Monday, 7 July 2014

திருக்குரானையும், திருக்குறளையும் மறந்த செயல்!



முதலில் அவர்கள் யூதர்களைப் பிடிக்க வந்தனர்.
நான்பேசவில்லை: ஏனெனில் நான் யூதனில்லை.
பின்னர் அவர்கள் கம்யூனிஸ்ட்டுகளைப் பிடிக்க வந்தனர்.
நான் பேசவில்லை: ஏனெனில் நான் கம்யூனிஸ்ட்டில்லை.
பின்னர் அவர்கள் தொழிற்ச்சங்கவாதிகளை பிடிக்க வந்தனர். அப்போதும்
நான் பேசவில்லை: ஏனெனில் நான் தொழிற்ச்சங்கவாதியுமில்லை.
பின்னர் அவர்கள் என்னைப் பிடிக்க வந்தனர்.
அப்போது எனக்காக பேச யாருமே இல்லை
என்கிற புகழ்பெற்ற வரிகளின் இறுதி நிலைதான் இன்று இலங்கை இசுலாமியர்கள் அடைந்துள்ளனர்.
1987-தாத்தான்குடியில் உள்ள மசூதி விடுதலைப் புலிகளால் தாக்குதலுக்கு உள்ளாகின்றது. யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ் பேசும் இசுலாமியர்கள் வெளியேற்றம் செய்யப்படுகின்றனர். இசுலாமியர்கள் விடுதலைப் போருக்கு எதிராக செயல்பட்டனர் என்கிற காரணமும் முன்வைக்கப்பட்டது இச்சம்பவங்களுக்கு. இதிலிருந்து தொடங்குகிறது மார்க்கத்தால் இசுலாத்தினை ஏற்ற தமிழ் இனத்தாரின் புலிகளின் எதிர்ப்பு நிலைகள். பல தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பெரும் தமிழினப் பற்றால் புலிகளுக்கும், அதன் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும், ஆதரவும், உதவிகளும் செய்து வந்திட்டிருந்த பழனிபாபா அவர்கள், இலங்கையிலேயே சென்று புலிகளுக்கு எதிராக கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துவிட்டு வந்தார்.
இதுதான் காரணம் இசுலாமியர்கள், புலிகளை வெறுப்பதற்கு. இதனாலேயே 2009-ம் ஆண்டில் சிங்கள இராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் நிகழ்ந்த போரின் போது, அதாவது ‘இறுதி ஈழப் போர்’ எனக் குறிப்பிடப்படும், தமிழ் இனத்தார் ஒன்றரை இலட்சம் பேர் கொன்றொழிக்கப்பட்ட சம்பவத்தின் போது இதே தமிழ் பேசும் இலங்கை வாழ் இசுலாமியர்கள், சிங்கள இராஜபக்சே அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டனர். இதன் நீட்சியாக இராஜபக்சேவுக்கு எதிரான எந்த ஒன்றையும் அங்குள்ள இசுலாமியர்கள் எதிர்த்தும், சிங்கள அரசுக்கு ஆதரவு அளித்தும், புலிகளின் மீது கொண்ட கோபத்தால் மொத்த தமிழ் சமூகத்திற்கும் எதிராகச் செயல்பட்டனர்.
விளைவு, இன்று இதே சிங்கள அரசினால் இயக்கப்படும், பொதுபலசேனா எனும் தீவிரவாத, பேரினவாத அமைப்பு இசுலாமியர்களின் மசூதிகளை இடித்தும், கடைகளை அடித்து உடைத்தும், வீடுகளை கொளுத்தியும், பலரைக் காயமுற வைத்தும், 3-பேரை கொன்றும் தீர்த்துள்ளது. இது சிங்களத்தின் இன அழிப்பின் நீட்சிதானே ஒழிய வேறொன்றுமில்லை.
“ஒரு சாரர் மீது இருக்கும் வெறுப்பு, உங்களை நீதி செலுத்துவதினின்றும் தடுத்துவிட வேண்டாம்”
எனும் திருக்குரானின் வசனங்களைப் படித்திட்ட இசுலாமியர்கள், அதனை மறந்திட்டதினாலே இந்த விளைவுகள். என்னதான் புலிகள் தவறு செய்திருந்தாலும், அது புலிகளின் தவறாக மட்டுமே பார்க்க வேண்டும். இதனை மறந்துவிட்டு இசுலாமியர்கள், ஒட்டுமொத்த இசுலாம் இல்லா தமிழர்களை கொன்றொழிக்க துணையாக இருந்துள்ளதானது, இவர்கள் தங்களின் புனித நூலின் வசனங்களை அவமதித்த செயலாகத்தான் தோன்றுகிறது.
புலிகள் தவறு செய்திருந்த போதிலுமே கூட, ஏனைய தமிழர்களுக்கு இவர்கள் செய்துள்ளது அநீதியென்று பார்க்கப்படும் அதேவேளை, புலிகள் தங்களின் தவறுகளுக்காக மண்ணிப்புக் கேட்டும், வெளியேற்றம் செய்யப்பட்ட இசுலாமியர்களை மீள் குடியேற்றம் செய்த பின்னரும் இவர்கள் புலிகளை மண்ணிக்காது செயல்பட்டுள்ளனர் என்பது எவ்வளவு பெரிய குரோத மனப்பாங்கு?
ஆம், புலிகள் தங்களின் தவறுகளை ஒப்புக் கொண்டு மண்ணிப்பும் கேட்டுவிட்டனர். இதெல்லாம் அச்சம்பவம் நிகழ்ந்திட்ட சில காலத்திற்க்குள்ளாகவே நிகழ்ந்தவைகள். ஒருவர் தன் தவறை உணர்ந்து மண்ணிப்பு கோரும்போது அவர்களிடம் சமாதானம் செய்வது இசுலாமிய மரபா இல்லை செய்தது செய்ததுதான் என எதிர்ப்பது இசுலாமிய மரபா? என்பதனை உண்மை இசுலாமியர்கள் சிந்திக்க வேண்டும்.
புலிகள் செய்த தவறை அந்த தருணத்தில் மட்டுமே கண்டித்திட்ட பழனிபாபா அவர்கள், மீண்டும் அவர்கள் மண்ணிப்புக் கேட்டுக் கொண்டு சமரசம் ஆகிவிட்ட பின்னர், அவர் தொடர்ந்து தனது புலி ஆதரவினை செய்துதான் வந்துள்ளார். அதேசமயம் புலிகளின் தவறை வைத்து அவர் தமிழர்களை எடைபோடவுமில்லை. தொடர்ந்து அவர் தமிழினத் தலைவர்களோடும், சமூகத்தோடும் நல்லிணக்கத்தோடே செயல்பட்டார். என்னதான் புலிகள் ஒருமுறை தன் சொந்த சமூகத்தின் மீதே தாக்குதல் தொடுத்திருந்த போதும் கூட, இராசீவ் காந்தியின் படுகொலையில் புலிகளுக்கு தொடர்பில்லை எனவும், இதிலுள்ள காங்கிரசாரின் பின்னனிகளையும் தெளிவாக சுதாரித்துப் பேசினார் பழனிபாபா. இதுதான் இசுலாமிய மரபு. பல தமிழ் தேசிய தலைவர்களும் புலிகளுக்கான ஆதரவை மறைத்துக் கொண்டு பதுங்கிய போதும் கூட, புலிகள் தவறாக குற்றம் சாட்டப்படுவதினை எதிர்த்து, புலிகளுக்கு ஆதரவுக் குரல் எழுப்பினார் பழனிபாபா. இந்த சமயம் தடா போன்ற கடும் சட்டங்கள் புலி ஆதரவாளர்களின் மீது போடப்பட்டிருந்து கொண்ட கால கட்டம். இப்பொழுது சிந்தியுங்கள் பழனிபாபாவின் செயல்கள் எவ்வளவு முக்கியமானதாக இருந்துள்ளது என்பதனை. இதுதான் இசுலாத்தின் வழிச் செயல்கள்.
ஆனால் இவைகளை எல்லாம் கிஞ்சிற்றும் சிந்திக்காது, இசுலாத்தின் மாண்புகளை காலில் போட்டு மிதித்து செயல்பட்டதின் விளைவு, இதனினும் மனிதத்தினை காலில் போட்டு மிதித்ததின் விளைவு இன்று இசுலாமியர்கள் சந்தித்துள்ளனர்.
 விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு இடத்தில் இப்படி குறிப்பிட்டார், “சிங்களர்களின் நோக்கம் மொத்த தமிழின அழிப்புதான். இன்று எங்களை அழிக்கின்றனர். நாளை அது அப்படியே இசுலாமியர்களை நோக்கி பாயும். ஆகையால் நாம் தமிழ் பேசும் இனமாய் ஒன்றிணைய வேண்டும்’ என்றார்.
இதுதான் கண்கூடு இப்பொழுது. இந்த சிங்களத்தாரின் பூர்வக் குடிகளென நாம் பின்னோக்கினால் அது ஆர்ய இன வழித்தோன்றல்களாக உள்ளன. இவர்கள் இந்தியாவில் பார்ப்பனர்களாகவும், இலங்கையில் சிங்களர்களாகவும், உலக அரங்கில் யூதர்களாகவும் இருக்கின்றனர். இந்த இன நேசம்தான் இலங்கை,இந்தியா(பார்ப்பனர்கள்), இஸ்ரேல் ஆகியவைகளின் கூட்டியல்புகளாகும். இவர்களின் கரங்கள் இவர்களைத் தவிர ஏனைய இனத்தாரை அழித்து ஆள்வதுதான். இதற்க்காக இவர்கள் அதிகமாக கை கொள்ளும் ஆயுதம் ‘பிரித்தாள்வது’
இந்த பிரித்தாள்வதின் ஆயுதத்தினால்தான் நாம் இன்று தாக்கப்பட்டுக் கொண்டுள்ளோம். அது இந்தியாவானாலும் சரி, இலங்கை ஆனாலும் சரி, உலக அளவிலானாலும் சரி.
இப்பொழுது பிரபாகரன் அவர்களின் வார்த்தைக்கு வருகிறேன், ‘தமிழ் இனத்தாராய் ஒன்றினைய’ வேண்டும் என்றார். இன்று நமக்கு இதுதான் தேவை. புலிகள் செய்தவற்றிற்கு மண்ணிப்பும், மீள்குடியேற்றமும் செய்துவிட்டனர். ஆனால் இதுவரை சிங்களர்களால் வெளியேற்றப்பட்ட இசுலாமியர்களை மீள்குடியேற்றம் செய்யாதிருக்கும் இராஜபக்சே அரசினை நாம் என்ன செய்யப் போகிறோம்? இதுமட்டுமா தொடர்ந்து மசூதிகள் இடிக்கப்படுவதும், புர்கா அணியத் தடைவிதிப்பதும், ஹலால் அங்கீகாரத்திற்கு தடை விதிப்பதும் என நீளும் இவர்களின் விரோதச் செயல்களுக்கு நாம் என்ன எதிர்வினையாற்றியுள்ளோம்? இனி என்ன ஆற்றப் போகிறோம்?
இனியும் நாம் புரிதலின்றி பிரிந்து நின்றால், பேரினவாதத்தின் கைகளினால் நமது குரல்வலைகள் தொடர்ந்து நெறிக்கப்படும். ஆகையால் இசுலாமியர்கள் நாம் ஒன்றை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும், நாம் மார்க்கத்தினால், இறைவழிபாட்டால்தான் மாறுபட்டவர்களே தவிர இனத்தாலும், மொழியாலும் தமிழ் பேசுபவர்கள் என்கிற உண்மையினை உணர்ந்து. தமிழ் மக்கள் நமது தொப்புள் கொடி உறவுகள் என்பதனையும் நினைவில் கொண்டு வந்து, இணைந்து செயலாற்ற வேண்டும். நமது தவறுகளை நாம் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.
இசுலாமியர்கள்தான் தவறு செய்துவிட்டார்களெனில், இதனையே காரணமாய் வைத்து ஏனைய தமிழர்கள் இவ்விடயத்தில் இசுலாமியர்களுக்கு எதிராக வைக்கும் கூற்றுகள், “இரஜபக்சேவினை ஆதரித்தீர்களே, உங்களுக்கு இது தேவைதான்” என்றபடி உள்ளது. செய்தீர்கள் அனுபவிக்கிறீர்கள் என்றும் சொல்கிறார்கள் ஏனையோர். என்ன தமிழர்களே இதுதான் தமிழ் கூறும் நல்லுலகா? நீதமா?
“தகுதி யெனஒன்று நன்றே; பகுதியால்
பாற்பட் டொழுகப் பொறின்” (குறள்)
“நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றா ராதல் கடை” (குறள்)
பகைமையிலும் நடுநிலைமையையும், மனிதநேயத்தையும் பேண வேண்டும் எனக் கூறிடும் வள்ளுவனின், குறள்களை மறந்து செயல்படுகிறீர்களே? இதுதான் உங்களின் இனப் பற்றா? தமிழ் மரபா? என்பதனைச் சிந்திக்க வேண்டுகிறேன்.
அதேசயம், நான் மேலே குறிப்பிட்டுள்ளபடி பழனிபாபா போன்றோரின் தமிழினப் பற்றுகளையும், அவர்களின் புலிகளுடனான தொடர்புகளையும், அப்துல் ரவூஃப் போன்றோரின் ஈழத்திற்க்கான உயிர் தியாகங்களையும், புலிகளின் படைப்பிரிவில் ‘ஜீனைத்’ என முஸ்லீம் பெயரில் தனி படைப்பிரிவே வைக்கப்பட்டிருந்ததினையும் சற்று திருப்பிப் பார்க்க வேண்டுகிறேன்.
இதெல்லாம் 2009-களுக்கு முந்தையவைகள் என்றால், இதற்குப் பிறகு தமிழகத்தில் நிகழ்ந்த பலவிதமான ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம், போன்ற இசுலாமிய அமைப்புகளையும், தமிழர்களுக்கான பிரச்சனைகளை எல்லோரும் சென்னையினுள்ளே சுருக்கி வைத்திருந்த போது, அதனை டெல்லி மாநகரத்தில் ஒலிக்கச் செய்த எஸ்.டி.பி.ஐ போன்ற கட்சிகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இசுலாமியர்களின் இந்த அணுகுமுறைகளால்தான், மே-17, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் போன்ற பொதுச் சமூக, தமிழ் அமைப்புவாதிகள் இலங்கை இசுலாமியர்களுக்கு ஆதரவாக குரலெழுப்பி கண்டனக் கூட்டங்களை நிகழ்த்தியுள்ளனர். இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் ஒருங்கிணைத்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து இசுலாமிய அமைப்புகளோடு, தமிழ் தேசிய, தலித் அமைப்புகளும், கட்சிகளும் பங்கெடுத்துள்ளனர் எனும் நிகழ்கால நிலைகளை தமிழ் பேசும் உறவுகள் அறிந்து கொள்ள வேண்டும்.
இசுலாமியர்கள் தாக்கப்பட்டதினை எதிர்த்து அனைத்து இசுலாமிய அமைப்பினரும் ஒன்றன் பின் ஒன்றாக இலங்கை தூதரகத்தை நோக்கி படையெடுத்ததும், அனைத்து அரபு நாட்டு இலங்கைக்கான தூதுவர்களும் இலங்கை அரசிடம் நெருக்கடிகளை ஏற்ப்படுத்துவதும், ஐ.நா தனது கண்டனத்தை இலங்கைக்கு தெரிவிப்பதும் போன்ற சர்வதேச நெருக்கடிகளை நாம், மொத்ததில் தமிழர்கள் தாக்கப்படுவதற்கு எதிராக ஏற்ப்படுத்தியிருக்க வேண்டும், இல்லை இனிமேலாவது ஏற்ப்படுத்த வேண்டும்.
1987 புலிகளின் தவறு, 2009 இசுலாமியத் தமிழர்களின் தவறு என இருதரப்பிலும் நிகழ்ந்துள்ள தவறுகளின் பின்னனிதான் பிரித்தாளும் சூழ்ச்சி என்பதனை உணர்ந்து, அனைவரும் தமிழ் பேசும் இனத்தார் என்கிற பொதுக் குறீயீட்டில் ஒன்றிணைய வேண்டும். இதுதான் இனி நாம் செய்ய வேண்டியது. இவைகளைத் துரிதப்படுத்துவோம், வெற்றி பெறுவோம், பாசிசத்திற்கு எதிராக, சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக!

நன்றி: கீற்று இணையதளம்
இணைப்பு தளம்: http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/26796-2014-07-03-21-51-23
தோழமையுடன்
- பழனி ஷஹான்


உயிர் வலி – காட்சிக்கு காட்சி!


“நான் அளித்த பேரறிவாளனின் வாக்குமூலங்கள், நான் கொடுத்த அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதில் அவர் ‘எனக்கு இதுபற்றியெல்லாம் ஏதும் தெரியாது’ என்கிறவைகளை பதிவு செய்யவில்லை. இந்த வாக்குமூலத்தின்படியும் சரி, உளவுத்துறையிலுள்ள வேறெந்த ஆவணங்களிலும் சரி பேரறிவாளனின் மீது குற்றங்கள் நீரூபிக்கபடவில்லை. ஒருவர் அநியாயமாக தண்டிக்கப்பட்டதில் நான் ஒரு முக்கிய காரணம் என்பதனை எண்ணி வருந்துகிறேன்”
-திரு.தியாகராஜன்.ஐ.பி.எஸ்.
உயிர்வலி எனும் ஆவணப்படம்;
இராசீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தூக்குதண்டனையை எதிர்நோக்கியிருக்கும் திரு.பேரறிவாளன் அவர்களை மையமாக வைத்து, மரண தண்டனைக்கு எதிரான காட்சிப் போராட்டமாக, ‘மரணதண்டனை எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின்’ படைப்பாக வெளிவந்துள்ளது.
இந்த ஆவணப்படத்தில், பேரறிவாளனின் வாக்குமூலத்தை டேப் செய்த சி.பி.ஐ அதிகாரி தியாகராஜன் அவர்கள் மனம் வருந்தி சொல்லிய வார்த்தைகள்தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது.
23-ஆண்டுகால ஒரு நெடிய போராட்டத்தின், உயிர் ஊசலின் அரசியலையும், அயோக்கியத்தனங்களையும், அநீதிகளையும் கண்ணீர்த் துளிகளாகவே காட்சிகள் நகர்த்தியிருக்கின்றன.
இராசீவ்காந்தி கொல்லப்பட்டதில் எந்தவித தொடர்பும் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஆயுள் சிறையும், மரணதண்டனையும் பெற்றுள்ளவர்களின் மீது இல்லை என்பது யாவரும் அறிந்த பட்டவர்த்தனம். ஆனாலும் நீதியை சனநாயகக் நாட்டில் எதிர்பார்க்கவே முடியவில்லை அல்லது முடிவதில்லை.
ஒரு ஆவணப்படத்திற்கே உரிய எல்லாக் கோணங்களோடும், பெரிய திரைக்கான வரவேற்ப்பு காட்சிகளையும் அமைத்து ஒரு அழகியலை கொடுத்துள்ளனர். ‘docu-drama’ எனும் பட வகையில் அமைந்துள்ளது இந்த படம். அதாவது உண்மைகளை சில அழகியல் வேலைகளோடு வடிவமைத்துச் சொல்வது.
பிரகதீஸ்வரனின் இயக்கத்தில், பா.விஜயின் பாடல் வரிகளுக்கு குரல் தந்துள்ளார் உன்னி கிருஷ்ணன். மேலும் ஜேம்ஸ் வசந்த் இசையில் நகர்கிறது முழுப்படமும்.
இதுவரை மரண தண்டனைகளை தடை செய்துள்ள நாடுகளின் எண்ணிக்கையையும், உலகில் அதிகமாக மரணதண்டனையை அளித்துக் கொண்டிருக்கும் நாடுகளின் பட்டியலோடும் துவக்கமாகிறது. மரணதண்டனை நீதிக் கொலைகள் ஆகிய இரண்டையும் பற்றிய சிலவற்றை பேசும் படம், இந்தியாவில் இதுவரையில் நடந்துள்ள, நிறைவேற்றியுள்ள மரண தண்டனைகளின் எண்ணிக்கையை மாநில வாரியக வரிசைப்படுத்துகிறது. இறுதிக் காட்சிகளில், இதுவரை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு பின்னரான காலங்களில் நிரபராதி எனவும், அக்கைதி தூக்கிற்கு உகந்தவரல்ல என்று அறியப்பட்டவர்களின் விவரங்களையும் விவரிக்கின்றது. இதில் ஏனோ எந்தவித ஆதாரங்களும் நிரூபிக்கப்படாத நிலையில், வெறும் கூட்டு மனசாட்சி என்கிற விநோத முடிவில் தூக்கு பெற்ற அப்சல் குருவை நினைவு கூறவில்லை?
நீதியரசர்.கிருஷ்ணய்யரின் எதிர்ப்புக் குரலோடு, இவ்வழக்கில் தூக்கு தண்டனையை வழங்கி தீர்ப்பு அளித்த நீதிபதி.கே.டி.தாமஸின் மன உறுத்தல்களையும், தீர்ப்பு சரியானது இல்லை என்கிறதினை அவரின் வார்த்தைகளில் இருந்தே பதிவு செய்துள்ளனர். மேலும் இதில், ‘வாழும் கலையின்’ திரு.ரவி-சங்கர் அவர்களும் தன்னுடைய எதிர்ப்புக் கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
மக்களிடம் எடுக்கப்பட்டுள்ள கருத்துக்களில் பலரும் தூக்கு தண்டனைக்கு எதிராகவும், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கான விடுதலையையுமே வேண்டுகின்றனர். மக்களில் ஒருவர் இப்படிச் சொல்கிறார்; “தவறே செய்திருந்தாலும் கூட மண்ணிப்புண்டு, இத்தனை ஆண்டுகாலம் முறையானது இல்லை” என.
தமிழகத்தின் முதலமைச்சர்.செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின், கருணை மனு மீதான மறுபரிசீலனைக்கான சட்டமன்ற தீர்மான வாசிப்புக் காட்சியும் இதில் இடம்பெற்றுள்ளது. இதனடுத்து சமீபத்தில் இவர் மரண தண்டனையைக் குறைத்து ஆயுள் தண்டனையாகவும், மேலும் கால அவகாசங்களை கொடுத்து விடுதலை செய்ய வேண்டும் என்று ஏற்றிய தீர்மானங்களெல்லாம் இதன் பின்னால் நிகழ்ந்தவைகள்.
மரண தண்டனைக்கு அநீதமாக ஆளானது பேரறிவாளன் மட்டுமில்லை என்றாலும், இவர் மூலம் படம் எல்லோருக்குமான குரலை எழுப்புகின்றது. பேரறிவாளனின் பிறப்பு, வளர்ப்பு, கல்வி என பல முகாந்திரங்களில் அவருக்கு இருந்த திறன், நல்ல குணங்களை படம் பிடித்ததோடு, அவரின் சிறை வாழ்க்கையில் அவரின் மனிதாபிமான நடவடிக்கைகளையும், நன்னடத்தைகளையும், சீரிய திறன்களையும், சிறைத்துறை அதிகாரிகள் வாயிலாகவும், சிறைக் கல்லூரி பேராசிரியர்கள் வாயிலாகவும், தன்னோடு சிறையில் இருந்து விடுதலை பெற்று வெளியிலுள்ள சிறைத் தோழர்கள் வாயிலாகவும் அடுக்கடுக்காக பதிவு செய்துள்ளனர்.
பேரறிவாளனின் ஆசிரியர்கள், உடன் பயின்றவர்கள் போன்றோர்கள் அவர் மீது வைத்திருக்கும் மரியாதைகளை படம்பிடித்து அப்படியே அவருக்காக இன்னும் உயிர்ப்போடு போராடிக் கொண்டிருக்கும், அவரின் அம்மா, அற்புதம் அம்மாவின் வலியான வார்த்தைகளும், போராட்டச் செயல்களும் கூறப்படுகின்றன. மேலும் அவரின் உடன் பிறந்த சகோதரிகள், சகோதரிகளின் கணவர்கள் ஆகியோரின் கண்னீர்களையும், அவரின் அப்பா குயில்தாசனின் குரலையும் வலியோடு காட்டுகிறது காட்சித் திரை.
சாந்தன், முருகன், பேரறிவாளனுக்கு ஆதரவாக தமிழக வீதிகளில் நிகழ்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளின், அமைப்புகளின் போராட்டக் களங்களின் காட்சிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பேரறிவாளனின் உடன் இருந்து வெளிவந்துள்ள ஒரு முன்னாள் சிறைவாசி இப்படிச் சொல்கிறார்; ‘வெளியில இருந்து தப்பு செஞ்சிட்டு உள்ள போனேன், உள்ள போயி ஒரு நல்ல மனிதரோட பழக்கத்தால இப்போ நல்லபடி வாழ்ந்திட்டு இருக்கேன்’ என்றும், இன்னொருவர் சொல்கிறார்; ‘எனக்கு படிப்பெல்லாம் எதுக்கு என்றேன், அவர்தான் படி படினு சொல்லி படிக்க வச்சாரு, நான் பத்தாம் வகுப்பு தேர்ச்சியாகி வெளிய வந்தேன்’ என்றவாறு.
ஏன் இப்படி பம்பரமாக ஓடுகிறீர்கள் எனக் கேட்ட தோழரிடம், உங்களைப் போன்று எனக்கில்லை காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணிவரைதான் என்னை வெளியில் விடுவார்கள் என சொல்லிவிட்டு, இப்படிச் சொன்னாரம் பேரறிவாளன். “நான் நிலவினைப் பார்த்து பல்லாண்டு காலம் ஆகிவிட்டது” என…!
‘சோ’ வென்று வீசும்
உணதோசை
‘சா’ வறியா அந்த
நாட்களைக் கேட்கிறது

நனெங்கே போவேன்
ஆகையால்
மழையே
திரும்பிப் போய்விடு”

இது மழைக்காலத்தில் சிறையில் பேரறிவாளன் எழுதிய ஒரு நெடுங்கவிதையில் சில வரிகள். மழையே திரும்பிப் போயிவிடு எனும் இம்முழுக்கவிதையும் திரையில் நனைந்தது.
ஒரு நீதியின் அபயக் குரலை அப்படியே படம்பித்துக் காட்டியுள்ளது இந்த ஆவணப்படம். நான் மேலே சொல்லியுள்ளபடி விடுபட்டுள்ள அப்சல் குருவின் விடயம் மட்டுமே ஒரு சின்ன மறதியாக பார்வையாளனின் புறமிருந்து சொல்லிக் கொள்கிறேன்.
“உயிர் வலி” காட்சிக்கு காட்சி கண்ணீரோடு கடக்கின்றது. ஒரு உயிரைக் காப்பாற்றும் பணியைக் கொண்டுள்ள இவ்வாவணப்படத்தை எடுத்துள்ள படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்!

நன்றி : சிறகு வார இதழ்
தள இணைப்பு : http://siragu.com/?p=14426
தோழமையுடன்
- பழனி ஷஹான்


Tuesday, 15 April 2014

சீமான் உடனான சந்திப்பு

புரட்சியாளர்.பழனிபாபா அவர்களைக் குறித்த ஆவணப்படம் மற்றும், 'வாழ்வும் போராட்டமும், எனும் வரலாறு மற்றும் கட்டுரைத் தொகுப்புகளின் நூலிற்காக, திரைப்பட இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான செந்தமிழன்.சீமான் அவர்களை அவரது வீட்டில் சந்தித்து நேர்காணல் செய்தோம்.

உடன்: தோழர்கள்.வழக்கறிஞர்.உமர்கயான், சதீஷ்குமார், இராஜராஜ சோழன் ஆகியோர் உள்ளனர்.




-பழனி ஷஹான்

Tuesday, 11 February 2014

பழனிபாபாவின் 17-வது நினைவுதினம்

புரட்சியாளர் பழனிபாபா-வின் 17-வது நினைவு தினத்தில், அவரது நினைவிடத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு, இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இயக்கத்தினர் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டத்தில் பாசிச பயங்கரவாதம் குறித்து பேசினேன்.
பின்னர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில விவசாய அணிச் செயலாளர், அண்ணன் ஆற்றல்மிகு பேச்சாளர்.திரு.பெ.ச.உலகநம்பி அவர்களோடும், வழக்கறிஞர்.சே.ஜே.உமர்கயான் அவர்களோடும் தனி உரையாடல்கள் கிடைக்க, அவர்களிடம் உரையாடினேன்.

                                                                                                              
                                                                                                                              தோழமையுடன்

பழனி ஷஹான்
PALANI SHAHAN

சதத் ஹாசன் மாண்டோ - நூற்றாண்டு விழா

பதியம் திரைப்பட மற்றும் இலக்கிய அமைப்பின் சார்பாக திருப்பூர் முயற்சி மக்கள் அரங்கில் நிகழ்ந்த, சதத் ஹாசன் மாண்டோ நூற்றாண்டு விழாவில், 'திற' எனும் குறும்பட விமர்சன உரை செய்தேன்.  பின்னர் அதன் இயக்குநர் தோழர்.பிரின்ஸ் என்னரசு பெரியார் அவர்களோடும், தோழர்.வழக்கறிஞர்.சே.ஜே.உமர்கயான் அவர்களோடும்.

திருப்பூர் புத்தகத் திருவிழா



திருப்பூரின் 11-வது புத்தகத் திருவிழாவின் நிறைவு நாளில், தோழர்கள்: வழக்கறிஞர்.சே.ஜே.உமர்கயான், கவிஞர்.புகைப்படக் கலைஞர்.பாரதி வாசன், கணிப்பொறி வடிவமைப்பாளர்.சதிஷ்குமார், கவிஞர்.இரத்தினமூர்த்தி, மற்றும் பிறரோடு.























தோழமையுடன்
- பழனி ஷஹான்


Sunday, 26 January 2014

கோவை இலக்கிய கூட்டம்

கோவையில் 26-01-2014 அன்று நடைபெற்ற எழுத்தாளர் எச்.பீர் முஹம்மது அவர்கள் எழுதியுள்ள 'நவீன அரபு இலக்கியம்' எனும் நூலின் அறிமுகக் கூட்டம் முடிந்த பின்னர், தோழர்.எச். பீர் முஹம்மது, வழக்கறிஞர் தோழர்.சே.ஜே.உமர் கயான், தோழர்.சதீஷ்குமார், வழக்கறிஞர்.முருகவேல் ஆகியோருடன் ஒரு இனிய உறவாடலின் போது








தோழமையுடன்
- பழனி ஷஹான்

எழுத்தாளர் எச்.பீர் முஹம்மது உடனான சந்திப்பு

கீழத்தேய சிந்தனையாளர்கள், குர்து தேசிய இனப் போராட்டம் மற்றும் நவீன அரபு இலக்கியம் போன்ற புத்தகங்களை எழுதிய எழுத்தாளரும், அறிவுசார் களத்தில் தொடர்ந்து பயணித்துவரும் தோழர் எச்.பீர் முஹம்மது அவர்களோடு.





Tuesday, 14 January 2014

வழக்கறிஞர் ஜீவகிரிதரன் உடனான சந்திப்பு

எழுத்தாளர் மற்றும் ஆவணப்பட இயக்குநருமான ஆளூர் ஷாநவாஸ் அவர்களின், ‘நீதியின்றி அமையாது உலகு’ புத்தக வெளியீடு சென்னை கவிக்கோ அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கு கொண்ட தருணத்தில், முஸ்லீம் லீக் கட்சியின் தமிழ் மாநிலச் சட்ட செயலாளரும், தேசிய செயற்குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான ஜீவகிரிதரன் அவர்களைச் சந்தித்து உரையாடினேன்.


புரட்சியாளர் பழனிபாபா-வின் ஆளுமைகள் மற்றும் வரலாறு குறித்த கட்டுரைத் தொகுப்பு நூலிற்காக அன்புச் சகோதரர் பி.எம்.ஹெச்.செங்கிஸ்கான் அவர்களைச் சந்தித்தபோது.

புரட்சியாளர் பழனிபாபா-வின் ஆளுமைகள் மற்றும் வரலாறு குறித்த கட்டுரைத் தொகுப்பு நூலிற்காக, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநிலத் தலைவர், மரியாதைக்குரிய அண்ணன், பழனிபாபாவின் உடன் பயணித்த, திரு.கே.எம்.சரீப் அவர்களைச் சந்தித்த போது.

Tuesday, 10 December 2013

கால்கள் பின்னோக்குகின்ற பொழுது



கால்கள் பின்னோக்குகின்ற பொழுது
ஆத்மாவில் ஆழியின் சப்தம்
இடைவிடாது ஒலிக்கின்றது!
இட மார்பில் துளை உண்டாகி
ஏதோ கசிகின்றது!
நிசப்தமான சூழலிலும்
ஒருவித கூச்சல்
கதிரவனும் கருப்பாய்த் தெரிகின்றது!

கால்கள் பின்னோக்குகின்ற பொழுது
கடந்து வந்த யாவும்
எதிர்ப்புகள் நிரம்பிய பாதைகளாய் தென்படுகின்றன!
கழிவுகள் தேங்கிய, காயங்கள் நிரம்பிய
குழிகள் அடர்ந்த பாதைகளாகவே தென்படுகின்றன!

கால்கள் பின்னோக்குகின்ற பொழுது,
ஆதரவிற்கான குரல்கள் தோன்றி,
அறிவுரை போதனைகள் சொல்லி,
அறிவிழியென வலுக்கட்டாயமாக கூற வைக்கின்றன!

கால்கள் பின்னோக்குகின்ற பொழுது,
காரியசித்தி, சுயநலக்காரன் என்று
நம்மை சடைந்து கொள்கின்றன!
புது உலகம் வரவேற்கா விட்டாலும்
பழைய உலகம் தூற்றுகிறது!
தூற்றிவிட்டு போகட்டும்
நாளை என் புகழ் பாடும் பெரு மழை!

நன்றி: மாற்று (maattru.com)இணையதளம்:
http://maattru.com/கால்கள்-பின்னோக்குகின்ற/#more-3413

-பழனி ஷஹான்

மதம் மாற்றப்பட்ட மசூதி!



அயோத்திய மண்ணில் அசுரக் கொடி
திசம்பர் ஆறில் ஏற்றிய நெறி
இந்திய இறையாண்மையை முறித்து
பூணூல் பொசுக்கிய புனிதத்தல ஒழிப்பு!

இத்தேசத்தின் இறையாண்மை இதயத்திலிருந்து
காவிக் கரங்களால் சிகப்பு நீர் சிதறியதே
மனித இறையொன்று தோற்றுவிக்கப்பட்டதனால்!

வேற்றுமையில் ஒற்றுமையே
வேதமெனப் பாடும் நாட்டிலே
மதம் மாற்றப்பட்டதே மசூதியொன்று!

உடல் உறுப்பில் சிறு சதை சிதைந்து
ஊனமுற்றுத் துடிக்கின்றது எந்நாடு
அதை வெற்றியெனக் கொண்டாடுகிறது
நாடற்ற நாடோடிக் கூட்டமொன்று!

வருடம் பிறந்தாலன்றி விழி நோக்குவதில்லை
விசும்பி அழும் மசூதியின் உறவுகள்!

வீதியில் நின்று இழப்பு ஓலமிடுவதினால்
விடியல் கிடைத்திடுமோ குருடர்களே?

விதியென்று தலையிலடித்துக் கொண்டாய்
நீதி மரித்திடாதென அம்மன்றம் ஏறியும் நின்றாய்!

கைகளில் கடப்பாரை தாங்கிய கயவர்களின்
மாறுவேடமே சுத்தியல் தாங்கியவரென்று உணர்ந்தாய்!

ஆட்சித் தலைமை முதல், தாசன் வரை
தன் சீடர்கள் பரப்பி – உன் குரலை
குருதிகளற்றதாய் நசுக்குமவன் திறனை
இசுலாமியனே நீ இன்றும் அறிந்தபாடில்லை!

கயமத்தால் கருவறுக்கப்பட்ட மசூதியின் இறப்பு
கருப்பு நாளென்று ஒரு சாயலில் கொள்ளும் வேளையிலே
அது காவிகளின் நாள் என்பதனையும்
மறந்திடாதே! மனிதமுள்ள மனிதச் சமூகமே!

கருப்பு நாளை வெண்மையாய் படரச் செய்து
காவிகளுக்கு அந்நாளை கசப்பாக்கிட
கட்டி எழுப்புவோம் மசூதியினையும்
மிதிப்புகளைத் தடுத்து குடிசைகளையும்!

ஓ காவிவாதிகளே! நீங்கள் கொண்டிருக்கும்
திரிசூலம் உங்களையே ஓர் நாள் அழிக்கும்
அதன் மும்முனைகளும் முச்சமூக
இணைப்பாய் மாறி வெகுவிரைவினிலே!

மூச்சியிழந்து துடிக்கும் அயோத்தி நிலத்தில்
பாபர் மீண்டும் பிறப்பான்
இராமரே அதனை ஏற்பான்!

இந்தியம் அன்று ஒலிக்கும் அங்கு
உன் ஹிந்தியம் மரித்து மசூதி பிறந்ததென்று!
- பழனி ஷஹான்
நன்றி: இந்நேரம்.காம் (inneram.com) இணையதளம்:
http://www.inneram.com/inneram-specials/literature/3775-converted-the-masjid.html