Monday, 11 April 2016

இது மல்லையாக்களின் தேசம்


இந்திய நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது என்கிற அச்சம் மிகுந்த கேள்வியை தினம், தினம் கேட்க வேண்டிய நிலையில்தான் நாம் இன்று இருந்து கொண்டிருக்கிறோம். பொருளாதாரத்தின் ஆணி வேரான விவசாயத்தை அழித்துவிட்டு, இந்தியா எதனை நோக்கி நகர்கிறது என்பதை எண்ணுகையில், நம் தேசம் நஞ்சை விரும்பி உண்டு கொண்டிருப்பது புலப்படுகிறது. அதிலிருந்து இந்தியாவை மீடக வேண்டியது நம்முடைய தார்மீகக் கடமை என்கிற உணர்வு, நாட்டை நேசிக்கும் அனைவரின் மனதிலும் முன்பைவிட பன்மடங்கு இன்று வலுவடைந்துள்ளது.

வளர்ச்சி, வளர்ச்சி என்கிற கோஷமெல்லாம், வீழ்ச்சியைக் குறிப்பதற்கான மறைமுக வார்த்தைகள்தானோ என்கிற மனநிலை சாமானியன் உள்ளத்திலும் இன்று உதித்துள்ளது. அரசின் சட்டங்களெல்லாம் பணத்திற்குக் கட்டுப்பட்டது என்கிற பொதுபுத்தியை, சமீப காலங்களில் நடக்கும் நிகழ்வுகள் இன்னும் கூர் தீட்டிவிட்டுள்ளன. நாம் என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம், யாருக்கான தேசத்தில் இருக்கிறோம் என்கிற சந்தேகங்கள் மிகுந்த நாட்களை கடந்து கொண்டுள்ளோம்.
மனிதர்கள் என்ற வரையறையில் இருந்து விவசாயிகளை ஏன் இந்த அரசு விலக்கி வைத்துள்ளது? அவர்களை ஏன் வாழத் தகுதியற்றவர்களா அதிகார மையங்கள் காணுகின்ற? விவசாயிகள் உண்மையில் என்ன பிழை செய்தார்கள்? இது உழைப்போருக்கு விலக்களிக்கப்பட்டு, ஏய்த்துப் பிழைப்போருக்கான காலம் மட்டும்தானா? என்கிற அடுக்கடுக்கடுக்கான கேள்விகளை கேட்க வேண்டிய வலிமிகுந்த சூழலில் நாம் இன்று இருந்து கொண்டுள்ளோம். சமீப காலங்களில் விவசாயிகளின் மீது தொடுக்கப்படும் வாழ்வாதாரப் போர்கள், கோரம் மிகுந்தவைகளை வீர்யமடைந்துள்ளதே அதற்கான காரணங்களாகும்.

காவிரி டெல்டா பகுதியின் இதயமாக அமைந்திருப்பது தஞ்சை மண். இத்தஞ்சை மாவட்டத்தின் ஒரத்தநாடு வட்டத்தினுள் அமைந்திருக்கிறது சோழகன்குடி எனும் கிராமம். இக்கிராமத்தில்தான் காவல்துறையினரால் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டார் விவசாயி பாலன். பாலன் காவல்துறையினரால் தாக்கப்பட்ட சம்பவத்தின் காணொளி தொலைக்காட்சிகளில், ஒளிபரப்பாகி பெரும் அதிர்வை உண்டு பண்ணியது.
ஒரு தனியார் வங்கியில் கடன் தொகை பெற்று, உழவு செய்வதற்கு டிராக்டர் வாங்கிய பாலன், கடன் தொகையை ஆறு மாதங்களாக தாமதிக்காமல் செலுத்தி வந்துள்ளார். இந்த ஆறு மாதங்களிலேயே அவர் தனது கடன் தொகையை முழுமையாகச் செலுத்துவிட்டதாகக் கூறியுள்ளார். ஆனால் வங்கியோ, இன்னும் இரண்டு மாதங்கள் நிலுவை உள்ளதெனக் கூறியுள்ளது. ஆகவே விவசாயி பாலன், அவ்விரண்டு மாதத் தொகையை செலுத்த சிறிது காலம் அவகாசம் கேட்டுள்ளார்.

இந்நிலையில்தான், வயலில் நெற்கதிர்களை ஏற்றிக் கொண்டிருந்த வேளையில் பாலன், காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. இரண்டு மாதத் தொகையைச் செலுத்த தாமதித்துவிட்டார் என்கிற ஒரே காரணத்திற்காக, இருபது வங்கி ஊழியர்கள் அடியாட்களை வைத்து அடிப்பதைப் போன்று காவல்துறையினரை அழைத்துவந்து பாலன் மீது தாக்குதலை நிகழ்த்திச் சென்றுள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையே, வன்முறையை அப்பட்டமாக செய்து காண்பித்து, சட்டம் ஒழுங்கை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

ஆனால், இதில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது அரசு எடுத்துள்ள நடவடிக்கை, வெறுமனே இடமாற்றம் மட்டுமே. காவல்துறையினர் மீதாவது இடமாற்றமேனு செய்யப்பட்டது, ஆனால் காவல்துறையை ஏவல்துறையாகப் பயன்படுத்திய வங்கி ஊழியர்கள் மீது இங்கு யாருக்குமே குற்றப் பார்வை எழவேயில்லை. நியாயமாகப் பார்த்தால், வங்கி ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் மீதும் பெயருக்கேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தங்கள் எஜமானர்களைக் காக்கும் கூலிப்படையினரைப் போல, காவல்துறையினர் வங்கி ஊழியர்களை இவ்விடத்தியல் மிக லாவகமாகக் காப்பாற்றியுள்ளனர். எல்லாவற்றின் மீதும் பல புதிர் கேள்விகளைக் கேட்டு, மிகப்பெரும் விவாதங்களைக் கிளப்பி, புலனாய்வுத் துறையினரைப் போன்று குற்றத்தின் பின்னணியையும், குற்றவாளிகளின் முகவரிகளையும் தோண்டி எடுக்கும் காட்சி ஊடகங்கள், பாலன் தாக்குதல் சம்பவத்தில் வங்கி ஊழியர்களை நோக்கி எவ்விதக் கேள்வியையுமே எழுப்பவில்லை.

பாலன் மீதான தாக்குதலின் ஈரம் சிறிது கூட உலர்ந்திடாத சூழலில், அரியலூரைச் சேர்ந்த அழகர் என்கிற விவசாயி தற்கொலை செய்துகொண்ட துயரச் சம்பவம் இம்மண்ணில் நடந்தது. விவசாயி பாலன் கடன் தொகையைச் செலுத்த தாமதித்ததால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டார் எனில், அழகரோ கடன் தொகையை செலுத்த இயலாமல் தூக்குக் கயிற்றை நாடியிருக்கிறார். அல்லது வங்கியின் அழுத்தத்தினால் அவர் தூக்கை நோக்கி நகர்ந்திருக்கிறார்.

கடனைச் செலுத்த இயலாதவர்களின் மீது அடவாடித்தனம் செய்யும் அதிகாரத்தை வங்கிகளுக்கு யார் அளித்தது? எளியோர்கள் என்றால் அவர்கள் மீது எத்தகைய தாக்குதலையும் நிகழ்த்தலாம் என்கிற மனத்துணிவு காவல்துறையினருக்கு எப்படி வந்தது? என்கிற கேள்விகளுக்கெல்லாம் அரசு எவ்வித பதிலையுமே அளிப்பதே இல்லை. சட்டம் ஒழுங்கு காற்றில் அலையும் பட்டத்தினைப் போன்ற ஒன்றாக இங்கு மாறிப்போய்விட்டது. அரசு என்கிற ஒன்று இருப்பதாகவே தெரியாத அளவிற்கு, மோசமாகிப் போயுள்ளது நாட்டின் நடப்புகள்.

இந்தியா அடிப்படையில் ஒரு விவசாய தேசமாகும். இந்திய நாட்டின் மக்கள் தொகையில் அறுபது சதவீதத்திற்கும் மேலான மக்கள், விவசாயத்துடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புடையவர்களாகவே உள்ளனர். இதன் வழியாகவே அவர்களுக்கான பொருளாதாரங்கள் நிறைவேற்றப்பட்டுக் கொண்டுள்ளன. விவசாயம்தான் இந்தியாவின் முதுகெலும்பாக இருந்து கொண்டுள்ளது. இப்படிப்பட்ட ஒரு நாட்டில்தான் அரை நிமிடத்திற்கு ஒரு விவசாயி தற்கொலைப் பாதையை தேர்வு செய்து மரணித்துக் கொண்டுள்ளான். இந்த முரணின் பின்னாலிருப்பது ஆளும் அரசுகளே அன்றி, வேறெந்த அந்நியச் சக்திகளும் கிடையாது.

ஐம்பது நாட்களில் 42 விவசாயிகள் தங்களின் வாழ்வை தாமாகத் தீர்த்துக் கொண்ட கோர நிகழ்வு மகாராஷ்டிர மாநிலத்தின் விதர்பா பகுதியில் நடந்து பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இன்றும் விதர்பா பகுதி என்றாலே அது விவசாயிகளின் தற்கொலை பூமி என்கிற வினோதப் பெயரைக் கொண்ட ஒன்றாகவே காட்சியளித்துக் கொண்டுள்ளது. பல ஆண்டுகளாக இந்திய மண்ணில் விவசாயிகளின் தற்கொலை நிகழ்வுகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து கொண்டேதான் இருந்துள்ளது.

ஆனால் தொன்னூறுகளின் தொடக்கத்தில்தான் அது பல்கிப் பெருகியிருக்கிறது. இந்தக் கால கட்டத்தில்தான் இந்தியா தனியார் மயத்தையும், தாராள மயத்தையும் இறக்குமதி செய்தது. இந்திய நாட்டின் இந்தப் பொருளாதாரக் கொள்கையே, இன்றளவும் விவசாயிகள் மடிந்து கொண்டிருப்பதற்கான மையக் காரணமாகும். ஆனால் இதனை மறைக்கும் பொருட்டு அரசு தொடர்ந்து விவசாயிகளின் தற்கொலையை குடும்பப் பிரச்சனைகளாகவே சித்தரித்துக் கொண்டுள்ளது.

தொன்னூறுகளிலிருந்து விவசாயிகளின் தற்கொலை வீதம் அதிகரித்திருப்பதை ஆய்வு செய்ததேசிய குற்றப் பதிவு மையம்’ (National Crime Records Bereau) 1995-ஆம் ஆண்டில்தான் முதன் முதலாக அதிகாரப் பூர்வமாக விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கையை பட்டியலிட்டது. அதன்படி 1995-ஆம் ஆண்டு வரையில் சுமார் இரண்டரை இலட்சம் விவசாயிகள் நாடெங்கும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்கிற தகவல் வெளியாகி அதிர்ச்சியைக் கிளப்பியது. அப்போதே இந்தியாவின் பொருளாதாரக் கொள்கையின் மீது பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் தன்னை கார்ப்பரேட்டாக வளர்த்துக் கொள்ள விரும்பிய இந்தியா, அதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள இல்லை. விளைவு இன்றைய தேதியில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கைநான்கு இலட்சத்திற்கும்மேல் சென்று கதிகலங்க வைத்துள்ளது. இதில் பெண்களும், பழங்குடியினரும் அடங்கமாட்டார்கள். ஏனெனில் இந்தியாவைப் பொறுத்தவரையில் விவசாயத்தில் ஈடுபடும் பெண்களும், பழங்குடியினரும் விவசாயிகளாக கருதப்படாத போக்கே நிலவி வருகிறது.

சுந்தந்திர இந்தியாவை முற்றும் முழுவதுமாக ஆண்ட காங்கிரஸ் அரசு, விவசாயிகளின் மீதான இந்தத் துயரங்களையெல்லாம் கிஞ்சிற்றும் பொருட்படுத்திக் கொள்ளவே இல்லை. விவசாயிகளின் வாழ்வை இருண்ட கண்டமாக்கியதில் மிகக் காத்திரமான பங்களிப்பை காங்கிரஸ் அரசு செய்தது என்றால், அரசியல் களத்தில் காங்கிரஸை எதிர்த்து நிற்கும் பாரதிய ஜனதா அரசும் விவசாயிகளின் விடயத்தில் காங்கிரஸின் பாணியையே பின்பற்றிக் கொண்டுள்ளது. சொல்லப் போனால் பாரதிய ஜனதா அரசு காங்கிரஸைவிட ஒருபடி மேலேயே சென்று உழைக்கும் வர்க்கத்தை உலுக்கும் வேலையைத் துரிதமாகச் செய்து கொண்டுள்ளது.
அண்மையில் வெளியான தேசிய குற்றப் பதிவு ஆணையத்தின் அறிக்கைப்படி, பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலை விகிதம் ஐம்பது சதவீதம் குறைந்துவிட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால் இதனை மிகக் கடுமையாக மறுத்தவிதர்பா மக்கள் போராட்டக் குழு (VJAS) தலைவரும், மனித உரிமைச் செயற்பாட்டாளருமான கிஷோர் திவாரி, மோடியின் ஆட்சியில், விவசாயிகளின் தற்கொலை விகிதம் இருபது சதவீதம் உயர்ந்துள்ளதே தவிர, குறையவில்லை என ஆதங்கம் கலந்த ஆதாரத்துடன் எடுத்துப் பேசினார்.

தேசிய குற்றப் பதிவு ஆணையத்தின் பித்தலாட்டங்களையும், அது மோடிக்குத் துணைபோன விதங்களையும் விளக்கியப் பேசிய கிஷோர் திவாரி, ’விவசாயிகளை அவர்கள் இரண்டு விதமாகப் பேதம் பிரித்துள்ளனர். அதன்படி சொந்த நிலமுள்ள விவசாயிகள்தான் விவசாயி என்றும், நிலமில்லாமல் விவசாயத்தில் ஈடுபடுவோர் விவசாயிகள் அல்ல என்றும் தேசிய குற்றப் பதிவு ஆணையம் வகைப்படுத்தியுள்ளது. இதன்படிதான் அவர்கள் தற்கொலை விகிதத்தை குறைத்துக் கணக்குக் காட்டிக் கொண்டுள்ளனர்என ஆளும் அரசின் முகமூடியை தனது கூற்றின் வாயிலாகத் தோலுரித்துக் காட்டினார்.

வளர்ச்சி, வளர்ச்சி என்கிற கவர்ச்சி கோஷத்தினை முன்வைத்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இதுவரை செய்ததெல்லாம் இந்தியாவை வீழ்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்பவைகளாகவே இருந்து கொண்டுள்ளன. அதில் பிரதானமானது விவசாயிகளின் கழுத்தில் இன்னும் வலுவாகச் சுருக்கிடும்படியானநிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டமாகும்’. குழந்தையைக் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுவதுதானே பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை. அதன்படி ஒருபுறம் விவசாய அமைச்சகத்தின் வாயிலாக தனது அரசு விவசாயிகளுக்கான அரசு என்கிற பரப்புரையை செய்து கொண்டே, இன்னொருபுறம் விவசாயிகளின் வாழ்வில் நஞ்சை ஊற்றிக் கொண்டுள்ளது ஆளும் அரசு.

வங்கிகளின் நெருக்கடிகளினாலும், விளைச்சலுக்குப் போதிய விலை கிடைக்காததினாலும், பருவமழை பொய்த்துப் போவதினாலும், கந்து வட்டிக்காரர்களின் மிரட்டல்களினாலும், மரபணு மாற்ற விதைகளினாலும், இடைத்தரகர்களின் ஆட்டங்களினாலுமே மிகப்பெரும்பாலன விவசாயிகள் கடன் சுமை ஏறி, அவமானத்தால் தூக்கிட்டுக் கொள்ளும் நிகழ்வு தொடர்ந்து கொண்டுள்ளது. ஆனால் தனது அரசை விவசாயிகளின் அரசு என மார்தட்டிக் கொள்ளும் மோடி தலைமையிலான அரசின், விவசாயத்துறை அமைச்சர் ராதாமோகன் சிங்கோ, விவசாயிகளின் தற்கொலைக்கு குடும்பப் பிரச்சனகளும், கள்ளக் காதல்களும், மதுப் பழக்கங்களுமே காரணமென்று மிகக் கொச்சையாகப் பேசியுள்ளார்.

தனது அமைச்சர்களின் மக்கள் விரோதக் கூற்றுகள் எவற்றைக் குறித்தும் அலட்டிக் கொள்ளாத மோடி, ராதாமோகன் சிங்கின் இக்கூற்றைக் குறித்தும் வாய் திறக்கவே இல்லை. மாறாக மோடி ஒருபடி மேலே போய், ’விவசாயிகள் விவசாயத்தை நம்பி மட்டுமே இல்லாமல், வேறு தொழில்களையும் கற்றுக் கொள்ள வேண்டுமெனஅறிவுரை வழங்கி தனது அரசின் கொள்கையை மிகத் தெளிவாக அவரே அம்பலப்படுத்திக் கொண்டார்.

பெரும்பாலான விவசாயிகளின் தற்கொலைகளுக்குப் பின்னாலிருப்பது, வங்கிகளின் அழுத்தமாகவே உள்ளது. வாங்கிய கடனை செலுத்தத் தாமதிக்கும் விவசாயிகளை, வங்கிகள் தயக்கமற்று தற்கொலைக்குத் தள்ளிக் கொண்டுள்ளன. இதன் நீட்சியில்தான் இரண்டு மாதத் தவணையை செலுத்த தாமதித்த பாலன் அடிமாட்டைப் போல தாக்குதலுக்கு உள்ளானதும், கடன் தொகையை செலுத்த இயலாத அவமானத்தால் தூக்கிட்டுக் கொண்ட அழகரும் ஆவர். வங்கிகள் எப்படி இவ்வளவு யதேச்சதிகாரப் போக்குடன் செயல்பட முடிகிறது என்றால், அங்குதான் உள்ளது இந்தியாவின் கார்ப்பரேட் முகம். இந்தக் கார்ப்பரேட் கொள்கையை தனது வளர்ச்சியின் அடிநாதமாக உச்சரிக்கும் மோடி அரசுதான், தன்னை விவசாயிகளுக்கான அரசு என வெட்கமற்று சொல்லிக்கொள்கிறது.

இந்த நாட்டில் காவல்துறையினரின் அராஜகப் போக்கிற்கு நிகராக வளர்ந்துள்ளது, வங்கிகளின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும். மாதத் தவணையைக் கட்ட தாமதிக்கும் விவசாயியை பொதுவில் வைத்து அடிப்பதும், கல்விக்காக கடன் வாங்கி செலுத்த இயலாமல் போன மாணவர்களின் புகைப்படங்களை வங்கியின் முகப்பில் ஒட்டி, அவர்களைத் திருடர்களைப் போலச் சித்தரிப்பதும், நடுத்தர மக்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி வீட்டுக் கடன், தொழில்முறைக் கடனை அளித்து, அப்படிப் பெற்றவர்களின் வாழ்வை இரக்கமற்று தொந்தரவுகளின் வழியாக நடுத்தெருவில் நிறுத்துவதும், இன்று இங்கு அதிகமாகிவிட்டது.
ஆனால், பெரும் முதலாளிகளின் விடயத்தில் வங்கிகளின் போக்கு நேரெதிராக உள்ளது. அரசின் அணுகுமுறை முதலாளிகளிடத்தில் பணிவு கொண்டதாக உள்ளது. இரண்டு மாதத் தவணையைச் செலுத்த தாமதித்த விவசாயி பாலனின் டிராக்டரை வன்முறையை நிகழ்த்தி பறிமுதல் செய்யும் வங்கிகள், விஜய் மல்லையாவிடம் கடன் கொடுத்துவிட்டு அவரிடம் திருப்பிச் செலுத்தும்படி கெஞ்சுகின்றன. விவசாயி பாலனைக் கண்மூடித்தனமாகத் தாக்கிய அரசின் காவல்துறை படைகளோ மல்லையாவிற்கு வணக்கம் வைத்துக் கொண்டுள்ளன.

17 பொதுத்துறை வங்கிகளிடமிருந்து, ஒன்பதாயிரம் கோடி ரூபாயைப் பெற்றுக் கொண்டு ஏப்பம்விட்ட மல்லையா, அதனைத் திருப்பிச் செலுத்தாமல் இந்தியாவைவிட்டு இலண்டனுக்கு தப்பிச் சென்றுள்ளார். இப்போது வங்கிகளும், அரசும் அவரிடமிருந்து மிகப்பெரும் கருணையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளன. அவர் அந்தத் தொகைகளை திரும்பக் கொடுத்திட வேண்டுமென, தயவுகூர்ந்த வார்த்தைகளால் வேண்டிக்கொண்டுள்ளனர். மல்லையாவோ இலண்டனில் மிகுந்த உள்ளாசமாக உலவிக் கொண்டு, ட்விட்டரில் பதிலளித்துக் கொண்டுள்ளார்.

சாமானியன் என்றால் சவுக்கைத் தூக்கிக் கொண்டு துரத்தும் அரசு, மல்லையாக்களிடம் மண்யிட்டு வேண்டிக் கொண்டுள்ளன. இதுபோன்ற சம்பவங்கள் இந்தியாவில் நடப்பது இதுவே முதல்முறையும் அல்ல, ஏழைக்கொரு நீதியும், பணம் படைத்தோருக்கொரு நீதியும் கொண்டு செயல்படுவதென்பது இந்திய அரசுகளுக்கு புதிதானதும் அல்ல. விசாயத்தை அழித்து, விசாயிகளை தற்கொலையின் வாயிலாக கொலை செய்து, இந்தியா கட்டமைத்துக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் உலகத்தில், மல்லையாக்களுக்கு மட்டுமே இடமுண்டு என்பதையே நடப்புகள் தெளிவாக்கிக் கொண்டுள்ளன. எது எதுவெற்கெல்லாமோ கொடி தூக்கி தேசபக்தியை பறைசாட்டும் கூட்டம், இதுபோன்றவற்றில் மரணத்தைவிடம் ஆழமான மெளனத்தையே வெளிப்படுத்திக் கொண்டுள்ளன. மல்லையாக்களின் தேசத்தில் ஒருபோதும் மனிதர்களுக்கு இடமில்லை.
-பழனி ஷஹான்

நன்றி : காக்கைச் சிறகினிலே மாத இதழ் (மார்ச் - 2016)




No comments:

Post a Comment