்சனம் செய்பவர்களுக்கு, துணிச்சலும், வலிமையும் இருக்குமேயானால், அவர்கள்
போராடி வெற்றி பெறுவதில் எனக்கு மகிழ்ச்சிதான். என்னால் இயலாததை, இயலாது என்று ஏற்றுக்
கொள்வதுதான் நேர்மையானது. அதற்கு என்ன பெயர் சூட்டினாலும், குற்றமில்லை.
11) தமிழ் தேசியவாதிகளின்,
தேசிய போராட்டத்தை தேர்தல் பாதையின் மூலமாக வென்றெடுக்க முடியாது என்கிறபோது, இங்கு
ஒரு ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்படுமா? தமிழ்தேசியக் கோரிக்கையின் எதிர்காலம் என்னவாக
இருக்கும்?
ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்படுமா என்றால், அதனை அவர்களிடம்தான் கேட்க வேண்டும்.
அதாவது, தமிழ் தேசியம் என்பதனை எந்த வகையான தமிழ் தேசியம் என்று பார்க்க வேண்டும்.
தன்னுரிமை கொண்ட தமிழ் தேசியமா, இல்லை ஒட்டுமில்லை, உறவுமில்லை என்று பிரிந்து செல்லுகிற
தமிழ் தேசியமா என்பதனையெல்லாம் தமிழ் தேசியம் பேசுகிற நண்பர்கள், தெளிவுபடுத்த வேண்டும்.
அதற்கான வழிகள் என்ன, என்பதனையும் அவர்கள் சொல்ல வேண்டும். நான் தன்னுரிமை சார்ந்த
கூட்டாச்சி என்பதைத்தான் முன்வைக்கிறேன். அதற்கு தேர்தலும் ஒரு வழிமுறைதான் என்று நான்
நம்புகிறேன்.
12) தமிழர் பகுதிகளில் திட்டமிட்டு சிங்கள இனக் கலப்பு ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொது வாக்கெடுப்பின் மூலம் ஈழ விடுதலை சாத்தியப்படுமா? ஈழ விடுதலையை வென்றெடுக்க வேறென்ன வழிகள் - யோசனைகள் இருக்கின்றன?
எப்படி காஷ்மீர் மக்கள் அவர்களின் நிலையைச் செல்ல வேண்டும் என்று சொன்னேனோ, அதுபோல
ஈழத்தின் எதிர்காலம் குறித்து ஈழ மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். நாம் அத்தனை பேரும்,
அவர்களின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவளிக்கலாம். ஆனால் அவர்களுக்கான எதிர்காலத் திட்டத்தை,
அவர்களின் இலக்கில், அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அதுதான் சரியானது. எந்த ஒரு
தேசத்திலும், புரட்சியை இறக்குமதி செய்துவிட முடியாது.
பொதுவாக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று சொல்வதிலே, எந்த பிழையும் இல்லை. ஐக்கிய
நாடுகள் அவையின் முன்னிலையில், பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, தெற்கு சூடான் பிரிந்து
போக முடியும் என்று சொன்னால், கிழக்கு தைமூர் பிரிந்து போக முடியும் என்று சொன்னால்,
ஏன் ஈழம் பிரிந்து போக முடியாது? அல்லது பிரிந்து போகக் கூடாது? என்கிற கேள்வியை நான்
முன்னிறுத்துகிறேன்.
13)
2009-க்குப் பிறகு சுபவீ அவர்களின் போக்கு, ஒருதலைப்பட்சமானது என்றும், கலைஞருக்கு ஆதரவளித்து ஏமாற்றமளித்துவிட்டார் என்றும், தமிழ் தேசிய அரசியலாளர்களிடையே உங்களைப் பற்றிய கருத்து நிலவுகிறதே, அதற்கு உங்கள் தரப்பு பதில் என்ன?
எந்த ஒன்றையும்,
சான்றுகளோடு சொல்ல வேண்டும். நான் தி.மு. கழகத்தை தமிழ்நாட்டிலே ஆதரிக்கிறேன் என்பதை,
யாரும் துப்பறிந்து கண்டுபிடிக்க தேவையில்லை. நானே, பல மேடைகளில் என் நிலைப்பாட்டை
சொல்லியிருக்கிறேன். அப்படி முடிவெடுக்கிற உரிமை எனக்கும், நான் சார்ந்திருக்கும் இயக்கத்திற்கும்
உண்டு.
தி.மு.கழகத்தில்
குறையே இல்லை என்று சொல்ல வரவில்லை. குறையில்லாத மனிதனோ, கட்சியோ, அமைப்போ உலகில் இல்லை.
இருக்கிற கட்சிகளில் எங்களுக்கு திமுக-வே பொருத்தமானது. இன்றைக்கும் திமுக-வை விட்டால்,
வேறு நாதியில்லை என்று நாங்கள் நம்புகிறோம். அப்படி நம்புவது எங்கள் உரிமை. எங்கள்
நம்பிக்கையை பிழையென்று அவர்கள் விமர்சனம் செய்யலாம். ஆனால் அப்படியெல்லாம் முடிவெடுக்கக்
கூடாது என்று, அவர்கள் முடிவெடுக்க முடியாது.
இப்படி நாங்கள்
எடுத்திருக்கும் நிலைப்பாட்டின் காரணத்தினால், ஈழச் சிக்கலில், ஈழக் கோட்பாட்டில் எங்களின்
நிலையை நாங்கள் என்றைக்கும் மாற்றிக் கொண்டதில்லை. அதற்கான எந்த ஆதரமும் இல்லை.
14)
உங்களின் திமுக ஆதரவென்பது, தாங்கள் ’பொடா’ வழக்கிலிருந்து வெளிவர, கலைஞர் செய்த உதவியின் நீட்சியாகவும், சுயநலப் போக்காகவும் பார்க்கப்படுகிற விமர்சனத்திற்கு உங்கள் பதில் என்ன?
நான் 2003 டிசம்பரில் விடுதலையாகி வெளியே வந்த பிறகுதான் கலைஞரைச் சந்தித்தேன்.
இதற்குப் பிறகும், தொடர்ந்து இரண்டாண்டுகள் நான், ‘தமிழர் தேசிய இயக்கத்தில்’ பொதுச்
செயலாளராக பொறுப்பிலே இருந்தேன். 2006 தேர்தலில் திமுக-வை ஆதரிக்க வேண்டும் என்கிற
எனது கோரிக்கையை, தமிழர் தேசிய இயக்கம் ஏற்க மறுக்க, அந்த கோரிக்கையை வலியுறுத்தி அதிலிருந்து
நான் வெளியேறினேன். நடுநிலை என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. நடுநிலை என்பது மறுவழியில்
அதிமுக-வை ஆதரிப்பது என்றுதான் பொருள். எனவே, அதனை எதிர்த்துதான் நான் வெளியிலே வந்தேன்.
இது உலகறிந்த உண்மை. அதற்கும் பொடா வழக்கிற்கும் எந்த தொடர்புமில்லை. அப்படிப்
பார்த்தால், அய்யா நெடுமாறன் அவர்களும்தான் அந்த பொடா வழக்கிலேயிருந்து விடுவிக்கப்பட்டார்.
எங்கள் வழக்கிற்கு தொடர்பு இல்லாத, இன்றைக்கும் தி.மு.கழகத்தை விமர்சனம் செய்து கொண்டிருக்கிற
நண்பர் பாவாணன் அவர்களும்தான் விடுதலை செய்யப்பட்டார். எனவே, பொடா வழக்கிற்கும், என்
ஆதரவு நிலைக்கும் எந்தத் தொடர்புமில்லை. எப்படி வேண்டுமானாலும் தொடர்புபடுத்திச் சொல்லலாம்,
என்று சொல்லுகிறவர்களைப் பற்றி நான் அதிகம் கவலைப்படுவதில்லை.
15)
மோடி அலை வீசுகிறது எனக் கூறிய ஜெ. அன்பழகனையோ, பா.ஜ.க உடன் கூட்டணி சேர வேண்டுமென வலியுறுத்திய துரைமுருகனையோ, திமுக தலைமை கண்டிக்காமல் கடந்து சென்றது, திமுக அதன் கொள்கையில் உறுதியாக இல்லை என்பதனைக் காட்டுகிறதா? நீங்கள் இந்த இருவரின் செயலையும் ஏற்றுக்கொள்கிறீர்களா?
ஒரு பெரியக்
கட்சியில், பல்வேறு விதமான கருத்துகள் பரிமாறப்படும். அந்தக் கருத்துகளையெல்லாம் கேட்டுக்
கொண்டு, தலைமை இறுதியாக முடிவெடுக்கும். தலைமை எடுக்கிற முடிவுகளைப் பற்றித்தான், நாம்
கருத்துக்களைச் சொல்ல முடியும். கட்சியில் எழுகிற பல்வேறு கருத்துக்கள், அவை யூகங்களாகக்
கூட பத்திரிக்கைகளில் வெளிவரலாம். சில கசிவுகளாக இருக்கலாம். எப்படி இருந்தாலும், அவை
எல்லாவற்றிற்கும், கருத்து சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. கட்சியினுடைய தலைமை
சரியாக முடிவெடுத்திருக்கிறது, அதனை நாங்கள் ஆதரிக்கிறோம்.
என்னைப் பொறுத்த
அளவில், பாரதிய ஜனதா கட்சியோடு எந்தக் காலத்திலும் ஒட்டுமில்லை, உறமில்லை. இருக்கவும்
முடியாது, இருக்கவும் கூடாது.
16)
ஈழ மக்களுக்கும், ஈழ விடுதலைக்கும் கலைஞர் துரோகம் இழைத்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக முன் வைக்கப்படுகிறது?
நீங்கள் அதை உறுதியாக மறுக்கின்றீர்கள். உங்கள் தரப்பு வாதம் என்ன? ஈழ மக்களுக்கும், ஈழ விடுதலைக்கும் கலைஞர் நன்மையை மட்டும்தான் செய்தார் என்று எப்படி நிரூபிப்பீர்கள்?
இதைக் குறித்து
ஆதராமாக ஒரு புத்தகத்தையே நான் எழுதியிருக்கிறேன். அந்தப் புத்தகத்தை நான் பரிந்துரை
செய்கிறேன், ‘ஈழம்-தமிழகம்-நான் சில பதிவுகள்’, என்பதுதான் அது. இந்தப் புத்தகத்திலே
வெறும் செய்தியாக எதையும் நான் சொல்லவில்லை. எல்லாவற்றையும் ஆதரத்தோடு சொல்லியிருக்கிறேன்.
17)
நீங்கள் குறிப்பிடும் இந்தப் புத்தகத்திலேயே, ஒரு இடத்தில் கலைஞர் 1996
தேர்தலுக்குப் பிறகு, விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீட்டித்தார் என்று குறிப்பிட்டுள்ளீர்களே?
1991-ல் விடுதலைப்
புலிகளின் மீது விதிக்கப்பட தடை, இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தமிழகத்திலே தொடர்ந்து
நீடிக்கப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது. அது, அதிமுக ஆட்சியிலும், திமுக ஆட்சியிலும்
தொடர் செயலாக இருந்திருக்கிறது. இதில் எனக்கு உடன்பாடில்லை. எனக்கு உடன்பாடில்லை என்பதனை
கலைஞர் அவர்களிடத்திலேயே நான் சொல்லியிருக்கிறேன்.
18) ஒரு விவாதத்திற்காக, இந்தக் கேள்வியை
நான் உங்களிடம் முன் வைக்கிறேன். திமுக உடனான உங்களின் ஆதரவு நிலைப்பாடு என்பது கொள்கை
சார்ந்த ஒன்றாக நான் எடுத்துக் கொள்கிறேன். அப்படி கொள்கை சார்ந்த ஒன்றாக இருக்கும்
பட்சத்தில், திமுக ஈழ மக்களுக்கும், ஈழ விடுதலைக்கும் துரோகம் இழைத்துவிட்டது என்கிற
குற்றச் சாட்டு, நிரூபணமானால், உங்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?
அத்தைக்கு மீசை
முளைக்கட்டும், பிறகு எப்படி அழைப்பது என்று நான் சொல்லுகிறேன்.
19) ’ஈழம் - தமிழகம் - நான் : சில பதிவுகள், என்று தாங்கள் எழுதியுள்ள புத்தகத்தில், தமிழகத்தில் செயல்பட்ட ஈழ ஆதரவாளர்களாக மருத்துவர் இராமதாசு வரை குறிப்பிட்டுள்ள நீங்கள், ஏன் பழனிபாபாவைப் பற்றி ஒன்றுமே குறிப்பிடவில்லை?
பழனிபாபா அவர்களோடு
எனக்குத் தொடர்பு இல்லை. அந்தப் புத்தகத்தின் தலைப்பிலேயே நான் ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறேன்.
அதில், ’ஈழம்-தமிழகம் சில பதிவுகள்’ என்று மட்டும் சொல்லவில்லை, ‘நான் சில பதிவுகள்’
என்று சொல்லியிருக்கிறேன். எனக்குத் தொடர்புள்ள செய்திகளைத்தான், நான் அதில் பதிவு
செய்திருக்கிறேன்.
ஒரே, ஒரு முறை
வாணியம்பாடி கூட்டத்தில் மட்டும், நான் பழனிபாபா அவர்களோடு பேசியிருக்கிறேன். அவரின்
பேச்சுகளை இரசித்திருக்கிறேன். ஆனால், அப்போதும் கூட அது ஈழம் சார்ந்த கூட்டமல்ல, பொதுவான
சமூகப் பிரச்சனை பற்றிய கூட்டம்தான். எனவே, பழனிபாபா அவர்களோடு எனக்கு நேரடியாக எந்தத்
தொடர்பும் இல்லாத காரணத்தினாலும், அவர் செய்தவைகளைப் பற்றி நான் அறியாத காரணத்தினாலும்,
நான் குறிப்பிடவில்லை. மறைப்பது என் நோக்கமல்ல. இன்றைக்கும் அதுபற்றி எனக்குத் தெரியாது
என்பதுதான் உண்மை.
20) தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு நாங்கள்தான் மாற்று என, பாரதிய ஜனதா கட்சியினர் கூறி வருகின்றனரே, அப்படி எனில் திராவிடக் கட்சிகள் காலாவதியாகி விட்டனவா?
முதலில் திராவிடக்
கட்சிகளுக்கு மாற்று என்று அவர்கள் சொன்னால், இவர்கள் திராவிடக் கட்சி ஆகிவிட்டனரா
என்றல்லவா, நீங்கள் கேட்க வேண்டும். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக, இன்னொரு திராவிடக்
கட்சிதான் வர முடியுமே தவிர, ஒரு இந்துத்துவாக் கட்சி வர முடியாது.
எப்போதும்,
நாங்கள் முன்னிலையில் இருக்கிறோம் என்று சொல்லிக் கொள்வது, எல்லா அரசியல் கட்சிகளுக்கும்
இயல்பான ஒன்றுதான். ஸ்ரீரங்கத்திலே கூட அதிமுக-விற்கும் எங்களுக்கும்தான் போட்டி, திமுக
எங்கோ இருக்கிறது என்று சொன்னார்கள். இறுதியில் அவர்கள் வாங்கியது 5000 ஓட்டுக்கள்தான்.
இதுவே அவர்களுக்கான விடை.
21) பெரியார் பிறந்த மண்ணில் தி.மு.க.தானே முதன் முதலாக அவர்களோடு தேர்தல் கூட்டணி
வைத்தது என்ற விமர்சனம் இன்று வரை முன் வைக்கப்படுகிறது? அவர்களும் வளர்ந்துவிட்டு போகட்டுமே என்று பெரியார் மண் இளகிவிட்டதா?
திமுக முதலில் அவர்களோடு கூட்டணி வைக்கவில்லை. முதலில் மதிமுக,
பிறகு அதிமுக, அதன் பிறகுதான் திமுக. ஒரு வாக்கில் அந்த அரசு கவிழ்ந்த நேரத்தில், ஒரு
தேர்தலை தவிர்ப்பதற்குதான் நாங்கள் பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி வைத்தோம் என்று கலைஞர்
பலமுறை சொல்லியிருக்கிறார். கூட்டணியில் இருந்த போதும், கட்டாய மத மாற்றச் சட்டம்,
370 சட்ட நீக்கம் உள்ளிட்டவைகளை திமுக எதிர்த்தது. ஆகவே, கூட்டணி வைத்தார்கள் என்பதனை
மட்டும் பேசுபவர்கள், கூட்டணியில் இருந்த போது என்ன செய்தார்கள் என்பதனையும் பேச வேண்டும்.
என்னைப் போன்றவர்கள், பாரதிய ஜனதா கட்சியோடு எந்த நிலையிலும்
கூட்டு வைப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
22)
’நான் இந்துவாகச் சாக மாட்டேன்’ என சூளுரைத்த
அம்பேத்கர் அவர்களை, அண்மைக்காலமாக இந்துத்துவவாதிகள் எங்கள் தலைவர் என்கிற ரீதியில் அவரின் கருத்துகளை முன் வைத்து பேசுகிறார்களே, இது அவர்களின் சந்தர்ப்பவாதமில்லையா?
எப்போதுமே இந்துத்துவாவின்
கொள்கையானது, எதிர்த்து நின்று போராடு, இயலாவிடில் உள்வாங்கிச் செறித்துவிடு என்பதுதான்.
அம்பேத்கரை என்ன, புத்தரையே திருமாலின் அவதாரம் என்று சொல்லுகிறவர்கள்தான் அவர்கள்.
ஆகவே அம்பேத்கரின் பிறந்த நாளைக் கொண்டாடி, அவர்களும் தாங்கள்தான் என்று சொல்லுவது
ஒரு வீண் முயற்சி. அம்பேத்கரைவிடவும், இந்துத்துவவாதிகளை கடுமையாக விமர்சித்தவர்கள்
யாரும் இருக்க முடியாது. எனவே, அவர்கள் இன்னமும் மிச்சம் வைத்திருக்கிற ஒரே தலைவர்,
நானறிந்த வரையில் தந்தை பெரியார் அவர்கள்தான். அம்பேத்கரை வளைக்கிற அவர்களின் முயற்சி
ஒருநாளும் வெல்லாது.
23)
ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னனி, பாஜக உள்ளிட்ட வகுப்புவாத சக்திகளிடமிருந்து தமிழகத்தை மீட்க என்ன செய்ய வேண்டும்?
வகுப்புவாத
சக்திகளை எதிர்த்து, ஜனநாயகச் சக்திகள் அனைவரும் ஒரு அணியில் திரள்வதுதான் அடிப்படையான
ஒரு பணி. ஜனநாயகச் சக்திகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அந்த கருத்து
வேறுபாடுகளையே நாம் பேசிக் கொண்டிருப்போமேயானால், அது மறைமுகமாக வகுப்புவாத சக்திகளுக்குத்தான்
ஊக்கமளிக்கும். எனவே பெரியாரிய, திராவிட, சிறுபான்மையின, தலித்திய, ஒடுக்கப்பட்ட கட்சிகள்,
அமைப்புகள் ஓரணியில் இணைய வேண்டிய கட்டம் நெருங்கியிருக்கிறது.
24)
முஸ்லீம்களால்தான் தீவிரவாதமும், மத மோதல்களும் நிகழ்கின்றன, எனும் சங்கபரிவார்களின் கூற்று குறித்து தங்களின் கருத்து என்ன?
சில நாட்களுக்கு
முன்பு கூட, புதிய தலைமுறை தொலைக்காட்சியின் மீது வெடி குண்டுகளை வீசியவர்கள், இசுலாமியர்களா?
இந்துத்துவவாதிகளா என்பதனை உலகமறியும்.
ஒரு மதத்தோடு
சேர்த்து, தீவிரவாதத்தை இணைத்துப் பேசுவதில் எனக்கு எப்போதும் உடன்பாடில்லை. பயங்கரவாதத்தில்
ஈடுபடுகிற சில மனிதர்களை, பயங்கரவாதி என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, முஸ்லீம் பயங்கரவாதி
என்று சொல்லுவதே அப்பட்டமான, கருத்துரிமைக்கு எதிரான, மனித உரிமைக்கு எதிரான ஒரு கூற்று.
அப்படியானால் பிடிபட்ட, இந்துக்களாக இருக்கிற, பயங்கரவாதிகள் அனைவரையும் எடுத்துக்
கொண்டு, இந்து பயங்கரவாதிகள் நாட்டிலே இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? எனவே மதம்
வேறு, பயங்கரவாதச் சிந்தனை வேறு. இரண்டிற்கும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லை.
25)
மாட்டுக் கறி உண்பதற்கு எதிராக இந்துத்துவாக்கள் பேசிவரும் பேச்சுக்களைக் குறித்து உங்களின் கருத்து என்ன? இதன் பின்னனியில் இசுலாமிய எதிர்ப்பு அரசியல் என்பதனைத் தாண்டி வேறேதேனும் உள்ளதா?
இசுலாமிய எதிர்ப்பு
அரசியலும் இருக்கிறது. தலித் மக்கள் எதிர்ப்பு அரசியலும் இருக்கிறது. இன்னும் சொல்லப்
போனால், பார்ப்பனிய ஆதிக்கத்தின் வெளிப்பாடும் இருக்கிறது.
பார்ப்பனர்
அல்லாதார் மிகப் பலர் மாட்டுக் கறி உண்பவர்கள். நானறிந்து, பார்ப்பனியர்களிலே சிலரும்
கூட மாட்டுக் கறி உண்பவர்கள் இருக்கிறார்கள். எனவே இந்த உணவுப் பழக்கத்திற்கும் சாதிக்கும்,
உணவுப் பழக்கத்திற்கும் மதத்துக்கும், உணவுப் பழக்கத்திற்கும் அறநெறிகளுக்குமெல்லாம்
தொடர்பு ஏற்படுத்த முயற்சிப்பதென்பது, உள்நோக்கமுடையது. மாட்டுக் கறி என்பது, மிகக்
குறைவான விலையில், கூடுதல் புரதத்தோடு சேர்ந்த உணவு என்பதால், அது உழைக்கும் மக்களுக்கான
உணவு. எனவே, அதனைக் கூடாது என்று தடை விதிப்பது, உழைக்கும் மக்களின் வயிற்றில் அடிக்கும்
செயலென்று நான் பார்க்கிறேன்.
26)
தற்போது திடீரென திருக்குறள், இந்து சமயக் கருத்துக்களை போதிக்கும் நூல் என்கிறார்களே இந்துத்துவ அமைப்பினர், மத்திய அமைச்சர் தருண் விஜய் கூட திருக்குறள் பிரச்சாரகராக மாறிவிட்டார், நீங்கள் இதனை எப்படிப் பார்க்கிறீர்கள்?
’எல்லோரையும்
சந்தேகி, தருன் விஜய் உட்பட’, என்ற தலைப்பில் நான் ஒரு கட்டுரையே எழுதியிருக்கிறேன்.
எப்படி அம்பேத்கரை வைத்து அரசியல் நடத்தலாம் என்று முயற்சிக்கிறார்களோ, அப்படி திருவள்ளுவரையும்
விட்டு வைக்கக் கூடாது என்பதில் அவர்கள் முடிவாக இருக்கிறார்கள்.
திருக்குறளை
விட, இந்துத்துவ பார்ப்பனியத்திற்கு எதிரான கருத்தை அழுத்தமாகச் சொல்லுகிற இன்னொரு
நூலை நீங்கள் பார்க்க முடியாது. அடிப்படையில் மனு நீதிக்கும், சமூக நீதிக்கும் வேறுபாடு
எங்கே இருக்கிறது என்றால், ”பிறப்பின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வு கற்பிக்கலாமா? கூடாதா?”
என்பதில்தான் இருக்கிறது. ரிக் வேதமானாலும், யஜீர் வேதமானாலும், மனு நீதியானாலும்,
மகாபாரதமானாலும், கீதையானாலும் என பிறப்பின் அடிப்படையில் வருணத்தைப் பிரித்து காட்டுகிற
அனைத்தும், இந்துத்துவாக்களின் இலக்கியங்கள். ஆனால், திருக்குறள்தான் மிக அழுத்தமாகச்
சொல்லுகிறது, ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று. எனவே திருவள்ளுவர் மனு நீதிக்கு
நேரெதிரானவர்.
27) நீங்கள் இப்படிச் சொல்லுகிறீர்கள்.
ஆனால் அவர்களோ, வருணம் என்பது பிறப்பின் அடிப்படையிலான ஒன்றாக கீதை சொல்லவில்லை. மாறாக
அது குணத்தை முன் வைத்து சொல்லப்பட்டுள்ளது என்கிறார்களே, இதற்கு நீங்கள் என்ன சொல்லுவீர்கள்?
இதற்கு நேரடியாக
நான் விளக்கம் சொல்லியிருக்கிறேன். 18-வது அத்தியாயம், 41-49 வரையிலாக இருக்கின்ற பாடல்களில்,
மிகத் தெளிவாக ’அந்த குணத்தைப் படைத்தவனும் நான்தான்’, என்று சொல்லப்பட்டிருக்கிறது.
பிறகு ஏன் அவனுக்கு அந்த குணமும், எனக்கு இந்த குணமும் படைத்தாய் என்கிற கேள்வி வராதா?
குணத்தைப் படைத்தவன்
அவன்தான், குணத்தின் அடிப்படையில் ஏற்ற, இறக்கங்களைக் கற்பித்தவனும் அவன்தான் என்றால்,
அப்படி ஒரு கடவுள் உலகில் இருக்க முடியாது. மனிதர்களுக்குள் ஏற்றத் தாழ்வுகளை, திட்டமிட்டு
உருவாக்கியது கடவுள்தான் என்று இந்தப் பார்ப்பனர்கள் சொல்லுவதற்குக் காரணம், கடவுளே
சொன்னார் என்று சொன்னால்தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பதற்காகத்தான். பிறப்பின்
அடிப்படையில் என்று நேரடியாகச் சொல்ல முடியாமல் போக, குணத்தின் அடிப்படையில் என்றும்,
அந்த குணத்தைப் படைத்தது கடவுள் என்றும் சொல்லுவது, சுற்றி வளைத்து மூக்கைத் தொடுகிற
முயற்சி.
28)
படைப்பாளிகளின் மீது தாக்குதல் நடத்திய, மத அடிப்படை சக்திகளின் கரங்கள், இப்போது தொலைக்காட்சி நிறுவனங்களின் மீதும், ஊடகவியலாளர்களின் மீதும் பாய்ந்துவிட்டதே, இவர்களின் இந்தத் துணிவுகரமான செயல்களுக்கு பின்புலமென்னவென்று நினைக்கிறீர்கள்?
இதனை வெறும்
மதவெறியாளர்களின் செயல் என்று மட்டும் நான் சொல்ல மாட்டேன். சாதி வெறி கொண்டவர்கள்,
மத வெறி கொண்டவர்கள், ஆணாதிக்கச் சிந்தனையாளர்கள் ஆகிய மூவருக்கும் இதில் பங்கு இருக்கிறது.
இவர்கள் இவ்வளவு
வெளிப்படையாக, கருத்துரிமைக்கு எதிராக, ஊடகங்களையே தாக்குகிற அளவுக்கு வருவதற்கு காரணம்,
மத்தியிலே தாங்கள் ஆட்சியிலே இருக்கிறோம் என்பதும், மாநிலத்தில் இருக்கிற ஆட்சியும்
மறைமுகமாக தங்களின் கோட்பாட்டைக் கொண்டிருக்கும் ஆட்சிதான் என்பதும்தான் ஆகும்.
29) நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு,
அதிமுக அரசு ஆதரவளித்துள்ளதை, பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கின் நீட்சியாகப் பார்க்கலாமா?
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
நான் மூன்று
செய்திகளைச் சொல்லுகிறேன். ஒன்று, பெங்களூரிலே நடைபெற்று வருகிற சொத்துக் குவிப்பு
வழக்கு, இன்னொன்று மத்திய நிதி அமைச்சர் அவர்கள், போயஸ் தோட்டத்திற்கே வந்து ஜெயலலிதாவைச்
சந்தித்துவிட்டுப் போனது, மூன்றாவது நாடாளுமன்றத்தில், நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு
அதிமுக கொடுத்த ஆதரவு. இந்த மூன்றையும் தனித் தனி நிகழ்வுகளாகப் பார்க்க வேண்டுமா,
இல்லை ஒன்றுக்கொன்று தொடர்புடைய நிகழ்வுகளாகப் பார்க்க வேண்டுமா என்பதனை நான் உங்களிடத்திலேயே
விட்டுவிடுகிறேன்.
30) மோடி தலைமையிலான பாஜக-வின் ஆட்சியைக் குறித்து தங்களின் கருத்துக்கள் என்ன? இலங்கை விவகாரம் மற்றும் மீனவர் விஷயத்தில் அவர்களின் அரசியலை எப்படி பார்க்கின்றீர்கள்?
வளர்ச்சி என்பதனைச் சொல்லி ஆட்சிக்கு வந்த மோடி, இன்றைக்கு வரைக்கும் வளர்ச்சிப்
பற்றி கவலைப்படாமல், இந்துத்துவக் கோட்பாடுகளைச் செலுத்துவதிலேயே முனைப்பாக இருக்கிறார்.
ஏதோ மோடி நல்லவர் என்பது போலவும், சுற்றி இருப்பவர்கள்தான் இப்படிச் செய்கிறார்கள்
என்பது போலவும், ஒரு மாயையான தோற்றம் உருவாக்கப்படுகிறது. முழுக்க, முழுக்க மோடி பின்புலத்தில்
இருக்கிறார் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.
ஈழப் பிரச்சனையிலும் கூட, வெறும் கண் துடைப்பாகக் கோப்புகளைக் காட்டிக் கொண்டிருக்கிறார்களே
தவிர, உறுதியான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த பாரதிய ஜனதா கட்சியினுடைய
ஆட்சியையும், தமிழகத்திலே இருக்கிற அதிமுக ஆட்சியையும் சேர்த்தே சொல்லுகிறேன், ஒன்று
மக்களைப் பிரிக்கிற, மதவாத இந்துத்துவ ஆட்சியாக நடக்கிறதென்றால், இன்னொன்றான தமிழக
அரசோ, செயலற்ற ஒரு அரசாக இருக்கிறது. இரண்டு அரசுகளும் மாற்றப்பட வேண்டிய ஒன்று.
31) பெரியாரை செருப்பால் அடித்திருக்க வேண்டும் என்று பேசுகிற அளவுக்கு வகுப்புவாத
சக்திகளை தமிழகத்தில் வளர விட்டதற்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்?
இயல்பாகவே மதவாதம், அறியாமை இவையெல்லாம் எளிதில் வேரூன்றிவிடும்.
என்றைக்கும் மக்களுக்கு அறிவூட்டுவது கடினம், மக்களை ஏமாற்றுவது எளிது. எனவே, அறிவூட்டுவதற்காக
எழுந்த இயக்கம் திராவிட இயக்கம். ஏறத்தாள ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகப் போராடி, இங்கே
சில முற்போக்குச் சிந்தனைகளை விதைத்தது. ஆனால் காலச் சூழலில், பல்வேறு விதமான காரணங்களால்,
இந்தியா முழுவதும் வீசும் காற்றை, இந்தப் பக்கமும் மெல்ல, மெல்ல ஆட்சி, அதிகாரங்களைப்
பயன்படுத்தி கொண்டு வருகின்றனர். ஆட்சி, அதிகாரம் இருக்கிறது என்கிற துணிவில்தான்,
அவர்கள் இத்தகைய அடங்காதப் பேச்சுகளை நிகழ்த்திக் கொண்டு இருக்கிறார்கள்.
ஒருநாளும் அவர்களால் தொடர்ந்து இந்தப் பாதையில் தமிழகத்திலே
பயணிக்க முடியாது. இது தற்காலிகமான ஒன்றுதான்.
32) எச்.ராஜா இப்படியான ஒரு பேச்சை நிகழ்த்தியப் பிறகும், பெரியாரிய, திராவிட அமைப்பினர்கள்,
எதிர் விமர்சனம் என்பதனைத் தாண்டி, ஏன் வேறெந்த எதிர் நடவடிக்கைகளும் எடுக்கவில்லை?
எச்.ராஜா போன்றவர்களை எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்து, பெரிய
மனிதர்களாக ஆக்க வேண்டாம் என்று கருதுகிறோம்.
- 33) திரவிடர் கழகம் நடத்திய, ‘தாலி அகற்றும் நிகழ்வு’ இங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசே இந்நிகழ்விற்கு தடை கோரி வழக்கு போடும் அளவிற்கு இதன் வீரியம் அமைந்தது. தி.க-வின் இந்த நிகழ்வு அம்பேத்கர் பிறந்த நாளில் நடப்பது, அம்பேத்கரை இழிவுபடுத்தும் செயலென்று சொல்லி, சிலர் பெரியாரின் புகைப்படத்தின் மீது சிறுநீர் கழித்தும், செருப்பு மாலை போட்டும் எதிர்வினையாற்றினர். இந்தச் சம்பவங்களையெல்லாம் நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? தி.க-வின் இந்த நிகழ்வு இப்போதைய சூழலில் தேவைதானா?
அதாவது, தங்கள் கழுத்தில் இருக்கும் தாலியை அவர்களே அகற்றுவதில், மற்றவர்களுக்கு என்ன சிக்கல் என்று, இன்னமும் என்னைப் போன்றவர்களுக்கு விளங்கவில்லை. இன்னும் யாருடைய கழுத்தில் இருக்கும் தாலியை, யாரும் அகற்றவில்லை. அவர்கள் தங்களின் தாலியை தாங்களாக அகற்றிக் கொண்டார்கள். அந்தச் சுதந்திரம் அவர்களுக்கு உண்டு என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இது அம்பேத்கர் பிறந்த நாளில் நடந்தது, ஒரு தற்செயலான நிகழ்வு. மாட்டுக்கறி ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்களின் உணவாக இருக்கிறது. எனவே, உழைக்கும் மக்களின் உணவிற்கு விதிக்கப்பட தடைக்கு எதிரான நிகழ்வை, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடிய தலைவரின் பிறந்த நாளில் வைப்பது சரியாக இருக்கும் என அவர்கள் நினைத்திருக்கக்கூடும். எனவே, இதற்கும் அதற்கும் இடையே பெரிய தொடர்புகள் ஏதும் இல்லை. இதற்காக, பெரியார் அவர்களினுடைய படத்தில் சிறுநீர் கழிப்பதென்பது, அவர்களின் தகுதியை அவர்கள் வெளிப்படுத்திக் கொண்டார்கள். அய்யா வாழ்கிறபோதே செருப்பு வீச்சுகளைக் கூட எதிர்கொண்டவர்தான்.
பொதுமானம் காக்க, தங்களின் சுய மானத்தை அடமானம் வைத்துதான் பொதுவாழ்க்கையை மேற்கொள்ள இயலும். அம்பேத்கர், பெரியார் போன்றோர்கள், தாங்கள் வாழும் காலத்திலேயே பல்வேறு வசைகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் உள்ளானவர்கள். இவையெல்லாம் புதியது இல்லை. இவற்றினால் எல்லாம், போராட்டத்தை யாரும் தடுத்துவிட முடியாது. ஒரு வேடிக்கை என்னவென்றால், அது இயல்பாக, தானாக நடந்திருக்க வேண்டிய சிறு நிகழ்ச்சி. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தெரிவித்து, நாடு முழுக்க அதனை கவனிக்கக் கூடிய அளவில் பெரிய நிகழ்ச்சியாக மாற்றிவிட்டார்கள்.
- 34) பெரியாரியவாதிகள் சிலர் அண்மையில், இரண்டு பிராமணர்களின் பூணூலை அறுத்த நிகழ்வை தாங்கள் அறிவீர்கள். இது தனி மனித உரிமையை கொலை செய்யும் செயலள்ளவா?
பூணூல் அறுப்பு என்பதை, உடனடியாக நான் நியாயப்படுத்த விரும்பவில்லை. அது அவர்களின் உடலில், அவர்கள் அணிந்திருப்பது. அதேசமயத்தில், பூணூல் என்பது மற்றவர்களைப் பற்றிய விமர்சனம் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நான் கருதுகிறேன். பூணூல் என்பது, தான் ஒரு உயர் பிறப்பாளன் என்பதற்கான அடையாளம் என்று அவர்கள் சொல்லுகிறார்கள். அதன் மூலமாக, பூணூல் அணியாதவர்களை சூத்திரன் என்று கொச்சைப்படுத்த முயல்கிறார்கள். இன்னொன்று அய்யா பெரியார் சொல்வார், ”அவன் பூணூல், அவன் அணிந்திருப்பதில் எங்களுக்கு என்ன சிக்கல் என்று கேட்டால், ஒரு தெருவில் ஒரு வீட்டில் மட்டும், இது பத்தினிகளின் வீடு என்று ஒரு பெயர் பலகையை எழுதி வெளியே தொங்கவிடுவார்களேயானால், அது அந்த வீட்டைப் பற்றிய குறிப்பு மட்டும் இல்லை, அடுத்தவனை செய்த விமர்சனமும் ஆகும். இது பத்தினி வீடு என்றால், பிறகு அது யாருடைய வீடு என்கிற கேள்வி இயல்பாக எழும். எனவே இவர்கள் பூணூல் அணிவதன் வாயிலாக, பிறரை சூத்திரன் எனச் சொல்லி இழிவுபடுத்துகிறார்கள்”, எனக் கூறுவார்.
அப்படியிருந்தாலும், பூணூலுக்கு எதிரான கருத்து பரப்புரைதான் சரியானதே தவிர, பூணூலை வன்முறையாக அறுப்பது சரியானது இல்லை. அதேநேரத்தில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். அப்படி பூணூலை அறுத்தவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில், குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளியிருக்கிறார்கள். அன்றாடம் தாலியை அறுத்துக் கொண்டு ஓடுபவர்கள் மீதெல்லாம் கூட குண்டர் சட்டம் போட்டது கிடையாது. பூணூலை அறுத்தால், அதற்கு தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும் என்று சொன்னால், தேசத்தின் பாதுகாப்பு பூணூலில்தான் இருக்கிறதா என்கிற ஒரு கேள்வி எழுகிறது. எனவே பூணூலுக்கு இவர்கள் கொடுக்கிற அந்த மரியாதை, அதற்கு சட்டமும், அரசும் கொடுக்கிற மரியாதை என்பது, ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் மிகப்பெரிய உயர்வையும், மற்றவர்களுக்கெல்லாம் இழிவையும் தருகின்ற ஒன்றாக இருக்கிறது. எனவே, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அந்த நண்பர்கள் அடைக்கப்பட்டதை, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில், நான் மிக வன்மையாகக் கண்டிக்கிறேன்.
- 35) சென்னை ஐ.ஐ.டி வளாகத்திற்குள் இயங்கி வந்த அம்பேத்கர் – பெரியார் வாசக வட்ட மாணவ அமைப்பிற்கு, அந்த கல்வி நிலையம் தடைவிதித்தது, மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தருணத்தில், “ஐ.ஐ.டி-க்குள் பெரியாரின் கொள்கைகளுக்கு என்ன தேவை இருக்கிறது?” என்கிற கேள்விகளை பா.ஜ.க, இந்து மக்கள் கட்சி போன்றோர் எழுப்பியுள்ளனர். பெரியாரின் கொள்கைகளுக்கு ஐ.ஐ.டி-யில் தேவை இருக்கிறதா? இல்லையா?
ஐ.ஐ.டி-யின் வளாகத்திற்குள் விவேகானந்தரின் கொள்கைகளைப் பரப்புவதற்கு தேவை இருக்கிறது என்று சொன்னால், இராமயணக் கதையைப் பரப்புவதற்கு தேவை இருக்கிறது என்று சொன்னால், அவை இரண்டையும் காட்டிலும் சமூக நீதியைப் பரப்பிய, அறிவியல் பூர்வமான கருத்துக்களை வெளியிட்ட, அய்யா பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் கருத்துக்களின் தேவை மிக மிகக் கூடுதலாக இருக்கிறது. அந்த மாணவர் அமைப்பினை தடை செய்தபோது, இயல்பாக நான் அதனை கண்டித்துதான் அறிக்கை வெளியிட்டேன். ஆனால் இப்போது ஐ.ஐ.டி-க்கு நன்றி சொல்லத் தோன்றுகிறது. ஏனென்றால், அவர்கள் தடை செய்யாமல் இருந்திருந்தால், சென்னை ஐ.ஐ.டிக்குள் மட்டும்தான், அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் இருந்திருக்கும். ஆனால் இன்றைக்கு இந்தியா முழுக்க, மும்பை உட்பட எல்லா பகுதிகளிலும், அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் தொடங்கப்படவிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், சென்னையில் இருக்கின்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாகவும், அம்பேத்கர்-பெரியார் வழக்கறிஞர் சங்கம் என்று ஒன்று தொடங்கப்படவிருக்கிறது. எனவே பல்வேறுவிதத்திலும், அவர்கள் நமக்கு உதவிதான் செய்து இருக்கிறார்கள். எனவேதான் அவர்களை கண்டிப்பதைவிட, நன்றி சொல்வதே பொருத்தமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.
- 36). கடந்த மாதத்தோடு, மோடி பிரதமராக பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகிவிட்டது. மோடியின் ஓராண்டு ஆட்சி குறித்து சுருக்கமான தங்களின் கருத்து என்ன?
ஒற்றை மனிதரின் தனி ஆட்சியாக, அதனை நடத்துவதற்கு மோடி முயற்சிக்கிறார் என்பதுதான் முதல் செய்தி. அதிகாரப் பரவல் என்பது வருத்தப்படுமளவு, வெளியுறவுத்துறை அமைச்சருக்குக் கூட எந்த வேலையும் இல்லை. வெளிநாடுகளுக்கெல்லாம் மோடியே போகிறார். வெளியுறவு பந்தங்களில் கூட அவரே கையெழுத்திடுகிறார்.
இரண்டாவது, அவருடைய நண்பரான அதானிக்கு, தனிப்பட்ட முறையில் பல்வேறு சலுகைகள் காட்டப்படுகின்றன. வளர்ச்சியைச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், தேசத்தின் வளர்ச்சி குறித்து எந்தவொரு கவலையும்படாமல், இந்து மதத்தின் வளர்ச்சி பற்றியே கவலைப்படுகிறார்கள். சமஸ்கிருத மொழியைத் திணிப்பது, மாட்டுக் கறி உணவிற்கு தடை விதிப்பது, இப்படி பல்வேறு வகைகளிலே, ஒரு குறிப்பிட்ட இந்துத்துவ வெறியின் வளர்ச்சிக்கு துணை புரிகிறார்கள். பிறகு, வளர்ச்சி, வளர்ச்சி என்று அவர்கள் சொன்னதெல்லாம், இந்துத்துவாவின் வளர்ச்சிதானோ என்று நமக்கு எண்ணத் தோன்றுகிறது.
மோடியினுடைய இந்த ஓராண்டு ஆட்சியில், எந்த ஊழல் புகார்களும் இல்லையென பெருமையாகக் கூறுகிறார்கள். மன்மோகன்சிங் அவர்கள் ஆட்சிக்கு வந்த, அந்த முதல் 2004, 2005 ஓராண்டில், அந்த ஆட்சியிலும் கூடத்தான் எந்த ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை. ஓராண்டில் எந்தக் குற்றச்சாட்டும் வெளிப்படவில்லை என்பதனையே, அவர்கள் தங்களின் சாதனை என்று கருதுவார்களேயானால், அவர்களுக்காக நான் பரிதாவப்பட மட்டுமே முடியும்.
3) வகுப்புவாதிகளின் ஆக்டோபஸ் கரங்கள் வலுவடைந்து கொண்டே செல்லுகிற காலத்தில், ஒரே மையக் கருத்தில் ஒன்றிணைந்து
இயங்க வேண்டிய பெரியாரிஸ்டுகளும், தலித் அமைப்புகளும்,
ஜனநாயகச் சக்திகளும் தனித் தனி குழுக்களாகப் பிரிந்து
செயல்படுகின்றனர். இவர்கள் ஒன்று சேரும் முகாந்திரமே
இல்லையா? இவர்களை ஒன்றிணைக்கும் வலிமையை பெரியாரியம்
இழந்துவிட்டதா?
நேரடியாகவே இன்னொன்றைக் கேட்கிறேன் : தமிழகத்தில் பெரியார் தோற்று விட்டரா?
வள்ளுவர் எவ்வளவோ நீதிகளைச் சொன்னார், நாட்டில் கொலையும்,
கொள்ளைகளும் நடந்து கொண்டே இருக்கின்றன. அதனால் வள்ளுவர் தோற்றுவிட்டார் என்று சொல்லலாமா?
வள்ளுவர், ஏசு, நபிகள் எல்லோரும் உலகில் நல்லவைகளைத்தான்
போதித்தார்கள். அந்த நல்லவைகள் நாட்டில் நடக்கவில்லை என்று சொன்னால், இவர்கள் எல்லோரும்
தோற்றுவிட்டார்கள் என்று பொருளா?
தோல்வி தவறு செய்பவர்களுக்கா? நல்லவைகளைச் சொன்னவர்களுக்கா?
பெரியாரிய இயக்கங்கள் பிரிந்து கிடக்கின்றனவே, அவர்களை ஒருங்கிணைக்கிற
ஆற்றல் பெரியாரியத்துக்கு இல்லையா என்று கேட்டால், பிரிந்து நிற்பதும், பிளவுபடுவதும்
ஒரு இயக்கதினுடைய போக்கில் இயல்பானவைகள்தான். பிளவுபடாத கட்சி, அமைப்பு, இயக்கம் தமிழ்நாட்டில்,
இந்தியாவில் மட்டுமில்லை உலகத்தில் எங்காவது இருக்கிறதா? அது இயற்கை. நான் நேரடியாகவே
உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன், இசுலாமிய அமைப்புகள் அனைத்தும் ஒன்றாகவே இருக்கிறார்களா?
அவர்களை அல்லாவோ அல்லது இசுலாமியக் கோட்பாடுகளோ ஒருங்கிணைக்க முடியாதா? தோற்றுவிட்டது
என்று சொல்ல முடியுமா?
எனவே, இந்தக் கேள்விகள் நம்மை பலவீனப்படுத்தும். பெரியாரிய
அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டுக் கொண்டுள்ளன. பெரியார் கொள்கைகளைப் பேசும், பெரியாரிய
அமைப்புகள் எல்லோரும் ஒன்றிணைந்து இந்துத்துவவாதிகளுக்கு எதிராக மேடையில் முழங்குவார்கள்.
அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் நல்ல செய்தி வரும்.
நன்றி : சமநிலைச் சமுதாயம் இதழ், அக்டோபர் 2015
#பழனி ஷஹான் - சுப.வீரபாண்டியன்
#Palani shahan - Suba veerapandiyan
#suba Vee
1.















