என் வாழ்வில் ஒரு
வித்தியாசமான, மேலும் நெகிழ்வான அனுபவ பயணம் இது.
இன்றைய காலகட்டத்தில்,
வலையுலகப் பயன்பாடு தவிர்க்க இயலாலது அதில் குறிப்பாக முக-நூல் பயண்பாடாகும். அப்படியாக
நான் நிழல் மற்றும் பதியம் இணைந்து நடத்தும் குறும்பட பயிற்சிப் பட்டறை எனும் விளம்பர
அறிவிப்பை என்னுடைய முக-நூல் முகப்பில் கண்டேன்.


இதற்க்காக நான்,
என் ஊரிலிருந்து கிளம்பி, கோவை செட்டிபாளையத்தில் உள்ள, சி.டி.ஃபவுண்டேஷனுக்கு
23-02-2013 சனிக்கிழமை அன்று சென்றேன். திரைப்படங்கள் என்ற ஒன்றை அற்றாக வெறுத்து ஒதுங்கியே
வாழ்ந்தவன் நான், ஆனால் இன்று நானே ஒரு திரைத்துறை சார் நபராக மாற தூண்டியது சமூக பிரச்சனைகள்
தான். அதற்க்காக நான் ஆவணப்படங்கள் இயக்க வேண்டும் என்று துடித்து கொண்டு இருந்த போது
தான் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு அமைந்தது. நல்ல கருத்துக்களை ஏனோ தமிழ் சினிமாவும்,
அநேகமாக உலக சினிமாக்களும் மறந்தே விட்டன அதன் விழைவே இன்று சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளின்
பிரதிபலிப்பு. இன்னும் கூற வேண்டுமெனில் மக்கள் சினிமாவை சினிமாவாக பார்ப்பதில்லை,
அதில் வரும் நடிகர்களை மனிதர்களாக பாராமல், ஒரு விஷித்திர மன நிலையை அவர்களிடத்தில்
மக்கள் பாவிக்கின்றனர் அதன் விழைவே தமிழகத்தில் 5-முதலமைச்சர்களை இந்த சினிமாத் துறை
உருவாக்கியுள்ளது. இன்னும் அவர்கள் தங்களின் தொழிலை ஆட்சி முறையிலும் தொடர்வதால் சமூக
பேரழிவுகள் காட்டுத் தீயாய்.

அதனால்தான் நான்
இந்த துறை மீது ஆர்வம் கொண்டுள்ளேன். மக்கள் இன்று என்னதான் பேசினாலும், எழுதினாலும்
கவரப்படுவதில்லை. ஆனால் அதனை காட்சி படுத்தும் போது ஏற்றுக்கொண்டுள்ளனர். அதனால் தான்
நான் பக்கம் பக்கமாக ஒரு கட்டுரையோ, நூலோ எழுதுவதை விட இந்த காட்சி ஊடகம் சிறந்தது
என்று இதனை தெரிவி செய்தேன். அதுமட்டுமல்லாமல் உலகம் இன்று உள்ள சூழலில் ஒரு விஷயத்தை
தெரிந்து கொள்ள அதிகம் ஈடுபாடு கொள்வது இல்லை, அதனால் வாசிப்பு மிகக் குறைவு ஆக இதனை
நிவர்த்தி செய்ய காட்சி ஊடகம் ஒரு நல்ல தளம். இதனால் நாம் வெகுஜன மக்களின் நேரங்களை
சேமித்து கொடுக்கலாம். ஒரு புத்தக வாசிப்புக்கான நேரத்தைவிட, காட்சி சினிமாவின் நேரம்
குறைவு அதே சமயம் தாக்கம் அதிகம். அதனால்தான் நான் சினிமாத் துறையை தேர்வு செய்தேன்
சமூகப் பணிக்காக.
அப்படிப்பட்ட ஒன்றிற்க்காக
நான் முதல் பயணத்தை நிழலோடு தொடங்கினேன். அந்த பயணத்தின் பனித்துளிகளில் சில இங்கு
பகிர்கின்றேன்.
வீட்டை விட்டு
பிரியும் ஒரு ஏக்கம் ஏற்கனவே இருக்க, பயிற்சிக்கான இடம் கண்டதும் இன்னும் ஒருவித மன
குழப்பமும், சோர்வும் ஏற்ப்பட்டன.
இதை தாண்டி உள்ளே
சென்றதும், அங்கு அறிமுகம் இல்லாத நிலையில், ஒருவர் என்னை, “தம்பி என்ன குறும்பட பயிற்சி
பட்டறையா என் வினவ நானும் ஆம் என்று தலையசைத்து அவரிடம் சென்றேன். உடனே அவர் அதற்க்கான
விண்ணப்பத்தை கொடுத்து பூர்த்தி செய்ய சொன்னார், பின் பயிற்சிக்கான கட்டணமும் கேட்டு
வசூலித்து கொண்டு, பெரிய ஒரு வராந்தாவுக்குள் போக சொல்ல நானும் நகர்ந்தேன், உடனே அவர்
யாரு என்னன்னே தெரியாம நான் கேட்டதும் பணம் கொடுத்துட்டப்பா அப்படினதும், விழி புருவம்
உயர்ந்துவிட்டது எனக்கு. பின் சற்று நேரத்தில் முகம் சிரித்தவறாக தம்பி சும்மா சொன்னேன்பா
உள்ள போ வகுப்பு நடந்துட்டு இருக்குனு சொல்லி அனுப்பினார். அவர்தான் தாஸ் அண்ணா, நிழல்
பட்டறை சார்ந்தவர். நல்ல ஒரு வேடிக்கையான நபர். எதிலும் சிரிப்பும், நக்கலும் நிறைந்தவர்.
நட்புணர்வோடு பழகக் கூடியவர்.
அடுத்ததாக, ஐயா
திருநாகவுக்கரசு, இவர்தான் நிழல் இயக்கத்தின் தூண். இவரைப் பல யூ-டியூப் வீடியோக்களில்
பார்த்திருக்கேன் ரொம்ப வயசானவர் போல தோற்றமும், எண்ணமும் தான் எனக்குள் இருந்தது அவரைப்பற்றி.
மேலும் ஒரு சமூதாய உணர்வோடு உள்ள நபர் என்றும் இவ்வளவுதான். ஆனால் அவரின் தோற்றம் நேரில்
ஒரு நடுத்தர வயதுடைய அதாவது 35 வயது போல் தான் இருந்தது. எல்லரிடமும் சகஜமாக பழகினார்,
பேசினார். நான் இந்த பயிற்சிபட்டறை விவரம் கேட்டது இவருடன்தான் என்று எனக்கு தெரியாது,
பின்பு தான் அறிந்தேன் அந்த தொடர்பு எண் இவருடையது தான் என்று. இதை ஏன் குறிப்பிடுகின்றேன்
எனில், அவர் என்னை ஸார் ஸார் என்றுதான் அழைத்தார், நான் கல்லூரி மாணவன் என்று முன்னரே
கூறியும் கூட. மேலும் எல்லாவற்றையும் விட, அவரின் ப்ளஸ் பாயிண்ட் அவருடைய பொறுமை கலந்த
சிரிப்புதான், எல்லா விஷயத்திற்க்கும். என் மனதில் ஒன்று நினைத்துக் கொண்டே போனேன்,
வருவதற்க்குள் எப்படியாது, திருநாவுக்கரசு ஸார் கூட ஒரு போட்டோ எடுக்கனும்னு, ஆனா அங்க
போயி போக போக அது தேவையில்லாம போயிடுச்சு, அந்த அளவுக்கு சகஜமா இருந்தார். பின் எதற்க்கு
அது.


முதல் நாள் வருத்தமாக
இருந்த என் உள்ளம், மறுநாள், சுரேஷ்வரன் அவர்களின் நடிப்பு வகுப்பில் ஒரு இணக்கத்தை
உடன் இருந்த சக தோழர்களிடம் கொடுத்தது. அந்த அளவிற்க்கான நெருக்கம் உருவானது இரண்டாவது
நாளிலே. பின் அது பிடிச்சுப் போனது.
அடுத்த நாள் ஒப்பனை
வகுப்பு எடுத்த, ரகுமான் அண்ணன் சொல்லவே வேண்டாம் ரொம்ப அருமை. இறுதி நாள் வரை இருந்து
அவரும் ஒரு மாணவரைப் போன்றே எங்களோடு சுற்றித் திரிந்தார். மேலும் எங்களுக்கு ஒப்பனை
வகுப்பு எடுக்க வந்தவர் போக போக, எடிட்டிங், பாடல், பின்னனி, கேமர என தன் திரைதுறை
தொழில் நுட்பம் ஒவ்வொன்றையும் காட்டினார். இன்னும் 4 குறும்படங்களை இயக்ககியும் உள்ளார்.
135மணி நேரம் இடைவிடாமல் பாடி உலக சாதனையும் படைத்துள்ளார்.
இதன்பின், கேமரா
வகுப்பு எடுத்த, ஐயா. பன்இறை அவர்களின் வகுப்பு ஒரு தித்திப்பு. காரணம் அவர் வகுப்பு
என்பதை விட, அவர் மாலை நேரத்தில் எங்களுக்கு எடுத்து காண்பித்த சந்திரனின் புகைப்படம்.
அதில் நான் லயித்துப் போனேன்.
இன்னும் திரைக்கதை
வகுப்பு எடுத்த இயக்குநர், திரு.பாலு மணிவண்ணன் அவர்களால் முதல் முறையாக கவிதை, கட்டுரை
மட்டுமே எழுதியா நான் கதை எழுதினேன்.
பின், இயக்குநர்,
திரு. கமலக் கண்ணனின் வகுப்பு ஒரு நல்ல செய்தி கொடுத்தது. சினிமா என்றாலே சென்னைதான்
என்ற மனோபாவத்திலிருந்து, மீட்டெடுத்தது அவரின் வகுப்பு.
இதன்பின்பு எல்லோரும்
அவரவர் குறும்பட இயக்கத்திற்க்காக ஒருவித போட்டி மனப்-பான்மையோடு பரவலாக, பரபரப்பாக
செயல் பட்டோம். இதில் எங்கள் குறும்பட உதவிக்காக வந்த அருண் ஸார், ரொம்ப ஆக்டிவ். சுறுசுறுபோடு
செயல்பட்டு எங்களையும் சுறுசுறுப்பாக்கினார். அதனால்தான் இருந்த அத்தனை அணிகளை காட்டிலும்
நாங்கள் முதலாவதாக முடித்தோம்.
மேலும் கேமரா மேன் ராம் அண்ணா, நல்ல ஒத்துழைப்பு
இரவு முழுவதும் கண் முழித்து விடிய விடிய எங்களுடன் உதவி புரிந்தார். ஒரு ஷாட் மட்டும்
1;30 மணி நேரம் எடுத்தும் மிகப் பொறுமை காத்தவர்.
இப்படியாக கடைசி
நாள் வரை ஒருவித அறிமுக நட்பிலே கடந்த நட்பு வட்டாரம், இறுதி நாளன்று, இதயம் கலந்த
ஒன்றாய் ஆனது. அனைவரின் அன்பு ஆரத்தழுவல்களின் வடு இப்பொழுதும் கூட என்னுள்.
இதில் குறிப்பாக
ஒருவரை சொல்ல மறந்துவிட்டேன், அவர் சப்ளையராகவும், எடிட்டராகவும், ஆப்ரேட்டராகவும்
மாறி மாறி ஓடிய, நிழல் ஐயா அவர்களின் சின்ன தளபதி, தோழர். விஜய். சாப்பாட்டில் மிகக்
கனிசமான கவனிப்பு. மனமார சொல்கின்றேன் விருந்தினர் வீட்டில் கூட இல்லாத விருந்தோம்பல்
நிழலுடனான் நாட்களில் அனுபவித்தேன்.
மேலும், பதியம்,
பாரதி வாஸன் அவர்கள், முக-நூலில் கொண்ட நட்பு, பார்த்த முகம். ஒன்றுதான் நினைப்பேன்
காமெடி ஆள் போலனு. ஆன நேரில பார்க்கறப்போ இவருக்கு இப்படி ஒரு நெட்வொர்க் இருக்கானு,
மனதுக்குள் ஒரு குட்டு.
இன்னும் எத்தனையோ
சின்ன சின்ன நிகழ்வுகள் நிறைய உள்ளன, இந்த 144 மணி நேர பயணத்தில். அவைகள் என்றும் மறக்காத
நினைவலைகள்.
நான் போனது ஒரு
ஆவணப்படம் எடுப்பதற்க்கான பயிற்சிக்கு, ஆனால் கற்றதோ ஒரு திரைப்படம் எடுக்கும் அறிவை.
நிறைவாக, இதில்
நான் சொல்ல வந்த பலவும் வார்த்தைகளின் கோர்வையின்மையால், என்னுள் முடங்கிவிட்டன. அங்கு
நான் பெற்ற நட்பு மலர் ஒவ்வொன்றாக பெயர் கூற ஆசைதான் இருப்பினும், இயலாமையால் மனதுக்குள்ளே,
அடிக்கடி நினைவுப் படுத்திக் கொள்கிறேன்.
நிழல் கொடுத்தது
வெறும் பயிற்சி மட்டும் அல்ல, கூடவே ஒரு பிரிவையும்தான். நிழலின் நிழலில் கடந்த நாட்கள்
நெஞ்சம் மறவா பனித்துளிகள்.
தோழமையுடன்
- பழனி ஷஹான்