Monday, 3 April 2017

சொல்வதெல்லாம் உண்மை


ரு நிமிடத்திற்கும் மறுநிமிடத்திற்குமான இடைவெளியைக் குறித்து நம்மிடம் பெரிய மதிப்பீடுகள் இருப்பதே இல்லை. இயல்பில் நிமிடங்கள் என்பது அப்படித்தான் உள்ளது. ஒரு வாக்கியத்தை முழுவதுமாக உதிர்த்துவிடுவதற்குள் ஒரு நிமிடம் இறந்துவிடுகின்றதுபோது, நம்மிடம் நிமிடம் குறித்து மிகை மதிப்பீடுகள் இருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் நிமிடங்கள் எப்போதுமே அப்படி இருந்துவிடுவதில்லை.
இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்டு உயிர் பலிகள் நேரவும், ஒரு கட்டிடம் சரிந்து விழவும், நிலநடுக்கம் உருவெடுக்கவும், தொண்டைக் குழியை எட்டி நிற்கும் ஒருவரின் உயிர் பிரிந்து செல்லவும், ஆழிப் பேரலை தோன்றவும், ஒருவரின்மீதான நம்பிக்கை எதிர் துருவத்திற்குச் செல்லவும், ‘புரூட்டஸ் நீயுமா! (You too Brutus)’ என ஜீலியஸ் சீஸர் கேட்பதற்கு முன்பான சம்பவம் நிகழ்வதற்கும் ஒரு நிமிடம் போதுமானதாக இருக்கிறது. இமை மூடித் திறக்கும் தூரத்தில், ஒரு திகில் நம்மைச் சூழ்ந்துவிடுகின்றது.

‘வெண்ணிற ஆடை’ காட்டும் மனிதர்களின் வாழ்வு இப்படிப்பட்டதுதான். எளிய மனிதர்கள் முதல் உயர் வர்க்கம் வரை, நிமிடத் தாக்குதலில் வீழ்த்தப்பட்டுவிடுகின்றனர். இது நமக்கு நேராது என்பதற்கு எந்த உறுதிப் பத்திரத்தையும் யாரும் அளித்துவிட முடியாது என்பதைத்தான், வெண்ணிற ஆடையின் மனிதர்கள் சாட்சி பகர்கிறார்கள். நாம் வாழும் காலத்தின், அங்கீகரிக்கப்படாதப் பக்கங்களுக்கு நியாயம் கோரும் ஒன்றை எடுத்துப் பேசும் முயற்சியை வெண்ணிற ஆடை செய்ய முனைந்திருக்கிறது.


புனைவிற்கும் எதார்த்தத்திற்கும் இடையேயான புள்ளியை விலக்கி வைத்து, இரண்டின் கலவையிலிருந்து இப்புத்தகத்திற்கு சாயம் பூசப்பட்டுள்ளது. “Literature is a Reflection of Life” (வாழ்க்கையின் பிரதிபலிப்பே இலக்கியம்) என்று ஆங்கிலத்தில் வரையறை செய்திருப்பார்கள். வெண்ணிற ஆடை இந்த வரையறையின் பிரதிபலிப்பாகவே மிளிர்கிறது. இது நமது காலத்தின்மீது ஆய்வுக் கண்ணாடியை வீசி, நம்முடைய உலகத்தை நமக்கு விசித்திரமாய் காட்டியிருக்கிறது.

White Collar Criminals” என்று ஒரு சொல்லை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதாவது ‘குற்றம் வெள்ளை நிறம்’ என்று அதனை பொருள்படுத்துவார்கள். இப்புத்தகத்திற்கு ‘வெண்ணிற ஆடை’ என்கிற தலைப்பும் அப்படியான அர்த்தத்தில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. இந்த வெண்ணிறத்துக்குள் பொதிந்து கிடப்பது யாவும் குற்றங்களே. குற்றங்களைச் சொல்லிக் குமுறும் மனிதர்களே இதில் வாழ்கிறார்கள். ஆனால் கறை படிந்த அவர்களின் உடலை, வெண்ணிற ஆடைகளினால் மறைத்துக்கொண்டு வலம் வருகிறார்கள் அவர்கள்.

சின்னஞ்சிறு கதைகளின் வழியாக ஒரு உலகத்தையே விரித்துச் செல்வதில் சரவணன் சந்திரன் கை தேர்ந்தவர். ஒரு பத்திக்கும் இன்னொரு பத்திக்குமான இடைவெளியில், ஒரு மலை முகட்டை மண் தரையாக்கும் வித்தையை அவரின் எழுத்தில் காண முடிகின்றது. ‘வெண்ணிற ஆடை’ என்கிற அவரின் இப்புத்தகத்தைப் புரட்ட, புரட்ட புருவங்கள் தன்னியல்பாக மேல்நோக்கிச் சென்றுவிடுகின்றன. பெரும் வினாவொன்று விநாடியில் இல்லாமல் ஆகிவிடுவதென்பது, மனதின் சீர்நிலையை களைத்தெறிந்துவிடுகின்றது.

இருபது குறுங்கதைகளைத் தாங்கிய தொகுப்பான ‘வெண்ணிற ஆடையை’ நம் விருப்பத்திற்கேற்ப அணிந்துகொள்ள முடிகின்றது. இது ஒரு ஆவணங்களின் கட்டுரைத் தொகுப்பு. நடப்பின்மீது புனைவைத் தெளித்துள்ள சிறுகதைகளென்றும் இதைச் சொல்ல முடியும். இருபதையும் இணைத்து நாவல் என ஒற்றைப் படிமத்திற்குள் அடைத்து வைக்கவும் வெண்ணிற ஆடையில் வழி இருக்கிறது. சட்டென ஒரு பெட்டகத்திற்குள் வைத்து பூட்டிவிட இயலாத ஆடையை மிக நேர்த்தியாக சரவணன் வடிவமைத்திருப்பது ஒரு அழகான முரணாகும்.

“ஜீ தமிழ்” தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கும் “சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சியை தமிழகத்தில் அறியாதவர்கள் இருக்க முடியாது. ‘என்னம்மா நீங்க இப்புடி பண்றீங்களேம்மா’ என்கிற புகழ்பெற்ற வசனத்தின் பிறப்பிடமான ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியின் இயக்குனராகப் பணியாற்றிய சரவணன் சந்திரன், அந்நிகழ்ச்சியின் வழியாக அவருக்குக் கிடைத்த அனுபவங்களை இப்புத்தகத்தில் எழுத்தாக்கியிருக்கிறார்.


மனித வாழ்வின் தகிக்கும் பக்கங்களையும், நாம் வெளியே சொல்லத் தயங்கும் வாழ்வின் கோணல்களையும், நாகரிகத்தின் பெயரால் இந்தச் சமூகம் மறுத்துக் கொண்டிருக்கும் உண்மைகளையும் வெண்ணிற ஆடை பேசியிருக்கின்றது. இன்னொரு வகையில் சொன்னால், வெண்ணிற ஆடை என்பது ‘சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின்’ அறியப்படாத அத்தியாயங்களாகும். கேமிராவின் பார்வையிலிருந்து தவறிச்சென்ற நிகழ்வுகளையும், ஸ்டுடியோவிற்குள் அரங்கேற்றப்படாமல் விடுபட்ட காட்சிகளையும் வெண்ணிற ஆடை பதிவாக்கியுள்ளது.

நாம் மிகச்சாதாரணமாக வாசித்துவிட்டுக் கடந்து சென்றுவிடும் தினசரி ஏடுகளின் செய்திகள்தான் வெண்ணிற ஆடை. கள்ளக் காதல், அதன்பொருட்டு நிகழும் கொலை, செளகரியங்களுக்காக நடத்தப்படும் கொள்ளைகள், சொத்துப் பிரச்சினை, நீதிமன்ற வளாகத்தில் வளர்ந்துகொண்டிருக்கும் குடும்பப் பகை, பண மோகத்தால் நிகழும் குற்றங்கள் என்று நீண்டு செல்லும் அன்றாடங்களின் பிம்பங்களுக்குப் பின்னாலிருக்கும் மர்ம முடிச்சுக்களை, வெண்ணிற ஆடை பகிரங்கப்படுத்துகிறது.

வெளிப்படையில் ஒரு சிறிய நிகழ்வாகத் தெரியும் இதுபோன்றவற்றின் பூதாகர உருவங்களை வெளிக்கொணரும்போது, அதில் இருக்கும் புதிர் தன்மைகள் நம்மை உறைய வைத்துவிடுகின்றன. வெண்ணிற ஆடையின் எல்லாக் கதைகளும் இவ்வாறனவைகள்தான். அது நம்மைத் தொந்தரவு செய்கின்றன. உறக்கத்தைத் தடுக்கின்றன. தியேட்டரைவிட்டு வெளியேறியப்பின்பும் நம்மைப் பின்தொடரும் படத்தின் இறுதிக் காட்சிகளைப் போல, வெண்ணிற ஆடையை மூடிவைத்தப் பின்னரும் அதன் கதாபாத்திரங்கள் நம்மைவிட்டு அகல அவகாசங்களை எடுத்துக்கொள்கின்றன.
தனது வாழ்விற்காக தன்னுடைய பைத்தியகாரச் சகோதரியையும், தாயையும் நடுரோட்டில் அநாதையாக விட்டுச்செல்லும் ஒருவளை; திருமணமாகி ஆண்டுகள் பல கடந்த நிலையில் தனது முன்னாள் காதலனுடன் தஞ்சமடையும் ஒருவளை; முகச்சிதைவு செய்யப்பட்ட பெண்ணொருத்தி பழிவாங்கத் துடிப்பதை; தனது மனைவியால் கொடுமைக்குள்ளாகி பிரமைபிடித்தவனை; கட்டுப்பாடற்ற வாழ்வின் போதையால் திசைமாறிப்போய் தனது தாயைக் கொலை செய்ய தருணம் பார்த்துக்கொண்டிருக்கும் ஒருவனை; தனது கணவரைக் கொலை செய்த டீச்சரை; தன்னுடைய ஓரின உறவால் கணவனை நிராகரிக்கும் மனைவியை; மனைவி மற்றும் மாமியாரால் மனம் நொடிந்த ஒருவனை என சோகங்களும், அவலங்களும், குரூரங்களும் நிறைந்த நிஜங்களை வெண்ணிற ஆடையின் ஒவ்வொரு தாள்களும் மையில் பொறித்திருக்கிறது.

வெண்ணிற ஆடை கூறும் சம்பவங்கள் எதுவும் ‘வெளிநாட்டு விநோதங்கள்’ அல்ல. அவை நம் தமிழ்ப் பூமியில்தான் நடந்தும், நடந்துகொண்டும் இருக்கின்றன என்பது நமக்குச் சற்று வியப்பைத் தரலாம். வாசிப்பின்போது அதில்வரும் கதை மாந்தர்களின் தோற்றத்தைக் குறித்து நாம் கற்பனை செய்ய முனையலாம். அந்த மனிதர்கள் நமக்கு மத்தியில்தான் வாழ்கிறார்கள் என்பதை அறிகிறபோது, நாம் சற்று திடுக்கிட்டுக்கூடப் போகலாம்.

இதில்வரும் கதைகளில் சில சொல்லக்கூசும் கதைகளாக இருக்கலாம். நாம் பார்க்க மறுக்கும் அசிங்கங்களைக்கூட அதன் சில கதைகள் நமக்கு காட்டலாம். இதை வாசித்துவிட்டு, இதுவெல்லாம் எழுத வேண்டியவைகளாக என தூய்மைவாதிகள் கேள்வி எழுப்பலாம். ஆனால் இந்தச் சமூகம் ஏற்க மறுக்கும் வாழ்வைச் சொல்வதன் வழியாக, சரவணன் நீதியைப் பேசவே பிரயத்தனப்பட்டிருக்கிறார். தூய்மைவாதத்தை முன்னிறுத்தி மறுக்கப்படும் மனித முகங்களை ஏந்துவதினால், இப்புத்தகம் நமக்கு கசப்பைத் தரலாம். அதனால் ‘உண்மைகள் எப்போதுமே கசக்கும்’ என்கிற சொல்வடையை நான் இங்கு நினைவுகூற விரும்புகிறேன்.


இது உண்மைகளாக இருக்கும்பட்சத்தில்கூட, நம்மால் இதை இயல்பாக வெளியில் பேச இயலுவதில்லை. இதில்வரும் நபர்கள் நம்முடைய தெருவிலும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒரு குகைவாசியைப் போல, ஒளிந்துகொண்டிருக்கிறார்கள். நம்மால் இனம் காணமுடியாத அவர்களை, சரவணன் இழுத்து வந்து அடையாளப்படுத்தியிருக்கிறார்.
வெண்ணிற ஆடை எனும் இப்புத்தகம் கூறும், நவநாகரீக வாழ்வின் அடியில் புதையுண்டிருக்கும் நாற்றங்களை நம்மால் சுவாசிக்க முடியவில்லை. அது நம்மைத் திணறடிக்கிறது. திகைப்புறச் செய்கிறது. நம் நம்பிக்கைகளை அது பொய்யாக்குகிறது. மரத்திலிருந்து முறிந்துவிழும் கிளைகளைப் போல, அதன் ஒவ்வொரு கதைகளும் திடீரென்று திசை மாறி கலக்கமடையச் செய்துவிடுகின்றன. அதேசமயம் அதன் பக்கங்கள் ஒரு தொடர்வண்டியைப் போல அணிவகுத்துச் சென்று, நம்மை அயற்சியடையச் செய்யாமல் பயணிக்க வைக்கின்றன.
வெண்ணிற ஆடையில் ‘சொல்வதெல்லாம் உண்மை’.

-     பழனி ஷஹான்

நன்றி : புத்தகம் பேசுது இதழ், ஜனவரி 2017 

No comments:

Post a Comment