27.07.2015
அன்றுதான், ஒரு மாபெரும் துயரத்தை சந்தித்தது, இந்திய தேசம்.
மீட்கவே முடியாத அந்தத் துயரத்தினால், இந்தியாவின் ஆன்மா அழுதது.
இமயமே சரிந்தது என, இந்திய மக்களின் இதயங்கள் துடித்தன. அந்தத் துயரம் நடந்திருக்கக்
கூடாது. இந்தியாவின் வலிமையை உலக அரங்கில் ஒலிக்கச் செய்து, அமெரிக்காவையே அதிர்வுக்குள்ளாக்கிய
இந்தியாவின் ஏவுகனை நாயகனும், முன்னாள் குடியரசுத் தலைவருமான, டாக்டர்.ஏ.பி.ஜெ.அப்துல்
கலாம் அவர்களின் மறைவுதான், அத்துயரச் சம்பவமாகும்.
அப்துல் கலாம் அவர்களின் மறைவுக்கு நாம் வருந்தும் அதேவேளை,
இனி அப்துல் கலாம்கள் உருவாகுவதற்கு இந்தியாவில் சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பதனையும்
சேர்த்து கவனிக்க வேண்டும். அப்துல் கலாம் இட்டுச் சென்றுள்ள, வெற்றிடத்தை நிரப்பவோ,
அவரின் தொலைநோக்குத் திட்டங்களுக்கு செயலூக்கம் கொடுக்கவோ, என்ன வழிமுறைகளை வைத்து
இருக்கின்றோம் என்பதுதான், நம்மிடையே தற்போதுள்ள மிக முக்கியமான கேள்வியாகும்.
செயற்கைக்கோள் என்பது, பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாத
பயன்பாட்டைக் கொண்டுள்ளது. இராணுவக் கண்காணிப்பு, வானியல் ஆய்வு, உளவு பார்த்தல் என,
செயற்கைக்கோள்கள் ஒரு நாட்டின் பாதுகாப்புத் தளத்தில், மிக முக்கியப் பங்குவகிக்கின்றன.
இதேபோல, மக்களின் வாழ்வாதாரச் சிக்கலை சரிசெய்யும் பொருட்டு, நீர் ஆதாரமுள்ள பகுதியையும்,
விளைபொருட்களின் உற்பத்தித் திறன் மிகுதியாக உள்ள இடங்களையும் மிகத்துல்லியமாக அறிந்து,
அதற்கேற்ப அந்த இடங்களில் வளங்களைப் பெருக்கவும், செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஒரு நாட்டின் வலிமையை, பொருளாதாரம் எந்தளவிற்கு நிர்மாணிக்குமோ,
அதே அளவு வலிமையை, ‘நாட்டின் சக்தி’ என்கிற அடிப்படையில் நிர்மாணிக்க வல்லதுதான்,
‘செயற்கைக்கோள்கள் மற்றும் ஏவுகணைகளின்’ பாய்ச்சல்களாகும். நம் இந்திய நாட்டில், மனித
சக்தி மலிந்து கிடக்கின்றது. அதே அளவிற்கு இங்கு பொருளாதார சக்தியும் விரிந்து கொண்டேதான்
இருக்கிறது. ஆனாலும், நாம் வளரும் நாடுகளின் பட்டியலில்தான் இன்றுவரை இருந்து கொண்டுள்ளோம்.
ஆனால், மனித வளத்தில் குறைவாக உள்ள அமெரிக்கா, உலக வல்லரசாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டுள்ளது.
இங்குதான் தொழில்நுட்பங்களின் சக்தியை நாம் உற்று கவனிக்க வேண்டியுள்ளது.
1957-ம் ஆண்டு அக்டோபரில், ஸ்புட்னிக்-1 என்ற செயற்கைக்கோளை,
உலகிலேயே முதன்முதலாக விண்ணில் செலுத்தி, சோவியத் யூனியன் தனது சக்தியை நிரூபித்தது.
அதே ஆண்டு நவம்பரில் மீண்டும், ஸ்புட்னிக்-2 என்கிற செயற்கைக்கோளை, லைகா எனும் நாயை
உள்வைத்து அனுப்பியது சோவியத். சோவியத்தின் வளர்ச்சியை, உடனடியாக முறியடிக்கும் விதமாக,
1958-ம் ஆண்டு, ’எக்ஸ்ப்ளோரர்-1’ என்ற தனது முதல் செயற்கைக்கோளை, விண்ணில் ஏவியது அமெரிக்கா.
அன்றுதொட்டு இன்றளவும், இவ்விரு நாடுகள்தான் இதில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டுள்ளன.
மனித வளத்தில் உலகின் இரண்டாம் இடத்தில் இருந்து கொண்டுள்ள இந்தியா,
இன்றுவரை 77 செயற்கைக்கோள்களை மட்டுமே விண்ணில் செலுத்தியுள்ளது. 1975-ம் ஆண்டு ‘ஆர்யபட்டா’
(Aryabhata) எனும் தனது முதல் செயற்கைக்கோளை விண்ணிற்கு அனுப்பிய இந்தியா, உலக அளவில்
செயற்கைக்கோள் அனுப்பு தளத்தில், 14-வது நாடாக விளங்கியது.
இன்று விண்ணில் 1000-க்கும் மேலான செயற்கைக்கோள்கள் உலவிக் கொண்டுள்ளன.
இவைகள் அனைத்தும், 50 நாடுகளுக்கு உட்பட்டதாகும். இதில் இந்தியாவின் பங்கீடு கவலையளிக்கும்
விதத்திலேயே இருந்து கொண்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம், பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துப்
பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், இவ்வாறு கூறுகிறார்; “இன்றைய நிலையில், இந்தியாவின்
’27 செயற்கைக்கோள்கள்’ விண்ணில் செயலாற்றிக் கொண்டுள்ளன”. என்று. ஜிதேந்திர சிங் வெளியிட்ட
தகவலுக்குப் பின்னர், கடந்த ஆகஸ்டு மாதத்தில், ”ஜி-ஷாட்-6 (GSAT-6)” என்கிற செயற்கைக்கோளை
இந்தியா விண்ணுக்கு அனுப்பியுள்ளது. ஆக, இன்றைய நிலையில், விண்ணில் செயலாற்றிக் கொண்டுள்ள
இந்திய செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 28-தான் ஆகும். இது மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில்,
மிகவும் பின் தங்கிய நிலைதான்.
இந்தியாவின் இந்த நிலைக்கு, எது தடையாக இருக்கிறது என்று பார்த்தால்,
அது இந்தியாவின் மெத்தனம் என்றுதான் கூற வேண்டும். இந்தியாவில், ’இந்திய விண்வெளி ஆராய்ச்சி
நிறுவனம் (ISRO)’ மட்டும்தான், விண்ணில் செயற்கைக்கோள்களை அனுப்பும் அதிகாரம் கொண்டவையாக
இருக்கின்றது. ஆனால் ரஷ்யாவிலும், அமெரிக்காவிலும் நிலை வேறாக இருக்கிறது.
அங்கு விண்ணியல் ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது.
விண்ணுக்கு செயற்கைக்கோள்களை அனுப்பும் உரிமம், தனியாரிடமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதற்கென அரசு சார நிறுவனங்கள், அங்கு பல இயங்குகின்றன. ஆனால், நம் இந்தியாவில் இதற்கெல்லாம்
எந்த இடமுமில்லை. செயற்கைக்கோள் என்று இல்லை, அதற்கான மாதிரியைக்கூட விண்ணில் செலுத்துவதற்கு,
இந்தியாவில் ஏராளமான கட்டுப்பாடுகள் இருக்கின்றன.
உள்ளூர் தீயணைப்பு நிலையத்திலிருந்து, இஸ்ரோ வரை அனுமதி பெற
வேண்டிய, நெடிய அலைச்சல் நிலை இங்கு உள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில், செயற்கைக்கோள்களின்
அதிநுட்ப சென்சார்களுக்கு இந்தியாவில் இடம் மறுக்கப்படுகின்றது. இதற்கு ‘தீவிரவாத அச்சுறுத்தல்’
ஒரு காரணமாக இருந்தாலும், அந்த ஒன்றை மட்டும் வைத்தே நாட்டின் வளர்ச்சியை நாம் தடுத்துக்
கொண்டிருப்பது வேதனையான ஒன்றாகும். இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் தீவிரவாத அச்சுறுத்தல்கள்
இன்று இருந்து கொண்டுதானுள்ளது. ஆனாலும், ரஷ்யாவினாலும், அமெரிக்காவினாலும் வல்லரசாக
திகள முடிகின்றதே ஏன்?
இங்குதான் இந்தியாவின், அரசியல் என்கிற இன்னொரு தடை முகம் வெளிப்படுகின்றது.
நாட்டின் வளர்ச்சியைவிட, இந்திய அரசியல்வாதிகளுக்கு அவர்களின் தனிப்பட்ட ஆதிக்கம் ஒன்றே
பிரதானமாக மாறி உள்ளது. ஆகையால் அவர்களைப் பொறுத்தமட்டில், நாட்டின் வளர்ச்சி என்பது
இரண்டாம் கட்டம் மட்டுமே. இதனால் இந்தியா, உலக அரங்கில் பின்னுக்குத் தள்ளப்பட்டுக்
கொண்டுள்ள நிலை நீடித்துக் கொண்டேயுள்ளது. இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்களைக் காணுகின்றபோது,
இந்தியாவில் இனி ’அப்துல் கலாம்கள்’ உருவாகுவது அவ்வளவு எளிதல்ல என்கிற வருத்தம் மேலோங்குகிறது.
இந்தச் சூழலில்தான் கடந்த மாதம் சென்னையில், நாட்டிலேயே முதல்
முறையாக விண்ணுக்கு அருகில் காற்றின் தரத்தை அறியும் கருவியை செலுத்தியிருக்கிறார்,
பன்னிரண்டாம் வகுப்பே படித்துக் கொண்டிருக்கும் மாணவனான, ஷாரூக் ராஜ். ஏராளமான நடைமுறைச்
சிக்கல்கள் நிலவும் இத்தளத்தில், இது எப்படி சாத்தியமானது என்பதனை அறிய, நாம் அந்த
மாணவனை, கரூர் அருகேயுள்ள பள்ளபட்டியில் சந்தித்து உரையாடினோம்.
அந்தச் சந்திப்பின்போதுதான், அந்த மாணவன் செய்திருக்கும் ஏராளமான
கண்டுபிடிப்புகளையும், வாங்கியிருக்கும் ஏராளமான பாராட்டுக்களையும், சான்றிதழ்களையும்
காண முடிந்தது. இந்தியா முதன்முதலில் நிலவுக்கு அனுப்பிய ஆய்வுக்கலமான, சந்திராயன்
– 1 திட்டத்தின், திட்ட இயக்குநரும், இளைய கலாம் என்ற சிறப்பைப் பெற்றவருமான, முனைவர்.மயில்சாமி
அண்ணாதுரை அவர்களிடம், தனது செயற்கைக்கோள் வடிவமைப்பு மற்றும் அதன் செயல்திறன்களுக்காக,
பாராட்டுச் சான்றிதழை வாங்கியிருப்பதினை பெருமையோடு சுட்டிக் காட்டிய அந்த இளம் விஞ்ஞானி,
தன்னைக் குறித்தும், தனது கண்டுபிடிப்புகள் குறித்தும், நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.
“தேவைகள்தான் கண்டுபிடிப்புகளுக்கான, முதல் படி” என்பார்கள்.
ஏழாம் வகுப்பு படிக்கும்போது எனது தேவைக்காக, நான் ஒரு இன்வெர்ட்டரை தயாரித்தேன், அன்றிலிருந்தே
நான் எனது வாழ்க்கையை விஞ்ஞானியாக தொடர ஆரம்பித்துவிட்டேன். எனது அறிவியல் ஆர்வத்திற்கு,
எனது தந்தைதான் காரணம். அவர், இஸ்ரோவின் ரிசர்ச் (Research), டிபார்ட்மெண்டில் பணியாற்றியவர்.
நான் ஒரு விஞ்ஞானியா ஆகி, சேட்டிலைட்டை அனுப்ப வேண்டும் என்பது, எனது தந்தையின் விருப்பம்.
நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே, எனது தந்தை இறந்துவிட்டார். அதன்பிறகு எனது தாய்
மாமன்களின் வளர்ப்பில்தான், நான் இன்றுவரை படித்துக் கொண்டுள்ளேன். எனது தந்தை இறக்கும்
வரையில், அவரது ஆய்வுக் கூடத்தில், ஆய்வுப் பணிகளை செய்து கொண்டேதான் இருந்தார். அவர்
நாட்டின் முன்னேற்றம் குறித்து அதிகம் கூறியிருக்கிறார். ஆகவே, நானும் அவர் வழியில்
ஒரு விஞ்ஞானியாக ஆக வேண்டும் என்பதனை, எனது குறிக்கோளாக ஏற்றுக் கொண்டேன். அதுதான்,
எனது தந்தையின் விருப்பமும் கூட.” என்று கூறி முடித்த, முஹம்மது ரிஃபாத் ஷாரூக் ராஜ்
எனும் அம்மாணவனிடம், நாம் மேலும், சில கேள்விகளைக் கேட்டோம்.
ஒரு மாணவனாக, நீங்கள் சாதிப்பதற்கு
எது உறுதுணையாக இருந்தது?
அதற்கு முதலில், ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா (Space Kidz India),
அமைப்பின் இயக்குநர் ஸ்ரீமதி கேசன் அவர்களைக் குறிப்பிட விரும்புகிறேன். நான் சேட்டிலைட்டை
(Satellite) வடிவமைப்பது குறித்து எட்டாம் வகுப்பிலிருந்தே வாசிக்கத் தொடங்கிவிட்டேன்.
இதற்கு எனக்கு நாசாவின் (NASA) வெப்சைட் மிகவும் உதவியது. அன்றிலிருந்து சேட்டிலைட்டை
உருவாக்கும் முயறிசியில் ஈடுபடத் தொடங்கினேன். அப்போது எனக்கு ஸ்ரீமதி கேசன் அவர்கள்தான்,
கை கொடுத்தார்கள். எனது ஆய்வுப் பணிகளை ஊக்கப்படுத்தி, எனக்காக பலரிடம் சென்று ஸ்பான்சர்
(Sponcer) கேட்டார்கள். ஆனால் யாருமே உதவ முன்வரவில்லை. ஒரு ஸ்கூல் ஸ்டூடண்ட்டை நம்பி,
நஷ்டமடைய முடியாது எனக் கூறித் திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால், ஸ்ரீமதி கேசன் அவர்களே,
அமைப்பின் சார்பாக பணத்தை ஏற்பாடு செய்து, என்னுடைய சேட்டிலைட்டின் மாடலை, விண்ணில்
ஏவுவதற்கு உதவினார்கள்.
மேலும், எனது நான்கு தாய் மாமன்கள் மற்றும் குடும்பத்தினரின்
ஆதரவு மிக, முக்கியமானதாகும். அதேபோல, எனது பள்ளியின் முதல்வரும் என்னுடைய பணிகளை ஊக்கப்படுத்தி,
உதவிக் கொண்டுள்ளார்.
தற்போது விண்ணில் செலுத்திய கருவி
குறித்தும், அதன் அனுபவங்கள் குறித்தும் கூறுங்கள்?
நாங்கள் இரண்டரை வருடங்களாக, சேட்டிலைட்டை வடிவமைத்துக் கொண்டுள்ளோம்.
கடந்த மாதம் (ஆகஸ்டு-2015) 23 அன்று, அதனுடைய மாடலை லான்ச் (Launch) செய்தோம். இப்போது
நாங்கள் விண்ணில் செலுத்தியது, சேட்டிலைட்டாக இல்லை. அதனை, ஸ்பேஸ் கேப்சூல் என்கிற
வடித்திற்கு மாற்றித்தான், விண்ணில் பறக்க விட்டோம்.
ஹீலியம் வாயுவால் பறக்கக் கூடிய பலூனை மேலே அனுப்பினோம். எங்களின்
முதன்மை நோக்கம் ஓசோன் படலத்தில் எவ்வளவு அடர்த்தி (யூவி ரேடியேஷன்) இருக்கிறது என்பதனை
அறிவதும், ஒசோனில் என்னென்ன மாதிரியான கேஸ் (வாயுக்கள்) படிந்துள்ளன, அதில் எது அதிகமாக
உள்ளது என்பன போன்ற தகவல்களையும் சேகரிப்பதே ஆகும். இந்த வாலட்டைல் ஆர்கானிக் கேஸ்தான்,
க்ளோபல் வார்மிங்கிற்கு (Global Warming) அடிப்படைக் காரணங்களாகும்.
ஹீலியம் பலூனிற்குள், 10 விதமான சென்சார்கள், ஆர்,ஜி.பி.ஸ்பெக்ட்ரோ
மீட்டர், (RGB Spectro Meter) ஜி.பி.எஸ் (GPS – புவியிடங்காட்டி) போன்ற கருவிகளை வைத்து
அனுப்பினோம். தரையில் இருந்து 1000 மில்லி பார் மேலான அழுத்தத்துடன் செல்லும் ஹீலியம்
பலூன், மேலே செல்லச் செல்ல அழுத்தம் குறைந்து 4 மில்லி பார் அளவிற்கு மாறிவிடும். இதனால்
வாயு விரிவடைந்து, பலூன் ஒரு கட்டத்தில் வெடித்துவிடும். இதன்பின்னர், உள்ளே உள்ள பாராசூட்
விரிந்து, தரையை நோக்கி கருவிகளைப் பாதுகாப்பாக கொண்டுவந்துவிடும். சென்னை ஹிந்துஸ்தான்
யுனிவர்சிட்டியில் இருந்து செலுத்தப்பட்ட எங்களின் கருவி, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள
குத்துனூரில் தரையிறங்கியது. இதனுள் நாங்கள் வைத்திருந்த பென்டிரைவ் (Pen Drive), மேலே
கிடைத்த தகவல்களை சேமித்துவிடும். அந்தத் தகவல்களின் வாயிலாக நாங்கள், மேற்கொண்டு ஆய்வுகளைச்
செய்து கொண்டுள்ளோம்.
எதிர்காலத் திட்டம் என்ன?
எனக்கு, சேட்டிலைட்டை லான்ச் (Launch) செய்ய வேண்டும் என்பதுதான்,
மிகப்பெரிய குறிக்கோளாகும். எதிர்காலத்தில், இஸ்ரோவில் சேர்ந்து பணியாற்ற வேண்டும்.
இந்தியாவை, விண்ணியல் ஆய்வுத் துறையில் வளர்க்கப் பாடுபட வேண்டும். இதுதான் எனது இலட்சியங்களாகும்.
உங்களுடைய செயற்கைக்கோளை, விண்ணில் ஏவுவது குறித்துக் கூறுங்கள்?
சேட்டிலைட்டை அனுப்புவது, இப்போதைக்கு இயலாத ஒன்றாக உள்ளது.
ஏனெனில், அதனை இந்தியாவில் லான்ச் (Launch) செய்ய அனுமதியில்லை. அதனால், அதனை ரஷ்யா
அல்லது யுனைடைட் ஸ்டேட்ஸ் (US) போன்ற நாடுகளில்தான் லான்ச் செய்ய முடியும். அங்கு லான்ச்
செய்ய வேண்டுமெனில், இலட்சக் கணக்கில் பணம் தேவையாக உள்ளது. அதனால்தான், முதற்கட்டமாக
விண்ணுக்கு அருகில் கருவியைச் செலுத்துவதென தீர்மானித்து, அதனைச் செய்துள்ளோம்.
நீங்கள் செயற்கைக்கோளை ஏவுவதில்
என்ன தடையிருக்கிறது?
முதலில் பொருளாதாரம்தான் பெரும் தடையாக உள்ளது. நாங்கள் (ஸ்பேஸ்
கிட்ஸ் இந்தியா) சேட்டிலைட்டை முழுமையாக டிசைன் செய்துவிட்டோம். ஆனால் அதனை லான்ச்
செய்ய இந்தியாவில் முடியாது என்பதால், ரஷ்யாவிலுள்ள ஸ்பேஸ் ஆர்கனிசேஷன் (Space
Organization) ஒன்றுடன், எங்களது நிர்வாக இயக்குநர் ஸ்ரீமதி கேசன் அவர்கள் பேசிக் கொண்டுள்ளார்கள்.
கவர்மெண்ட்ல இருந்து முறையான ஆதரவை எதிர்பார்க்கிறோம். அது கிடைத்துவிட்டால், விரைவில்
வெற்றியடைஞ்சிருவோம். எங்களுடைய சேட்டிலைட்டை வெற்றிகரமாக நாங்கள் விண்ணில் ஏவிவிட்டால், அது இந்திய நாட்டிற்குதான் புகழைப் பெற்றுத்தரும்.
என்று நமது கேள்விகளுக்கு, அறிவுப்பூர்வமாக பதிலளித்தார், மாணவனான
ஷாரூக் ராஜ்.
ஷாரூக் இந்த செயற்கைக்கோள் வடிவமைப்புக்காக, மயில்சாமி அண்ணாதுரை
அவர்களிடம் பாராட்டு பெற்றதினை மேலே குறிப்பிட்டேன். அதுபோக, இந்த மாணவன் தனது கண்டுபிடிப்புகளுக்காக,
நாசாவின் (NASA) பாராட்டுக்களையும், சான்றிதழ்களையும் கூட வாங்கியிருக்கிறார். இஸ்ரோவில்
இதற்காக, பயிற்சி முகாம் ஒன்றை மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றிருந்திருக்கிறார். இந்த
செயற்கைக்கோள் வடிவமைப்பைத் தவிர்த்து, ஷாரூக்கின் ‘சாலை விபத்தைத் தடுக்கும் ரோபோட்”
கண்டுபிடிப்பும் பரவலாக கவனத்தைப் பெற்ற ஒன்றாக இருக்கின்றது.
செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்துவதே, தனது வாழ்நாள்
இலக்கு எனக் கூறும் இம்மாணவனின் சாதனை வேட்கை பாராட்டுக்குரியது. ஆனால், நம் நாட்டின்
நடைமுறை அதனை மிகவும் கடினமாக்கி வைத்துள்ளது. அந்த நடைமுறைச் சிக்கல்களைத்தான், நான்
மேலே விரிவாகக் கூறினேன். மேலும், இம்மாணவனே ஒரிடத்தில் குறிப்பிடும்போது, ‘இந்தியாவில்
லான்ச் செய்ய இயலாது’ என்கிறார். அதனால், ரஷ்யாவில் முயன்று கொண்டுள்ளோம் என்றும் கூறுகிறார்.
இப்போது நம்முன்னே இருக்கும் கேள்வி, இது எப்படிச் சாத்தியமாகும்
என்பதுவே. ஏனெனில், ஒரு செயற்கைக்கோள் என்பது, ஒரு நாட்டின் சக்தியைத் தீர்மானிக்கக்
கூடியது. அப்படியிருக்கும்போது, அதனை எப்படி ரஷ்யா அங்கீகரிக்கும்?
இங்கு நிலவும் உள்நாட்டு அரசியலே, நம் நாட்டின் வல்லுனர்களை
முடக்குகிறது என்றால், உலக அளவில் நிலவும் புவிசார் அரசியல் மட்டும் எப்படி அதனை அங்கீகரிக்கும்?
அந்த மாணவன் உறுதியாகக் கூறும் வார்த்தைக்குப் பின்னால், சாதனை வேட்கை பளிச்சிடுகிறது.
ஆனால் இங்குள்ள நடைமுறை, அதனை மழுங்கடித்துவிடும் நிலையில்தான் உள்ளது.
இந்த நிலை நம் நாட்டில் மாற வேண்டும். இந்தியா, அய்யா அப்துல்
கலாமை இழந்து தவிக்கும் இந்தத் தருணத்தில், அவருக்கான உரிய அஞ்சலியாக, ”அப்துல் கலாம்களை”
அடையாளம் கண்டு ஊக்கப்படுத்த முன்வர வேண்டும். அவர்களின் வெற்றிக்கு, எல்லா விதமான
வழிவகைகளையும் செய்துதர அரசு முனைய வேண்டும். அப்துல் கலாம் அவர்கள், ‘இந்தியாவை வல்லரசாக்க’
வேண்டும் எனும் முனைப்போடு செயலாற்றினார். அவரின் கனவை நிறைவேற்றுமா, இந்திய தேசம்?
- பழனி ஷஹான்
(ஜனவரி 2016இல் சமநிலைச் சமுதாயத்தில் வந்த கட்டுரை இது. நன்றி சமநிலைச் சமுதாயம் இதழ்)







No comments:
Post a Comment