”எதிலும் கொஞ்சம் நம்பிக்கை.
எதிலும் கொஞ்சம் அவநம்பிக்கை. இதுவல்ல அது என்று தேடிப் போவது. பின், அதுவும் அல்ல
என்று உட்கார்ந்துவிடுவது. செய்ய எதுவுமில்லை என்று சும்மா இருப்பது. பின் ஏதோ ஒன்று
தூண்ட, ஏதோ ஒன்று பிடித்திழுக்க எழுந்து ஓடுவது” என ’ஜே.ஜே.சில குறிப்புகள்’ நாவலில்
வரும் வரிகள், மனித மனதின் நிதர்சனமான பிரதிபலிப்பாகும். இதுபோன்ற அல்லது இதற்கு சற்று
நிகரான மனநிலையைக் கொண்ட ஒருவனையே ‘ரோலக்ஸ் வாட்ச்’ தனது நாவலுலகில் கதாநாயகனாக்கியுள்ளது.
பேராசைகளின் வழியாகவே,
பெரும்பாலான மனிதர்கள் இவ்வுலகை கடக்க விரும்புகிறார்கள். அவை நிராசைகளாக அமைகிற தருணத்தில்,
மனிதன் தன்னுடைய மனதை நேர் நிலையில் வைத்துக் கொள்ள சக்தியற்றவனாகிவிடுகிறான். அவனின்
ஓட்டம் நேர்கோட்டை, அவனை இழக்க வைக்கிறது. கூடுவிட்டு கூடுபாயும் பறவைகளைப் போல, அவன்
அடிக்கடி தனது இருப்பை வேறொரு வர்ணத்திற்குள் புகுத்திக் கொள்கிறான்.
எப்படியும் வாழலாம்
என்கிற கட்டத்தில், எதைச் செய்தேனும் பணத்தை குவித்துவிடலாம் என்கிற மனநிலைக்கு அவன்
வருகிற தருணம், இயற்கையான தனது குணங்களை அவன் வன்முறையாகச் செயற்கையாக்கிக் கொள்கிறான்.
பிறகு அவன் சுயத்தை இழந்து, பணம் படைத்தோனின் பிம்பமாக வாழக் கற்றுக் கொள்கிறான். இதுபோன்ற
நிலைத்தன்மையற்ற, சுயபிம்பமற்ற நபரைத்தான் தனது நாவலின் வழியே அழகியுணர்ச்சிக்கு குறைவின்றி
முன்வைத்திருக்கிறார், சரவணன் சந்திரன்.
இந்நாவலை சமூகக் கண்ணோட்டத்தில்
அணுகினால், இரண்டு விசயங்களைப் பிரதானமாக அதில் காண இயலும். அவ்விரண்டுமே ஒன்றுக்கொன்று
நேரெதிர் முரண்களைக் கொண்டவைகளாக உள்ளன. அதில் சொல்லப்படும் பாலியல் உறவுகள் சமூகச்
சீரழிவை ஊக்குவிக்கும் போக்கை கொண்டிருக்கும் அதே சூழலில், சரவணன் கூறும் அரசியல் இலாபிகள்
சமூகத்தை விழிப்புணர்வின் பக்கம் இழுத்துச் செல்லவும் தவறிவிடவில்லை. ஆனால் இவை இரண்டுமே
சமகாலத்தின் எள்ளளவுப் பிசவுகளற்ற உண்மைகள் என்பதில், எவருக்கும் இரண்டாம் கருத்து
இருக்க இயலாது. மாறாக இவைகளை புனைவு எனச் சொல்பவர்கள், நாகரீகத்தின் பேரில் அநாகரீகங்களை
வளர்க்கிறார்கள் என்பதைத் தவிர, அதற்கு வேறு பொருள் இல்லை.
’21-ஆம் நூற்றாண்டின்
கதை’ என இந்நாவலின் முன்னுரையில் தமிழ் மகன் எழுதியிருப்பது, இந்நாவலின் ஒருவரிச் சுருக்கம்
என துணிந்து சொல்லிவிடலாம். சமகாலத்தைக் குறித்து பலரும், பல நாவல்களை எழுதியுள்ளனர்
என்கிற போதும், ‘ரோலக்ஸ் வாட்ச்’ அவை எல்லாவற்றிலிருந்தும் தனித்து விளங்குகிறது. அதற்குக்
காரணம், ரோலக்ஸ் வாட்ச் தேர்வு செய்துள்ள கதாபாத்திரமே ஆகும். இதுவரை தமிழ் வெளியில்
பதிவு செய்யப்படாத ஒரு மனிதச் சமூகத்தை, சரவணன் தனது அரசியல் அனுபவங்களின் வாயிலாக,
சமரசங்களுக்கு இடமற்று, மனத் திடத்துடன் இந்நாவலின் வழியே நம்முன் வைத்திருக்கிறார்.
பல குட்டிக் கதைகளின்
அடுக்குகளினால் நாவலை அவர் கட்டமைத்திருக்கிறார். ஒன்றை விளக்குவதற்கு, அவர் கதையின்
மையத்திலிருந்து விலகி வேறொரு கதைக்குத் தாவிகிறார். பின் அதிலிருந்து இன்னும் உள்நோக்கி
வேறொன்றிற்கு இடம் பெயருகிறார். ‘ஆயிரத்தோர் அரேபிய இரவுகள்’ எனும் புகழ்பெற்ற கதைத்
தொகுதியின், ஏதோ ஒரு உறுப்பின், அடையாளத்தை ரோலக்ஸ் வாட்ச் பெற்றிருக்கிறது.
ஆனால், அந்தக் குட்டிக்
கதைகள் ஒவ்வொன்றிற்கும் பெரும் ஏக்கம் இருப்பதாகவே தெரிகிறது. அவைகள் சில பக்கங்களுக்குள்
சிறை வைக்கப்பட வேண்டியவைகள் கிடையாது. நாவலின் ஒவ்வொரு பக்கங்களும், இறுக்கிக் கட்டப்பட்டிருப்பதாகவே
நினைக்கிறேன். அதன் இறுக்கத்தை குறைத்திருந்தால், நாவல் இன்னொரு பரிணாமத்தைப் பெற்று,
இன்னும் அதிக சுவையை அடைந்திருக்க எல்லாவித வாய்ப்புகளுமுண்டு. நாவலாசிரியர் கதாபாத்திரங்களின்
எண்ணிக்கைக்கு அளித்துள்ள தாராளத்தை, தாள்களுக்கு அளிக்காமல் போனது சுட்டிக்காட்டப்பட
வேண்டியதாகும்.
எதிர்காலத்திற்காக
தங்களின் வாழ்வை கல்விச் சாலைகளுக்குள் அடகு வைக்கும் மனிதர்கள், வேலை என்கிற பெயரில்
தங்களின் வாழ்வை ஆயுள் சிறைக்குள் அடைத்துக் கொள்கின்றனர். இந்தப் போக்குதான் இங்கு
நாம் அறிந்திருக்கும் உலகின் நடப்புகளாகும். ஆனால் அதற்கு நேரெதிர் மாற்றமாக வலம் வருகிறான்,
ரோலக்ஸின் நாயகன். கல்லூரியில் இளங்களையை முடிக்கும் அவன், அதற்குப் பிறகு தொழிற்சாலைகளின்
படிகளையோ, பன்னாட்டு கம்பெனிகளின் நேர்முகங்களையோ நாடிச் செல்லாமல், தனது வாழ்விற்கான
துறையாக அவன் தேர்ந்தெடுக்கும் வழி தனித்த அடையாளத்தைக் கொண்டதாக உள்ளது.
அவன் சுயமாக வேலை செய்து,
பொருளீட்டுகிறான். ஆனால் சமூகம் புரிந்து வைத்திருக்கும் சுயதொழிலில் அது அடங்காது.
தனது தொடர்புகளின் வழியாக, அவன் அரசியலில் இடைத்தரகராக பங்காற்றுகிறான். பெரும் புள்ளிகளை
குறிவைத்து பழகும் அவன், அவர்களின் எல்லாவித திரை மறைவு தில்லுமுல்லுகளுக்கும் தூதுவனாக,
சில சமயங்களில் அவர்களின் பிரதிநிதியாக துணை நிற்கிறான். அதனால் அவன் கோடிகளில் பணத்தை
ஈட்டுகிறான்.
எதேச்சையாக பார்ட்டி
ஒன்றில் அறிமுகமாகும் திவ்யா, நாயகனின் அந்தரங்கத் தோழியாகவும், ஸ்பான்சராகவும் அவனையே
சுற்றி வருகிறாள். பணத்தின் மூலமே எதையும் சாத்தியப்படுத்த இயலுமென ஆழமாக நம்பும் நாயகனுக்கு,
பணத்தை ஒரு பொருட்டாக மதிக்காத நண்பன் இருக்கிறான். சந்திரனாக கதையில் வரும் அந்த நண்பன்தான்,
நாயகனுக்கு வாழ்வின் அடிப்படைகளை ஏற்படுத்திக் கொடுக்கிறான். அவனால்தான் நாயகன் கல்வி
கற்றான். ஆங்கிலம் பேசப் பழகினான். அவன் வழியாகத்தான் நாயகனுக்கு தொடர்புகள் பல கிடைத்தன.
ஆனாலும் நாயகனுக்கு நண்பனின் கொள்கைகளில் உடன்பாடு இல்லை.
மிகப்பெரும் செல்வப்
பின்புலம் கொண்ட சந்திரன், அவைகளைப் பயன்படுத்திக் கொள்ள மறுத்து, தனது உழைப்பின் மூலம்
தனது எதிர்காலத்தை நிர்ணயிக்க முயற்சிப்பவனாக, நாவல் முழுக்க நாயகனுக்கு இணையாக பின்தொடர்ந்து
வருகிறான். ஒரு கட்டத்தில் சந்திரனே நாயகனாக தோற்றம் தரவும் செய்கிறான். ரோலக்ஸில்
நாயகனின் பிம்பம் இரண்டு படிநிலைகளைக் கொண்டதாகவே உள்ளது. சந்திரனுக்கும், நாயகனுக்கும்
இடையில் கசப்புகள் சூழ்ந்த தருணங்களில், இருவருக்குமான நட்புப் பரிமாறல்களாக, சந்திரனின்
காதலி மாதங்கி அங்கம் வகிக்கிறாள்.
சந்திரனின் மீது நாயகனுக்கு
கோபங்கள் இருந்தாலும், அவனுக்கு சந்திரன் மீதான மரியாதை எப்போதும் குறைவதே இல்லை. அதேபோல
மாதங்கியை அவன் தாயாகவே பாவித்துப் பழகுகிறான் என்கிற அளவிற்கு, நாயகனே அவளைக் குறித்த
தனது கருத்தை நாவலில் பேசியுள்ளான்.
பணம், பணம் என்று எப்பொழுதும்
அதையே இலக்காகக் கொண்டு வாழும் நாயகனுக்கு, நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணி செய்யும்
கிராமத்து அம்மா இருக்கிறாள். அவளின் பாச நினைவுகளை நாயகன் அநேக இடங்களில் சொல்லத்
தவறவில்லை. தனது பணத்தாசையை நியாயப்படுத்துவதற்காகவே, அவ்வப்போது தனது தாயின் காட்சிகளை
வரைகிறானோ என்கிற தொனியிலும் அதனை எடுத்துக் கொள்ள இயலும்.
‘நீ ஒரு விசயத்தில்
சரண்டர் ஆகிறாய் என்றால், அந்த விசயத்தை நீ பயன்படுத்திக் கொள்ளப் போகிறாய் என்று அர்த்தம்’
என நாவலில் ஒரு வரி உண்டு. பெசண்ட் நகர் கடற்கரையில் வைத்து, நாயகனை நோக்கி, மாதங்கி
சொல்லும் வார்த்தைகள் அவை. இந்த வார்த்தையின் வாழ்க்கை வடிவம்தான் ரோலக்ஸின் நாயகன்.
தனது இலக்கிற்காக,
அவன் எத்தகைய சமாதானத்தையும் செய்து கொள்ளத் தயாராக இருப்பான். யாருடைய காலிலும் சட்டென
விழுந்து காரியம் சாதிக்கும் சாதுர்யத் தனம் கொண்ட அவன், அதன் ஊடாகவே தனது வளர்ச்சிப்
போக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறான். திருவல்லிக்கேனி மேன்சன் வாழ்க்கையிலிருந்த
அவனுக்கு திவ்யாவினால், ஸ்விஃப்ட் கார் பரிசாக கிடைக்கிறது. அக்காரை தான் தங்கியிருக்கும்
மேன்சனில் நிறுத்த இயலாது என்பதாகக் கூறி, காருக்காக ஒரு வசதியான வீட்டையும் அவன் பெற்றுவிடுகிறான்.
நாயகன் செல்லும் அதே
பாதையில், உரங்களைப் பெற்ற தனசேகர் என்பவன், அரசியலில் பலியாக்கப்பட்டு கொலையுண்டு
போவதையும், கணபதி எனும் நபர் கோவை இரயில் நிலைய நடைமேடையில் வறியவனாய் வாழ்வதையும்
நாயகனே நாவலில் பதிவு செய்கிறான். நாயகனின் இலக்கை நாவலே எச்சரிக்கிறது என்பதையே, மேற்ச்சொன்ன
நாவலின் இரண்டு நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
நாயகன் தான் சென்றிருக்கும்
பாதையை திரும்பிப் பார்த்தபோது, எல்லாமே அவனுக்கு எரிச்சலைத் தருகின்றன. திவ்யா பரிசளித்த
‘ஸ்விஃப்ட் காரின் பின்புறம்’ ’திவ்யாவை நினைவூட்டுவதாகவே உள்ளது’ எனக் கூறியவன், ஒரு கட்டத்தில் ‘ஸ்விஃப் காரில் துருத்திக்
கொண்டிருக்கும் பின்பக்கம் தேவையற்றது’ என எண்ணுகிறான். அந்த வார்த்தைகளில், திவ்யாவின்
உறவை முறித்துக் கொள்ள அவன் மனதளவில் ஆயத்தமாகிவிட்டது புலப்படுகிறது.
இதனை அவன் திவ்யாவிடம்
கூற, அவள் எவ்வித ஆட்சேபனைகளுமற்று அவனைவிட்டு விலகிச் செல்கிறாள். தனது கணவனைவிடவும்,
நாயகனை அதிகம் காதலித்த அவள், இப்படி ஒரு நொடியில் அந்த உறவை வீசியெறிவாள் என்பதை வாசிக்கும்
எவரும் நம்ப மறுப்பார்கள். ஆனால் இவையெல்லாம் நாம் வாழும் காலத்தில், நாம் அறியாத இன்னொரு
உலகில் மிகச் சாதரணமாக நிகழ்ந்து கொண்டுதானுள்ளது. இதுபோன்ற நடப்புகளின் துணையைக் கொண்டே,
நாவல் அவைகளை எதிர்க்கின்றது என்பதாகத்தான் நான் கருதுகிறேன்.
நாயகன் சுந்தர் அண்ணாவிடம்
ஜோதிடம் கேட்கும் நிகழ்விலிருந்து நாவல் தொடங்குகிறது. ”நண்டு கொழுத்தால் வளையில் தங்காது’
என்பதைப் போல, நீ யாருக்கும் கட்டுபடாத குணத்தைக் கொண்டவன். இந்த லக்ணத்தார், யாரேனும்
ஒருவரின் வழிகாட்டுதலின்படி நடந்தால், வாழ்க்கையில் முன்னேறுவர்” என நாயகனுக்கு அறிவுரை
வழங்குவார் சுந்தர் அண்ணன். ஆனால் நாயகன் அதனை நிராகரித்து, ஏற்க மறுப்பான்.
சுந்தர் அண்ணனின் வார்த்தைகளைப்
போலவே, நாயகன் நிலைத்தன்மையற்றவனாக சுற்றித் திரிகிறான். தன்னுடைய வளர்ச்சிக்கு அடித்தளமான
சரவணனுக்கே, அவன் கட்டுப்பட மறுக்கிறான். ஆனால் இறுதியில் சரவணனை நோக்கியே அவன் நகர்கிறான்
என, நாவல் தனது முடிவுக் காட்சிகளை அமைத்திருக்கிறது. இது நாயகன் சரவணின் வழிகாட்டுதலை
ஏற்றுக் கொள்ளத் தயாராகிவிட்டான் என்கிற பொருளைத் தருகிறது.
”நேர்மையாக வாழ்கிறேன்
என்கிற தன்னகங்காரத்தை திருப்திப்படுத்துவதற்காக, உடன் இருப்பவர்கள் எல்லோரும் சேர்ந்து
செங்கல் சுமக்க வேண்டுமா என்ன? சந்திரனிடம் இதை எடுத்துச் சொன்னால் கேட்பானா?” என அதே
நாவலின் இறுதித் தருணமான இன்னொரு இடத்தில், நாயகன் கேள்வி எழுப்புகிறான். இது நாயகன்
தனது நண்பனை, தன்னை நோக்கித் திருப்ப முயற்சிக்கிறான் என்பதோடு, அவன் கொண்டிருக்கும்
பாதையை அவன் மாற்றிக் கொள்ள முன்வரவில்லை என்பதையும் காட்டுகிறது.
இதன் முடிவாய் நாவல்
எதை நமக்குச் சொல்ல வருகிறது என்பதை, நாவலாசிரியர் சரவணன் சந்திரன், பல நாவல்களின்
உத்தியைப் போல, முடிவை வாசகனிடமே அளித்திருக்கிறார்.
ரோலக்ஸ் வாட்ச் பேராசைகளால்
நிரம்பியிருக்கும், எழுத்துலகம். அது இங்கு நடக்கும் சமூகச் சீரழிவுகளை எதிர்த்து நிற்கிறதா?
இல்லை அவைகளை சரியென நியாயம் கற்பிக்க முயலுகிறதா? என்பதை வாசிப்பின் வழியேதான் நாம்
அறிய இயலும். ரோலக்ஸ் கொண்டிருக்கும் கதைக்களத்தின் நிதர்சனப் போக்குகள், விவாதத்திற்கு
எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவையாகும். பேசப்படாத மனித குலத்தின் பக்கங்களை எழுத்தில் வடித்திருக்கும்
ரோலக்ஸ், நாவலுலகில் ஓர் தனித்த
கவனத்தைப் பெரும் என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை.
-பழனி ஷஹான்
நன்றி : புதிய புத்தகம் பேசுது - மாத இதழ் (ஏப்ரல்-2016)



No comments:
Post a Comment