யாதும்
– வேர்களைத் தேடும் பயணம்
-பழனி ஷஹான்
திரைப்படம் என்பது,
நம் வாழ்வில் தவறவிட்ட அற்புத கணங்களையும், கனவுகளையும் மீட்டெடுக்கிற முயற்சியாகும்.
ஆனால் ஒரு ஆவணப்படம் என்பது, நாம் தவறவிட்ட, பார்க்கத் தவறிய உண்மைகளின் தொகுப்பாக
இருக்கிறது.
அதை உணர்வுகளின் தொகுப்பாக மாற்றுவதற்கு, காட்சிப்படுத்துதல் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அந்தக் காட்சிப்படுத்துதலின் சவாலை, ஒரு சாகசம் போல நிகழ்த்தி வெற்றி பெறச் செய்திருக்கிறது, அண்மையில் வெளிவந்த ‘யாதும்’ என்கிற ஆவணப்படம்.
இந்த ஆவணப்படம்
சார்ந்த கருத்தியல் விவாதத்திற்குள், இப்போது நாம் செல்லலாம்.
இசுலாமியர்கள் என்பவர்கள் யார்?
மாற்று இனத்தவர்களா?
மண்ணின் மைந்தர்களா?
வந்தேறிகளா?
என்கிற கேள்விகளிலிருந்து,
இந்த ஆவணப்படத்தின் மையப்புள்ளி சுழல்கிறது.
முஸ்லீம்களை ”துலுக்கர்கள்’
என்று அழைக்கிறார்கள். உண்மையில் முஸ்லீம்கள் துருக்கியர்கள்தானா?
இம்மண்ணின் சமூக
யதார்த்தங்களுக்கு எதிராக “பாய்” என்று முஸ்லீம்களை அழைக்கின்றார்கள். உண்மை அதுதானா?
முஸ்லீம்களை தீவிரவாதிகளாகவும்,
பாகிஸ்தானின் உளவாளிகளாகவும் சித்தரிக்கிறார்கள். நிஜத்தில் முஸ்லீம்கள் யார்?
இந்தக் குற்றச்
சாட்டுகள் சரியெனில், பிற சமூக மக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே எப்படி உறவு நீடித்துள்ளது?
மாமா, மாப்பிள்ளை
உறவுகளும், சாச்சா, சாச்சி, சீயான் போன்ற உறவுகளும் எப்படி நிழ்ந்தன?
இவை எவற்றின் எச்சங்கள்?
இதுபோன்ற பல கேள்விகளுக்கு
விடை தேடி, பயணிக்கிறது “யாதும்” என்கிற ஆவணப்படம்.
முஸ்லீம்களின்
மீது தொடர்ந்து சுமத்தப்படும் இதுபோன்ற முத்திரைகளை, அகற்ற, முஸ்லீம்கள் என்ன திட்டம்
வைத்துள்ளார்கள்?
இவைகளை முஸ்லீம்கள்
எவ்வகையில் எதிர்கொள்ளப் போகிறார்கள்?
குறைந்தபட்சம்
இவைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய தங்களின் தார்மீக கடமையினையாவது முஸ்லீம்கள் அறிந்து
வைத்துள்ளனரா? எனில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த தருணத்தில், வலிகளைத் தாங்கும் சக முஸ்லீமாக தன் சமூகத்தின் மீதுள்ள பழியை மாற்றுத் திரையான ஆவணப்படத்தின் மூலம் அகற்ற முயற்சித்திருக்கிறார், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கோம்பை. S.அன்வர் அவர்கள்.
திரையில் தோன்றும் முதல் காட்சியில், தேனி மாவட்டம், கோம்பை எனும் ஊரில் உள்ள ஒரு பள்ளிவாசலைக் கடந்து செல்கிறது ரெங்கநாதன் சாமி ஊர்வலம். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தினைப் போல எந்த அச்ச மூட்டும் காட்சிகளும் அங்கு காணப்படவில்லை. மிக இயல்பாக அந்த ஊர்வலம் செல்கிறது. முஸ்லீம்கள் மிக இயல்பாக அங்கு தொழுகைக்காகச் செல்கின்றனர். இந்த சமூக நல்லிணக்கம் எப்படி சாத்தியமாவது?
இதனைத் துல்லியமாக
தனது ஆய்வுப் பயணத்தின் மூலம் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் இயக்குனர்.
கருப்புத் தங்கம் என்று முன்னொரு காலத்தில் போற்றப்பட்ட மிளகினைத் தேடித்தான், இந்தியாவிற்கு வாஸ்கோடகாமா பயணமாகி வந்தார். இந்த மிளகினைத் தேடிய பயணத்தில்தான் இந்தியா என்கிற நாட்டை வாஸ்கோடகாமா உலகில் அறிமுகம் செய்தார். ஆனால், இவர் வருவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே, அரேபியர்கள் கடல் வாணிபம் மூலம், மிளகு உள்ளிட்ட நறுமணப் பொருட்களை வாங்கி வாணிபம் செய்து வந்துள்ளனர். அப்போது அரேபியர்கள் தமிழகத்தினை (இப்போதைய கேரளா உள்ளிட்ட பகுதிகள்) ‘மாபர்’ (இடைவழி) என்ற வார்த்தை கொண்டு அழைத்துள்ளனர். இந்த தொன்மை வரலாற்றைச் சொல்லி, சமீபத்தில் கேரளத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வினைச் சேர்த்து சொல்கிறது இப்படம். அந்த ஆய்வில், பண்டைய வாணிபத்தில், பொருட்கள் மட்டுமல்லாது, தத்துவங்களும், மதங்களும் பரிமாறப்பட்டுள்ளன எனும் கூற்று முன்வைக்கப்பட்டுள்ளது.
மாலிக் இப்ன் தினார்
என்பவரால் கட்டப்பட்டது, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த ‘சேரமான் ஜீம்மா
பள்ளிவாசல்’. இது கேரளாவில் உள்ள, சேரர்களின் அபோதைய துறைமுகமாக விளங்கிய கொடுங்கலூரில்
அமைந்துள்ளது. இந்தப் பள்ளிவாசல் ஒன்றுதான், வரலாறு ஆகிப்போன அரசன் சேரனின் பெயரை கொடுங்கலூரில்
இன்றளவும் தாங்கி, நின்று கொண்டுள்ளது.
இதுபோல தமிழ் முஸ்லீம்களின், பள்ளிவாசல்கள் பலவும், திராவிடக் கட்டிடக் கலையினை ஒட்டியதாகவே இருந்திருக்கின்றன. காயல்பட்டினம், பழவேற்காடு, கீழக்கரை போன்ற பல பகுதிகளின் பள்ளிவாசல்கள் திராவிடக் கட்டிடக் கலையில் அமைந்திருக்கின்றன. இவை, தமிழ் முஸ்லீம்களின் மூலம் அரேபியத் தன்மை கொண்டது இல்லை என்பதனைச் சொல்லும் சான்றுகளாகக் காட்சியளிக்கின்றன.
காயல்பட்டினம்
கடல் வாணிபத்தைப் பற்றி இந்த ஆவணப்படம் பேசுகிறது. காயல் முன்னர் மிகப்பெரும் துறைமுகமாக
விளங்கியதை “மார்க்கோ போலோவின் குறிப்புகள்” வாயிலாக எடுத்துப் பேசியிருக்கிறது படத்தின்
காட்சிகள். காயல்பட்டினத்தில் நடைபெறும் திருமண நிகழ்வுகளில், தமிழ் பண்பாடுகள் நிறைந்திருக்கின்றன.
அவ்வூரில் உள்ள உதயமார்த்தாண்ட பள்ளிவாசல், ஒரு இந்து மன்னனால் கட்டப்பட்டிருக்கிறது.
அதனால் அம்மன்னனின் பெயரையே அப்பள்ளிக்கு வைத்துள்ளனர் என்று விவரித்துள்ளது படம்.
பழவேற்காட்டில் கடல் வாணிபம் செழித்திருந்ததை, போர்த்துகீசிய “துவார்த்தே பார்போசாவின் நூலிலிருந்து”, இப்படம் குறிப்பிடுகிறது. அதனருகில்தான் ஜமீலாபாத் எனும் ஊர் உள்ளது. இவ்வூரில் முஸ்லீம்கள் கப்பல் கட்டுமானம் செய்துள்ளனர். கோழிக்கோட்டில் உள்ள ‘மாப்ளா’ முஸ்லீம்களைப் பற்றியும் இப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போர்த்துகீசியர்களின் படையெடுப்புகளிலிருந்து, கோழிக்கோடு பகுதியினை குஞ்சாலி மரைக்காயர்கள் தொடர்ந்து காத்து வந்துள்ளனர். இதனால், அப்பகுதியின் மன்னன் சாமுத்ரி, ஒவ்வொரு இந்து மீனவக் குடும்பத்திலிருந்தும், ஒருவர் முஸ்லீமாக வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளார். முஸ்லீம்கள் அதிகமானால் தான், தன் படைபலம் அதிகரிக்கும் என்பதனாலே மன்னர் இந்த உத்தரவை வழங்கியிருக்கிறார். என்கிற இந்த செய்தியினை, வரலாற்று ஆய்வாளர்களின் பேட்டிகளின் வாயிலாக திரையில் காட்டப்பட்டுள்ளது. மன்னரின் இந்த ஆணை, முஸ்லீம்களின் நாட்டுப் பற்றிற்கு அளித்துள்ள, மகத்தான சான்று.
கடல் வாணிபம் மூலம்
அரேபியர்கள் இங்கு வந்ததும், அதன் பின்னால் இங்குள்ள மக்கள் இசுலாம் மதத்தினை ஏற்று
தங்களின் இன அடையாளங்களோடு தொடர்ந்து வாழ்ந்ததும், இங்கு முஸ்லீம்களுக்கு இந்து மன்னர்கள்
பள்ளிவாசல்கள் கட்டிக் கொடுத்ததும், அதேபோல முஸ்லீம்கள் இந்து மன்னர்களுக்கு பேருதவியாக
களத்தில் நின்றதுமென பல வரலாற்று ஆவணங்களைப் பேசிக் கொண்டே வந்த காட்சிகள், அடுத்ததாக
முஸ்லீம்களின் இலக்கிய ஈடுபாட்டினையும், தமிழ் மொழிக்கான அர்பணிப்புகளையும் பட்டியிலடத்
தொடங்கியது.
ஆயிரம் மசாலா (ஆயிரம் கேள்வி, பதில்கள்) எனும் நூல் 16-ம் நூற்றாண்டில் மதுரை தமிழ்ச் சங்கத்தில்தான் முதன் முதலில் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. ஆலிம் புலவர் அப்பா அவர்கள், முஹம்மது நபியின் மெஹராஜ் இரவு பயணம் குறித்துப் பாடிய யாப்பு “மெஹராஜ் மாலை’ (மிகுராசு மாலை), நாகர்கோவில் கோட்டாறு பள்ளிவாசலில் இயற்றப்பட்டிருக்கிறது. இந்தத் தகவலின் மூலம், முஸ்லீம்கள் பள்ளிவாசலைத் தொழுகைக்கான இடமாக மட்டும் பயன்படுத்தாது, தமிழ் வளர்க்கவும் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை அறிய இயலும்.
”தமிழ் இலக்கியங்களில் பிற சமூக மக்களைவிடவும், அதிகாமனதொரு பங்களிப்பை தமிழ் முஸ்லீம்களே செய்துள்ளனர்” என்று கூறியிருக்கிறார், ’முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்’ அவர்கள். இதனை, கவிக்கோ.அப்துல் ரஹ்மான் அவர்களின் பேட்டியின் வாயிலாக எடுத்து முன்வைக்கிறது இந்த ஆவணப்படம். இப்படி தமிழ் முஸ்லீம்களின் இலக்கியத் தடங்கள் பலவற்றையும் சுற்றி வந்துள்ளது இப்படம்.
மன்னர் திருமலை நாயக்கரின் மண்டபத்தில், பல இசுலாமிய கலை அம்சங்கள் நிறைந்திருப்பதாகக் கூறுகிறது, இதிலொரு காட்சி. தஞ்சை பெரிய கோயிலில் இராஜராஜ சோழனால் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் ஒன்றில், ‘திரம்மம்’ என அரேபிய நாணயத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆழ்வார் திருநகரில் உள்ள வைணவக் கோயிலில் முஸ்லீம்களின் வணிகத்தைக் குறிப்பிடும் சிற்பங்கள் இருப்பதினையும் ஆவணப்படுத்தியுள்ளார் இயக்குனர்.
வைணவர்கள் தமிழ் வளர்ந்த இடம் என்று குறிப்பிடும் ஆழ்வார் திருநகரிலுள்ள முஸ்லீம்களின் வீடுகள், கோயிலின் அருகில் அமைந்திருக்கின்றன. அங்கு நடைபெறும் முஸ்லீம்களின் சந்தனக்கூடு விழாவில் தமிழ் கலாச்சாரங்களான சிலம்புச் சண்டை, யானை ஊர்வலங்கள் போன்ற பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விழா நிகழ்வுகள் திரையினுள், மிக நேர்த்தியாகக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.
மதுரையில் உள்ள புட்டுக் கோயிலில் நடைபெறும் திருவிழாவிற்கு பரம்பரை பரம்பரையாக, யாகம் செய்யும் இடத்தில் வேலி அமைத்துக் கொண்டிருக்கிறார் மைதீன் என்பவர். இந்தப் பணியை இவருக்கு முன்னர் அவரது தாத்தாவும், தந்தையுமென தொடர்ச்சியாக செய்து வந்துள்ளனர். மைதீன் இப்படத்தில் அளித்திருக்கும் பேட்டியில், ‘தங்களின் குடும்பம்தான் இந்தப் பணியை தொடர்ந்து செய்து வருவதாகவும், எனக்குப் பின்னால் எனது குழந்தைகளும் செய்வார்கள்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் இவைகள் பார்ப்போருக்கு அளவில்லாத நெகிழ்ச்சியினைத் தரக்கூடிய காட்சிகள். இரண்டு சமூகத்திற்குள்ளும் உள்ள நெருக்கம் இவ்வளவு தூரம் நீண்டுள்ளதா என்பதனை எண்ணியும் பார்க்க இயலாது. ஆனால், இதுதான் நிதர்சனமான உண்மைகளாக இருந்து கொண்டுள்ளது.
எழுத்தாளர் பொன்சி அவர்கள், நாயுடு இன மக்கள் முஸ்லீம்களை மாமா, மாப்பிள்ளை என்று உறவு சொல்லி தங்கள் ஊரில் அழைத்து வருகிறார்கள் என்றும், தங்கள் ஊர் மட்டுமல்ல சுற்றுப்புறங்களிலும் அப்படித்தான் அழைக்கிறார்கள் என்றும் தன் கருத்தை இதில் பதிவு செய்துள்ளார்.
எழுத்தாளர் ஜோ டி’ குரூஸ், பரவர் மீனவச் சமூகத்தினர் முஸ்லீம்களைச் சாச்சி, சாச்சா என்று உறவுமுறையில் அழைப்பது சமூகப் பழக்கத்தில் உள்ள ஒன்றெனச் சொல்லியுள்ளார்.
”முஸ்லீம்களைப்
போலவே, பிரன் மலைக் கள்ளர் சமூகத்தினரும் ‘சுன்னத்’ செய்து கொள்ளுபவர்களாக இருக்கிறார்கள்”
எனும் வியப்பான செய்தியை இப்படத்தில் முன்வைத்திருக்கிறார், காட்சிப்பிழை இதழின் ஆசிரியர்
சுபகுனராஜன் அவர்கள்.
முஸ்லீம்களையும், இந்துக்களையும் மதங்களைச் சொல்லி பிளவுபடுத்திவரும் மிகக் கொடிய காலமிது. இக்காலத்தில், அவைகளுக்கு நேரெதிராக இரு சமூகங்களின் தொப்புள் கொடி உறவுகளைச் சொல்லி, ஒரு தமிழ் முஸ்லீமின் வேர்களைத் தேடிய இந்தப் பயணம் அமைந்திருக்கின்றது. இந்தப் பயணம் தென் கிழக்கு ஆசியா வரை பரவியுள்ள தமிழ் முஸ்லீம்களின் வேர் வரை நீளும் என்று, தனது பயணத்தின் எல்லையை முன்வைத்திருக்கிறார், இயக்குனர். அவரின் அடுத்தடுத்த பயணங்களும் இதே போலானதொரு வெற்றியினை அடைய வேண்டும். ஏனெனில் இது காலத்தின் தேவையாக உள்ளது.
இந்த ஆவணப்படத்தில் நிறைய அம்சங்களையும், நெஞ்சை கலங்க வைக்கும் பல காட்சிகளையும் நம்மால் கண்ணுற முடியும். பழவேற்காட்டில் உள்ள ஒரு பள்ளிவாசலில், அந்த ஊரில் முஸ்லீம்கள் வந்த வரலாற்றை எழுதி வைத்துள்ளனர். அதிலென்ன ஆச்சரியம் எனில், எழுத்தில் அரபியும், வாசிப்பில் தமிழுமாக அமைந்திருக்கிறது அது. இப்படியான ஒரு நடைமுறையை நாம் எங்கும் பார்த்திட இயலாது.
இதேபோல தாய்மொழியை
முஸ்லீம்கள் நேசிப்பதற்கு ஒரு உதாரணமாக, இப்படத்தின் துவக்கத்தில் ஒரு காட்சி வரும்.
அதில் இசுலாமிய மதரசா (கல்விச் சாலை) ஒன்றில், அங்குள்ள மாணவருக்கு, திருக்குரான் சொல்லிக்
கொடுத்துக் கொண்டிருப்பார், அங்குள்ள ஹஜ்ரத் (ஆசிரியர்). அப்படி அவர் சொல்லிக் கொடுத்துக்
கொண்டிருப்பது, தமிழ் மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட திருக்குரான் ஆகும். இயல்பில் தமிழ்
மொழிபெயர்ப்பில் திருக்குரான் இன்று பரவலாக அறியப்பட்டிருந்தாலும், அதிலுள்ள முஸ்லீம்களின்
மொழிப்பற்றை யாரும் கருத்தூன்றிப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் அதனை இப்படம் அழகாக
எடுத்துக் காட்டி, முஸ்லீம்களின் மொழி நேயத்தைச் சொல்லியிருக்கிறது.
இறுதியாக, இப்படத்தில் இன்னொரு காட்சியைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். நாகூரில் அமைந்துள்ள தர்காவின் வரலாற்றையும், அதன் தற்போதைய நிலையினையும் சொல்லும் காட்சி அது.
தஞ்சையை அன்று ஆண்ட, அர்ச்சுதப்ப நாயக்கரின் தீராத நோயை குணப்படுத்தி இருக்கிறார், இஸ்லாத்தின் இறை நேசரான சாகுல் அமீது. இதற்கு பகரமாக சாகுல் அமீது அவர்களை நாகூரிலேயே தங்குவதற்கு மன்னர் அனுமதித்துள்ளார். நாயக்கர்களைத் தொடர்ந்து, மராத்தியர்களும், நவாப்புகளும், செட்டியார்களுமென பலரின் கொடைகளால் உருவாகி நிற்பதுதான் இன்றைய நாகூர் தர்கா கட்டிடம். அன்று ஒரு முஸ்லீமிற்கு, பிற சமூகத்தவர்கள் உதவி செய்துள்ளனர், இன்று நாகூர் தர்காவில் முஸ்லீம்களைவிடவும் அதிக அளவில் பிற சமூகத்தவர்களே சென்று வழிபடுகின்றனர்.
இதனைக் காட்சியில் சொல்லுகிறபோது, நெற்றியில் பொட்டு வைத்த சில பெண்கள் நாகூர் தர்காவினுள் அமர்ந்து பிரார்த்திக் கொண்டிருப்பது காட்டப்படுகிறது.
இப்படி படம் முழுக்க இரு சமூகங்களின் இயல்பான இணைப்புகளை அடுக்கிக் கொண்டே வந்திருக்கின்றார் இயக்குனர் கோம்பை அன்வர். ரெங்கநாதன் சிலை, பள்ளிவாசல் வீதியில் பயணித்து சென்றதில் காட்சியைத் துவக்கிய படம், “யாதும் ஊரே, யாவரும் கேளீர்” என்கிற கணியன் பூங்குன்றனாரின் வார்த்தைகளில் முடிகின்றது.
இந்நாட்டின் தேசத் தந்தை மகாத்மா காந்தியைக் கொன்று, அதன் மூலம் தேசத்திற்கு மன்னிக்க முடியாத துரோகத்தை செய்த சக்திகள், முஸ்லீம்களை பிற சமூகத்தினரிடமிருந்து பிரித்தாளும் சூழ்ச்சிகளைத் தொடர்ச்சியாக செய்து கொண்டுள்ளனர். அவர்களின் விசமக் கருத்துக்களை முறியடிக்கும் மருந்தாக அமைந்திருக்கிறது இந்த ஆவணப்படம்.
தொப்புள் கொடி
உறவை முறித்துவிடுவது சாத்தியமென, பகல் கனவில் மூழ்கி, ஒன்றுபட்ட மக்களை மதத்தின் பெயரால்
இருகூறுகளாக்க முயற்சித்துக் கொண்டிருப்பவர்கள், அந்த கனவிலேயே மூழ்கியிருக்கட்டும்.
நாம் “யாதும்” போன்ற ஆவணப் படத்தை, பல பாகங்களுக்கும் பயணிக்க வைத்துக் கொண்டிருப்போம்.
அப்பொழுதுதான் “யாதும் ஊரே, யாவரும் கேளீர்” எனும் உயரிய கருத்தை வாழ வைக்க முடியும்.
இறுதியாக, கோம்பை அன்வர் அவர்களின் இந்த படைப்பு, எவ்வித சமரசங்களுக்கும் இடம் கொடுக்காமல் அமைந்திருக்கிறது.. தன்னை முன்னிலைப்படுத்துதல், வியாபார யுக்திகளோடு கருவிற்கு சம்பந்தமில்லாதவைகளை உள்ளே இழுத்துச் சொல்லுதல் போன்ற செயல்களை இயக்குனர் தவிர்த்து இருப்பது சிறப்பு. வெறும் பேட்டிகளை மட்டுமே அடுக்கிக் கொண்டு இருக்காமல், எல்லாவற்றையும் சீராக காட்சிப்படுத்தி உள்ள விதம், பார்வையாளர்களை படத்தினுள் முழுமையாக ஈர்த்துக் கொள்கிறது. மொத்தத்தில், ”யாதும்” ஒரு மிகச் சிறந்த படைப்பு.
(மார்ச் - 2015, காக்கைச் சிறகினிலே மாத இதழில் வெளியான கட்டுரை.
நன்றி : காக்கைச் சிறகினிலே இதழ்)
நன்றி : காக்கைச் சிறகினிலே இதழ்)
-பழனி ஷஹான்


No comments:
Post a Comment