Monday, 7 July 2014

வெறி – ஆதிக்கத்தின் திரை கிழிப்பு



கடந்த 2012 நவம்பர்-7ம் தேதி, தருமபுரி மாவட்டத்தின், மூன்று கிராமங்களில் நிகழ்ந்த ஆதிக்க சாதி வெறித்தாக்குதல்களுக்கு ஆளான தலித் மக்களின் சோகக் காட்சிகள், புலம்பல் ஓலங்கள், மன வெதும்பல்களை ஆவணங்களாய் காட்சி படுத்தி உள்ளது, மருதம் கலைக்கூடம் சார்பாக, கு.க.பாவலன் ஆக்கத்தில் வெளிவந்திருக்கும் வெறி என்கிற ஆவணப்படம்.

தலித் சமூகத்தினைச் சார்ந்த இளவரசன் எனும் வாலிபர், திவ்யா என்கிற வன்னியர் சமூகப்பெண்ணை காதலித்து, திருமணம் செய்து கொள்கிறார். இதனைத் தொடர்ந்து, திவ்யாவின் தந்தை நாகராஜன் தற்கொலை செய்துகொள்கிறார் என்கிற மட்டில் எவ்வித ஆதாரமும் இன்றி கொலை செய்யப்பட்டு விடுகிறார். இந்த சம்பவங்களை வைத்து வன்னியர்களை தலித் சமூகத்தின் மீது திருப்பி விடுகின்றது, பாட்டாளி மக்கள் கட்சி. இதன் விளைவு, ‘நத்தம்காலனி, கொண்டாம்பட்டி, அண்ணா நகர்’ ஆகிய மூன்று தலித் கிராமங்களில் சுமார் 400 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டும், கடப்பாரைகளால் அடித்து உடைக்கப்படும், பாழக்கப்பட்டுவிடப்படுகிறது. இதன் உண்மைத் தன்மைகளை புலனாய்வு செய்து அப்படியே காட்சியாய் அளிக்கிறது ‘வெறி’

படத்தின் துவக்கத்தில், பாதிக்கப்பட்ட மூன்று கிராமங்களின் பெயர்களும், ஒவ்வோர் கிராமத்தில் சின்னா பின்னாமாக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கைகளையும் எழுத்துக்களால் ஓடவிடுகின்றனர். அதன்பின் பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட கிராமங்களில் நுழைந்து, அந்த வீடுகளையும், அங்குள்ள மக்களின் குமுறல்களையும் பதிவு செய்கின்றனர்.

அதில் ஒரு பெண் பேசுகையில்: ‘வந்தவர்கள் எங்களை மிகவும் கேவலமாக பேசியதுடன், எங்களின் வீடுகளை உடைத்து சேதப்படுத்தினர், ஒரு சிலர் பெட்ரோல் குண்டுகளை சுழற்றி சுழற்றி எறிந்தனர். இதற்கு முன்பாகவே அவர்கள் எங்களது வீட்டில் உள்ள பணம், நகை போன்றவைகளை கைப்பற்றிக் கொண்டனர், அதன் பின்னரே எரித்தனர்’ என்கிறார்.
இன்னொரு பெண் கூறுகிறார்: ‘அவர்களுக்கு குறி மனிதர்களில்லை. பணம், பொருள்கள்தான். அவைகளைத்தான் அவர்கள் சுருட்டினர். அதிலேதான் குறியாக இருந்தனர்’ என்ற வண்ணம் கூறினார்.

இப்படி பாதிக்கப்பட்ட குடும்பங்களிலுள்ளவர்களை பலரையும் கண்டு பேட்டி எடுத்துள்ளனர். இதுபோக அரசியல் பிரமுகர்கள், பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள் எனவும் பேட்டி கண்டு, பிரச்சனையின் ஆழத்தை எடுத்துரைக்கின்றனர்.

சம்பவம் நிகழ்ந்த பின்னர் அங்கு நேரடியாகச் சென்று தகவல்களைச் சேகரித்த எஸ்.டி.பி.ஐ- கட்சியின் மாநிலத் தலைவர் தெஹ்லான் பாக்கவி அவர்கள் பேசுகையில், “கிட்டத்தட்ட 10கோடி மதிப்பிலான பொருள்கள் சூறையாடப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார். இவரைத்தொடர்ந்து பெரியார் திராவிடக் கழகம் கோவை.இராமகிருஷ்னண் அவர்களும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களும் தங்களது கருத்துக்களை இதில் பதிவு செய்துள்ளனர். தலித் மக்களின் வீடுகள், பொருள்கள் எறிப்பு என்கிற அளவோடு நிற்க்காமல், அவர்களின் பள்ளிக் குழந்தைகளின் புத்தகங்கள் முதற்க்கொண்டு திட்டமிட்டு எரிக்கப்பட்டுள்ளன.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், தொல்.திருமாவளவன் அவர்கள் கேட்கிறார்: “நாகராஜனின் பிணம் ஊருக்குள் வைக்கப்படுகிறது, அவர் தற்கொலை செய்து இறந்தார் என்பது தனது மனைவிக்குக் கூட தெரியவில்லை, காவல்துறைக்கும் தெரியவில்லை, ஆனால் விஷமிகளுக்கு தெரிகிரது, அவர்கள்தான் கொண்டுவந்து அவரின் சடலத்தை ஊருக்குள் வைக்கின்றனர். அடுத்த இரண்டு மணி நேரத்திற்க்குள், ஒரு கும்பல் சாலையில் மரத்தை வெட்டிப் போடுகிறது, இன்னொரு கும்பல் வீடுகளைத் தாக்குகிறது என்றால், இது ஏதோ இரண்டு மணி நேரத்தில் நிகழ்ந்த்திட திட்டமா?” என்று கேட்டு இச்சம்பவத்தின் திட்டமிடுதலையும், நாகராஜனின் மரணத்திலுள்ள மர்மத்தினையும் கேள்விக்குள்ளாக்குகிறார்.

இதே போன்று, இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி, திரு.ஜி.இராமகிருஷ்ணன், திராவிடர் விடுதலைக் கழகம், திரு.கொளத்தூர் மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திரு.பேரா.தீரன், சுப.வீரபாண்டியன், பத்திரிக்கையாளர்.கவின் மலர், மேலும் திராவிடர் கழகம் ஐயா.கி.வீரமணி போன்றவர்கள் இதில் தங்களது கண்டங்களையும், எதிர்ப்புகளையும், பா.ம.க மீதான, இராம்தாஸ், காடுவெட்டி குரு மீதான பகிரங்கக் குற்றச்சாட்டுகளை முன் வைத்து கருத்து கூறியுள்ளனர்.

சோகமே காட்சியாய் நகர்கின்ற படத்தில், ஆங்காங்கே இராமதாஸ் அவர்களின் கோரப் பேச்சுக்களும் பங்கு கொண்டே நகர்கின்றது. இந்தச் சம்பவத்தின் முக்கியப் பிரச்சனையே வன்னியப் பெண்ணை, தாழ்த்தப்பட்ட ஒருவர் காதலித்து திருமணம் செய்துகொண்டதுதான். ஆனால் இது ஒன்று மட்டும்தான் சாதி கலப்புப் திருமணமாக நடந்திருக்கிறதா என்றால் இல்லை. இதே படத்தில் ஒரு காட்சி: ‘வன்னியர் சமூகத்தினை சர்ந்த சகோதரிகள் இருவர், தலித் சமூகத்தினை சார்ந்த சகோதரர்களை 22 வருடங்களுக்கு முன்பாக காதலித்து சாதி மறுப்பு திருமணம் புரிந்துள்ளனர், ஆனல் இன்றளவும் இவர்களுக்குள் எவ்வித பாகுபாடு இன்றியும் பேரன் பேத்திகளோடு வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் மகிழ்ச்சிகரமான வாழ்க்கை குறித்து அவ்விரு பெண்களுமே கூறி பதிவுறுகின்றனர்.

ஆனால் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் இவர்களின் வீடும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், ஒன்றரை வருடத்திற்கு முன்பாக வன்னியப் பெண்ணும், தலித் ஆண் ஒருவரும் காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களும் இந்தத் தாக்குதலில் பலி தீர்க்கப்பட்டுள்ளனர். ஆக சாதி மறுப்புத் திருமணங்கள், காதல் திருமணங்கள் நடந்து கொண்டுதான் உள்ளன. ஆனால் இதுதான் முதல்முறை போலும் அங்கொரு அரசியல் அரங்கேறியுள்ளது புரிய வருகின்றது. மேலும் உண்மையிலயே வன்னியர் சமூக மக்கள்தான் இதில் நேரடியாக கொதிப்படைந்துள்ளனர் என்றால், அவர்கள் பல வருடங்களுக்கு முன்பாகவே இப்படி கொதிப்படைந்திருக்க வேண்டும். நாகராஜ் போன்ற அப்பாக்கள் தற்கொலை செய்திருக்க வேண்டும். ஆனால் இளவரசன் – திவ்யா விவகாரம் மட்டும் விஸ்வரூபம் எடுத்ததிற்க்குப் பின்னால் ஒரு நுட்பமான அரசியல் உள்ளது அப்பட்டமாகின்றது. பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மட்டுமன்றி, எல்லா சமூக ஆர்வலர்களும், பொதுவுடைமைவாதிகளும் குறை சாட்டுவது பா.ம.க எனும் சாதிக் கட்சி மீதுதான்.
மருத்துவர் இராம்தாஸ் இப்படி ஒரு காட்சியில் கேட்கிறார்: “பா.ம.க-தான் செய்ததுனு உங்களுக்கு எவன்டா சொன்னது?” என்கிறார்.

அடுத்த காட்சியில் ஒரு பெண் விவரிக்கிரார்: “இதற்க்கெல்லாம் காரணம் பா.ம.க கட்சிக்காரங்கதான்” என்பதோடு அல்லாமல் அக்கட்சி சார்ந்த நபர்களின் பெயர்களையும் வரிசைப்படுத்திக் கூறுகிறார். அவர்கள்தான் தனது வீட்டை நாசமாக்கியது எனவும் கூறுகிறார்.

அதே சமயம், கொளத்தூர் மணி அவர்களும் இந்தப் பெண்ணின் குற்றச்சாட்டினை உண்மையாக்கும் வண்ணம், பா.ம.க மீது பகிரங்கக் குற்றம் சாட்டுகிறார்.
மேலும் இராம்தாஸ் ஒன்றைக் கூறுகிறார், “காவல்துறையினர் யாரும் வன்னியர்களுக்கு உதவவில்லை’ என்கிறார்.

இதே கருத்தினை அந்த பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு வந்த வெளியூர் உறவினர்கள் மறுத்து கூறுகின்றனர். காவல்துறையும், உளவுத்துறையும் வேடிக்கை பார்த்தனர் என்றும், இரண்டாயிரம் பேர் எவ்வித முன்னறிவுப்பு இன்றியும் கூட்டம் போட்டு திட்டம் தீட்டியது உளவுத்துறைக்கு தெரிந்தும் அவர்கள் ஏதும் செய்யவில்லை என்று அவ்வூரைச் சார்ந்த ஒருவரும் குற்றச்சாட்டினை முன் வைக்கின்றனர். அடுத்ததாக வன்னியர்கள் வீடுகளுக்கு காவல்துறியினரின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டிக் காட்சி படுத்தியுள்ளனர்.

மேலும் வன்னிய சமூகத்தினரை உசுப்பேற்றியும், காதலுக்கு எதிராக இராம்தாஸ் வைக்கும் சூழுரைகளையும் படம் விட்டுவைக்கவில்லை. அதேசமயம், ‘வன்னியன் கூட்டிக் கொடுப்பவன் இல்லை’ என்கிற சொல்லால் ஏனைய பிற எல்லா சமூகங்களையும் இழிவுபடுத்தும் இராம்தாஸின் வக்கிரங்கள் படம் பிடிக்கப்பட்டுள்ளன.
பத்திரிக்கையாளர்.கவின்மலர், இச்சம்பவம் பற்றி களத்தில் சேகரித்த குறிப்புகளோடு கூறுகிறார்: “ இது ஊடகங்களில் சரியாக பதிவிடவில்லை. அரசைப் பொறுத்தவரை ஒரு மெத்தனப் போக்குதான் நிலவுகிறது. பாதிக்கப்படவர்களின் வீடுகளைக் காணுகிர போது, ஒன்று புரிகின்றது தலித்துகளின் வளர்ச்சி பொறுக்காமையினால் ஆதிக்க சக்திகள் அட்டூழியம் செய்துள்ளனர்” என்ற வண்ணம்.

தலித் மக்களின் வீடுகள் உடைப்பு, கடைகள் உடைப்பு, அவர்களின் பொருள்கள் உடைப்பு, பறிப்பு, ஒரு அம்மா தனது மகனின் புதிய இருசக்கர வாகனம் உடைந்து கிடைப்பதனை காட்டுகிறார், மிகவும் கடினப்பட்டு சேகரித்த பணத்தில் வாங்கியது எனவும், தனது மகனின் மனக் கஷ்டத்தினை தானே பதிவு செய்கிறார், தலித் சமூகம் என்பதனால் ஒரு காவல்துறையினர் வீடும் தாக்கப்பட்டுள்ளது, பள்ளிக் குழந்தைகளின் புத்தகங்கள் எரிப்பு, தரையில் உள்ள பொருட்கள் அல்லாமல், மேலே உள்ள மின்விசிறியினைக் கூட முறித்து உடைத்துள்ளனர், இச்சம்பவம் குறித்து அப்படத்தில் இப்படி கூறப்படுகின்றது, ‘உழைத்து களைத்துப்போன மக்கள் காற்று வாங்குவது கூட பொறுக்கவில்லையோ” என்று. இப்படி நீளும் ஆதிக்கத்தின் அட்டூழியங்கள் தொடராய் ஓடுகின்றது.

இப்படி முன்னரே திட்டமிட்டு, தலித் மக்களின் வீடுகள் சூரையாடப்பட்டுள்ளன. அதற்கு திவ்யாவினை பகடை ஆக்கியுள்ளனர். திருமாவளவன் இப்படி கூறுகிறார்: “பெண்ணை வைத்து நாடகமாடப்பட்டுள்ளது. இது மிகப்பெரும் பெண்ணுரிமை மீறல், ஆணாதிக்க வெறி” என்கிறார். திவ்யா இளவரசனோடு காதலித்து திருமணம் செய்து கொண்டாலும், பின்னாளில் அவர், இளவரசனை விட்டுச் செல்வதும், தனது அம்மா உடன் இணைந்து கொள்வதற்கும் உள்ளால் ஏதோ ஒன்று உள்ளதாகத்தான் தெரிகின்றது. சென்ற டிசம்பர் மாதம் சம்நிலைச் சமுதாயம் இதழில், மீனா அவர்கள் எழுதிய, தருமபுரியின் தற்போதையச் சூழல் குறித்த கட்டுரையில் அவர் ஒன்றை குறிப்பிட்டுள்ளார், ‘திவ்யா இளவரசனின் வீட்டை விட்டுச் சென்றது அங்குள்ளவர்களுக்கு தெரியாது. ஏதோ போன் வர பேசியிருக்கிறார். அதன்பின்னர் வீட்டின் பின்புறம் சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வரவே இல்லை. பின்புதான் விசயம் தெரிந்துள்ளது, தனது அம்மா பின்னால் வந்து ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளது. திவ்யாவிற்கு போன் செய்த இளவரசனிடம், அவளது அம்மா இப்படிச் சொல்லியிருக்கிறார், என் மகள் சேர வேண்டிய இடத்திற்கு வந்துவிட்டாளென்று” இப்படியாக இளவரசன் வீட்டார் தெரிவித்ததாக மீனா குறிப்பிட்டுள்ளார். இது ஒன்றே தெளிவுபடுத்துகிறது, இளவரசனின் மரணமும், வன்முறை வெறியாட்டங்களுக்கும் திவ்யா பயன்படுத்தப்பட்டிருக்கிறார் என்பது. இவரை ஏதோ அரசியல் தனம் இயக்கியுள்ளது. பலரின் கூற்றுப்பாடி குறை காணப்படும் பா.ம.க அந்த சக்தியாக இருக்கலாம் என்ற சந்தேகமும் இயல்பாக எழுகின்றது.

திராவிடர் கழகத் தலைவர், கி.வீரமணி அவர்கள் இப்படி கூறுகிறார்:
“இது ஏதோ ஆதிக்க சக்திகள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கை இல்லை. இது பெரியாரியவாதிகளுக்கும், பொதுவுடைமைவாதிகளுக்கும், மார்க்ஸியவாதிகளுக்கும், சாதியினை எதிர்ப்பவர்களுக்கும், சமத்துவத்தினை வேண்டுபவர்களுக்கும், அம்பேதகாரியவாதிகளுக்கும் விடப்பட்டுள்ள சவால்” என்றும் பதிவு செய்துள்ளார்.
ஐயா.வீரமணி அவர்கள் கூறியுள்ளதினை அணு அளவும் பிசகாமலும், மாந்த நேயம் உள்ளவர்களிடத்தில் நியாயம் வேண்டியும், மனித குலத்திற்க்கு எதிரான சவால் என்பதனையும் இந்த ஆவணப்படம் விவரித்து காட்சிப்படுத்தியுள்ளது. 
இப்படி முழுக்க, முழுக்க தாழ்த்தப்பட இனத்தின் மீது விரிக்கப்பட்ட வன்கொடுமைகளையும், எரித்து நாசப்படுத்திவிட்டு அதனை பெருமையாகக் கூறும் சாதிய அரக்கர்களின் கர்ஜிப்புகளையும் வெளிப்படுத்தியுள்ள இந்த ஆவணப்படம், ஆதிக்க சக்திகளின் திரைக்கிழிப்பாக, முகமூடிகளை உறித்தெடுப்பதாக உள்ளது. இந்த உன்னத பணியினை செய்திட்ட தோழர்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும். மனித நேயத்தினை காத்திட நினைக்கும் பலரும் பார்த்து வைத்துக் கொள்ள வேண்டிய காட்சிப் பதிப்பு, “வெறி”.

நன்றி: கீற்று இணையதளம்
இணைப்பு தளம்:http://keetru.com/index.php/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/26048-2014-01-23-16-54-39


- பழனி ஷஹான்

‘மஞ்சப்பை’ பேசும் அரசியல் – திரை விமர்சனம்



திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில், ராகவன் இயக்கத்தில், ராஜ்கிரன்,விமல்,லட்சுமி மேனன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் மஞ்சப்பை.
பெரும்பாலும் கதை அறியப்படுவது, தாத்தா பேரனுக்கு இடையே நிகழும் பாச நெறி என்பதுவே. தனது தாய், தந்தையை இழந்த கதாநாயகனான விமல், தனது தாத்தாவான ராஜ்கிரனால் வளர்க்கப்பட்டு, உயர்கல்விகள் கற்று சென்னையில் ஒரு பெரிய ஐ.டி கம்பெனியில், நல்ல சம்பளம் பெறும் நபராக வலம் வருகிறார். தனது உழைப்பினால், ஒரு புரோஜக்ட் மூலமாக அமெரிக்கா செல்லும் வாய்ப்பினையும், மேலும் அங்கேயே தொடர்ந்து வாழவும் கம்பெனி மூலமாக விமல் தெரிவு செய்யப்படுகிறார். இன்னும் மூன்று மாதங்களில், அமெரிக்கா சென்று பின்னர் அங்கேயே தங்கிவிட நேரிடும் என்பதனால், சென்னையில் இருக்கும் காலம் வரை தனது தாத்தாவோடு மகிழ்ச்சியாய் இருக்க எண்ணி அவரை சென்னைக்கு வரவழைக்கிறார்.
கிராமத்தில் வளர்ந்து, வாழ்ந்த தாத்தாவிற்கு பெருநகர வாழ்க்கை பற்றி ஏதும் தெரியாததாலும், இவரின் யதார்த்த நடைமுறைகளால் அப்பார்ட்மெண்ட் வாசிகள் அல்லலுறுவதும், கதாநாயகியான லட்சுமி மேனன் வெறுப்பதும் இதற்க்காய் காதலர்கள் பிரிவதும் தொடர்வாய் நடக்கும் விடயங்களாக அமைகிறது. பல பிரச்சனைகள் தொடர்ந்த போதும், விமல் தனது தாத்தாவினை ஒரு துளியும் கோபித்துக் கொள்ளாது கடந்து செல்கிறார். இறுதியாக தனது அமெரிக்கா செல்வதற்க்கான விசா மறுக்கப்படுகிறது, அதற்கு காரணம், தனது தாத்தா அமெரிக்க கொடியினை அவமதித்தாகச் சொல்லப்படுகிறது. இதனால் கடும் வெறுப்படைந்த விமல் சோர்வாய் வெளியேற, அந்நேரமும் கூட ராஜ்கிரன் ஒரு நபருடன் சண்டையிட்டுக் கொண்டிருக்க அதனை தடுத்து, தனது தாத்தாவின் மீது கடும் கோபத்தால் திட்டிவிடுகிறார். இதன் பின்னர் தனது காதல் என்ன ஆனது, அமெரிக்கா செல்கிறாரா இல்லையா, தனது தாத்தா என்ன ஆகிறார் போன்றவைகள்தான் கதையின் இறுதிகள்.
பெரும்பாலும் இது தாத்தா பேரன் கதையாக பலராலும் பார்க்கப்பட்டாலும், இதில் பார்க்கப்படாத, பேசப்படாத சில அரசியல்களை நாம் இங்கு கவனிக்க வேண்டியுள்ளது, அல்லது சொல்லியாக வேண்டியுள்ளது. இக்கதையினை வேறு கோணத்தில் ஆராய்ந்தால், அமெரிக்கா செல்கிறாரா இல்லையா என்பதும் கூட கதையின் இன்னொரு சாரமாக உள்ளது. காதலில் வெல்கிறாரா இல்லையா என்பது கூட ஏதோ சம்பிரதாயச் சடங்குதானே தவிர அது கதையில் பெரும் அழுத்தமே இல்லை. ஏதோ கதையை இழுக்க வேண்டும் என்பதற்க்காக ஏற்ப்படுத்தியுள்ள காட்சிகள்தான் காதல் காட்சிகள். ஆகையால் அமெரிக்க பயணத்தை மட்டுமே அழுத்தமாகவும், அரசியல் ரீதியாகவும் பார்க்க வேண்டியுள்ளது.
முதலில் அமரிக்க மோகம் என்பது, தனது காதலையும், தன்னை வளர்த்து ஆளாக்கிய தாத்தாவினையும் வெறுக்க வைக்கிறது. இது இன்று பெருவாரியான நகரவாசிகளிடம் மேலோங்கியுள்ள மோகம், இதனால் வரும் இழப்புகளை மிக அழகாய் இறுதிக் காட்சியில் விளக்கியுள்ளார் இயக்குனர் ராகவன்.
ஒரு காட்சி இப்படி வருகிறது, “அமெரிக்கா செல்வதற்க்காக வேண்டி நேர்முகத் தேர்விற்க்காய், சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்பு இடப்பட்டுள்ள சாலையோர தடுப்பில் வரிசையில் நிற்க்கிறார் விமல். அப்பொழுது அவரின் தாத்தா கேட்பது, ‘ஏன்ப்பா அமெரிக்கா போறதுக்கு பேச வந்திருக்கேனுட்டு, இப்புடி ரேசன் கடையில நிற்க்கிறாப்புல நிற்க்கிற, என வினவுகிறார்” அடுத்த காட்சிகளில் பேரன் சிரித்துக் கொண்டே வரிசையில் முன்னேறுகிறார்.
இந்தக் காட்சியினைக் குறிப்பிடுவது எதற்க்கெனில், இதுதான் இன்றைய நமது நிலை. மிகவும் செல்வந்தர்கள், நமது மண்ணில் உயர்வுடையவர்கள், மக்கள் மத்தியில் மதிப்பு பெற்றுள்ளவர்கள் என எவராயினும், அவர்களுக்கு நமது மண்ணிலயே நிகழ்த்தப்படும் மிகப்பெரும் அவமானம்தான் இது. மிகவும் உயர்வாகச் சொல்லப்படுகிற, அதிக செலவீனகள் செய்திட்டு செய்கின்ற பயணத்திற்கு நாம் ஒப்புதல் பெற வெயிலில் வரிசை கட்டி நிற்க்க வேண்டியுள்ளது. நமது மண்ணில் தங்கள் அலுவலகத்தினை அமைத்துக் கொண்டு, அவர்கள் நம்மை நடத்தும்விதம் மிகவும் இழிவானச் செயல். இதனை நாம் பலவாறாக கண்டு கொண்டுதான் உள்ளோம். என்ன செய்ய, நாம் அங்கு சென்றாக வேண்டுமே என்கிற நிலைக்கு தள்ளப்பட்டு, நவீன கால அடிமைத்தனத்தை நாகரீகப் போர்வையில் மறைத்துக் கொள்கிறோம். இதுவே ஒரு அமெரிக்கர்க்கு அவர்களின் நாட்டில் நாம் செய்திருந்தால், அல்லது நம் மண்ணில் இப்படி அவர்களைச் செய்திருந்தால், கூக்குரல்கள் சர்வதேசப் பிரச்சனையாக உருமாறுமல்லவா?
படத்தில் இக்காட்சிக்கு அடுத்தாக இன்னொன்று வருகிறது, “அமெரிக்கத் தூதரகத்தின் முன்பு உயரமாக பறக்கவிடப்பட்டிருக்கும் அமெரிக்க கொடியினை கண்டதும், ‘வெள்ளையனே வெளியேறு’ என முழக்கமிட்டும், அதனை கீழே இறக்கும்படியும் காவலாளர்களிடம் ராஜ்கிரன் சண்டையிடுகிறார். பிறகு இதற்க்காய் விமலும். தனது தாத்தாவும் கைது செய்யப்பட்டு ஜீப்பில் ஏற்றப்பட்டு செல்லும் பொழுது, ராஜ்கிரன் சொல்கிறார், இப்படித்தான் ஆரம்பிக்கும் அப்புறம் நம்மளையே அடிமையாக்கிவிடுவார்கள் பிரிட்டிஷ்காரங்க, நாம எவ்வளவு கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்கியிருக்கிறோமென சொல்ல, ஐய்யோ தாத்தா இது பிரிட்டிஷ் கொடி இல்லை, இது அமெரிக்க கொடி என விமல் சொன்னது, பிரிட்டிஷ்க்காரனானலும், அமெரிக்கானாலும் அந்நியன்தானே என திரும்ப விமலிடம் கேட்க அந்த கேள்வியோடு காட்சி முடிக்கப்பட்டுவிடுகிறது.
இங்கு நாம் கவனிக்க வேண்டியது இந்தக் கேள்வியைத்தான். அதனால்தான் என்னவோ இந்தக் கேள்வியோடு காட்சி ஒரு அழுத்தத்தினைக் கொடுத்திட்டு அப்படியே நிற்க்கிறது. இது உண்மைதானே, பிரிட்டிஷ் ஆனாலும் அமெரிக்காவானாலும், அந்நிய நாட்டுக்காரர்கள்தானே? இதில் மாற்றேதும் உண்டோ?
மேலும் இப்படித்தான் எல்லாம் ஆரம்பமாகும் பிறகு நாம் அடிமையாக்கப்படுவோம் என்பதனையே வசனத்திலும் சொல்லிவிடுகிறார் ராஜ்கிரன். இதுவும் உண்மைதான், அதேசமயம் நமது நாடு அடுத்து யாரின் கீழ் அடிமைப்பட்டும், அடிமைப்படவும் உள்ளது என்பதனை சூட்சகமாக சொல்ல முனைகிறது இக்காட்சி. இப்படித்தான் கிழக்கிந்திய கம்பெனி மூலம் தனது கூடாரத்தை இங்கு கட்டியது பிரிட்டிஷ். இப்போது அதனையே கார்ப்ரேட்டுகள், பன்னாட்டுக் கம்பெனிகள் எனும் பெயரில் நவீன கிழக்கிந்திய கம்பெனிகளாக அமெரிக்கா தனது மூக்கை இந்தியா எனும் கூடாரத்திற்குள் நுழைத்து அடுத்த கட்டங்களை நகர்த்தியும் விட்டது. இனி கூடாரத்தை (இந்தியாவை) கபளீகரம் செய்வதுதான் மீதம். பிரிட்டிஷ் வணிக வலையைத்தான் அமெரிக்காவும் கை கொண்டுள்ளது. தனது யுனைடட் ஃப்ரூட் நிறுவனம் மூலம் லத்தீன் அமெரிக்காவினையே தனது கைக்குள் அமெரிக்க வைத்தது, வைத்துள்ளது எல்லாம் உலகமறிந்தது. வியாபார வலை காலாவதியானால், அடுத்து அது பேராயுதம் எனும் குற்றச்சாட்டை வீசி, தாங்கள்தான் உலகத்தின் மீட்பர் எனவும், கட்டப்பஞ்சாயத்து செய்கிறேனென இறங்கி ஈராக், ஆப்கானிஸ்தானை அழித்ததினைப் போல அழிக்கவும் செய்யலாம். திரிகோணமலையை கைப்பற்றியுள்ளதின்படி பார்த்தால் அதன் முதல் இலக்கு தமிழகமாகத்தான் இருக்கிறது எனபது புலப்படும். இப்பொழுது பொருளாதார மேம்பாட்டுத் திட்டமென, அழிவை அழகாய் காட்டிக் கொண்டுள்ளனர், மீத்தேன், கூடங்குளம் அணு உலை, ஸ்டார்லைட் என நீளுகிறது அழித்தொழிப்பு. இதில் நாம் தெளிவு பெற்று தேசியப் போராட்டத்தில் இறங்கினால் நம்மை மிகச் சுலபமாக ஒடுக்கத்தான் திரிகோணமலையை தெரிவு செய்து கைவசப்படுத்தியுள்ளது அமரிக்கா. அட இது என்னப்பா, இந்தியாவிற்கு கீழாகத்தானே நாம் இருக்கிறோம், ஆனா அமெரிக்கா, அமெரிக்கா எனச் சொல்வதைப் பார்த்தால், யார் நம்மை ஆள்கிறார்கள் என்பது கேளிக்கையாக தோன்றலாம். நம்மை ஆள்வது இந்தியாதான், இந்த பொம்மைக்கு சாவி கொடுப்பது அமெரிக்கா, இந்த அமெரிக்காவை அசைப்பது இஸ்ரேல் எனது இது ஒரு உலக நெட்வொர்க். கவலைப்பட வேண்டாம் நம்மை அழித்தப் பிறகு அவர்ளின் அடுத்த இலக்கு மொத்த இந்தியாவும்தான். அப்பொழுது எட்டப்பனைப் போல, நமது ஆட்சியாளர்கள் அமெரிக்காவின் காலில் விழுந்து கும்பிட்டு பிழைத்துக் கொள்வார்கள், இப்பொழுதும் அப்படித்தான் உள்ளது.
சரி இதெல்லாமுமே படம் சொல்ல வருகிறதா என்றால், அப்படிச் சொல்வதற்க்கில்லை. இருந்தாலும் அக்காட்சியின் நீட்சியை தொடர்ந்து ஆய்ந்தால் இதெல்லாம் புலப்படும்.
இப்படி அமெரிக்க அரசியல் ஒருபுறமும், அதேசமயம் ஒருபுறம் ஐ.டி கம்பெனிகளின் (இவர்களும் அமெரிக்க கைப்பாவைகள்தானே!) அரசியலும் இங்கு பேசப்படுகிறது.
ஒரு காட்சி, அமெரிக்கா செல்வதற்க்காக இரவு முழுவதும் உறங்காது தனது புராஜக்ட்டை மடிக்கணினியில் முடித்துவிட்டு அதே களைப்போடு உறங்கிப் போய்விடுகிறார் விமல். காலையில் தனது தாத்தா விமலின் அயற்சியை மனதிற்க் கொண்டும், அதே சமயம் லேப்டாப்பினை தோசை செய்யும் மின்சார கருவியென (டிஸ்டர்) நினைத்து, தான் கடற்க்கரையில் இதனை பேரனிடம் கேட்டதினால் வாங்கி வந்திருக்கிறாரென நினைத்துக் கொண்டு, அதனை எடுத்து கேஸ் அடுப்பில் வைத்துவிடுகிறார். பின்னர் அது தீயினால் உருகி வெடித்து விடுகிறது. இதனை அறிந்த விமல் அதிர்ந்து போய், இதே நிலையோடு, அலுவலகத்திற்குச் சென்று தனது நிலையை விளக்குகிறார். ஆனால், அவைகளை ஏற்க்காது அதிகாரி தன்னை ‘வேஸ்ட்’ என திட்டி அனுப்பிவிடுகிறார். அந்த புராஜக்ட்டை வேறொருவரிடமும் கொடுத்துவிடுகிறார். அப்பொழுது விமல் கதாநாயகியிடம் இப்படி சொல்கிறார், ‘இத்தனை நாள் ஜீனியஸ்னு தூக்கி வச்சு கொண்டாடினானுக, சின்னதா ஒன்னு நடந்ததும் கசக்கி எறிந்த்துட்டானுக’ என வசனமிடுகிறார். இதுவும் நாம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். நாம் எப்படி நவீன காலங்களில், நமது இளைஞர்கள், ஐ.டி மோகத்தால் கொத்தடிமைகளாக உள்ளனர் என்பதனையும் இது குறிக்கிறது. பின்னர் கதாநாயகன் கெஞ்சிக் கெஞ்சி வேறொரு மடிக்கணினி மூலம் அதனை முடித்துக் காட்டுகிறார். அப்பொழுதும் இறுதிவரை மறுக்கப்பட்டு, வேறு நபர் இந்த புராஜட்டை முடிக்க முடியாமல் கால அவகாசம் கேட்கையில் அவரை உடனே தூக்கி எறிந்துவிட்டு அது மீண்டும் கதாநாயகனுக்கு வருகிறது.
இப்படி படத்தில் ஆங்காங்கே ஆழமான சில அரசியல்களை அறிந்தோ, அறியாமலையோ இயக்குனர் ராகவன் வைத்துள்ளார். இதுதான் இவரின் முதல் பெரியதிரை என்பதினாலோ என்னவோ, நல்ல கதையினை கொடுத்திருந்தும், திரைக்கதையில் சில இடங்களில் சறுக்கி இருக்கிறார்.
மூன்று முதன்மை பாடல்களும், ஆங்காங்கே சிலவரிப் பாடல்களும் படத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் பாராட்டிற்க்குறியது, பாடல்களில் இல்லாத ஆபாச நடனமும், நிகழ்கால சினிமாக்களில் வலம் வருவதைப் போன்ற மசாலாப் பாடல்களும் இல்லாதது. ஆபாசம் என்பது இல்லாமல் படத்தை வடிவமத்திருந்த அதே வேளையில், இரண்டு முத்தக் காட்சிகளை வைத்து கொஞ்சம் சறுக்கிவிட்டார். லட்சுமி மேனனோ முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டேனென சூளுரைத்து, பின்னர் சறுக்கிய நடிகைகளின் வரிசையில் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் ஒரு காட்சியும், இதில் இரு காட்சியிலும் நடித்து சேர்ந்துவிட்டார். விமல் தனது இயல்பான நடிப்பிலிருந்து விலகியிருந்தாலும், கதைக்கேற்ற இடத்திற்கு பொருந்தியிருக்கிறார்.
என்னதான் கிராமத்தான் என்றாலும், காரை தள்ளி தனது பலத்தைக் காட்டி, கார் உடைந்ததினை பொருட்படுத்தாது கடப்பது, வேப்பங்குச்சி உடைப்பது, லேப்டாப்பை அடுப்பில் வைப்பது போன்ற சில காட்சிகள் கொஞ்சம் அதிக வர்ணனை என்றுதான் சொல்ல முடியும். இன்னும் சிலவற்றைப் பேசலாமெனினும் அவைகள் புளித்துப் போன சினிமாக் காட்சிகள் என்பதனால் தேவையற்றது என்றே நினைக்கிறேன்.
அமெரிக்க அரசியல், ஐ.டி அடிமை வாழ்வு, பெருநகரத்தில் மறந்து போன அல்லது மறுக்கப்பட பந்த,பாசம், காதல் வசத்தால் அப்படியே மதி மயங்காது தன்னை வளர்த்த தாத்தா-தான் முக்கியமென நவீன காலத்து நகர மோகக் காதலை சற்று உரசிப் பார்ப்பது அல்லது எடுத்துப் பேசுவதென படத்தில் இடம்பெற்றுள்ள சமூகக் கருத்துக்கள் அருமை.
தனது முதல் படத்தில் உள்ள இந்த நிலைகள் தொடர்ந்து வரவேண்டும் என்பதனை வலியுறுத்தி, இப்படத்திற்க்கான பாராட்டுக்கள் இயக்குநர் ராகவனுக்கு!

நன்றி: சிறகு வார இதழ்
இணைப்பு தளம்: http://siragu.com/?p=14281


தோழமையுடன்
- பழனி ஷஹான்

பாலைவனமாகும் காவிர் டெல்டா – மீத்தேனின் அழிப்பு அரசியல்



நிலத்தின் அடி ஆழம் வரை, ஆழ் துளைகளிட்டு, கிணறுகள் அமைத்து, பாறைகளுக்கிடையிலும், நிலக்கரிகளுக்கிடையிலும் இருந்து மீத்தேன் எனும் வாய்வினை எடுத்து வியாபாரம் செயலை, பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் எனும் அடிப்படையில் கடந்த திமுக ஆட்சியில், குஜராத்தின் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனத்திடம் ஒப்பந்தம் பதிவாகியது. இது தேர்ந்தெடுத்த இடம் தமிழகத்தின் நெற்க்களஞ்சியமான காவிரி டெல்டா பகுதிகளைத்தான். இந்த அழிவுப் பொருளாராதாரத் திட்டத்தினை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் தாய் தமிழகத்தில் இன்றும் நிகழ்ந்து கொண்டுள்ளது. இது ஒரு மக்கள் விரோத, விவசாய அழிப்புச் செயலென, டெல்டா வீதிகளில் போராடிய நிலையிலேயே தனது உயிரை இழந்தார், இயற்கை வேளாண் விஞ்ஞானி.நம்மாழ்வார் அவர்கள்.
இந்த மீத்தேன் குறித்தும், அதனின் அபாயங்கள் குறித்தும், இதனின் தமிழர் அழிப்புச் செயல்களை விளக்கியும் என மீத்தேனின் அழிப்பு அரசியலை தோலுரிக்கிறது, நிமிர் வெளியீடாக, மே-17 இயக்கத்தின் தயாரிப்பில், சரவணன் தங்கப்பாவின் இயக்கத்தில் வெளிவந்துள்ள, ‘பாலைவனமாகும் காவிரி டெல்டா’ எனும் ஆவணப்படம். இது சமீபத்தில் தஞ்சையிலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில், பழ.நெடுமாறன் அவர்களின் தலைமையில் வெளியிடப்பட்டது.

போராட்டக் களத்தில் உயிர் துறந்த போராளி.நம்மாழ்வார் அவர்களுக்கு இதனை சமர்ப்பித்தலோடு படம் ஆரம்பமாகி, போராட்டக் களத்தில் நம்மாழ்வார் அவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு அளிக்கும் ஒரு காணொளியோடு படம் நிறைவை பெற்றுள்ளது.

“நீரின்றி அமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே!
நீரும் நிலனும் புணரீ யோரீண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே”
எனும் புறநானூற்று வரிகளோடு தனது திரையை விரிக்கிறது படம். முன்னாள்.பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் மீத்தேன் திட்டத்தை மறைமுகமாகச் சுட்டிக் காட்டும் ஒரு காணொளியும், குஜராத் ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனத்தின், பிரசாந்த் மோடியின் இத்திட்டம் குறித்தான பேச்சோடும் படம் மீத்தேனின் செயல் திட்டங்களையும், இன்னபிற முழுமைகளையும் பேசத் தாவுகின்றது.

நிலக்கரி இடுக்கிலிருந்து மீத்தேன் எடுக்கும் ‘சி.பி.எம்’ முறைதான் இங்கு பயன்படுத்தப்படப் போகின்றது. முதலில் 6000-அடிகளுக்கு ஆள் துழைகளிட்டு, அதனிலிருந்து பல்லாயிரம் அடிகளுக்கு பக்கவாட்டுத் துளைகளை இடுவர். இந்த துளைகளின் வழியே நச்சு இரசாணயங்களை மிக அதிக அழுத்தத்தோடு செலுத்தி, பாறைகளை வெடிக்கச் செய்து, அதிலிருந்து வெளிப்படும் மீத்தேன் இந்த இரசாயணங்களோடு கலந்து குழாய் வழியே வெளியேறும். இதிலிருந்து மீத்தேனை பிரித்து எடுப்பர்கள். என்ற வண்ணம் இந்த திட்டத்தின் செயல் வடிவத்தினை சற்று சுருங்க்ச் சொல்லிவிட்டு அப்படியே இதனின் 
அபாயங்களை மெல்ல மெல்ல விவரிக்கின்றது திரை.

கும்பகோணம் வட்டத்தில்: கொத்தங்குடி, பெரப்பட்டி, வண்வாஞ்சேரி, திருச்சேறை, துக்காச்சேரி, ஆமங்குடி, விட்டலூரும்,
குமாரமங்கலம் வட்டத்தில்: நாச்சியார் கோவிலும்,
திருவிடை மருதூரில்; மஞ்சமல்லி, நரசிங்கம்பேட்டையும்
ஒரத்தநாட்டு வட்டத்தில்: குலமங்கலத்திலும், குடவாசலில்;குடவாசல்,சித்தாடி,மேலப்பாளையம் மலுவச்சேரி, ஓகை, கீழப்பாளையூர், கமுகக் குடி, பத்தூர், மஞ்சக்குடி, வடவேர், செல்லூரிலும்,
வலங்கைமானில்; சாரநத்தம், மாணிக்கமங்கலம், கொட்டையூர், அனுமந்தபுரம், கீலவடமல், ராசேந்திர நல்லூர், நார்த்தாங்குடி, கோயில்வெண்ணி, ஆதனூர் கண்டியூரிலும், நீடாமங்கலத்தில்; பூவனூர், கீழவாந்தச்சேரி, அரிச்சபுரம், அனுமந்தபுரம், அன்னவாசல், காளாச்சேரியிலும், மன்னார்குடி வட்டத்தில்; கர்ணாவூர், வடபாதி, சேரன்குளம், மன்னார்குடி, அரவந்தூர், சவளக்காரன், மூவர் கோட்டை, பருத்திக்கோட்டை, களஞ்சிமேடும் ஆகியன பகுதிகளில்தான் மீத்தேன் எடுக்கும் திட்டம் முதலாவதாக செயல்பட உள்ளதாகவும். இது தற்சமயம் ஐம்பது கிணறுகள் எனவும், வருங்காலத்தில் இரண்டாயிரம் கிணறுகள் தஞ்சை டெல்டா பகுதிகளில் உருவாக்கப்பட உள்ளதாகவும் புள்ளி விவரங்களை விவரித்து ஆவணப்படுத்துகிறது காட்சிகள்.

இதற்காக காவிரி மட்டுமில்லை, ஒட்டுமொத்த தமிழகத்தின் நீர் நிலையங்களிலிருந்தும் நீர் உறிஞ்சப்படும் எனவும், இது தொடர்ந்தால் நீர் ஆதாரம் முற்றிலும் அழிந்துபோகும் அபாயம் உள்ளதென நீரின் அழிவை பலவிதமான காட்சி ஆதாரங்களோடு சொல்லப்படுகிறது. ஒரு மீத்தேன் கிணற்றிலிறுந்து மீத்தேன் எடுக்க மட்டும், 400-டேங்கர் லாரி மணலும், நீரும் வேண்டுமெனவும், இவைகளை எப்படி டெல்டா பகுதிகளில் மட்டுமே எடுக்க முடியுமெனவும், ஒன்றிற்கே இந்நிலை எனில் இரண்டாயிரம் எனில் தாய் தமிழக இருக்குமா என்கிற நியாயமான கேள்விகளையும் படம் முன்வைக்கிறது. நீருக்கு இந்நிலை எனில் மணலுக்கு என்ன நிலை என விளக்குகின்றது. இதுமட்டுமல்லாது மீத்தேன் எடுக்க வேண்டுமெனில் தொடர்ந்து நிலத்தடி நீரை வெளியேற்றியாக வேண்டும் என்பதனால், நிலத்தடி நீர் குறைந்து தரை கீழிறங்கும் அபாயமும், இதன் எதிர்காலம் கட்டிடங்கள் இடிவும், கடலோர கிராமங்கள் கடலில் கலக்கும் கோரமும் நிகழும் எனவும் எச்சரிக்கிறது ஆவணமாக.

மீத்தேன் எடுத்து நிலைத்தையும், மண்னையும் பாழ்படுத்தி பாலைவனமாக்குவது ஒருபுறமெனில், இதில் பயன்படுத்தப்பட்ட நச்சு கழிவுகளை வெளியேற்றி எப்படி பாதுக்காக்கப் போகிறார்கள் என்ற கேள்வியோடு, இதற்கு இதுவரை எந்த நாடும் சரியான வழிமுறையை கையாளவில்லை எனவும், இதுபோன்ற நச்சுக்கள் நீர் ஆதாரங்களோடு கலந்து, மக்கள் பயன்பாடுகளுக்கு குழாய் வழியே வெளியேறி பலவிதமான அழிவுகள் நிகழும் எனவும் சொல்கிறது. இப்படித்தான் அமெரிக்காவில் ஒருநாள் அதீத மழை பெய்து இந்த நச்சுக் கழிவுகளெல்லாம், பலவாறு கலந்துவிட்டன. இதனால் அங்கு பலருக்கும் புற்று நோய், பிறவிக் கோளாறுகள் தொற்றிக் கொண்டன. இந்த மீத்தேனானது எளிதில் தீப்பற்றக் கூடையது. ஆகையால் மக்களின் பயன்பாட்டு நீரில் இது கலந்தால், நிலைமை என்னவாகும் என்ற வினவலோடு, மீத்தேன் கலந்த நீரில் தீப்பற்றி எரிவதை சோதனை செய்து நிரூபிக்கும் காட்சிகள் திரையாகின்றன.

இப்படி மணல், நீர் இரண்டையும் கடந்து, இத்திட்டத்திற்க்காக நிலத்தின் குறுக்கே பதிக்கப்படும் குழாய்களைப் பற்றி சொன்னால் அதன் அபாயம் நீளும் எனவும், ஒருமுறை தனது நிலத்தில் குழாய் பதிக்க அனுமத்திதுவிட்டால், அப்புறம் ஆயுள் முழுவதும் குழாயை நிலத்தார்தான் பாதுகாக்க வேண்டும், இதில் சிறு கோளாறு என்றால் கூட அத்தனை பழியும் நிலத்தில் உடைமையாளர் மீது சுமத்தப்பட்டு ஆயுள் தண்டனை முதல் தூக்குவரை இடுவதற்கு சட்டமசோத உள்ளதாகவும் காட்சிகளில் எடுத்துப் பேசப்படுகிறது.
இதெல்லாம் மீத்தேன் திட்டத்தின் அபாயங்களாகப் பார்க்கப்பட்டாலும், 

இவைகளையெல்லாம் இந்த அரசு ஏன் ஆதரிக்கின்றது என்கிற பார்வையை இன்னும் கூர்திட்டி இது ஒரு தமிழின விரோதச் செயலென விளக்கமளிக்கிறது. இந்த திட்டம் குறித்த ஆய்விற்க்காக தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின், எம்.எஸ்.சுவாமிநாதனும் உள்ளாராம். இவர்தான் நமது விவசாயத்தின் பாரம்பரிய விதைகளை வெளிநாடுகளுக்கு விற்று, நவீன அமோக விளைச்சலென்று சொல்லி நவீன ரக விதைகளை புகுத்தியவராம். மேலும், மீனவர்களின் வாழ்வாதரங்களுக்கு எதிராக மசோத தாக்கல் செய்தது, கடலோர நிலப்பரப்பை சூறையாடுவது, 2009-இறுதி ஈழப்போரில் வடக்கின் வசந்தம் என குறிப்பிட்டு இராஜபக்சேவிற்கு துணைநின்ற இராஜபக்சேவின் நெருங்கிய நண்பர் எனவும் படம் விவரித்து, இப்படிப்பட்ட தமிழின எதிர்ப்பு நிலை கொண்ட எம்.எஸ்.சுவாமிநாதனின் ஆய்வை எப்படி நம்ப முடியும் ஆகவே, இந்த விடயத்தில் தமிழக அரசின் முதலமைச்சரையும் சந்தேகிக்க உள்ளது எனக் கூறியதோடு, தமிழக முதல்வர் சென்ற ஆட்சியின்போது தேர்தல் பிரச்சாரத்தில் மீத்தேனை எதிர்த்துப் பேசியதும், தான் இவைகளைத் தடுப்பேன் எனக் கூறியதையும் காட்சிப்படுத்தியுள்ளனர். 

இதேபோல கூடங்குளம் எதிர்ப்பு போராளிகளை அழைத்துப் பேசி தான் இவைகளை ஆதரிக்கமட்டேனென கூறியதையும், பின்னர் ஆட்சிப் பொறுப்பில் வந்தவுடன் அப்போராளிகளை ஒதுக்கியதனையும் நினைவிற்க்குள் கொண்டுவந்து, துணைக்கு இடிந்தகரை போராளியான.சுந்தரி எனபவரின் கருத்துக்களையும் பதிவு செய்துள்ளனர்.
எப்படி தற்போதைய முதல்வரை கேள்வி எழுப்பியுள்ளனரோ, அதேபோல திட்டத்தினை கொண்டுவந்த திமுக அரசையும், காங்கிரஸ் அரசையும், இதற்கு எதிர்விப்பு தெரிவிக்காது மெளன ஆதரவிலிருக்கு பாஜக-வினையும் நம்புவதற்கு இல்லை எனவும், மாற்றை நயமபட சொல்லி நகர்கிறது. அதேசமயம் ஆளும் தற்போதைய அதிமுக அரசினை இவர்கள் சாடியுள்ள விதம், மிகவும் மென்மைப் போக்காக உள்ளது என்பது குறை விமர்சனத்தில் சேர்க்கலாம். டி.ஆர்.பாலு, எம்.எஸ் சுவாமிநாதன் போன்றோரை பகிரங்கபடுத்தியயவர்கள், ஏன் முதலமைச்சர்.ஜெயலலிதா அவர்களை மட்டும் மென்மையாகக் கடந்து போகின்றனர் என்பது மனது எழுப்பும் கேள்வி.

தமிழகத்தில் தொடர்ந்து நிகழும் பலவிதமான அழிப்புச் செயல்களால் போராட்டக்காரர்கள் ஒன்றிலிறுந்து ஒன்று தாவிக் கொண்டே போக, முந்தியவைகள் மறந்துவிடப்படுகின்றன. அரசும் திசை திருப்புவதின் மூலம் தனது மக்கள் விரோதத் திட்டங்களை செயல்படுத்திவிடுகின்றனர். ஆனால் இந்த இடத்தில் படக் குழுவினர் ஒரு பொதுக் குறீயீட்டை, ஈழ இறுதிப் போரில் மக்கள் கொல்லப்படும் காட்சிகளையும், பாலச்சந்திரன் கொல்லப்பட்டக் காட்சிகளையும் சொல்லுவதன் மூலம் முன்வைக்கின்றன. அது இவைகளுக்கெல்லாம் தீர்வு தனித் தமிழர் தேசம் என்பதாக உள்ளது. இடிந்தகரையானாலும் சரி, மீத்தேன் ஆனாலும் சரி இது தமிழர் அழிப்பு செய்ல்கள்தான் என படத்தில் சிலரின் கருத்துக்கள் வலுப்பெற்று சொல்லப்படுகின்றது. தங்கள் நிலங்களை இழந்து, வறுமையில் மாளப்போகும் மக்களுக்கு அரசு மாற்று என்ன வைத்துள்ளது எனவும், ஈழத்தில் எப்படி கொன்று குவித்து விரட்டி அடித்தார்களோ, அதேபோலத்தான் இங்குள்ளவர்களை வாழ வழிகற்றவர்களாக்கி வெளியேற்றப் போகிறார்கள் என்கிற ஒன்றையும் படத்தின் காட்சிகள் முன்வைக்கின்றன.

ச.காந்தி,(தமிழ்நாடு மின்பொறியாளர் சங்கம்), த.ஜெயராமன்(மீத்தேன் எதிர்ப்பு கூட்டியக்கம்), வ.சேதுராமன்(இனைச் செயலாளர் தமிழ்நாடு அறிவியல் குழுமம்), கணேச மூர்த்தி(டெல்டா புலிகள்), திருநாவுக்கரசு(தாளாண்மை இயக்கம்), ரா.லெனின்(பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம்), பாரதிச் செல்வன்(மருத்துவர்), சுந்தராஜன்(பூவுலகின் நண்பர்கள்), பெ.மணியரசன்(தமிழ்தேசப் பொதுவுடைமைக் கட்சி), உமர்(மே-17 இயக்கம்), குடந்தை அரசன்(விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி), போன்றோர் இந்த ஆவணப்படத்தில் தங்களின் மீத்தேன் எதிர்ப்புக் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர். மேலும் இயற்கை வேளான் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் ஒரு பத்திரிக்கை பேட்டியும் இணைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கான வீர்யமான காட்சியாக இது அமைந்துள்ளது.

வேங்கடப் பிரகாசின் பின்னனியில், விஜயகுமார் மற்றும் முத்துக்குமாரின் படத்தொகுப்பில், நவீன் பவுல்ராஜ்ஜின் பாடலில், யாழ் பிரபாகரனின் இசையில், ரூபன் லோபஸின் ஒளிப்பதிவில், அருண்குமார், மற்றும் மதரா.கழுகுமலையின் கருத்தாக்கத்தில், நிமிர் வெளியீட்டில், மே-17 இயக்கத்தின் சார்பில், சரவணன் தங்கப்பாவின் இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது இந்த ஆவணப்படம்.

40-நிமிடங்கள் காட்சி ஓடுகிறது. இறுதியில் உத்வேகமான பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படத்தில் பலவிதமான அரசியல்கள் பேசப்படுகிறது. அதேசமயம் சொல்ல மறந்த கதையாக சிலயவைகள் விடப்பட்டும் உள்ளன. ஆனாலும் அதீதம் சொல்ல வேண்டியவைகள் இடம்பெற்றுத்தான் உள்ளன.

மீத்தேன் எதிர்ப்புப் போராட்டக் களத்தில் இந்த ஆவணப்படம் நிச்சயம் ஒருவித போராட்டக் கருவியாகப் பயன்படும் என்பதில் மாற்றமில்லை. இதற்க்காக இக்குழுவினர் அதிக சிரமங்களை மேற்க்கொண்டும், காவல்துறையினரால் பிடிக்கப்பட்டு மீண்டது போன்ற வலிகளையும், பொருளாதார நலிவுகளையும், எட்டு மாத காலச் செலவுகளையும், மே-17 இயக்கத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் இப்பட வெளியீட்டின் போது குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நல்ல போராட்ட யுக்திகளை சிரமேற்று செய்திருக்கும் படக் குழுவினருக்கு பாராட்டுக்கள்!

நன்றி : கீற்று இணையதளம்
இணைப்பு தளம் : http://keetru.com/index.php/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/26735-2014-06-23-23-56-26


தோழமையுடன்

- பழனி ஷஹான்

திருக்குரானையும், திருக்குறளையும் மறந்த செயல்!



முதலில் அவர்கள் யூதர்களைப் பிடிக்க வந்தனர்.
நான்பேசவில்லை: ஏனெனில் நான் யூதனில்லை.
பின்னர் அவர்கள் கம்யூனிஸ்ட்டுகளைப் பிடிக்க வந்தனர்.
நான் பேசவில்லை: ஏனெனில் நான் கம்யூனிஸ்ட்டில்லை.
பின்னர் அவர்கள் தொழிற்ச்சங்கவாதிகளை பிடிக்க வந்தனர். அப்போதும்
நான் பேசவில்லை: ஏனெனில் நான் தொழிற்ச்சங்கவாதியுமில்லை.
பின்னர் அவர்கள் என்னைப் பிடிக்க வந்தனர்.
அப்போது எனக்காக பேச யாருமே இல்லை
என்கிற புகழ்பெற்ற வரிகளின் இறுதி நிலைதான் இன்று இலங்கை இசுலாமியர்கள் அடைந்துள்ளனர்.
1987-தாத்தான்குடியில் உள்ள மசூதி விடுதலைப் புலிகளால் தாக்குதலுக்கு உள்ளாகின்றது. யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ் பேசும் இசுலாமியர்கள் வெளியேற்றம் செய்யப்படுகின்றனர். இசுலாமியர்கள் விடுதலைப் போருக்கு எதிராக செயல்பட்டனர் என்கிற காரணமும் முன்வைக்கப்பட்டது இச்சம்பவங்களுக்கு. இதிலிருந்து தொடங்குகிறது மார்க்கத்தால் இசுலாத்தினை ஏற்ற தமிழ் இனத்தாரின் புலிகளின் எதிர்ப்பு நிலைகள். பல தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பெரும் தமிழினப் பற்றால் புலிகளுக்கும், அதன் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும், ஆதரவும், உதவிகளும் செய்து வந்திட்டிருந்த பழனிபாபா அவர்கள், இலங்கையிலேயே சென்று புலிகளுக்கு எதிராக கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துவிட்டு வந்தார்.
இதுதான் காரணம் இசுலாமியர்கள், புலிகளை வெறுப்பதற்கு. இதனாலேயே 2009-ம் ஆண்டில் சிங்கள இராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் நிகழ்ந்த போரின் போது, அதாவது ‘இறுதி ஈழப் போர்’ எனக் குறிப்பிடப்படும், தமிழ் இனத்தார் ஒன்றரை இலட்சம் பேர் கொன்றொழிக்கப்பட்ட சம்பவத்தின் போது இதே தமிழ் பேசும் இலங்கை வாழ் இசுலாமியர்கள், சிங்கள இராஜபக்சே அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டனர். இதன் நீட்சியாக இராஜபக்சேவுக்கு எதிரான எந்த ஒன்றையும் அங்குள்ள இசுலாமியர்கள் எதிர்த்தும், சிங்கள அரசுக்கு ஆதரவு அளித்தும், புலிகளின் மீது கொண்ட கோபத்தால் மொத்த தமிழ் சமூகத்திற்கும் எதிராகச் செயல்பட்டனர்.
விளைவு, இன்று இதே சிங்கள அரசினால் இயக்கப்படும், பொதுபலசேனா எனும் தீவிரவாத, பேரினவாத அமைப்பு இசுலாமியர்களின் மசூதிகளை இடித்தும், கடைகளை அடித்து உடைத்தும், வீடுகளை கொளுத்தியும், பலரைக் காயமுற வைத்தும், 3-பேரை கொன்றும் தீர்த்துள்ளது. இது சிங்களத்தின் இன அழிப்பின் நீட்சிதானே ஒழிய வேறொன்றுமில்லை.
“ஒரு சாரர் மீது இருக்கும் வெறுப்பு, உங்களை நீதி செலுத்துவதினின்றும் தடுத்துவிட வேண்டாம்”
எனும் திருக்குரானின் வசனங்களைப் படித்திட்ட இசுலாமியர்கள், அதனை மறந்திட்டதினாலே இந்த விளைவுகள். என்னதான் புலிகள் தவறு செய்திருந்தாலும், அது புலிகளின் தவறாக மட்டுமே பார்க்க வேண்டும். இதனை மறந்துவிட்டு இசுலாமியர்கள், ஒட்டுமொத்த இசுலாம் இல்லா தமிழர்களை கொன்றொழிக்க துணையாக இருந்துள்ளதானது, இவர்கள் தங்களின் புனித நூலின் வசனங்களை அவமதித்த செயலாகத்தான் தோன்றுகிறது.
புலிகள் தவறு செய்திருந்த போதிலுமே கூட, ஏனைய தமிழர்களுக்கு இவர்கள் செய்துள்ளது அநீதியென்று பார்க்கப்படும் அதேவேளை, புலிகள் தங்களின் தவறுகளுக்காக மண்ணிப்புக் கேட்டும், வெளியேற்றம் செய்யப்பட்ட இசுலாமியர்களை மீள் குடியேற்றம் செய்த பின்னரும் இவர்கள் புலிகளை மண்ணிக்காது செயல்பட்டுள்ளனர் என்பது எவ்வளவு பெரிய குரோத மனப்பாங்கு?
ஆம், புலிகள் தங்களின் தவறுகளை ஒப்புக் கொண்டு மண்ணிப்பும் கேட்டுவிட்டனர். இதெல்லாம் அச்சம்பவம் நிகழ்ந்திட்ட சில காலத்திற்க்குள்ளாகவே நிகழ்ந்தவைகள். ஒருவர் தன் தவறை உணர்ந்து மண்ணிப்பு கோரும்போது அவர்களிடம் சமாதானம் செய்வது இசுலாமிய மரபா இல்லை செய்தது செய்ததுதான் என எதிர்ப்பது இசுலாமிய மரபா? என்பதனை உண்மை இசுலாமியர்கள் சிந்திக்க வேண்டும்.
புலிகள் செய்த தவறை அந்த தருணத்தில் மட்டுமே கண்டித்திட்ட பழனிபாபா அவர்கள், மீண்டும் அவர்கள் மண்ணிப்புக் கேட்டுக் கொண்டு சமரசம் ஆகிவிட்ட பின்னர், அவர் தொடர்ந்து தனது புலி ஆதரவினை செய்துதான் வந்துள்ளார். அதேசமயம் புலிகளின் தவறை வைத்து அவர் தமிழர்களை எடைபோடவுமில்லை. தொடர்ந்து அவர் தமிழினத் தலைவர்களோடும், சமூகத்தோடும் நல்லிணக்கத்தோடே செயல்பட்டார். என்னதான் புலிகள் ஒருமுறை தன் சொந்த சமூகத்தின் மீதே தாக்குதல் தொடுத்திருந்த போதும் கூட, இராசீவ் காந்தியின் படுகொலையில் புலிகளுக்கு தொடர்பில்லை எனவும், இதிலுள்ள காங்கிரசாரின் பின்னனிகளையும் தெளிவாக சுதாரித்துப் பேசினார் பழனிபாபா. இதுதான் இசுலாமிய மரபு. பல தமிழ் தேசிய தலைவர்களும் புலிகளுக்கான ஆதரவை மறைத்துக் கொண்டு பதுங்கிய போதும் கூட, புலிகள் தவறாக குற்றம் சாட்டப்படுவதினை எதிர்த்து, புலிகளுக்கு ஆதரவுக் குரல் எழுப்பினார் பழனிபாபா. இந்த சமயம் தடா போன்ற கடும் சட்டங்கள் புலி ஆதரவாளர்களின் மீது போடப்பட்டிருந்து கொண்ட கால கட்டம். இப்பொழுது சிந்தியுங்கள் பழனிபாபாவின் செயல்கள் எவ்வளவு முக்கியமானதாக இருந்துள்ளது என்பதனை. இதுதான் இசுலாத்தின் வழிச் செயல்கள்.
ஆனால் இவைகளை எல்லாம் கிஞ்சிற்றும் சிந்திக்காது, இசுலாத்தின் மாண்புகளை காலில் போட்டு மிதித்து செயல்பட்டதின் விளைவு, இதனினும் மனிதத்தினை காலில் போட்டு மிதித்ததின் விளைவு இன்று இசுலாமியர்கள் சந்தித்துள்ளனர்.
 விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு இடத்தில் இப்படி குறிப்பிட்டார், “சிங்களர்களின் நோக்கம் மொத்த தமிழின அழிப்புதான். இன்று எங்களை அழிக்கின்றனர். நாளை அது அப்படியே இசுலாமியர்களை நோக்கி பாயும். ஆகையால் நாம் தமிழ் பேசும் இனமாய் ஒன்றிணைய வேண்டும்’ என்றார்.
இதுதான் கண்கூடு இப்பொழுது. இந்த சிங்களத்தாரின் பூர்வக் குடிகளென நாம் பின்னோக்கினால் அது ஆர்ய இன வழித்தோன்றல்களாக உள்ளன. இவர்கள் இந்தியாவில் பார்ப்பனர்களாகவும், இலங்கையில் சிங்களர்களாகவும், உலக அரங்கில் யூதர்களாகவும் இருக்கின்றனர். இந்த இன நேசம்தான் இலங்கை,இந்தியா(பார்ப்பனர்கள்), இஸ்ரேல் ஆகியவைகளின் கூட்டியல்புகளாகும். இவர்களின் கரங்கள் இவர்களைத் தவிர ஏனைய இனத்தாரை அழித்து ஆள்வதுதான். இதற்க்காக இவர்கள் அதிகமாக கை கொள்ளும் ஆயுதம் ‘பிரித்தாள்வது’
இந்த பிரித்தாள்வதின் ஆயுதத்தினால்தான் நாம் இன்று தாக்கப்பட்டுக் கொண்டுள்ளோம். அது இந்தியாவானாலும் சரி, இலங்கை ஆனாலும் சரி, உலக அளவிலானாலும் சரி.
இப்பொழுது பிரபாகரன் அவர்களின் வார்த்தைக்கு வருகிறேன், ‘தமிழ் இனத்தாராய் ஒன்றினைய’ வேண்டும் என்றார். இன்று நமக்கு இதுதான் தேவை. புலிகள் செய்தவற்றிற்கு மண்ணிப்பும், மீள்குடியேற்றமும் செய்துவிட்டனர். ஆனால் இதுவரை சிங்களர்களால் வெளியேற்றப்பட்ட இசுலாமியர்களை மீள்குடியேற்றம் செய்யாதிருக்கும் இராஜபக்சே அரசினை நாம் என்ன செய்யப் போகிறோம்? இதுமட்டுமா தொடர்ந்து மசூதிகள் இடிக்கப்படுவதும், புர்கா அணியத் தடைவிதிப்பதும், ஹலால் அங்கீகாரத்திற்கு தடை விதிப்பதும் என நீளும் இவர்களின் விரோதச் செயல்களுக்கு நாம் என்ன எதிர்வினையாற்றியுள்ளோம்? இனி என்ன ஆற்றப் போகிறோம்?
இனியும் நாம் புரிதலின்றி பிரிந்து நின்றால், பேரினவாதத்தின் கைகளினால் நமது குரல்வலைகள் தொடர்ந்து நெறிக்கப்படும். ஆகையால் இசுலாமியர்கள் நாம் ஒன்றை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும், நாம் மார்க்கத்தினால், இறைவழிபாட்டால்தான் மாறுபட்டவர்களே தவிர இனத்தாலும், மொழியாலும் தமிழ் பேசுபவர்கள் என்கிற உண்மையினை உணர்ந்து. தமிழ் மக்கள் நமது தொப்புள் கொடி உறவுகள் என்பதனையும் நினைவில் கொண்டு வந்து, இணைந்து செயலாற்ற வேண்டும். நமது தவறுகளை நாம் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.
இசுலாமியர்கள்தான் தவறு செய்துவிட்டார்களெனில், இதனையே காரணமாய் வைத்து ஏனைய தமிழர்கள் இவ்விடயத்தில் இசுலாமியர்களுக்கு எதிராக வைக்கும் கூற்றுகள், “இரஜபக்சேவினை ஆதரித்தீர்களே, உங்களுக்கு இது தேவைதான்” என்றபடி உள்ளது. செய்தீர்கள் அனுபவிக்கிறீர்கள் என்றும் சொல்கிறார்கள் ஏனையோர். என்ன தமிழர்களே இதுதான் தமிழ் கூறும் நல்லுலகா? நீதமா?
“தகுதி யெனஒன்று நன்றே; பகுதியால்
பாற்பட் டொழுகப் பொறின்” (குறள்)
“நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றா ராதல் கடை” (குறள்)
பகைமையிலும் நடுநிலைமையையும், மனிதநேயத்தையும் பேண வேண்டும் எனக் கூறிடும் வள்ளுவனின், குறள்களை மறந்து செயல்படுகிறீர்களே? இதுதான் உங்களின் இனப் பற்றா? தமிழ் மரபா? என்பதனைச் சிந்திக்க வேண்டுகிறேன்.
அதேசயம், நான் மேலே குறிப்பிட்டுள்ளபடி பழனிபாபா போன்றோரின் தமிழினப் பற்றுகளையும், அவர்களின் புலிகளுடனான தொடர்புகளையும், அப்துல் ரவூஃப் போன்றோரின் ஈழத்திற்க்கான உயிர் தியாகங்களையும், புலிகளின் படைப்பிரிவில் ‘ஜீனைத்’ என முஸ்லீம் பெயரில் தனி படைப்பிரிவே வைக்கப்பட்டிருந்ததினையும் சற்று திருப்பிப் பார்க்க வேண்டுகிறேன்.
இதெல்லாம் 2009-களுக்கு முந்தையவைகள் என்றால், இதற்குப் பிறகு தமிழகத்தில் நிகழ்ந்த பலவிதமான ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம், போன்ற இசுலாமிய அமைப்புகளையும், தமிழர்களுக்கான பிரச்சனைகளை எல்லோரும் சென்னையினுள்ளே சுருக்கி வைத்திருந்த போது, அதனை டெல்லி மாநகரத்தில் ஒலிக்கச் செய்த எஸ்.டி.பி.ஐ போன்ற கட்சிகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இசுலாமியர்களின் இந்த அணுகுமுறைகளால்தான், மே-17, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் போன்ற பொதுச் சமூக, தமிழ் அமைப்புவாதிகள் இலங்கை இசுலாமியர்களுக்கு ஆதரவாக குரலெழுப்பி கண்டனக் கூட்டங்களை நிகழ்த்தியுள்ளனர். இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் ஒருங்கிணைத்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து இசுலாமிய அமைப்புகளோடு, தமிழ் தேசிய, தலித் அமைப்புகளும், கட்சிகளும் பங்கெடுத்துள்ளனர் எனும் நிகழ்கால நிலைகளை தமிழ் பேசும் உறவுகள் அறிந்து கொள்ள வேண்டும்.
இசுலாமியர்கள் தாக்கப்பட்டதினை எதிர்த்து அனைத்து இசுலாமிய அமைப்பினரும் ஒன்றன் பின் ஒன்றாக இலங்கை தூதரகத்தை நோக்கி படையெடுத்ததும், அனைத்து அரபு நாட்டு இலங்கைக்கான தூதுவர்களும் இலங்கை அரசிடம் நெருக்கடிகளை ஏற்ப்படுத்துவதும், ஐ.நா தனது கண்டனத்தை இலங்கைக்கு தெரிவிப்பதும் போன்ற சர்வதேச நெருக்கடிகளை நாம், மொத்ததில் தமிழர்கள் தாக்கப்படுவதற்கு எதிராக ஏற்ப்படுத்தியிருக்க வேண்டும், இல்லை இனிமேலாவது ஏற்ப்படுத்த வேண்டும்.
1987 புலிகளின் தவறு, 2009 இசுலாமியத் தமிழர்களின் தவறு என இருதரப்பிலும் நிகழ்ந்துள்ள தவறுகளின் பின்னனிதான் பிரித்தாளும் சூழ்ச்சி என்பதனை உணர்ந்து, அனைவரும் தமிழ் பேசும் இனத்தார் என்கிற பொதுக் குறீயீட்டில் ஒன்றிணைய வேண்டும். இதுதான் இனி நாம் செய்ய வேண்டியது. இவைகளைத் துரிதப்படுத்துவோம், வெற்றி பெறுவோம், பாசிசத்திற்கு எதிராக, சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக!

நன்றி: கீற்று இணையதளம்
இணைப்பு தளம்: http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/26796-2014-07-03-21-51-23
தோழமையுடன்
- பழனி ஷஹான்


உயிர் வலி – காட்சிக்கு காட்சி!


“நான் அளித்த பேரறிவாளனின் வாக்குமூலங்கள், நான் கொடுத்த அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதில் அவர் ‘எனக்கு இதுபற்றியெல்லாம் ஏதும் தெரியாது’ என்கிறவைகளை பதிவு செய்யவில்லை. இந்த வாக்குமூலத்தின்படியும் சரி, உளவுத்துறையிலுள்ள வேறெந்த ஆவணங்களிலும் சரி பேரறிவாளனின் மீது குற்றங்கள் நீரூபிக்கபடவில்லை. ஒருவர் அநியாயமாக தண்டிக்கப்பட்டதில் நான் ஒரு முக்கிய காரணம் என்பதனை எண்ணி வருந்துகிறேன்”
-திரு.தியாகராஜன்.ஐ.பி.எஸ்.
உயிர்வலி எனும் ஆவணப்படம்;
இராசீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தூக்குதண்டனையை எதிர்நோக்கியிருக்கும் திரு.பேரறிவாளன் அவர்களை மையமாக வைத்து, மரண தண்டனைக்கு எதிரான காட்சிப் போராட்டமாக, ‘மரணதண்டனை எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின்’ படைப்பாக வெளிவந்துள்ளது.
இந்த ஆவணப்படத்தில், பேரறிவாளனின் வாக்குமூலத்தை டேப் செய்த சி.பி.ஐ அதிகாரி தியாகராஜன் அவர்கள் மனம் வருந்தி சொல்லிய வார்த்தைகள்தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது.
23-ஆண்டுகால ஒரு நெடிய போராட்டத்தின், உயிர் ஊசலின் அரசியலையும், அயோக்கியத்தனங்களையும், அநீதிகளையும் கண்ணீர்த் துளிகளாகவே காட்சிகள் நகர்த்தியிருக்கின்றன.
இராசீவ்காந்தி கொல்லப்பட்டதில் எந்தவித தொடர்பும் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஆயுள் சிறையும், மரணதண்டனையும் பெற்றுள்ளவர்களின் மீது இல்லை என்பது யாவரும் அறிந்த பட்டவர்த்தனம். ஆனாலும் நீதியை சனநாயகக் நாட்டில் எதிர்பார்க்கவே முடியவில்லை அல்லது முடிவதில்லை.
ஒரு ஆவணப்படத்திற்கே உரிய எல்லாக் கோணங்களோடும், பெரிய திரைக்கான வரவேற்ப்பு காட்சிகளையும் அமைத்து ஒரு அழகியலை கொடுத்துள்ளனர். ‘docu-drama’ எனும் பட வகையில் அமைந்துள்ளது இந்த படம். அதாவது உண்மைகளை சில அழகியல் வேலைகளோடு வடிவமைத்துச் சொல்வது.
பிரகதீஸ்வரனின் இயக்கத்தில், பா.விஜயின் பாடல் வரிகளுக்கு குரல் தந்துள்ளார் உன்னி கிருஷ்ணன். மேலும் ஜேம்ஸ் வசந்த் இசையில் நகர்கிறது முழுப்படமும்.
இதுவரை மரண தண்டனைகளை தடை செய்துள்ள நாடுகளின் எண்ணிக்கையையும், உலகில் அதிகமாக மரணதண்டனையை அளித்துக் கொண்டிருக்கும் நாடுகளின் பட்டியலோடும் துவக்கமாகிறது. மரணதண்டனை நீதிக் கொலைகள் ஆகிய இரண்டையும் பற்றிய சிலவற்றை பேசும் படம், இந்தியாவில் இதுவரையில் நடந்துள்ள, நிறைவேற்றியுள்ள மரண தண்டனைகளின் எண்ணிக்கையை மாநில வாரியக வரிசைப்படுத்துகிறது. இறுதிக் காட்சிகளில், இதுவரை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு பின்னரான காலங்களில் நிரபராதி எனவும், அக்கைதி தூக்கிற்கு உகந்தவரல்ல என்று அறியப்பட்டவர்களின் விவரங்களையும் விவரிக்கின்றது. இதில் ஏனோ எந்தவித ஆதாரங்களும் நிரூபிக்கப்படாத நிலையில், வெறும் கூட்டு மனசாட்சி என்கிற விநோத முடிவில் தூக்கு பெற்ற அப்சல் குருவை நினைவு கூறவில்லை?
நீதியரசர்.கிருஷ்ணய்யரின் எதிர்ப்புக் குரலோடு, இவ்வழக்கில் தூக்கு தண்டனையை வழங்கி தீர்ப்பு அளித்த நீதிபதி.கே.டி.தாமஸின் மன உறுத்தல்களையும், தீர்ப்பு சரியானது இல்லை என்கிறதினை அவரின் வார்த்தைகளில் இருந்தே பதிவு செய்துள்ளனர். மேலும் இதில், ‘வாழும் கலையின்’ திரு.ரவி-சங்கர் அவர்களும் தன்னுடைய எதிர்ப்புக் கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
மக்களிடம் எடுக்கப்பட்டுள்ள கருத்துக்களில் பலரும் தூக்கு தண்டனைக்கு எதிராகவும், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கான விடுதலையையுமே வேண்டுகின்றனர். மக்களில் ஒருவர் இப்படிச் சொல்கிறார்; “தவறே செய்திருந்தாலும் கூட மண்ணிப்புண்டு, இத்தனை ஆண்டுகாலம் முறையானது இல்லை” என.
தமிழகத்தின் முதலமைச்சர்.செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின், கருணை மனு மீதான மறுபரிசீலனைக்கான சட்டமன்ற தீர்மான வாசிப்புக் காட்சியும் இதில் இடம்பெற்றுள்ளது. இதனடுத்து சமீபத்தில் இவர் மரண தண்டனையைக் குறைத்து ஆயுள் தண்டனையாகவும், மேலும் கால அவகாசங்களை கொடுத்து விடுதலை செய்ய வேண்டும் என்று ஏற்றிய தீர்மானங்களெல்லாம் இதன் பின்னால் நிகழ்ந்தவைகள்.
மரண தண்டனைக்கு அநீதமாக ஆளானது பேரறிவாளன் மட்டுமில்லை என்றாலும், இவர் மூலம் படம் எல்லோருக்குமான குரலை எழுப்புகின்றது. பேரறிவாளனின் பிறப்பு, வளர்ப்பு, கல்வி என பல முகாந்திரங்களில் அவருக்கு இருந்த திறன், நல்ல குணங்களை படம் பிடித்ததோடு, அவரின் சிறை வாழ்க்கையில் அவரின் மனிதாபிமான நடவடிக்கைகளையும், நன்னடத்தைகளையும், சீரிய திறன்களையும், சிறைத்துறை அதிகாரிகள் வாயிலாகவும், சிறைக் கல்லூரி பேராசிரியர்கள் வாயிலாகவும், தன்னோடு சிறையில் இருந்து விடுதலை பெற்று வெளியிலுள்ள சிறைத் தோழர்கள் வாயிலாகவும் அடுக்கடுக்காக பதிவு செய்துள்ளனர்.
பேரறிவாளனின் ஆசிரியர்கள், உடன் பயின்றவர்கள் போன்றோர்கள் அவர் மீது வைத்திருக்கும் மரியாதைகளை படம்பிடித்து அப்படியே அவருக்காக இன்னும் உயிர்ப்போடு போராடிக் கொண்டிருக்கும், அவரின் அம்மா, அற்புதம் அம்மாவின் வலியான வார்த்தைகளும், போராட்டச் செயல்களும் கூறப்படுகின்றன. மேலும் அவரின் உடன் பிறந்த சகோதரிகள், சகோதரிகளின் கணவர்கள் ஆகியோரின் கண்னீர்களையும், அவரின் அப்பா குயில்தாசனின் குரலையும் வலியோடு காட்டுகிறது காட்சித் திரை.
சாந்தன், முருகன், பேரறிவாளனுக்கு ஆதரவாக தமிழக வீதிகளில் நிகழ்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளின், அமைப்புகளின் போராட்டக் களங்களின் காட்சிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பேரறிவாளனின் உடன் இருந்து வெளிவந்துள்ள ஒரு முன்னாள் சிறைவாசி இப்படிச் சொல்கிறார்; ‘வெளியில இருந்து தப்பு செஞ்சிட்டு உள்ள போனேன், உள்ள போயி ஒரு நல்ல மனிதரோட பழக்கத்தால இப்போ நல்லபடி வாழ்ந்திட்டு இருக்கேன்’ என்றும், இன்னொருவர் சொல்கிறார்; ‘எனக்கு படிப்பெல்லாம் எதுக்கு என்றேன், அவர்தான் படி படினு சொல்லி படிக்க வச்சாரு, நான் பத்தாம் வகுப்பு தேர்ச்சியாகி வெளிய வந்தேன்’ என்றவாறு.
ஏன் இப்படி பம்பரமாக ஓடுகிறீர்கள் எனக் கேட்ட தோழரிடம், உங்களைப் போன்று எனக்கில்லை காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணிவரைதான் என்னை வெளியில் விடுவார்கள் என சொல்லிவிட்டு, இப்படிச் சொன்னாரம் பேரறிவாளன். “நான் நிலவினைப் பார்த்து பல்லாண்டு காலம் ஆகிவிட்டது” என…!
‘சோ’ வென்று வீசும்
உணதோசை
‘சா’ வறியா அந்த
நாட்களைக் கேட்கிறது

நனெங்கே போவேன்
ஆகையால்
மழையே
திரும்பிப் போய்விடு”

இது மழைக்காலத்தில் சிறையில் பேரறிவாளன் எழுதிய ஒரு நெடுங்கவிதையில் சில வரிகள். மழையே திரும்பிப் போயிவிடு எனும் இம்முழுக்கவிதையும் திரையில் நனைந்தது.
ஒரு நீதியின் அபயக் குரலை அப்படியே படம்பித்துக் காட்டியுள்ளது இந்த ஆவணப்படம். நான் மேலே சொல்லியுள்ளபடி விடுபட்டுள்ள அப்சல் குருவின் விடயம் மட்டுமே ஒரு சின்ன மறதியாக பார்வையாளனின் புறமிருந்து சொல்லிக் கொள்கிறேன்.
“உயிர் வலி” காட்சிக்கு காட்சி கண்ணீரோடு கடக்கின்றது. ஒரு உயிரைக் காப்பாற்றும் பணியைக் கொண்டுள்ள இவ்வாவணப்படத்தை எடுத்துள்ள படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்!

நன்றி : சிறகு வார இதழ்
தள இணைப்பு : http://siragu.com/?p=14426
தோழமையுடன்
- பழனி ஷஹான்


Tuesday, 15 April 2014

சீமான் உடனான சந்திப்பு

புரட்சியாளர்.பழனிபாபா அவர்களைக் குறித்த ஆவணப்படம் மற்றும், 'வாழ்வும் போராட்டமும், எனும் வரலாறு மற்றும் கட்டுரைத் தொகுப்புகளின் நூலிற்காக, திரைப்பட இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான செந்தமிழன்.சீமான் அவர்களை அவரது வீட்டில் சந்தித்து நேர்காணல் செய்தோம்.

உடன்: தோழர்கள்.வழக்கறிஞர்.உமர்கயான், சதீஷ்குமார், இராஜராஜ சோழன் ஆகியோர் உள்ளனர்.




-பழனி ஷஹான்

Tuesday, 11 February 2014

பழனிபாபாவின் 17-வது நினைவுதினம்

புரட்சியாளர் பழனிபாபா-வின் 17-வது நினைவு தினத்தில், அவரது நினைவிடத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு, இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இயக்கத்தினர் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டத்தில் பாசிச பயங்கரவாதம் குறித்து பேசினேன்.
பின்னர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில விவசாய அணிச் செயலாளர், அண்ணன் ஆற்றல்மிகு பேச்சாளர்.திரு.பெ.ச.உலகநம்பி அவர்களோடும், வழக்கறிஞர்.சே.ஜே.உமர்கயான் அவர்களோடும் தனி உரையாடல்கள் கிடைக்க, அவர்களிடம் உரையாடினேன்.

                                                                                                              
                                                                                                                              தோழமையுடன்

பழனி ஷஹான்
PALANI SHAHAN

சதத் ஹாசன் மாண்டோ - நூற்றாண்டு விழா

பதியம் திரைப்பட மற்றும் இலக்கிய அமைப்பின் சார்பாக திருப்பூர் முயற்சி மக்கள் அரங்கில் நிகழ்ந்த, சதத் ஹாசன் மாண்டோ நூற்றாண்டு விழாவில், 'திற' எனும் குறும்பட விமர்சன உரை செய்தேன்.  பின்னர் அதன் இயக்குநர் தோழர்.பிரின்ஸ் என்னரசு பெரியார் அவர்களோடும், தோழர்.வழக்கறிஞர்.சே.ஜே.உமர்கயான் அவர்களோடும்.

திருப்பூர் புத்தகத் திருவிழா



திருப்பூரின் 11-வது புத்தகத் திருவிழாவின் நிறைவு நாளில், தோழர்கள்: வழக்கறிஞர்.சே.ஜே.உமர்கயான், கவிஞர்.புகைப்படக் கலைஞர்.பாரதி வாசன், கணிப்பொறி வடிவமைப்பாளர்.சதிஷ்குமார், கவிஞர்.இரத்தினமூர்த்தி, மற்றும் பிறரோடு.























தோழமையுடன்
- பழனி ஷஹான்