Friday, 3 May 2013

ஒரு நிமிடம்




வீழ்ந்து விடாதே !
விடியல் கிட்டும் சோர்வு கொள்ளாதே!

எழுந்து நின்றிடு !
ஏணிப்படிகள் காத்திருக்கின்றன தாழ்வு கொள்ளாதே !

ஒரு நாள் வரும்
உன் முகவரி உலகறிய
அதற்க்காவேனும் தோழா
ஒரு நிமிடம் !

ஒரு நிமிடம் முயன்று பார்
அது மாறும் ஒவ்வொரு நிமிடமாய் !

உன்னை வாசிக்க
ஓர் உலகம் உண்டு
அதற்க்காவே
நீ சுவாசிக்க வேண்டும் சோதனைகளை
முயற்சிகள் பல கொண்டு !

வெற்றிகள் உண்டு உன்னில்
வெற்றுக் காகிதமாய் !
அதை நிரப்பிடு தோழனே
தன்னம்பிக்கை எனும் பேனாவில்
முயற்சி எனும் மை ஊற்றி !

இலட்சியம் கைகொள்ள ஆவலுண்டு
சாதனையை வென்றெடுக்க முயற்சிகளுண்டு
பின் ஏன் இன்னும் அச்சம்
அதில் முந்தியவர்களை கண்டு !

அவ மதிப்புகளால்
மனத் தாழ்வுக்குள் அகப்படாதே
நீ தழைத்தோங்க
உன்னை தாங்கப் போகும்
ஆணி வேர்கள் அவை !

பாறைகள் பல கடந்து
இடறுகள் பல தாண்டி
இரவு பகல் பற்பல கழித்து
பெரும் நெடிய பயணம் மேற்க்கொண்டே
நதிகள் வெல்லுகின்றன
கடலாய் மாறி !

சிற்சிறு கற்களும்
பொடி பொடி மண் துகள்களும்
மெல்ல மெல்ல சேர்புகள் கொண்டே
உயர்ந்து நிற்கின்றன மலைத் தொடர்களாய் !

செய்வதற்க்கு ஏதுமில்லையென
வெறுமை ஏமாப்பு கொள்ளாதே !
ஏதேனும் செய்திடு
வெற்றாய் கழிந்திடும் காலத்திற்க்கு
விருந்தளித்திடு
அது உனக்கு பரிசளித்திடும் !

பெரும் புத்தகத்திற்க்கு தொடக்கம்
சிறு பொட்டு மை துளிகளே !
பெரும் சாதனைகளின் தொடக்கம்
தடுமாறி விழுவதிலேயே !

தடுமாறி தடுமாறி விழுந்திடு
ஆனால் தடம் மாறி மட்டும் எழுந்திடாதே !

வழிகள் இல்லையென கவலைகள்
களைந்திடு
நீ சென்றால் அதுவே மாறும்
பாதைகளாய் !

தோழா !
ஒரு நிமிடம் முயன்று பார்
அது மாறும் ஒவ்வொரு நிமிடமாய் !
ஒவ்வொரு நிமிடமும் உருமாறும்
நாளைய சாதனைக் களமாய் !

(தூது ஆன்லைன் இணைய தளத்தில் வெளியான எனது படைப்பு)

- பழனி ஷஹான் 

No comments:

Post a Comment