Sunday, 27 October 2013

பதியம் பாரதி வாசன் உடன்




24-10-2013 அன்று, திருப்பூர் பதியம் திரைப்பட அமைப்பாளரும், புகைப்பட நிபுணரும், தமிழ் ஆர்வலரும், பெரியாரியவாதியுமாக இயங்கி வரும் ஐயா 'பாரதி வாசன்' அவர்களிடமிருந்து இரண்டு மகிழ்வான அன்பளிப்புகள் பெற்றேன். அதில் ஒன்று, தோழர்.எச்.பீர் முஹம்மது அவர்கள் எழுதிய, "குர்து தேசிய இனப் போராட்டம்" எனும் ஆய்வு நூல். மற்றொன்று இந்த ஒளிப் படங்கள்.


அவருடனான மதிப்புத் தோழமை இன்னும் வளர வேண்டும் என்று ஆவல். அன்பளிப்புகளுக்காக மட்டுமில்லை அன்பிற்காகவும், நல்லறிவிற்காகவும்.















Thursday, 8 August 2013

திருப்பூர் இணை(னி)ய நண்பர்கள்



நேற்று 07-08-2013 மாலை 6 மணியளவில் திருப்பூரில், வழக்கறிஞர் சே.ஜெ.உமர்கயான் அவர்களின் அலுவலகத்தில் நடந்த நட்புக் கூட்டத்தின் ஒற்றை சொற்ச் சுருக்கமே "திருப்பூர் இணைய நண்பர்கள்" என்பது.

இந்த அமைப்பு, இணைய தளங்களில் இயங்கும் சமூக மாற்றத்தை விரும்பும் அனைவருக்குமானதாகும். சமூக சீர்கேடுகளை களையும் அனைவருக்குமானதாகும்.

இணையத்தில் மட்டுமே சந்தித்த முகங்களை, நேரில் காணுகின்ற பொழுது ஒருவித நெருடலை கொடுத்தது. சந்திக்க எண்ணிய சிலரை இதன் வாயிலாக சந்தித்தது ஓர் சந்தோஷ மிகுதி. அவ்வகையில் கூட்டத்தினை ஒருங்கிணைப்பு செய்திட்ட தோழர், டி.வி.எஸ்.சோமு அவர்களுக்கும், எனக்கு இதனை தெரியப்படுத்தி அழைத்திட்ட ஐயா.பாரதி வாஸன் அவர்களுக்கும் எனது மகிழ்வான நன்றிகள். மேலும் உமர்கயான் அவர்களோடு உரையாடியதும் ஒரு தனி மகிழ்வாக அமைந்தது.

பலதரப்பட்ட கட்சி, அமைப்பு சார்ந்தவர்கள் இப்படி ஓர் பொது தளத்தில் இணைவது எத்துனை சாத்தியக் கூறுகளுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது வியப்பே ! 

இந்த இணைப்பு இணையத்திலே சாத்தியமானது இன்னும் வியப்பே !

வாருங்கள் இணைய தோழர்களே எங்களோடு சேர்ந்து, பின் நாமாக பயணிக்க ஓர் பொது தளமாக திருப்பூர் இணைய நண்பர்கள் அமைப்பின் வாயிலாக....



தோழமையுடன்
- பழனி ஷஹான்

Saturday, 3 August 2013

மென் அமைதி



மென் அமைதி கொண்டாயடி
பெண்ணே
என் அமைதி பறித்தாயடி
நிலவே !

வன் கொடுமை செய்யாதடி
கண்ணே
வானுலகம் நானேற வாய்ப்பளிக்காதடி
உயிரே !

பாதகமற்ற சொல்லொன்றை கூறியிடடி
பாவையே
பாரிதனில் நாம் இருவர்
பள்ளி கொண்டு வாழ்ந்திடவே !

என் நாமம் நீயறிவாய்
உன் நாடி நானறிவேன்
நம் ஜோடி ஊரல்ல உலகறியும்
துணையே !

கணியன் பூங்குன்றனாரின்
வார்த்தைகளில் வாழ்வமைப்போம்
உன்னூரும் என்னூரும்
அவன் கூற்றில் நேர் கொள்ளட்டுமே !

ஊனென்ற உலகை
நான் கண்டு சில காலமாயிற்றடி அன்பே
உன் ஊமை நிலையை கைவிட்டு
என் விரதம் தீர்த்துடடி அன்னமே !


  - பழனி ஷஹான்


Sunday, 21 July 2013

சாதியம் ஓர் நடமாடும் சவக்குழி



நஞ்சை விரும்பி உண்போர்
நம்மில் எவருமுண்டோ ?
இருந்தும் ஏனோ
சாதியைக் கைவிட மறுக்கின்றோம்

எங்கிருந்தோ வந்தான்
புகலிடம் ஒன்று பெறுவதற்காக
பூஜை புனஸ்காரம் என்று
நம்மை குழப்பியும், கூட்டங்களாய் பிரித்தும்
நம் வீட்டு கூரையில் ஏறி
தான்தான் உயர்ந்தவன் என்றான்

இவன் சதி
வெகுநாள் வெல்லாது என்பதாலே
சாதி எனும் சவக்குழியினை
நாம் அறியா வண்ணம்
நம் மத்தியிலே உண்டுபண்ணிவிட்டான்

அய்யோ இந்துக்களுக்கு ஆபத்து என்றார்
இராமகோபாலய்யர்
அய்யஹோ ! வன்னிய குல மங்கைகள்
மயக்கப்படுகிறார்கள் என்கிறார்
இராமதாஸ்

இந்த இரு கூப்பாட்டிலும் உள்ள
பொது விதி என்ன தெரியுமா ?

தலித்தும், தாழ்த்தப்பட்டவனும்
தரணியில்
வாழ்ந்து விடக் கூடாதென்பதற்கானது அல்ல
தரணி ஆண்டு விடக் கூடாதென்பதற்கானது !

புரட்சிக் கவி பாரதியும்
பகுத்தறிவுப் பகலவன் பெரியாரும்
வாழ்ந்து மறைந்த
இப்புகழ் தமிழ் மண்ணில்தான்
வாழ்ந்தானா இளவரசன் ?

காதல் எங்குள்ளதோ
அங்குதான் வாழ்க்கை உண்டென கூறிய
காந்தியார் வாழ்ந்த நாட்டில்தான்
காவு கொடுக்கப்பட்டானா இளவரசன் ?

அன்பையும், சமத்துவத்தையும்
தங்களின் இறுதி மூச்சு வரை போதித்த
புத்தரும், இயேசுவும், முகம்மதுவும்
உதித்திட்ட இந்த உலகத்தில்தான்
உயிரை விட்டானா இளவரசன் ?

ஆம்
அவன் இந்த மண்ணில்தான் வாழ்ந்தான்
அவன் இந்த நாட்டில்தான் காவு கொடுக்கப்பட்டான்
அவன் இந்த உலகத்தில்தான் உயிரை விட்டான்

உயிராய் ஒருவளை நேசித்து
அன்பின் அகிலமாய் அவளை பாவித்து
இதயப் பரிசளிப்பான காதலை
அவள் மீது கொண்டதனால்

அவளொன்றும் சளைத்தவளில்லை அவனுக்கு
தன் குலமும் பின் குடும்பமும் எதிர்த்தும்
தன் தந்தை இறந்தது தெரிந்தும்
துணிவோடு துணையவனோடு
திருமணம் புரிந்து வாழ்ந்தவளவள்

இந்த அன்பு கலப்பிற்கு ஆரம்பத்திலே
எதிர்த்து நின்றிட்ட சாதி வடிவச் சாத்தான்
சக்திகளற்று தோற்றுவிட்டான்
சத்திய காதலின் முன்பு

நேரெதிர் நின்று தோற்ற சாதிச் சாத்தான்
பற்பல சூழ்ச்சிகளைத் தொடர்ந்து
பாவையவள் உள்ளத்தை திரித்து
காளையவனை தனிக்க வைத்து விட்டான்

தனித்து நின்றிட்ட
நிழல் இழந்த காளையனை
கயவர்கள் பாசக் கயிற்றால் வேட்டையாடி
கல்லறைக்கு அனுப்பிவிட்டனர்

மண்ணறைக்குள் மறைந்துவிட்டவன்
நமக்கோர் மதி நுட்பத்தை
மாயமாய் கூறிவிட்டிருக்கிறான்

சாதியக் காட்டேரியை
தனியொருவனாய் எதிர்த்து
இத்துனை நாட்கள் போரிட முடியுமெனும்போது
நம்மில் பலர் கூட்டாய் குரல் கொடுத்தால்
என்ன நேரிடும் ?

தெளிவு பெற்ற இரு ஆடுகளுக்கிடையில்
மாட்டிக் கொண்ட நரியினைப்
போலல்லவா
ஆகிவிட மாட்டார்கள்
சாதியம் வளர்த்திடும் அயோக்கியர்கள் ?

சாதிய சங்கங்களின் கதவுகளுக்கு
பூட்டிடாத வரையில்
நீ புண்பட்டுக் கொண்டுதான்
இருப்பாய்

உன் கையில் சாதியக் கொடியினை தந்திடும்
தலைவர்களின் கரங்களுக்கு
விலங்கிடாத வரையில்
நீ விளையாடப்பட்டுக் கொண்டுதான் இருப்பாய்

சத்ரியன், சூத்திரன் எனும் இழிசொல்லை
வர்ணாஸ்சிரம சட்டத்தால் உருவாக்கிட்ட
வந்தேறிகளை தனிமைப்படுத்தி
விரட்டியடிக்கா வரையில்
நிச்சயம் நமக்கிங்கு விடியல் இல்லை

கடவுள் மந்திரத்திற்கு கட்டுப்பட்டவர்
மந்திரம் பார்ப்பனர்களுக்கு கட்டுப்பட்டது
எனக் கூறி
பயமுறுத்திடும் விஷப் பாம்புகளுக்கு

கடவுள் அன்பிற்கு கட்டுப்பட்டவர்
அன்பு அநீதிக்குள்ளாக்கப்பட்டோர்க்கும்
ஏழைகளுக்கும், அபழைகளுக்கும் கட்டுப்பட்டது என
புரிய வைத்திடு நீ

எப்படியெனில்
அவ்விஷப் பாம்புகளுக்கு
விளங்க வைப்பது
எப்படியெனில்

உன் கடவுளை நீ தரிசிக்க
நீ வழிபட
இடைத்தரகராய் எவனும் தேவையில்லையென
அவனை உதறித் தள்ளி,

அகிலம் படைத்த கடவுள்
அனைத்து மொழியும் அறிந்தவரென
அவனுக்கு
பார்ப்பனன் அவனுக்கு அறிவுறுத்தி
விளங்க வைத்திடு

சாதியத்திற்கு வழி வகுக்கும்
கொடிய பல கடவுள்களையும்
மிருக மனிதர்களையும்
ஒன்றாய் சேர்த்து தள்ளிவிடு
அவர்களாகவே தயாரித்த சாதியெனும்
நடமாடும் ஓர் சவக்குழிக்குள்ளே

அந்த இளவரசனின்
கல்லறை மேல் ஓர்
வெள்ளை மலரைத் தூவி
சத்தியம் ஏற்ப்போம்

அன்புக் கலப்பில் உள்ளங்களை
அதிகமதிகம் இணைத்துக் கொண்டு
ஆயிரம் ஆயிரம் ஆன்மாக்களை
உருவாக்கிடுவோம்
சாதியம் அழித்து
ஓர் புது இனம் படைப்போம்
புனிதக் கருத்தரித்தல்கள் மூலம்…!


(இளவரசனைக் கொன்றது சாதியா ? காதலா ? எனும் தலைப்பில் திருப்பூர் பதியம் நடத்திய பாவரங்கத்தில் இடம்பெற்ற எனது கவிதை இது)


தோழமையுடன்
- பழனி ஷஹான் 



Saturday, 29 June 2013

காஷ்மீரி நாத்திகன்



காஷ்மீரத்திலிருந்து பேசுகின்றேன்
காயங்கள் அது
நாளும் பலபெற்ற
நாத்திகன் நான்..!

மதம் மறுக்கும்
நாத்திகன் அல்ல - நான்
தேசம் மறுக்கும் நாத்திகன் !

இந்தியனா? நீ பாகிஸ்தானியா?
எனக் கொக்கரிப்போடு கேள்விதொடுத்து
எள்ளலிடும் குரல்களே - நான் 
இவ்விரண்டுமற்ற காஷ்மீரி நாத்திகன்!

என்னை
எங்களின் இம்மண்ணை
கூறுபோட சண்டையிடும்
அண்டை நாடுகளே
உங்கள் மத்தியில்
தேசத்தால் நான் நாத்திகனே!

என் வீட்டைப் பராமரிக்க
நானிருக்கும்போது
நீங்கள் எதற்கு?

உரிமைகளைவேண்டி
வாழ்விழந்து உயிர் துறக்கும்
எங்களைத் தீவிரவாதிகளென்றும்
தேசவிரோதிகளென்றும்
சிறுமைப்படுத்துவோரே

இதையெல்லாம்
எங்கள் நிலத்தை அபகரித்து
எம் மக்களைக் கொன்றொழித்து
எங்கள் பெண்களை 
ஆயுத முனையில் வன்புணர்ந்தபடியே 
சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்


எங்கோ சிலர் வாழ
நித்தம் நித்தம் மடிகின்றோம் 
பற்பலராய் இங்கு….

மடிவோரில்
ஆணென்றும், பெண்ணென்றும்
கணக்கில்லை

மழலையென்றோ! அபழையென்றோ!
பாகுபாடுகள் அது
இங்கு இல்லவே இல்லை!

பனிமலைகளில் வெண்மை இல்லை
அவையாவும்
வழிந்தோடுகின்றன
செந்நிறக் குருதி ஆறுகளாய்!

என் அண்டை தேசங்களே
ஆங்கிலேயனிடம்
அடிமையாய் கிடந்தது நீங்கள் மட்டுமா
என் பூமியும்தானே இருந்தது !

அவனிலிருந்து
விடுதலைவேண்டி போரிட்டது
நீங்கள் மட்டுமா, நாங்களும்தானே?

இன்று நீங்கள் மட்டும்
சுதந்திர தாகத்தைத் தனித்துக்கொண்டு
எம்மண்ணை
அடிமைப்படுத்துகிறீர்களே
இதென்ன நியாயமோ?

நாங்கள்
ஒவ்வொரு நொடியும்
வாழ்வதற்காவே வீழ்கின்றோம்
எம் தாய் பூமியிலேயே!

ஆங்கிலேயன் அடிமைப்படுத்திய
காலத்தில்கூட எம்மண்ணது
இப்படி இருந்ததில்லை!

வலியோடும், வேதனைகளோடும்
சொல்லுகிறேன்
ஜனநாயகப் போர்வையில்
எங்கள்மீது சர்வாதிகார
வலைவீசும் நாடுகளே!
உங்களிலிருந்துபெறும் விடுதலையே
எங்களுக்குப் பூரணச் சுதந்திரம்

அங்கணமே மாறிடும் 
என் பூமி - அது
புன்னகை தேசமாய் !


தோழமையுடன்
பழனி ஷஹான் 

Friday, 31 May 2013

அழியா அனல் காடு – ‘சே’

 




“சே”
மரணித்த ஒருவனின்
மரணிக்காத ஓர் வடிவம்….

மனிதருள் மடிந்திட்ட
உரிமைக் கனலை, வல்லுணர்வை
மீளச்செய்த
ஓர் ஒற்றை எழுத்து !

புரட்சி எனும் மொழியை
பாரில் பலரை
பேச வைத்த எழுத்து

ஏட்டளவிலும் அகற்றிடு
ஏகாதிபத்தியத்தை
என்று
எல்லோரையும் முழங்க வைத்த எழுத்து !

அடிமைத்தனம்
எங்கு சூழ்ந்திடினும்
எதிர்த்து நின்றிடுவென
எளியோனையும் கூற வைத்திட்ட
கடலலைச் சீற்றம் !

எதேச்சதிகாரத்தின்
ஆணி வேரை உலுக்கி
பிடுங்கிய
உக்கிர எழுத்து

உலகம் முழுமைக்குமான விடுதலை
என்று உறுமி
அடிமை உள்ளங்களில் யாவும்
ஊக்கம் தந்திட்ட ஊன்று கோல்,

துணிவின் சுருக்கம் !

புரட்சி எனும் கொடி
ஏந்திய
யாவருக்கும் முகவரி
இந்த ஒற்றை எழுத்து !

அடக்குமுறையின்
அடிச்சுவடையே
அடங்க வைத்த அபாய ஒலி !

கொடுங்கோலனின்
கோட்டைக்குள் நுழைந்து
சொடுக்கிட்டு எச்சரித்த
தீப்பிழம்பு !

தோட்டாக்களை தோலுயர்த்தி
எதிர்த்து நின்ற
வீரத்தின் அகராதி !

வலைக்குள் சிக்குண்ட போதும்
அலட்டு சிரிப்பை உதிர்த்திட்ட
அஞ்சாமை !

பீரங்கிப் படையை
தெரித்தோடச் செய்த
தீரம் நிறைந்த செந்நிற
கூர் பார்வை கொண்ட
எரிகழல் மாந்தனின் முதன்மை
எழுத்து !

ஆர்ப்பரிக்கும் அகோரச் சின்னம் “சே”
என்றும்
அழியாத அனல் காடு !




 
தோழமையுடன்
பழனி ஷஹான்





.

Sunday, 12 May 2013

இடிந்தகரையில் ஒரு நாள்


கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தொடர்ந்து போராடும், போராளி அண்ணன் சு.ப.உதயக்குமார் அவர்களை இடிந்தகரையில் சந்தித்து உரையாடினோம். இடிந்தகரை மக்களின் நிலை, அவர்தம் வாழ்வியல், கல்வி, போராட்ட யுக்திகள், அம்மக்களின் மனநிலை போன்றவற்றை குறித்து அறிந்து கொள்வதற்காக, கடந்த ஏப்ரல் 7 அன்று அங்கு சென்றிருந்தோம்.
அரச பயங்கரவாதத்தை, அடக்குமுறையை முதன் முறையாக நேரில் கண்டு வந்துள்ளேன். அவர்களின் தொடர் போராட்டத்தின் 601-வது நாளில் நாங்கள் சென்று, அந்த ஒரு நாள் அவர்களின் போராட்டத்தில் பங்கு கொண்டு வந்தோம்.

உதயகுமார் வெளிநாட்டு பணம் வாங்குகிறார், வீணாக மக்களை மூலை சலவை செய்து மக்கள் நலனை முடக்குகின்றார் என்பன போன்ற இன்னும் சில அவதூறுகளுக்கு அவரிடமே கேள்விகள் கேட்டு விடை கண்ட பொழுது, பத்திரிக்கைகள் எந்த அளவு இந்த போராட்டத்தை நசுக்க முனைகின்றது என்பது தெளிவாகியது. உண்மையில் மக்கள் நலனுக்காக போராடும் இடிந்தகரைவாசிகளின் தியாகங்கள், அரசு பயங்கரவாதத்தாலும், பத்திரிக்கையின் பாசாங்குகளாலும் திரை மறைவு செய்யப்படுவது ஒரு ஜனநாயக நாட்டின் மிகப் பெரும் அவலம்..!


- பழனி ஷஹான்


Friday, 3 May 2013

ஒரு நிமிடம்




வீழ்ந்து விடாதே !
விடியல் கிட்டும் சோர்வு கொள்ளாதே!

எழுந்து நின்றிடு !
ஏணிப்படிகள் காத்திருக்கின்றன தாழ்வு கொள்ளாதே !

ஒரு நாள் வரும்
உன் முகவரி உலகறிய
அதற்க்காவேனும் தோழா
ஒரு நிமிடம் !

ஒரு நிமிடம் முயன்று பார்
அது மாறும் ஒவ்வொரு நிமிடமாய் !

உன்னை வாசிக்க
ஓர் உலகம் உண்டு
அதற்க்காவே
நீ சுவாசிக்க வேண்டும் சோதனைகளை
முயற்சிகள் பல கொண்டு !

வெற்றிகள் உண்டு உன்னில்
வெற்றுக் காகிதமாய் !
அதை நிரப்பிடு தோழனே
தன்னம்பிக்கை எனும் பேனாவில்
முயற்சி எனும் மை ஊற்றி !

இலட்சியம் கைகொள்ள ஆவலுண்டு
சாதனையை வென்றெடுக்க முயற்சிகளுண்டு
பின் ஏன் இன்னும் அச்சம்
அதில் முந்தியவர்களை கண்டு !

அவ மதிப்புகளால்
மனத் தாழ்வுக்குள் அகப்படாதே
நீ தழைத்தோங்க
உன்னை தாங்கப் போகும்
ஆணி வேர்கள் அவை !

பாறைகள் பல கடந்து
இடறுகள் பல தாண்டி
இரவு பகல் பற்பல கழித்து
பெரும் நெடிய பயணம் மேற்க்கொண்டே
நதிகள் வெல்லுகின்றன
கடலாய் மாறி !

சிற்சிறு கற்களும்
பொடி பொடி மண் துகள்களும்
மெல்ல மெல்ல சேர்புகள் கொண்டே
உயர்ந்து நிற்கின்றன மலைத் தொடர்களாய் !

செய்வதற்க்கு ஏதுமில்லையென
வெறுமை ஏமாப்பு கொள்ளாதே !
ஏதேனும் செய்திடு
வெற்றாய் கழிந்திடும் காலத்திற்க்கு
விருந்தளித்திடு
அது உனக்கு பரிசளித்திடும் !

பெரும் புத்தகத்திற்க்கு தொடக்கம்
சிறு பொட்டு மை துளிகளே !
பெரும் சாதனைகளின் தொடக்கம்
தடுமாறி விழுவதிலேயே !

தடுமாறி தடுமாறி விழுந்திடு
ஆனால் தடம் மாறி மட்டும் எழுந்திடாதே !

வழிகள் இல்லையென கவலைகள்
களைந்திடு
நீ சென்றால் அதுவே மாறும்
பாதைகளாய் !

தோழா !
ஒரு நிமிடம் முயன்று பார்
அது மாறும் ஒவ்வொரு நிமிடமாய் !
ஒவ்வொரு நிமிடமும் உருமாறும்
நாளைய சாதனைக் களமாய் !

(தூது ஆன்லைன் இணைய தளத்தில் வெளியான எனது படைப்பு)

- பழனி ஷஹான் 

Wednesday, 10 April 2013

என்னை விடுவியுங்கள்




என்னை விடுவியுங்கள்
செய்யாத தவறுக்குத்
கூண்டுப்பறவையான என்னை
இந்த சிறு அறையில் பிணைந்திருக்கும்
இந்த முள் சங்கிலியிலிருந்து….


இந்த திகிலூட்டும் சிறையில்
பல குரல்களின் அருவி இல்லை
அவை நிறுத்தாமல் பேசும்
பறவைகளின் கீச்சொலி இல்லை
பொங்கி எழும் சிரிப்பொலியும் இல்லை
தாலாட்டின் இனிய ஒலியோ
இல்லவே இல்லை……

மார்பிலிருந்து குழந்தைகள் பிய்த்தெடுக்கப்பட்ட
அன்னையரின் அழுகையொலி
கணவரை பிரிந்த பெண்கள்
விதவைகளின் ஒப்பாரி பாடல்
பசுந்தழை நிறச் சீருடை அணிந்த இளைநர்கள்
தங்கள் கைகளால் எழுதியவை……

எரியும் பந்தைக் காண்கின்றேன் நான்
பரிசோதிக்கும் முயற்சியில்
ஈடுபட்ட அறிவு
தன்னை ஒரு பெருங் காட்சியாய்
காட்டிக்கொண்ட பின் வரும்
பாடழிவின் பயங்கர முகம் அது……….

செம்மாந்து போயினர் அவர்கள்
இன்பத்தைச் சுகிக்கும் அடிமைகள்
போதையில் கிறங்கியவர்கள்
உற்சாகக் கேளிக்கையில் மிதக்கையில்
அடிபணிந்துபோய்

மனதையையும் அறிவையும்
அவை இதழ் பிரியும் முன்னே இழந்தவர்கள்
அவர்கள் செல்வம் கெளரவம் இரண்டையும்
கால அலை வீச்சு
ஏழு உயர்மலைகளுக்கு அப்பால்
அடித்துச் சென்றாகிவிட்டது…….

வெகுதூரம் உள்ள மற்றவர்களுக்கு
இது ஒரு வரம்
பேடி ஆத்மாக்கள்
செயலற்றுப்போய்ப் பார்த்தபடி நின்றபோது
குதூகலத்துடன்
அறுவடை செய்கிறார்கள் விளைச்சலை……

இருளில் ஒளிரும் விளக்கைப் போல
வெகுசீக்கிரம் கழிந்துவிடும்
அரிய வாழ்க்கை இது
மரணமில்லா மரம் ஒன்றை நட
சாவா மருந்தை விதைக்க
என்னை அனுமதியுங்கள்…….

ஒரு பறவையைப் போல
அகிலத்தின் ஒவ்வொரு மூலைக்கும் பறந்து
வாழ்வு சாவை எதிர்கொள்ளும் சந்திப்பை எட்டி
மானுடத்தின் கானத்தை பாடவிடுங்கள்……


என்னை விடுவியுங்கள்
முள் சங்கிலியை அகற்றுங்கள்
தவறாக நினைக்காதீர்கள்
ஒரு கூண்டு பறவையின்
ஆசை இது ஒன்று மட்டும் தான் ...!

-    இரோம் ஷர்மிளா


நூல் : அமைதியின் நறுமணம்






Tuesday, 26 March 2013

கீர்த்திமிகு கீரனூர் (பழனி கீரனூர்)



பூட்டு நகரமாம் திண்டுக்கல் மாநகரம். இம்மாநகரை மாவட்டமாய் கொண்ட பகுதிக்குள் அடங்கி இருக்கிறது பார் புகழும் பழங்களின் நகரமான பழனி நகர். பஞ்சாமிர்தத்தின் பிறப்பிடமான இப்பழனி நகரிலிருந்து சற்று தள்ளி அமைந்துள்ளதுதான் எனது பிறப்பிடமான கீரனூர். 

நூறு வருடங்களைத் தொட்டு நிற்கும் எனதூரின் பழமை முகவரியான பள்ளிவாசலும் (மசூதி), இந்த மசூதியின் அருகிலேயே அமைந்திருக்கும் மாரியம்மன் கோயிலும், ஊரில் உள்ள ஒற்றை தேவாலயமும், எங்கள் ஊரின் அடையாளமாய் இசுலாமிய ஆன்மீகத் தளத்தில் நன்கு அறியப்பட்ட கீரனூரி என சிறப்பாய் அழைக்கப்படும் மெளலானா.கலீல் ரஹ்மான் ஹஜ்ரத் அவர்களின் இல்லமும், நான் படித்த முஸ்லீம் தொடக்கப்பள்ளி, அரசினர் மேல்நிலைப் பள்ளி, மேலும் பெண்களுக்கான அரசுப் பள்ளி, ஊரின் தொன்மையில் ஒன்றான சத்திரம் உள்ளிட்டவைகளின் புகைப்படத் தொகுப்பை பல நினைவுகளுடன் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.


















- பழனி ஷஹான்