Friday, 31 May 2013

அழியா அனல் காடு – ‘சே’

 




“சே”
மரணித்த ஒருவனின்
மரணிக்காத ஓர் வடிவம்….

மனிதருள் மடிந்திட்ட
உரிமைக் கனலை, வல்லுணர்வை
மீளச்செய்த
ஓர் ஒற்றை எழுத்து !

புரட்சி எனும் மொழியை
பாரில் பலரை
பேச வைத்த எழுத்து

ஏட்டளவிலும் அகற்றிடு
ஏகாதிபத்தியத்தை
என்று
எல்லோரையும் முழங்க வைத்த எழுத்து !

அடிமைத்தனம்
எங்கு சூழ்ந்திடினும்
எதிர்த்து நின்றிடுவென
எளியோனையும் கூற வைத்திட்ட
கடலலைச் சீற்றம் !

எதேச்சதிகாரத்தின்
ஆணி வேரை உலுக்கி
பிடுங்கிய
உக்கிர எழுத்து

உலகம் முழுமைக்குமான விடுதலை
என்று உறுமி
அடிமை உள்ளங்களில் யாவும்
ஊக்கம் தந்திட்ட ஊன்று கோல்,

துணிவின் சுருக்கம் !

புரட்சி எனும் கொடி
ஏந்திய
யாவருக்கும் முகவரி
இந்த ஒற்றை எழுத்து !

அடக்குமுறையின்
அடிச்சுவடையே
அடங்க வைத்த அபாய ஒலி !

கொடுங்கோலனின்
கோட்டைக்குள் நுழைந்து
சொடுக்கிட்டு எச்சரித்த
தீப்பிழம்பு !

தோட்டாக்களை தோலுயர்த்தி
எதிர்த்து நின்ற
வீரத்தின் அகராதி !

வலைக்குள் சிக்குண்ட போதும்
அலட்டு சிரிப்பை உதிர்த்திட்ட
அஞ்சாமை !

பீரங்கிப் படையை
தெரித்தோடச் செய்த
தீரம் நிறைந்த செந்நிற
கூர் பார்வை கொண்ட
எரிகழல் மாந்தனின் முதன்மை
எழுத்து !

ஆர்ப்பரிக்கும் அகோரச் சின்னம் “சே”
என்றும்
அழியாத அனல் காடு !




 
தோழமையுடன்
பழனி ஷஹான்





.

Sunday, 12 May 2013

இடிந்தகரையில் ஒரு நாள்


கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தொடர்ந்து போராடும், போராளி அண்ணன் சு.ப.உதயக்குமார் அவர்களை இடிந்தகரையில் சந்தித்து உரையாடினோம். இடிந்தகரை மக்களின் நிலை, அவர்தம் வாழ்வியல், கல்வி, போராட்ட யுக்திகள், அம்மக்களின் மனநிலை போன்றவற்றை குறித்து அறிந்து கொள்வதற்காக, கடந்த ஏப்ரல் 7 அன்று அங்கு சென்றிருந்தோம்.
அரச பயங்கரவாதத்தை, அடக்குமுறையை முதன் முறையாக நேரில் கண்டு வந்துள்ளேன். அவர்களின் தொடர் போராட்டத்தின் 601-வது நாளில் நாங்கள் சென்று, அந்த ஒரு நாள் அவர்களின் போராட்டத்தில் பங்கு கொண்டு வந்தோம்.

உதயகுமார் வெளிநாட்டு பணம் வாங்குகிறார், வீணாக மக்களை மூலை சலவை செய்து மக்கள் நலனை முடக்குகின்றார் என்பன போன்ற இன்னும் சில அவதூறுகளுக்கு அவரிடமே கேள்விகள் கேட்டு விடை கண்ட பொழுது, பத்திரிக்கைகள் எந்த அளவு இந்த போராட்டத்தை நசுக்க முனைகின்றது என்பது தெளிவாகியது. உண்மையில் மக்கள் நலனுக்காக போராடும் இடிந்தகரைவாசிகளின் தியாகங்கள், அரசு பயங்கரவாதத்தாலும், பத்திரிக்கையின் பாசாங்குகளாலும் திரை மறைவு செய்யப்படுவது ஒரு ஜனநாயக நாட்டின் மிகப் பெரும் அவலம்..!


- பழனி ஷஹான்


Friday, 3 May 2013

ஒரு நிமிடம்




வீழ்ந்து விடாதே !
விடியல் கிட்டும் சோர்வு கொள்ளாதே!

எழுந்து நின்றிடு !
ஏணிப்படிகள் காத்திருக்கின்றன தாழ்வு கொள்ளாதே !

ஒரு நாள் வரும்
உன் முகவரி உலகறிய
அதற்க்காவேனும் தோழா
ஒரு நிமிடம் !

ஒரு நிமிடம் முயன்று பார்
அது மாறும் ஒவ்வொரு நிமிடமாய் !

உன்னை வாசிக்க
ஓர் உலகம் உண்டு
அதற்க்காவே
நீ சுவாசிக்க வேண்டும் சோதனைகளை
முயற்சிகள் பல கொண்டு !

வெற்றிகள் உண்டு உன்னில்
வெற்றுக் காகிதமாய் !
அதை நிரப்பிடு தோழனே
தன்னம்பிக்கை எனும் பேனாவில்
முயற்சி எனும் மை ஊற்றி !

இலட்சியம் கைகொள்ள ஆவலுண்டு
சாதனையை வென்றெடுக்க முயற்சிகளுண்டு
பின் ஏன் இன்னும் அச்சம்
அதில் முந்தியவர்களை கண்டு !

அவ மதிப்புகளால்
மனத் தாழ்வுக்குள் அகப்படாதே
நீ தழைத்தோங்க
உன்னை தாங்கப் போகும்
ஆணி வேர்கள் அவை !

பாறைகள் பல கடந்து
இடறுகள் பல தாண்டி
இரவு பகல் பற்பல கழித்து
பெரும் நெடிய பயணம் மேற்க்கொண்டே
நதிகள் வெல்லுகின்றன
கடலாய் மாறி !

சிற்சிறு கற்களும்
பொடி பொடி மண் துகள்களும்
மெல்ல மெல்ல சேர்புகள் கொண்டே
உயர்ந்து நிற்கின்றன மலைத் தொடர்களாய் !

செய்வதற்க்கு ஏதுமில்லையென
வெறுமை ஏமாப்பு கொள்ளாதே !
ஏதேனும் செய்திடு
வெற்றாய் கழிந்திடும் காலத்திற்க்கு
விருந்தளித்திடு
அது உனக்கு பரிசளித்திடும் !

பெரும் புத்தகத்திற்க்கு தொடக்கம்
சிறு பொட்டு மை துளிகளே !
பெரும் சாதனைகளின் தொடக்கம்
தடுமாறி விழுவதிலேயே !

தடுமாறி தடுமாறி விழுந்திடு
ஆனால் தடம் மாறி மட்டும் எழுந்திடாதே !

வழிகள் இல்லையென கவலைகள்
களைந்திடு
நீ சென்றால் அதுவே மாறும்
பாதைகளாய் !

தோழா !
ஒரு நிமிடம் முயன்று பார்
அது மாறும் ஒவ்வொரு நிமிடமாய் !
ஒவ்வொரு நிமிடமும் உருமாறும்
நாளைய சாதனைக் களமாய் !

(தூது ஆன்லைன் இணைய தளத்தில் வெளியான எனது படைப்பு)

- பழனி ஷஹான் 

Wednesday, 10 April 2013

என்னை விடுவியுங்கள்




என்னை விடுவியுங்கள்
செய்யாத தவறுக்குத்
கூண்டுப்பறவையான என்னை
இந்த சிறு அறையில் பிணைந்திருக்கும்
இந்த முள் சங்கிலியிலிருந்து….


இந்த திகிலூட்டும் சிறையில்
பல குரல்களின் அருவி இல்லை
அவை நிறுத்தாமல் பேசும்
பறவைகளின் கீச்சொலி இல்லை
பொங்கி எழும் சிரிப்பொலியும் இல்லை
தாலாட்டின் இனிய ஒலியோ
இல்லவே இல்லை……

மார்பிலிருந்து குழந்தைகள் பிய்த்தெடுக்கப்பட்ட
அன்னையரின் அழுகையொலி
கணவரை பிரிந்த பெண்கள்
விதவைகளின் ஒப்பாரி பாடல்
பசுந்தழை நிறச் சீருடை அணிந்த இளைநர்கள்
தங்கள் கைகளால் எழுதியவை……

எரியும் பந்தைக் காண்கின்றேன் நான்
பரிசோதிக்கும் முயற்சியில்
ஈடுபட்ட அறிவு
தன்னை ஒரு பெருங் காட்சியாய்
காட்டிக்கொண்ட பின் வரும்
பாடழிவின் பயங்கர முகம் அது……….

செம்மாந்து போயினர் அவர்கள்
இன்பத்தைச் சுகிக்கும் அடிமைகள்
போதையில் கிறங்கியவர்கள்
உற்சாகக் கேளிக்கையில் மிதக்கையில்
அடிபணிந்துபோய்

மனதையையும் அறிவையும்
அவை இதழ் பிரியும் முன்னே இழந்தவர்கள்
அவர்கள் செல்வம் கெளரவம் இரண்டையும்
கால அலை வீச்சு
ஏழு உயர்மலைகளுக்கு அப்பால்
அடித்துச் சென்றாகிவிட்டது…….

வெகுதூரம் உள்ள மற்றவர்களுக்கு
இது ஒரு வரம்
பேடி ஆத்மாக்கள்
செயலற்றுப்போய்ப் பார்த்தபடி நின்றபோது
குதூகலத்துடன்
அறுவடை செய்கிறார்கள் விளைச்சலை……

இருளில் ஒளிரும் விளக்கைப் போல
வெகுசீக்கிரம் கழிந்துவிடும்
அரிய வாழ்க்கை இது
மரணமில்லா மரம் ஒன்றை நட
சாவா மருந்தை விதைக்க
என்னை அனுமதியுங்கள்…….

ஒரு பறவையைப் போல
அகிலத்தின் ஒவ்வொரு மூலைக்கும் பறந்து
வாழ்வு சாவை எதிர்கொள்ளும் சந்திப்பை எட்டி
மானுடத்தின் கானத்தை பாடவிடுங்கள்……


என்னை விடுவியுங்கள்
முள் சங்கிலியை அகற்றுங்கள்
தவறாக நினைக்காதீர்கள்
ஒரு கூண்டு பறவையின்
ஆசை இது ஒன்று மட்டும் தான் ...!

-    இரோம் ஷர்மிளா


நூல் : அமைதியின் நறுமணம்






Tuesday, 26 March 2013

கீர்த்திமிகு கீரனூர் (பழனி கீரனூர்)



பூட்டு நகரமாம் திண்டுக்கல் மாநகரம். இம்மாநகரை மாவட்டமாய் கொண்ட பகுதிக்குள் அடங்கி இருக்கிறது பார் புகழும் பழங்களின் நகரமான பழனி நகர். பஞ்சாமிர்தத்தின் பிறப்பிடமான இப்பழனி நகரிலிருந்து சற்று தள்ளி அமைந்துள்ளதுதான் எனது பிறப்பிடமான கீரனூர். 

நூறு வருடங்களைத் தொட்டு நிற்கும் எனதூரின் பழமை முகவரியான பள்ளிவாசலும் (மசூதி), இந்த மசூதியின் அருகிலேயே அமைந்திருக்கும் மாரியம்மன் கோயிலும், ஊரில் உள்ள ஒற்றை தேவாலயமும், எங்கள் ஊரின் அடையாளமாய் இசுலாமிய ஆன்மீகத் தளத்தில் நன்கு அறியப்பட்ட கீரனூரி என சிறப்பாய் அழைக்கப்படும் மெளலானா.கலீல் ரஹ்மான் ஹஜ்ரத் அவர்களின் இல்லமும், நான் படித்த முஸ்லீம் தொடக்கப்பள்ளி, அரசினர் மேல்நிலைப் பள்ளி, மேலும் பெண்களுக்கான அரசுப் பள்ளி, ஊரின் தொன்மையில் ஒன்றான சத்திரம் உள்ளிட்டவைகளின் புகைப்படத் தொகுப்பை பல நினைவுகளுடன் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.


















- பழனி ஷஹான் 



Thursday, 14 March 2013

நிழலின் நிழலில் ஒதுங்கிய நாட்கள்



என் வாழ்வில் ஒரு வித்தியாசமான, மேலும் நெகிழ்வான அனுபவ பயணம் இது.
இன்றைய காலகட்டத்தில், வலையுலகப் பயன்பாடு தவிர்க்க இயலாலது அதில் குறிப்பாக முக-நூல் பயண்பாடாகும். அப்படியாக நான் நிழல் மற்றும் பதியம் இணைந்து நடத்தும் குறும்பட பயிற்சிப் பட்டறை எனும் விளம்பர அறிவிப்பை என்னுடைய முக-நூல் முகப்பில் கண்டேன்.

இதற்க்காக நான், என் ஊரிலிருந்து கிளம்பி, கோவை செட்டிபாளையத்தில் உள்ள, சி.டி.ஃபவுண்டேஷனுக்கு 23-02-2013 சனிக்கிழமை அன்று சென்றேன். திரைப்படங்கள் என்ற ஒன்றை அற்றாக வெறுத்து ஒதுங்கியே வாழ்ந்தவன் நான், ஆனால் இன்று நானே ஒரு திரைத்துறை சார் நபராக மாற தூண்டியது சமூக பிரச்சனைகள் தான். அதற்க்காக நான் ஆவணப்படங்கள் இயக்க வேண்டும் என்று துடித்து கொண்டு இருந்த போது தான் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு அமைந்தது. நல்ல கருத்துக்களை ஏனோ தமிழ் சினிமாவும், அநேகமாக உலக சினிமாக்களும் மறந்தே விட்டன அதன் விழைவே இன்று சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளின் பிரதிபலிப்பு. இன்னும் கூற வேண்டுமெனில் மக்கள் சினிமாவை சினிமாவாக பார்ப்பதில்லை, அதில் வரும் நடிகர்களை மனிதர்களாக பாராமல், ஒரு விஷித்திர மன நிலையை அவர்களிடத்தில் மக்கள் பாவிக்கின்றனர் அதன் விழைவே தமிழகத்தில் 5-முதலமைச்சர்களை இந்த சினிமாத் துறை உருவாக்கியுள்ளது. இன்னும் அவர்கள் தங்களின் தொழிலை ஆட்சி முறையிலும் தொடர்வதால் சமூக பேரழிவுகள் காட்டுத் தீயாய்.
அதனால்தான் நான் இந்த துறை மீது ஆர்வம் கொண்டுள்ளேன். மக்கள் இன்று என்னதான் பேசினாலும், எழுதினாலும் கவரப்படுவதில்லை. ஆனால் அதனை காட்சி படுத்தும் போது ஏற்றுக்கொண்டுள்ளனர். அதனால் தான் நான் பக்கம் பக்கமாக ஒரு கட்டுரையோ, நூலோ எழுதுவதை விட இந்த காட்சி ஊடகம் சிறந்தது என்று இதனை தெரிவி செய்தேன். அதுமட்டுமல்லாமல் உலகம் இன்று உள்ள சூழலில் ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள அதிகம் ஈடுபாடு கொள்வது இல்லை, அதனால் வாசிப்பு மிகக் குறைவு ஆக இதனை நிவர்த்தி செய்ய காட்சி ஊடகம் ஒரு நல்ல தளம். இதனால் நாம் வெகுஜன மக்களின் நேரங்களை சேமித்து கொடுக்கலாம். ஒரு புத்தக வாசிப்புக்கான நேரத்தைவிட, காட்சி சினிமாவின் நேரம் குறைவு அதே சமயம் தாக்கம் அதிகம். அதனால்தான் நான் சினிமாத் துறையை தேர்வு செய்தேன் சமூகப் பணிக்காக.
அப்படிப்பட்ட ஒன்றிற்க்காக நான் முதல் பயணத்தை நிழலோடு தொடங்கினேன். அந்த பயணத்தின் பனித்துளிகளில் சில இங்கு பகிர்கின்றேன்.


வீட்டை விட்டு பிரியும் ஒரு ஏக்கம் ஏற்கனவே இருக்க, பயிற்சிக்கான இடம் கண்டதும் இன்னும் ஒருவித மன குழப்பமும், சோர்வும் ஏற்ப்பட்டன.
இதை தாண்டி உள்ளே சென்றதும், அங்கு அறிமுகம் இல்லாத நிலையில், ஒருவர் என்னை, “தம்பி என்ன குறும்பட பயிற்சி பட்டறையா என் வினவ நானும் ஆம் என்று தலையசைத்து அவரிடம் சென்றேன். உடனே அவர் அதற்க்கான விண்ணப்பத்தை கொடுத்து பூர்த்தி செய்ய சொன்னார், பின் பயிற்சிக்கான கட்டணமும் கேட்டு வசூலித்து கொண்டு, பெரிய ஒரு வராந்தாவுக்குள் போக சொல்ல நானும் நகர்ந்தேன், உடனே அவர் யாரு என்னன்னே தெரியாம நான் கேட்டதும் பணம் கொடுத்துட்டப்பா அப்படினதும், விழி புருவம் உயர்ந்துவிட்டது எனக்கு. பின் சற்று நேரத்தில் முகம் சிரித்தவறாக தம்பி சும்மா சொன்னேன்பா உள்ள போ வகுப்பு நடந்துட்டு இருக்குனு சொல்லி அனுப்பினார். அவர்தான் தாஸ் அண்ணா, நிழல் பட்டறை சார்ந்தவர். நல்ல ஒரு வேடிக்கையான நபர். எதிலும் சிரிப்பும், நக்கலும் நிறைந்தவர். நட்புணர்வோடு பழகக் கூடியவர்.
அடுத்ததாக, ஐயா திருநாகவுக்கரசு, இவர்தான் நிழல் இயக்கத்தின் தூண். இவரைப் பல யூ-டியூப் வீடியோக்களில் பார்த்திருக்கேன் ரொம்ப வயசானவர் போல தோற்றமும், எண்ணமும் தான் எனக்குள் இருந்தது அவரைப்பற்றி. மேலும் ஒரு சமூதாய உணர்வோடு உள்ள நபர் என்றும் இவ்வளவுதான். ஆனால் அவரின் தோற்றம் நேரில் ஒரு நடுத்தர வயதுடைய அதாவது 35 வயது போல் தான் இருந்தது. எல்லரிடமும் சகஜமாக பழகினார், பேசினார். நான் இந்த பயிற்சிபட்டறை விவரம் கேட்டது இவருடன்தான் என்று எனக்கு தெரியாது, பின்பு தான் அறிந்தேன் அந்த தொடர்பு எண் இவருடையது தான் என்று. இதை ஏன் குறிப்பிடுகின்றேன் எனில், அவர் என்னை ஸார் ஸார் என்றுதான் அழைத்தார், நான் கல்லூரி மாணவன் என்று முன்னரே கூறியும் கூட. மேலும் எல்லாவற்றையும் விட, அவரின் ப்ளஸ் பாயிண்ட் அவருடைய பொறுமை கலந்த சிரிப்புதான், எல்லா விஷயத்திற்க்கும். என் மனதில் ஒன்று நினைத்துக் கொண்டே போனேன், வருவதற்க்குள் எப்படியாது, திருநாவுக்கரசு ஸார் கூட ஒரு போட்டோ எடுக்கனும்னு, ஆனா அங்க போயி போக போக அது தேவையில்லாம போயிடுச்சு, அந்த அளவுக்கு சகஜமா இருந்தார். பின் எதற்க்கு அது.

முதல் நாள் வருத்தமாக இருந்த என் உள்ளம், மறுநாள், சுரேஷ்வரன் அவர்களின் நடிப்பு வகுப்பில் ஒரு இணக்கத்தை உடன் இருந்த சக தோழர்களிடம் கொடுத்தது. அந்த அளவிற்க்கான நெருக்கம் உருவானது இரண்டாவது நாளிலே. பின் அது பிடிச்சுப் போனது.
அடுத்த நாள் ஒப்பனை வகுப்பு எடுத்த, ரகுமான் அண்ணன் சொல்லவே வேண்டாம் ரொம்ப அருமை. இறுதி நாள் வரை இருந்து அவரும் ஒரு மாணவரைப் போன்றே எங்களோடு சுற்றித் திரிந்தார். மேலும் எங்களுக்கு ஒப்பனை வகுப்பு எடுக்க வந்தவர் போக போக, எடிட்டிங், பாடல், பின்னனி, கேமர என தன் திரைதுறை தொழில் நுட்பம் ஒவ்வொன்றையும் காட்டினார். இன்னும் 4 குறும்படங்களை இயக்ககியும் உள்ளார். 135மணி நேரம் இடைவிடாமல் பாடி உலக சாதனையும் படைத்துள்ளார்.

இதன்பின், கேமரா வகுப்பு எடுத்த, ஐயா. பன்இறை அவர்களின் வகுப்பு ஒரு தித்திப்பு. காரணம் அவர் வகுப்பு என்பதை விட, அவர் மாலை நேரத்தில் எங்களுக்கு எடுத்து காண்பித்த சந்திரனின் புகைப்படம். அதில் நான் லயித்துப் போனேன்.
இன்னும் திரைக்கதை வகுப்பு எடுத்த இயக்குநர், திரு.பாலு மணிவண்ணன் அவர்களால் முதல் முறையாக கவிதை, கட்டுரை மட்டுமே எழுதியா நான் கதை எழுதினேன்.
பின், இயக்குநர், திரு. கமலக் கண்ணனின் வகுப்பு ஒரு நல்ல செய்தி கொடுத்தது. சினிமா என்றாலே சென்னைதான் என்ற மனோபாவத்திலிருந்து, மீட்டெடுத்தது அவரின் வகுப்பு.
இதன்பின்பு எல்லோரும் அவரவர் குறும்பட இயக்கத்திற்க்காக ஒருவித போட்டி மனப்-பான்மையோடு பரவலாக, பரபரப்பாக செயல் பட்டோம். இதில் எங்கள் குறும்பட உதவிக்காக வந்த அருண் ஸார், ரொம்ப ஆக்டிவ். சுறுசுறுபோடு செயல்பட்டு எங்களையும் சுறுசுறுப்பாக்கினார். அதனால்தான் இருந்த அத்தனை அணிகளை காட்டிலும் நாங்கள் முதலாவதாக முடித்தோம்.
 மேலும் கேமரா மேன் ராம் அண்ணா, நல்ல ஒத்துழைப்பு இரவு முழுவதும் கண் முழித்து விடிய விடிய எங்களுடன் உதவி புரிந்தார். ஒரு ஷாட் மட்டும் 1;30 மணி நேரம் எடுத்தும் மிகப் பொறுமை காத்தவர்.
இப்படியாக கடைசி நாள் வரை ஒருவித அறிமுக நட்பிலே கடந்த நட்பு வட்டாரம், இறுதி நாளன்று, இதயம் கலந்த ஒன்றாய் ஆனது. அனைவரின் அன்பு ஆரத்தழுவல்களின் வடு இப்பொழுதும் கூட என்னுள்.
இதில் குறிப்பாக ஒருவரை சொல்ல மறந்துவிட்டேன், அவர் சப்ளையராகவும், எடிட்டராகவும், ஆப்ரேட்டராகவும் மாறி மாறி ஓடிய, நிழல் ஐயா அவர்களின் சின்ன தளபதி, தோழர். விஜய். சாப்பாட்டில் மிகக் கனிசமான கவனிப்பு. மனமார சொல்கின்றேன் விருந்தினர் வீட்டில் கூட இல்லாத விருந்தோம்பல் நிழலுடனான் நாட்களில் அனுபவித்தேன்.

மேலும், பதியம், பாரதி வாஸன் அவர்கள், முக-நூலில் கொண்ட நட்பு, பார்த்த முகம். ஒன்றுதான் நினைப்பேன் காமெடி ஆள் போலனு. ஆன நேரில பார்க்கறப்போ இவருக்கு இப்படி ஒரு நெட்வொர்க் இருக்கானு, மனதுக்குள் ஒரு குட்டு.

இன்னும் எத்தனையோ சின்ன சின்ன நிகழ்வுகள் நிறைய உள்ளன, இந்த 144 மணி நேர பயணத்தில். அவைகள் என்றும் மறக்காத நினைவலைகள்.
நான் போனது ஒரு ஆவணப்படம் எடுப்பதற்க்கான பயிற்சிக்கு, ஆனால் கற்றதோ ஒரு திரைப்படம் எடுக்கும் அறிவை.

நிறைவாக, இதில் நான் சொல்ல வந்த பலவும் வார்த்தைகளின் கோர்வையின்மையால், என்னுள் முடங்கிவிட்டன. அங்கு நான் பெற்ற நட்பு மலர் ஒவ்வொன்றாக பெயர் கூற ஆசைதான் இருப்பினும், இயலாமையால் மனதுக்குள்ளே, அடிக்கடி நினைவுப் படுத்திக் கொள்கிறேன்.
நிழல் கொடுத்தது வெறும் பயிற்சி மட்டும் அல்ல, கூடவே ஒரு பிரிவையும்தான். நிழலின் நிழலில் கடந்த நாட்கள் நெஞ்சம் மறவா பனித்துளிகள்.

தோழமையுடன்
- பழனி ஷஹான் 


Wednesday, 6 February 2013

யாரை திருப்திபடச் செய்கின்றார் ? – சீனு ராமசாமி

 

கருத்து சுதந்திர அடிப்படையில், திரைப்பட இயக்குநர். திரு. சீனு ராமசாமி அவர்கள் மீதான என் விமர்சன மற்றும் வினா தொகுப்பு இது.

“யாரை திருப்த்திபடச் செய்கின்றார்” எனும் கேள்வி பதத்தோடு பொருந்திய தலைப்பிற்கு, நான் முதலில் இட்ட பெயர் “மனைவியை நேசிக்க கற்று கொடுத்தது இஸ்லாம்- மத நல்லிணக்கத்தின் உறைவிடம் இஸ்லாம் – சீனு ராமசாமியின் மன நெகிழ்வு” என்பதாகும். இவ்வாறு அவரின் திறந்த பெருந்தன்மையோடு பொருந்திய கருத்துகளுக்காக, அக மகிழ்வோடு ஆரம்பத்தில் இத்தலைப்பிட்டேன். பின்பு நான் ஏன் தற்போதைய தலைப்பை இட்டேன் ? முன்பு நான் ஏன் அவரை அப்படி கருதினேன் ?

தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை போன்ற திரைப்படங்களின் இயக்குநரும், தேஷிய விருதும், பழநி பாபா மத நல்லிணக்க விருதும் பெற்ற திரு.சீனு ராமசாமி அவர்களின் மனிதநேயம் பறவையாய் பறந்ததை அனைவரும் அறிந்ததே. நானும் அப்படிதான் பார்த்தேன் அந்த மனிதரை. ஆனால் அவர் பற்றி ஓர் வாழ்த்து கட்டுரை வரைய ஐயப்பட்டு, பேனாவும் எடுத்து துவங்கியும் விட்டேன்.
ஆனால் என் ஐயப்பாடு, ஐயத்திற்க்குள்ளாகிவிட்டது. என் அவா, ஆவேஷமாக மாறியதன் காரணம்தான் என்ன? முதல் நாள் புகழ்ச்சியுரையும், மறு நாளே வருத்த உரையும் என்னுள் அவர் பற்றி எழக் காரணங்கள் அவரின் இரண்டு முரணான கருத்து உரைகள். அவைகளை இதில் இடுகின்றேன். எனினும் அவரைப் போன்றோரை தாழ்த்தி எழுத நான் விருப்பம் கொண்டவனல்ல.
இரண்டு முரனான கருத்து உரைகள், ஒன்று அவர் கடந்த 28-01-2013 அன்று பழநி ஆயக்குடியில், ‘பழநி பாபா மத நல்லிணக்க விருது’ பெற்று பின் அவர் ஆற்றிய உரை.
அதில் அவர் பேசுகின்றார் ;
    “இஸ்லாம் மதம் அன்று அது மார்க்கம்”, நான் எனது நீர் பரவை திரைப்படத்திற்க்காக, இரண்டு வருடம் திருக்குர் ஆன்-உம், பைபிளும் படித்தேன். திருக்குரான் என் வாழ்வில் ஓர் மாற்றம் கொடுத்தது, திரைப்படமே வெளிப்படையாக எடுத்துவிட்டேன் பின் எல்லாவற்றையும் வெளிப்படையாகவே பேசுகின்றேன். நான் என்னதான் மார்க்ஸியம், பெரியாரிசம் பேசினாலும், சராசரி மனிதன் எனும் ரீதியில் எனக்குள் நிற பேதமை இருந்தது. என் மனைவி சற்று கருப்பு. எனவே நான் அவருடன் சரிவர முகம் கொடுக்காமல் ஒரு பாராமுகமாகவே இருந்து வந்தேன். பெற்றோர் பார்த்து முடித்த திருமணம். பின்புதான் திருக்குரான் படித்து கொண்டிருந்த போது அதன் ஓர் வசனம் எனக்கு உண்மை உரைத்தது.

“நபியே நீர் கூறும்! அழகற்ற பெண்கள் என்று நீங்கள் யாரையும் வெறுத்து ஒதுக்கி வைக்கதீர்கள். அளவிடற்கரிய நற்குணங்களை அல்லாஹ் அவர்களிடத்தே பொதித்து வைத்துள்ளான். மறைவானவற்றை அல்லாஹ் நன்கு அறிவான்.“
              -திருக் குரான்.

என்ற திருக்குரான் உடைய வசனத்தை அவர் மேற்க்கோள் காட்டினார். மேலும், அவர் தனது நீர்-பறவை படம் தனி மனித வெற்றியல்ல அது ஒரு சமூகத்தின் அடையாளம். நான் வளர்ந்து வரக் காரணம் என் தமிழ் ஆசிரியர் ஜாபர் ஐயா அவர்கள். என் உயர் கல்விக்கு உதவியர் ஒரு கிறிஸ்துவர். என் முதல் விளம்பர பட இயக்கத்திற்கு வாய்ப்பளித்தவர் ஒரு இஸ்லாமியர்.  அவர்களின் உதவிதான் நான் வெளிவந்தேன். அதற்க்கான ஒரு நன்றி கடன் தான் நீர்-பறவை. அதன் எதார்த்தம் தான் இத்திரைப்படம். நான் இப்படி ஒரு படமெடுத்து முஸ்லீம்களிடம் பாராட்டு, பரிசு பெற வேண்டும் என்று கதை எழுதவில்லை. உண்மையில் அந்த கதாபாத்திரம் அங்கு, அந்த தருணம் என்ன பேசுமோ அதைத்தான் படமாக்கி உள்ளேன். பின் தன் நீர்-பறவையின் முத்திரையிட்ட, போற்றுதலுக்குரிய காட்சியான, உதுமான் கனி எனும் கதாபாத்திரத்தின் அந்த உரையை சுட்டி காண்பித்தார்.

மேலும் அவர் தொடர்கையில் ; கப்பலை முதன் முதலில் இந்தியாவில் கட்டியவர்கள் மரைக்காயர் முஸ்லீம்கள் அந்த வரலாற்று உண்மையைத்தான் என் நீர்-பறவை காட்சிபடுத்தியுள்ளது. ஆனால், ஏனோ தெரியவில்லை தமிழ் சினிமாக்களில் முஸ்லீம்களை, கடற்கொள்ளையர்களாகவும், ஷேட்-களாகவும், வாசனைப் பொருள் விற்பன்னர்களாகவும் தொடர்ச்சியாக தவறாக காட்டி வருகின்றனர்.
எனக்குள் ஒரு ஏக்கம் இருந்தது, என் நீர்-பறவை திரைப்படத்திற்கு இஸ்லாமியர்கள் ஒரு நன்றி கூட கூறவில்லையே என்று. ஆனால் அதனை திரு.கே.எம்.ஷரீஃப் அவர்கள் நிறைவேற்றி விட்டார். எனக்கு மிகுந்த ஆச்சரியமாக உள்ளது நான் ஒரு சிறு உண்மை நிலையை காட்ச்சி படுத்தியதற்க்கு இஸ்லாமியர்கள் நீங்கள் இவ்வளவு விழா எடுத்து பாராட்டுகின்றீர்கள். நான் தேஷிய விருது வாங்கியது கூட எனக்கு பெருமையல்ல. ஆனால் சமூக போராளி பழநி பாப மத நல்லிணக்க விருது நான் பெற்றது தேஷிய விருதை விட பெருமையாக உணர்கின்றேன். ஏனென்றால் தேஷிய விருது சமூக போராளிகளால் கொடுக்கப்படுவதில்லை. மக்களிடம் சமூக நல்லிணக்கம் இருக்கின்றது என்பதையே இந்த நீர்-பறவை வெற்றி குறிக்கின்றது. ஆனால் அது சில அரசியல்வாதிகளிடம் தான் இருப்பதில்லை. பின் இறுதியாக, சமூக நல்லிணக்கத்தின் உறைவிடம் இஸ்லாம்-தான் என்று கூறி கலீஃபா உமர்(ரலி) அவர்களின் வாழ்க்கை நிகழ்வு ஒன்றை குறிப்பிட்டார்.
“ஒரு முறை ஹஜ்ரத், கலீஃபா உமர்(ரலி) அவர்கள் ஜெரூசலத்தின் அதிபராக இருந்த தருணம், உமர் கிருஸ்த்துவ ஃபாதிரிமார்களின் வேண்டுகோளுக்கிணங்க ஓர் கிறிஸ்த்துவ ஆலயத்திற்க்குள் சென்றார். அப்பொழுது தொழுகை நேரம் வந்ததும், உமர் அவர்கள் அதனை அவர்களிடத்தில் தெரிவித்தார். உடனே கிறிஸ்த்துவர்கள் தேவாலயத்தை சுத்தம் செய்து அங்கு உமரை தொழுமாறு பணிந்தனர். ஆனால் உமர் அதனை மறுத்து வெளியில் வந்து வெட்டாந்தரையில் தொழுதார். பின் அங்கு நடந்த விருந்தொன்றில் பங்கு கொண்ட உமர் அவர்களிடம், ஃபாதிரிமார்கள் கேட்டனர், உமரே! தாங்கள் இவ்வளவு அந்நியோன்யமாக பழகுகின்றீர்கள் ஆனால் ஏன் எங்கள் தேவாலயத்தில் தொழ மறுத்தீர்கள், அங்கு சுத்தமாக தானே இருந்தது என்று வினவினர். அதற்கு உமர் அவர்கள் கூறினார்கள், இன்னும் நூறு வருடங்களுக்கு பின் தாங்களும் இருக்கப் போவதில்லை, நானும் இருக்கப் போவதில்லை அந்த வேளை உள்ள தலைமுறை உமர் எப்படி இங்கு தொழுதார் என்று கேள்வி கேட்க்கும், மற்றொருவர் இது உமர் தொழுத இடம் என உரிமை கோர, அங்கு அமைதி குலையும், ஒற்றுமை சீர்கெடும் என்று பதிலுரைத்தார்கள்”.
எனும் இந்த வரலாற்று சம்பவத்தை கூறி, மேலும் சமூக நல்லிணக்க முன்னோடிகள் முஸ்லீம்கள்தான் என்றும் கூறி தன் உரையை முடிவு செய்தார்.
ஆக இப்படியான, இவரின் யதார்த்தமான, பொதுவுடைமையான, சமூக சிந்தனை பொதிந்த, நன்றி உணர்வு வெளிப்பூண்ட, உண்மை நிலையை விளக்கிய உரையை கேட்டு வியப்புற்றேன். அதற்கு நம்மால் ஆன நன்றி பாராட்டை, கட்டுரையாக தீட்ட வேண்டும் என எண்ணி, நான் குறிப்பிட்ட தலைப்பை இட்டேன். அதன் விதமாக என் கட்டுரையை ஓரளவு எழுதிவிட்டேன் ஆனால் தீடீர் இடை நிறுத்தம் செய்தேன், காரணம் அவர் சமூக நல்லிணக்க விருது பெற்ற மறுநாள், 29-01-2013 அன்று நேரலையாக ஒளிபரப்பிக் கொண்டிருந்த, புதிய தலைமுறை தொலைக்காட்சி சேனலின்,  நேர்பட-பேசு நிகழ்வில் திரு.சீனு ராமசாமி அவர்கள் கூறிய விஸ்வரூபம் திரைப்படம் குறித்தான கருத்துதான்.

29-01-2013 அன்று அவர் புதிய தலைமுறையின் நேரலை நிகழ்வில் விஸ்வரூபம் திரைப்படம் குறித்து கூறிய கருத்து :
       “கமலஹாசன் அவர்கள், இஸ்லாமியர்களுக்கு திரைப்படம் முன்னதாகவே காட்டியது தவறான செயல். எனது நீர்-பறவை படம் வெளிவராத நிலையில், கிறிஸ்த்துவர்கள் சிலர் என்னிடம் வந்து அதில் இடம்பெற்றுள்ள பாடலில், விபிலிய மொழிகளில் வார்த்தைகள் அமைந்துள்ளதாகவும், ஆகவே அவைகளை நீக்கி விடவும் கோரினர். நானும் அவர்களின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து அவைகளை நீக்கினேன். பின் அவர்கள் என்னிடம், பாடல் வரிகள் இப்படி இருப்பதால், படத்தில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது ஆகவே எங்களுக்கு முழு படமும் போட்டுக் காட்ட வேண்டும் என்றனர். ஆனால் நான் அதை ஏற்க்கவில்லை. அவர்களுக்கு படத்தை முன்பே காட்ட  உறுதியாக மறுத்து திரையிட்ட பின் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டேன்.
என்ற வண்ணம் தன் முதல் கருத்தை பதிவு செய்தார்.

பின் அவரிடம் தனிக்கை குழு பற்றி வினவப்பட்டது.
 அதற்கு அவர், தணிக்கை குழு முறையாக உள்ளது என்றார். மேலும் அவர், தன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கிய போது மிக நுனுக்கமாக ஆராய்ந்து சான்று வழங்கினர். எனவே தணிக்கை குழு முறையாகத்தான் செயல்படும் என்றார்.

இறுதியாக அவரிடம், முஸ்லீம்கள் பற்றிய, தமிழ் சினிமாக்களின் தவறான சித்தரிப்பு பற்றி கேட்டதற்கு அவர்:
   ஆம் அது உண்மைதான். ‘நிம்மல் பொன் தரான், நிம்மலுக்கு பொண்னு தருது’ என்று ஷேட்-களாகவும், கடற்கொள்ளையர்களாகவுமே காட்டி வந்துள்ளனர், என்று கூறி பின்;
 தங்களை பற்றி இப்படி திரைப்படம் எடுத்ததற்கு இவ்வளவு கண்டனம் தெரிவிக்கும் முஸ்லீம்கள், ஏன் என்னுடைய நீர்-பறவை திரைப்படத்திற்கு ஒரு நன்றி கூட தெரிவிக்கவில்லை என்று கேட்டு விடபெற்றார்.
 ஆனால், இக்குற்றச்சாட்டை, அந்த நிகழ்வில் அவரோடு பங்கு கொண்டிருந்த, த.மு.மு.க இயக்க தலைவர் திரு.ஹைதர் அலி அவர்கள், தாங்கள் ஏற்கனவே நன்றி பாராட்டு அறிக்கை அளித்துள்ளதை சுட்டிக் காண்பித்தார்.

   இங்குதான் நான் அவரிடம் வினவுகின்றேன் ‘யாரை திருப்தியடையச் செய்ய நினைக்கின்றீர்கள் ?’ .
v  சமூக நல்லிணக்க விருது பெற்று தாங்கள் ஆற்றிய உரை யாரை திருப்திபடுத்த ?
v  மறுநாள் புதிய தலைமுறையில் தாங்கள் கூறிய கருத்துக்கள் யாரை திருப்திபடுத்துவதற்கு ?


திரு.சீனு-ராமசாமி அவர்களுக்கு என் விளக்கங்களும், வினாவும் :
ü  ஆயக்குடி உரையில் தாங்கள், தங்கள் படத்திற்க்காக தங்களை யாரும் பாராட்டவில்லை, இதுதான் முதல் முறை என்றீர்கள், “சமூக நல்லிணக்க விருது பெற்ற பின்னர். ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும், அதற்கு முன்பாகவே த.மு.மு.க போன்ற இஸ்லாமிய இயக்க தலைவர்கள் நீர்-பறவையை வரவேற்பதாக பதிந்து விட்டனர்.
ü  மேலும், எழுத்தாளர், அண்ணன், ஆளூர்.ஷானவாஸ் அவர்கள் தன் வலைப்பூத்தளத்தில், ‘முஸ்லீம் தீவிரவாதி இல்லாத நீர்-பறவை’ எனும் தலைப்பில் ஒரு பாராட்டு கட்டுரை எழுதி உள்ளார்.
ü  இதற்கும் மேலாக, என் முக நூல் நண்பர்கள், முக நூல் பயனர்கள் தங்களின் நீர்-பறவைக்கு எழுத்து பூர்வமான பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். அதில் நானும் ஒருவன். மேலும், பலர் அந்த குறிப்பிடப்படும் ‘உதுமான் கனி’ கதாபாத்திரத்தின் வசனம் அடங்கிய வீடியோ காட்சிகளை தங்கள் முக-நூலில் பகிர்ந்தும், அது குறித்த,சம்பந்தப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டும் உள்ளனர்.
                          ஆகவே, 28-01-2013 அன்று அல்ல, நீர்-பறவை காட்சிக் கோப்பு டிரெய்லர் சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சில தினங்களில் சிறிது, சிறிதாகவும், படம் திரைக்கு வந்த பின்பு தினம், தினமும் இஸ்லாமியர்கள் தங்களுக்கும், தங்கள் நீர்-பறவைக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் அறிவித்து கொண்டே உள்ளனர்.

v  இஸ்லாமியர்களை ஷேட்-களாகவும், கடற்கொள்ளையர்களாகவும், வாசனை பொருள் விற்பன்னர்களாகவும் காட்டியதை குறிப்பிட்டுள்ளீர்கள் உண்மைதான். நீங்கள் கூறும் அதே சினிமா கால கட்டத்தில், எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றோரின் திரைப்படங்களில் இயல்பாகவும், உயர்வாகவும் முஸ்லீம்களை காட்சிபடுத்தி உள்ளனர்.
v  ஆகவே தாங்கள் குறிப்பிட்ட இஸ்லாமிய சித்தரிப்பு கதாபாத்திரங்கள் பெரிய பொருட்டல்ல. 1990-களிலே பொய்மைப்படுத்தி, இதுவரை காட்சிப்படுத்தபட்டு வருகின்ற, இஸ்லாமிய வன்முறையாளர்கள், தீவிரவாதிகள் எனும் சித்தரிப்புகள்தான் இங்கு கவனிக்கத்தக்கது, கண்டனத்துக்குரியது, முக்கியமளிப்பது.
v  90-களுக்கு முன்பு அது ஒரு பெரிய சித்தரிப்புகள் அல்ல. நீங்கள் ஆதரவு அளிப்பதாக எண்ணி அவைகளை கூறி நழுவுவது முறையல்ல. நீர்-பறவை திரைப்படத்தில் நெற்றி அடியாக உண்மை கூறீனீர்கள், ஆனால் ஏன் நேர்பட பேசுகையில் உண்மை சர்ச்சையை வெளிக்கொணராமல் பேசினீர்கள் என்பதில்தான் என் கேள்வி தொக்கி நிற்கின்றது.

§  இறுதியான ஒரு விளக்கம், தங்கள் நீர்-பறவை திரைப்படத்தில் கிறிஸ்த்துவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க அதில் சில பாடல் வரிகளை நீக்கினீர் என்றீர்கள். அருமையான ஒன்றுதான். ஆனால் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பு எதிர்த்து சில காட்சிகள் நீக்கப்பட கோர, திரைப்படம் முன்னதாக காட்டப்பட்ட நிகழ்வை தாங்கள் எதிர்ப்பது சரியல்ல. இது ஒரு வேளை வெளியில் வந்தால் இந்தியாவில் காவிகளின் பிரச்சாரம் எப்படி இருக்கும்? வெகுஜன மக்களின் இஸ்லாமிய பார்வை? இவைகளை தாங்கள் சிந்திக்க வேண்டும். ஆக அவைகளை களையவே இந்த முன்னேற்பாடு. ஒருபுறம் தாங்கள் முஸ்லீம்களை திரைப்படத்தில் கண்ணியமயப்படுத்திவிட்டு, நிஜப் போக்கில் இப்படி கூறுவதை எப்படி எடுத்துக் கொள்வது? மக்கள் சினிமாவை சினிமாவாக பார்பதில்லை, அதன் நட்சத்திரங்களின் பேச்சுகளை வெகுஜன மக்கள் ஆராய்வதில்லை. ஆக இதன் பிரதிபலிப்பு, தாக்கம் எப்படி என்று பலரும் அறிந்ததே.
§  மேலும் தங்கள் படத்தில் நீங்கள் நீக்கியது விபிலிய மொழியில் உள்ள வரிகளைத்தான், மாறாக அது பைபிளின் வசனங்களல்ல. ஆனால், விஸ்வரூபம் திரைப்படத்தில் திருக்குரான் வசனம் இடம் பெற்றுள்ளது. எது தங்களின் வாழ்வில் தங்கள் மனைவியை நேசிக்க வைத்ததோ அந்த புனித நூலின் வசனங்கள் விஸ்வரூபத்தில் இடம்பெற்றுள்ளன. உலகில் இரண்டாவது பெரிய மார்க்கமான இஸ்லாமியர்களின் இறை வார்த்தைகள் அதில் வரிசைபடுத்தியுள்ளார் அப்பட இயக்குநர்.
§  எனவே, நீங்கள் அவருக்கு பகிரங்கமாக கண்டனம் பகிர்வது ஏற்புடையதே தவிர, மறைமுக ஆதரவு குரல் நல்குவது முறயல்ல, நீங்கள் ஒரு மத நல்லிணக்கவாதியானால்.


நிறைவாக சின வினாக்கள் :
v  சில இஸ்லாமிய இயக்க தலைவர்கள், நன்றி பாராட்டும், முக-நூல் பயனர்களின் எண்ணிலடங்கா வாழ்த்தும், பாராட்டும் தங்கள் நீர்-பறவைக்கு பறந்து கொண்டிருக்க, பழநி-பாபா மத நல்லிணக்க விருது விழா தான் முதல் பாராட்டு என்றும், பின் அவைகளையும் பெற்று, நேர்பட பேசுவில் இஸ்லாமியர்கள் தங்களுக்கு ஒரு பாராட்டும் புரியவில்லை என்றும் கூறியது நியாயமா? அது ஏன் ? ஏன் இந்த இடதிற்கேற்பான முரண்பாடுகள் ?
v  ஆயக்குடி உரையில் சமூக போராளி போன்ற உரையும், நேர்பட-பேசுவில் ஏதும் அறியாதோர் நிலை கருத்தும் யாரை திருப்தியடையச் செய்வதற்க்காக ?
v  நேர்பட-பேசுவில் முஸ்லீம்கள் தரப்பு வாதத்திற்க்கு ஒரே ஒருவரும், அவருக்கு எதிர் தரப்பாக பொதுவுடைமைவாதிகளென பின்னூட்டம் தாங்கிய காவி முகமூடிகளை நீங்கள் கண்டும், அறிந்தும் ஏன் அது ஒரு நியாயமற்ற நிகழ்ச்சி, செயல் என மறுப்பு கூறவில்லை ?
v  இஸ்லாமிய இயக்க தலைவரின் வாதங்களை கூற அந்நிகழ்வின் தொகுப்பாளர் சரியாக வாய்ப்பு பகராமல் இடைமறிப்பது வெளிப்படையாக தெரிந்தும், ஏன் தாங்கள் அதை கண்டிக்கவில்லை ?
v  தணிக்கை குழு ஒருமுகமாக செயல்படுவது தெள்ளத் தெளிவாக தெரிந்தும் அதை தாங்கள் மறைப்பது ஏன்? இதனால் தங்கள் எதிர்கால பலன் ?
v  இஸ்லாமிய தீவிரவாத சித்தரிப்புகளை நீங்கள் வெளிப்படையாக கூறாமலிருப்பதன் திரைமறைவு ?
v  திரு.கமலஹாசன் அவர்கள் செய்வது உண்மையில் கருத்து சுதந்திர அடிப்படை ரீதியான செயல் அல்ல, மாறாக தெளிவான திட்டமிடல் என தாங்கள் அறிய பெறவில்லையோ?
v  பொதுவுடைமைவாதி, சமூக சிந்தனையாளரான தாங்களுக்கு காவி குமபல்களின் பயங்கரவாத, தீவிரவாத உண்மை நிகழ்வுகளை மறைமுகமாக மறைக்கும் கமலின் விஷம திட்டம் புரியாத ?
v  முன்னனி துறை நிபுணர் என்பதால், தங்களின் சினிமா துறை தடைபடும் என்பதால் ஏதேனும் ஐயமோ ?
v  விபிலிய மொழிக்கும், திருக்குரான் வசனத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு தாங்கள் அறியாதது ஏனோ ?
v  இந்தியாவில் அமெரிக்க காலோச்சும், அதன் தீவிர முயற்ச்சியின் பின்னனியும் பொதுவுடைமைவாதி தங்களுக்கு தெரியவில்லையா ?

    இவைகள் நான் திரு.சீனு-ராமசானி அவர்களிடம் வைக்கும் கேள்விகள் ஆகும்….

இறுதியாக, என் இந்த விமர்சன கட்டுரையின் மூலம் நீர்-பறவை திரைப்பட இயக்குநரை இழிவுபடுத்தும் எண்ணமோ, மட்டம் தட்டும் நோக்கமோ அல்ல. மாறாக இந்த கால கட்டத்தில் இப்படி ஒரு உண்மை நிகழ்வை திரைப்படமாக எடுத்து, இன்புறச் செய்த தாங்கள், தற்போது புரியும் கருத்து அனுகுமுறைகள்தான் சிறு வருத்தமாக உள்ளது.

ஆகவே, தங்களை போன்றோர் வருங்காலத்தில் இது போன்ற சிறு அனுகுமுறைகளை மாற்றி, இன்றைய திரைப்படத் துறையினருக்கு, ஓர் உன்னத முன்மாதிரியாய் திகழ வேண்டும், என்ற வேண்டுகோளுடன் நிறைவு கொள்கின்றேன்.




தோழமையுடன்
- பழனி ஷஹான்